நேற்று புறப்பட்டது போலிருக்கிறது. சரியாக இம்மாதத்தோடு எட்டாண்டுகளாகி விட்டன. கடமலையிலிருந்து தானம் மக்கள் கல்வி நிலையத்திற்கு 05-06-2003 அன்று எனது  நான்கு மாத மகனைத் தூக்கிக் கொண்டு நானும் எனது மனைவியும் என் அம்மாவின் துணையோடு புல்லூத்துக்குச் சென்றோம்.

இரண்டாண்டுகளில் மீண்டும் சொந்த ஊர் வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் புறப்பட்டுச் சென்று நான் மீண்டும் கடமலை வர  எட்டாண்டுகளாகி விட்டன.  வாழ்க்கைப் போராட்டத்தில் தனது வாழ்வாதாரத்தைத் தேடி பயணப்படும் பலரும் தங்கள் சொந்த மண்ணில் மிதிக்கும் வாய்ப்பைப் பெற முடியவில்லை.  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எங்கள் அலுவலகத்திற்குச் செல்லும் போது நடைபாதைக் கடை வைத்திருக்கும் ஒரு பெரியவரிடம் காலை உணவு சாப்பிடுவது வழக்கம். ஒரு முறை தற்செயலாக  அவரது சொந்த ஊரைக் கேட்டேன்.  திருநெல்வேலி என்றார். நாற்பதாண்டுகளுக்கு முன்  பிழைப்புக்காக சென்னை வந்தவர் அங்கேயே தங்கி விட்டார். இவரைப் போன்று லட்சக்கணக்கானவர்களின் நிலை இதுதான்.

கடமலையில் தற்போது நான் குடியிருக்கும் வீடு எனது நண்பரின் வீடு.  கவிஞர் சரவணன். அவன்  இறந்து பத்தாண்டுகளாகி விட்டன. நான் வீடு கேட்டதும்  சரவணனின் தாயார் சந்தோசத்தோடு கொடுத்தார்கள். “பத்தாண்டுகள் கழித்து என் மகன் வந்து விட்டான்“ என்று சரவணனின் தாயார் சொல்லுகிறார்.

காலை 8.45 மணிக்குச் சென்று மாலை அதே நேரத்திற்கு வீடு திரும்பும் நீண்ட நேரப் பணியாக இருந்த  போதிலும், தினந்தோறும் குறைந்தது ஐம்பது நபர்களோடாவது உரையாடும் வாய்ப்புக் கிடைக்கிறது.  காலையில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் நடை பயிற்சிக்குச் செல்லும் போது நிறைய நல விசாரிப்புகள். ஊருக்கு வந்து ஒரு மாதமாகிய பிறகும் “லீவுக்கு வந்திருக்கீங்களா…?” என்ற கேள்விகளும்  ” தம்பி நம்ம கலெக்டராபீசுல வேலை செய்யுதில்லே…” என்ற பதில்களும் தினந்தோறும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

என்னோடு படித்தவர்களில் சிலர் ஆசிரியர்களாக உள்ளனர். நடை பயிற்சி நேரத்தில் சமச்சீர் கல்வி தொடர்பான விவாதங்களைத் தொடர முடிகிறது. ஒரு நாளில் எனக்குக் கிடைக்கும் நேரத்தில் உறவுகளில் வீடுகளில் ஒரு மிதியாவது மிதித்து  வருவதில் உறவு நாளங்கள் இன்னும் கெட்டி படுத்தப்படுகிறது.

அரசு அலுவலகங்களில் … அதுவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களின் பணிக்காய் காத்துக் கிடக்கும் கூட்டத்திலிருந்து யாராவது ஒருவர் அடையாளங்கண்டு என்னிடம் வருகிறார்கள். அவர்களுக்கு வேலையாக வேண்டிய துறைக்கு அழைத்துச் செல்கிறேன். பலருக்கு காரியம் ஆகாவிட்டாலும் மனதில் ஒரு சந்தோசம். “ அவரு வேலையை விட்டுட்டு நமக்காக வந்தாரில்லே….” என்று சமாதானமடைகிறார்கள். அவர்களிடம் எப்படி உணர்த்துவது….. பிரதமரே வந்தாலும் இங்கு  அவ்வளவு சீக்கிரத்தில் காரியமாகாது என்று.

இரண்டு வாரங்களுக்கு முன் தேனி  பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது ஒரு இளைஞன் என்னிடம் வந்து தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டான். அவன் பள்ளி மாணவனாக இருந்த போது கடமலை த.மு.எ.ச. கலைஇரவு மேடையில் நாடகத்தில் நடித்த அனுபவத்தைச் சொன்னான். இப்போது ஏன் கலை இரவு நடத்துவதில்லை என்று கேட்டான்.

அவன் மட்டுமல்ல பலரும் கேட்கும் கேள்வி இதுதான். தொடந்து பத்தாண்டுகள் சங்கில் தொடராய் சமூக மாற்றத்திற்கான நிகழ்வுகளை நடத்தி விட்டு திடீரென்று காணாமல் போய்விட்டதில் பலருக்கும்  வருத்தம். ஆனால் அடுத்த தலைமுறையை அடையாளங்கண்டு அவர்களிடம் அமைப்பைக் கொடுக்காமல் எங்களின் காலத்திலேயே அதற்கு மூடு விழா நடத்தியவர்கள் நாங்கள்தான்.

இன்னும் அந்த குற்றவுணர்வு இருந்து கொண்டேயிருக்கிறது.  இந்தக் குற்றவுணர்வைப் போக்க நண்பர் காமுத்துரை எனக்கு உதவினார். ஆம் கடமலை கிளை மீண்டும் பதிவு செய்யப்பட்டு விட்டது. நமது பழைய நண்பர்கள் அதே ஆர்வத்தோடு வந்திருந்தார்கள். தமிழ் வந்தான். மிகவும் உணர்வுப் பூர்வமாக அவன் பேசியது… அதுவும் நமது வசந்த காலத்தில் கம்பமும் கடமலையும் ஆரோக்கியமான போட்டியோடு செயல்பட்டதைச் சுட்டிக் காட்டியது தோழர்களை இன்னும் உற்சாகமடையச் செய்தது. நேற்று நான் புதிதாய் மீண்டும் பிறந்தேன். இந்த பத்தாண்டுகளில் கிடைக்காத மகிழ்ச்சி நேற்றுக் கிடைத்தது. எனக்குள் இருந்த குற்றவுணர்வு கொஞ்சங்கொஞ்சமாகக் குறைகிறது.

ஆனாலும் இந்த சொந்தவூர் வாழ்க்கை நிரந்தரமானதல்ல…. பணி நிமித்தம் மீண்டும் எங்காவது நான் பந்தாடப் படலாம்.  அதுவரையில் இதை அனுபவிப்போம். மீண்டும் ஒரு பகிர்தலில் விவரிக்கிறேன்.


“ வேலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களில் பலர் “நுண் கடன்’ வலையில் சிக்கி பரிதவித்து வருகின்றனர். இம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு, அரசு பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது. சில குழுக்களைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் சுய தொழில் செய்து வருவாய் ஈட்டி கடனை அடைக்கின்றனர்.  இந் நிலையில், அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்திலிருந்து வேலூர் மாவட்டத்துக்குள் 5-க்கும் மேற்பட்ட நுண்கடன் நிறுவனங்கள் நுழைந்துள்ளன. இந்த நிறுவனங்கள் குடியாத்தம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்களைத் தங்களது வலையில் சிக்க வைத்துள்ளன. எதையும் ஈடாகப் பெறாமல், ரூ.8 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை உடனடியாகக் கடன் கொடுக்கின்றன. அதற்குத் தேவையான ஒரே தகுதி, மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவராக இருந்தால் போதும். குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை நகல்கள், தம்பதி புகைப்படம் ஆகியவற்றை அளித்தால் கடன் கிடைக்கும். கடன் அளிக்கும்போது கடவுளின் மீது சத்தியம் செய்யக்கூறி, பணத்தை வழங்குகின்றனர். வாரத்தில் குறிப்பிட்ட ஒரு நாள் சென்று தவணையை வசூலிக்கின்றனர். இந் நிறுவனங்களில் 15 பேர் அடங்கிய குழு கடன் பெற்றால், அனைவரும் அன்று ஆஜராக வேண்டும். குழுவில் ஒருவர் அந்த வார தவணையைச் செலுத்தாவிட்டால், அதை மற்றவர்கள் பங்கிட்டுச் செலுத்த வேண்டும். தொடர்ந்து 5 வாரம் செலுத்தாவிட்டால் வீட்டை பூட்டுவோம் என்பது உள்பட சில இந்த நிறுவனங்களின் விதிகளில் உள்ளதாம். கடன் தொகை அளிக்கும்போது, ஆவணங்கள் செலவு என ரூ.400 வரை பிடித்தம் செய்கின்றனர். வாரம் ஒரு முறை அசல், வட்டியோடு, வட்டிக்கு நிகரான தொகையை சேமிப்பு எனக் கூறி பெறுகின்றனர். 50 வாரக் கடன் எனக்கூறி, 45 வாரத்திலேயே, சேமிப்பு தொகையைக் கைப்பற்றிக் கொண்டு அசலில் இருந்து கழிக்கின்றனர். இதுபோன்று பல்வேறு “தந்திரங்’களை இந் நிறுவனங்கள் கையாள்கின்றன. ஆனால், மகளிரிடம் இருந்து பெறும் சேமிப்புக்கு இந் நிறுவனங்கள் வட்டி தருவதில்லை. மேலும், ஓராண்டுக்கு எனக்கூறி 20 சதவீதம் வரை வட்டி வசூலிக்கும் இந் நிறுவனங்கள், முன்கூட்டியே சேமிப்பைக் கையகப்படுத்தி கடன் தொகையை 10 மாதங்களில் நிறைவு செய்து விடுகிறது. இதன் மூலம், இந் நிறுவனங்களுக்கு இரட்டை லாபம் கிடைக்கிறது. மொத்தத்தில், 10 மாதங்களுக்கு இந் நிறுவனங்கள் வசூலிக்கும் வட்டியைக் கணக்கிட்டால் 26 முதல் 28 சதவீதம் வரை வரும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர். இவ்வாறு கடன் சுமையில் சிக்கித் தவிப்பதாகவும் அவர்கள் கூறினர்.” (திணமணி செய்தி)

” தர்மபுரி மாவட்டத்தில், நுண் கடன் நிறுவனத்தில் கடன் பெறும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், வட்டி கட்ட முடியாமல் திணறி வருகின்றன. தர்மபுரி மாவட்டத்தில், கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் 1,400க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இந்த குழுக்கள் மதி மற்றும் நான்மதி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதை தவிர பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவி குழுக்களும் இயங்கி வருகின்றன. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தேவையான வங்கிக்கடன் மற்றும் சங்க கடனுதவி, தொழில் மேம்பாட்டு பயிற்சி ஆகியவற்றை வழங்கி, மகளிர் சுய உதவி குழுக்களை நிர்வகிக்கும் வகையில் மாவட்டத்திலுள்ள 16க்கும் மேற்பட்ட தனியார் தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இத் தொண்டு நிறுவனங்கள் போதிய நிதி ஆதாரத்தை சுய உதவிக்குழுக்களுக்குப் பெற்று தர முடியாத நிலையில், நுண் கடன் நிறுவனங்கள் மகளிர் குழுக்களின் தலைவிகளிடம் பேரம் பேசி, குழுக்களுக்கு தேவையான நிதியை தங்கள் நிறுவனங்களிடமிருந்து பெற்றுகொள்ள குழு உறுப்பினர்களிடமிருந்து ஒப்பந்தம் செய்யப்படுகிறது. 1,500 ரூபாய் கட்டினால், ஒரு லட்சம் ரூபாய் வரை கடனுதவி என கூறி, மாவட்டத்திலுள்ள பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களிடமிருந்த 15 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளது.

அதிக கடனுதவி கிடைக்கும் ஆசையில், குறைந்த முன் பணத்தை கட்டி நுண் கடன் நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று கொள்கின்றனர் மகளிர் சுய உதவிக்குழுக்கள். ஆனால், கடனுக்கு நுண் கடன் நிறுவனங்கள் மீட்டர் வட்டி வசூலிக்கின்றன. குறிப்பிட்ட நேரத்தில், அசல் பங்கு தொகையை செலுத்தவில்லையென்றால், வசூலிக்கும் வட்டி விகிதம் இரண்டு மடங்காகவும், தாமதமாகும் ஒரு வாரத்துக்கு அசல் தொகையில் ஐந்து சதவீதம் வட்டி என, வசூலித்து நூதனமாக ஏமாற்றுகின்றன. அதனால், குறிப்பிட்ட காலத்துக்குள் அசல் தொகையை கட்ட முடியாத மகளிர் சுய உதவிக்குழுக்களும், கடன் வாங்கும் குழுக்களும் மீட்டர் வட்டியை கட்டமுடியாமல் திணறிவருகின்றன.(தினமலர் செய்தி)

மேற்கண்ட இரு செய்திகளும் நாளிதழ்களை வாசிக்கும் போது கண நேரத்தில் வந்து சென்றவை. இன்றைய நமது தேசத்தின் மிகப் பெரிய பிரச்சனைகளுக்கு மத்தியில் இச்செய்திகள் மிகச் சாதாரணமாவை. ஆனால் எதிர்காலத்தில் ஒட்டு மொத்த தேசத்தின் பார்வையை ஈர்க்கும் சக்தி இந்தச் செய்திகளுக்கு உண்டு.  ஆம். நாடு முழுவதும் நுண்கடன் நிறுவனங்களின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  நிதி நிறுவனங்களை நடத்துவதிலும், பைனான்ஸ் தொழில் செய்வதிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும், வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களும், சமூக மற்றும் அரசியல் பின்புலம் உள்ளவர்களும், பன்னாட்டு நிறுவனங்களோடு இணைந்து உருவாக்கிய அமைப்புகள்தான் நுண்கடன் நிறுவனங்கள் எனும் கடன்காரப்பேய்கள்.  இந்திய அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள இந்த நிறுவனங்கள் தேசம் முழுவதும் தங்களின் ஆக்டோபஸ்  கரங்களை விரித்து அப்பாவி மக்களை கடன் வலையில் சிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இவர்கள் ஒரு மாவட்டத்தில் நுழையும்போது, அந்த மாவட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சின்னச் சின்ன தொண்டு நிறுவனங்களை தங்களின் மாய வார்த்தைகளால் மயக்கி கபளீகரம் செய்து கொள்கிறார்கள்.   ஆர்வக் கோளாறில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி தங்களை தொண்டு நிறுவனங்களின் தந்தைகளாய் பிரக்கடனம் செய்து கொள்பவர்களால் தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுக்களை வழி நடத்த முடியாத சூழலில் நுண்கடன் நிறுவனங்களின் காலடியில் விழுந்து விடுகிறார்கள். (இப்படித்தான் பிரிட்டிஷ்காரனிடம் நமது குறுநில மன்னர்களும் சரணடைந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது)

இன்றைய மின் பற்றாக்குறையால் வேலையில்லாத் திண்டாட்டம், ஆட்குறைப்பு ஆலைமூடல், விலைவாசி உயர்வு ஆகியவற்றின் காரணமாக நகர்ப்புற வர்க்கத்திடம் பொருளாதார தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால், கடந்த சில ஆண்டுகளாக சந்தையின் அளவு  எதிர்பார்த்த  மாதிரி விரிவடையவில்லை. இந்தப் பின்னணியில் பல பன்னாட்டு நிறுவனங்கள் நகர்ப்புறத்தில் புதிய நுகர்வோர்களை கவர்ந்திழுக்க முடியாமல் புதிய களங்களைத் தேட ஆரம்பித்தன., கடந்த பத்தாண்டுகளாக பன்னாட்டு நிறுவனங்களின் இலாப வெறிக்கான புதிய இரையாக கிராமங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. அதற்காக அவர்கள்  தங்களுக்குத் தாங்களே சூட்டிக் கொண்ட நாமகரம்தான்  நுண்கடன் திட்டம்.

நம் நாட்டின் 100 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகையில், கிட்டதட்ட 75 கோடி மக்கள் கிராமங்களில் உள்ளனர். இம்மக்கள் 6.4 லட்ச கிராமங்களில் வசிக்கின்றனர். இதில், ஒரு லட்ச கிராமங்கள் 2000 முதல் 10,000 வரையும், 2.2 லட்ச கிராமங்கள் 500க்கும் குறைவான மக்கள்தொகையும் கொண்டவையாகும். முதலில் கூறப்பட்ட ஒரு லட்ச கிராமங்கள் ஒட்டுமொத்த கிராம மக்கள் தொகையில் 50 சதம் கொண்டதாகவும் 60 சதவீத கிராம பொருளாதாரம் கொண்டதாகவும் உள்ளது. அன்றாட மற்றும் துரித தேவையான பொருட்களான பற்பசை, சோப், பவுடர் போன்ற பொருட்களின் கிராமச் சந்தை மதிப்பு ரூ. 65,000 கோடியாகவும், டி.வி. மற்றும் குளிர்சாதன பெட்டி போன்ற வகையறாக்களின் சந்தை மதிப்பு ரூ. 5000 கோடியாகவும், விவசாய இடுபொருட்களின் சந்தை மதிப்பு ரூ. 45,000 கோடியாகவும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன சந்தை மதிப்பு ரூ. 8,000 கோடியாகவும் உள்ளது. அதாவது, மொத்த இந்திய கிராமச் சந்தையின் ஆண்டு மதிப்பு ரூ. 1,23,000 கோடியாகும் இந்த பிரமாண்டமான சந்தையில் 35 முதல் 44 சதம் வரை மட்டுமே பன்னாட்டு மற்றும் இந்திய தரகு முதலாளிகளால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ( நன்றி. புதிய ஜனநாயகம்)

மீதியுள்ள சந்தையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல்வேறு தடைகள் இருக்கின்றன. குறிப்பாக, இந்திய கிராமங்கள் மிகவும் விரிந்து பரந்து பல்வேறு புவியியல் அமைப்புகளில் உள்ளன. மேலும் 30 சதவீத கிராமங்கள் சொற்பமான மக்கட் தொகையே கொண்டுள்ளது. சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லை. கிராம மக்கள், பாரம்பரியத்தாலும் உழைக்கும் வர்க்கக் கலாச்சாரத்தினாலும் பின்னிப் பிணையப்பட்டுள்ளார்கள்; அவர்களின் வாங்கும் சக்தி குறைவாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை பற்றிய விழிப்புணர்வு அவர்களிடம் குறைவு. விழிப்புணர்வை உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளது. ஆனால், மக்கள் அல்லும் பகலுமாய் சுழற்சியாய் உழைத்துக் கொண்டு, பொருளாதாரத்தை ஈட்டி தமது தேவையை உள்ளூர் மற்றும் அருகாமையில் உற்பத்தியாகும் பொருட்களின் மூலம் ஈடேற்றிக் கொள்கின்றனர். இவ்வளவு சிக்கல்கள் இருப்பினும், இந்த ஏழை எளிய கிராம மக்களிடம் உள்ள சொற்ப செல்வங்களைக் கூட கொள்ளையடித்தே ஆகவேண்டும் என்கிற வெறியில், பன்னாட்டு நிறுவனங்கள் நுண்கடன் நிறுவனங்களாய் அவதரித்து வருத்தப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு அள்ளியள்ளித்  தரும் திருப்பணியைச் செய்யத் தொடங்கியுள்ளன.

இந்தத் திருப்பணிக்கு பல்வேறு திறம்பட்ட கூட்டாளிகள் தேவைப்படுகின்றனர். கிராம மூலை முடுக்கெல்லாம் சென்றடைய சங்கிலித் தொடர் வலைப்பின்னலைக் கொண்ட அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் தேவை; கிராம பாரம்பரியத்தையும் உழைக்கும் மக்களின் கலாச்சார பின்னணியையும் உடைத்தெறிந்து நுகர்வெறி கலாச்சாரத்தைத் திணிக்கக் கூடிய ஊடகங்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தேவை. குறைந்த முதலீட்டை போட்டு அதிக லாபத்தை எடுக்க என்னென்ன அம்சங்கள் தேவைப்படுகிறதோ அவற்றை முடித்துக் கொடுக்கிற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் கூட்டாளிகளாகத் தேவை. தங்களின் நம்பகமான, திறமையான கூட்டாளிகளாக தன்னார்வக் குழுக்கள், மகளிர் அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள், கூட்டுறவு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்த்துக் கொண்டன. இவர்களின் மேலான் ஊதவியோடு இவர்களுக்குக் கீழ்படிந்து நடப்பதற்காகவே சுய உதவிக் குழக்களை உருவாக்கும் பணியையும் செய்கின்றன.

பன்னாட்டு நிறுவனமான “”ஹிந்துஸ்தான் லீவர்” 2001ஆம் ஆண்டில் 4 மாநிலங்களில் 52 மாவட்டங்களில் உள்ள 5000 கிராமங்களுக்கு தங்கள் பொருட்களை விற்பதற்காக பல்வேறு தன்னார்வக் குழுக்கள் மற்றும் அதனின் சுயஉதவிக் குழுக்களுடன் கூட்டு வைத்து விற்பனையை ஒத்திகை பார்த்தது. இந்த வெற்றியின் பின்னணியில், இவ்வழி முறையை 8 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தி 130 மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான மக்களை இந்நிறுவனத்தினர் சென்றடைகின்றனர். இத்திட்டத்திற்கு சுய உதவிக் குழுக்களிலிருந்து பெண்களை, தன்னார்வக் குழுக்களின் மேற்பார்வையில் தேர்ந்தெடுத்து பொருட்களை விற்பதற்கான பயிற்சியையும், சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றி கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளையும் இந்நிறுவனத்தினர் கற்றுத் தருகின்றனர்.

பன்னாட்டு நிறுவனங்களின் உத்திரவாதத்தில் கடன் கொடுக்கவும் தங்களுடைய சேவைத் திட்டங்களை கிராமப்புறங்களில் விற்கவும் பல நிதி நிறுவனங்கள் புற்றீசல் போல் கிராமத்தை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் மேற்பார்வையில் இயங்கும் தன்னார்வக் குழுக்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுடைய நுண்கடன் சந்தையின் மதிப்பு 15 முதல் 45 ஆயிரம் கோடியாகும். இக்கடன்களை திருப்பிப் பெற்று தர, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் இருப்பதால் மிகவும் இலாபகரமானதாக கருதப்படுகிறது.

தன்னார்வக் குழுக்களோ, பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சேவை செய்யக்கூடிய திட்டங்களுக்கு மட்டுமே உத்திரவாதம் தர முன் வருகிறது. அதாவது, கிராம இணைய நிலையங்கள் வைப்பதற்கும், பன்னாட்டு நிறுவன பொருட்களை விற்பதற்கும் சுய உதவிக் குழுக்கள் நுண்கடன்களை வாங்க உத்திரவாதம் கொடுக்கிறது. தன்னார்வக் குழுக்களின் பிரதான வேலை, அசலையும் வட்டியையும் கறாராகப் பெற்று நிதி நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டும்; அதாவது, அடியாள் வேலை!

உலக வங்கியின் வளர்ச்சி அதிகாரியாகப் பணியாற்றி நூறுக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களை உருவாக்கும் போக்கில், நுண்கடன் உள்நோக்கங்களைப் புரிந்து கொண்ட டாக்டர் சுதிர்ரேந்தர் சர்மா, அவ்வேலையிலிருந்து விலகிக் கொண்டார். அவரின் கூற்றுப்படி, ‘நுண் கடன் என்பது செயற்கையான பணப் புழக்கத்தை ஏற்படுத்துகிறது; இந்த நுண் கடன் மூலம் பெரும்பான்மையான தன்னார்வக் குழுக்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கொழுத்த இலாபத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ பெறுகின்றன. மேலும் இந்நுண்கடன்கள், சமூக உணர்வு, அரசியல் விழிப்புணர்வு மற்றும் வாழ்வுரிமைப் பாதுகாப்பை அடியோடு அரித்து விடுகிறது; நுண்கடன் என்பது மாபெரும் சதி என்கிறார்.

இன்னொருபுறம், பன்னாட்டு நிதி நிறுவனங்கள், பொது மற்றும் ஆயுள் காப்பீடு சேவை திட்டங்களை கிராமங்களில் விற்கவும் முனைந்துள்ளன. குறிப்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ. போன்ற நிறுவனங்கள் புதிதாக களத்தில் இறங்கியுள்ளன. இந்நிறுவனம் பயிர் மற்றும் கால்நடை, மழை போன்ற காப்பீடுகளில் இறங்கியுள்ளது. ஆந்திராவில் மெகபூப் நகர் மாவட்டத்தில் மழைக்கான காப்பீடுகளை விவசாய அமைப்புகளிடம் விற்று ஒத்திகை பார்த்துள்ளது.

விவசாயம் போண்டியாகி வரும் பின்னணியில், எண்ணற்ற விவசாயிகள் தற்கொலையைத் தீர்வாகக் கொண்டுள்ள சூழ்நிலையில், இந்நிறுவனங்கள் இருக்கும் மிச்ச மீதியையும் கொள்ளையடிக்கத் திட்டமிடுவதோடு ஒத்திகையும் பார்த்து வருகின்றன. ஆந்திர மாநிலத்தில் மட்டும் விவசாயிகள் மற்றும் இதர கிராம மக்கள் தங்கள் ஆயுட்காப்பீட்டுக்காக எல்.ஐ.சி.யிடம் ரூ. 1000 கோடி அளவுக்கு பிரிமியம் கட்டியுள்ளார்கள். அண்மைக்காலமாக சந்தையின் வீழ்ச்சியாலும் வறட்சியாலும் பிரிமியத்தைத் தொடர்ந்து கட்ட முடியவில்லை. வாடிக்கையாளர்கள் மரணத்தை தழுவிக் கொண்டிருக்கும் நேரத்தில், விதிமுறைகளை காட்டி, மக்கள் கட்டிய ரூ. 1000 கோடியையும் எல்.ஐ.சி. விழுங்கிக் கொண்டு விட்டது. அரசு சார்ந்த நிறுவனத்திடம் சிக்கியவர்களின் நிலைமை இப்படியிருக்கும் பொழுது, பன்னாட்டு நிறுவனங்களிடம் ஏதேனும் எதிர்பார்க்க முடியுமா?

பதினைந்து ஆண்டுகளாக தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய பொருளாதார கொள்கையின் விளைவாக, விவசாயிகள் வாழ்வுரிமை இழந்து குற்றுயிருடன் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இருக்கும் மிச்ச சொச்சங்களையும் கொள்ளையடிக்க கிராம வளர்ச்சி என்கிற போர்வையில் தன்னார்வக் குழுக்களும், நுண்கடன் நிறுவனங்களும் கிராமங்களை வட்டமிட்டு கொண்டிருக்கின்றன. ஆரம்ப காலத்தில் கடன் கொடுப்பதற்காக மட்டுமே உள்ளே நுழையும் நுண்கடன் நிறுவனங்கள்  மெல்ல மெல்ல மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தன்மையையே சீரழித்து விடுகின்றன.

மாதாந்திர தவணைத் திட்டம் என்பது வங்கிகளும், அரசு நிறுவனங்களும் ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவது.  ஆனால் நுண்கடன் நிறுவனங்கள் தங்களின் நிர்வாக வசதிக்காக வாரம் வாரம் கடன் வசூல் செய்கிறார்கள்.

அதிகாலை, செங்கமங்கலான  நேரத்தில் வாசல் தெளித்து கோலம் போடும் வேலைகளை முடித்தாலும், முடிக்காவிட்டாலும் நுண்கடன்களுக்கான தவணை கட்டி முடிக்க வேண்டும்.  ”காலக்கடன் கழிக்கிறோமோ இல்லையோ இவங்க வாரக்கடனை கண்டிப்பா கட்டணும் என்று ஒரு பயனாளி .  தனது வேதனையான அனுபவங்களை நகைச்சுவையோடு பகிர்ந்து கொண்டார்.

நுண்கடன் நிறுவனங்கள் உருவாக்கி வைத்திருக்கும் நடைமுறை விதிகளை நாம் படித்தால் நமக்கே தலைசுற்றும்  ”ஏழைக்களுக்கான குறைந்த கடன்  திட்டம்……..” ”சுலபத் தவணைகள்” ……. . ”உங்கள் வருமானம் ………. உங்கள் கையில் ……..” ”சிறுசேமிப்பு …….. சிறுகடன் …………சிறு காப்பீடு” ………….. என்றெல்லாம் இனிக்க இனிக்க  மண்ணாங்கட்டித்தனமான வார்த்தைகளைப் பேசும் இவர்களது பொய்களை நம்பி பல மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஓட்டாண்டிகளாகி விடுகின்றன.  பதினெட்டு விழுக்காட்டில் தொடங்கி முப்பத்தி ஆறு விழுக்காடு வரையில் வட்டி வசூல் செய்கிறார்கள்.  ஒரு தவணை அசலோ……வட்டியோ கட்டாவிட்டால் அதற்கு அபதாரம் கட்ட வேண்டுமாம்.

நுண்கடன் ஏழைகளின் பொருள் நுகர்வை உத்தரவாதப்படுத்த மட்டுமே பயன்படுகிறது என்பது இன்னொரு பொருளாதாரக் கணிப்பு. இயற்கைச் சீற்றங்களாலோ அல்லது பருவநிலை மாற்றங்களாளே வேளாண்மை பாதிக்கப்படுவது இயல்பு. அப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டால் வேளாண்மையை நம்பி இருக்கும் மக்களிடம் நுகர்வுப் பொருட்கள் வாங்க காசுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். நுண்கடன் மூலம் அந்த இடைவெளியில் சூனியம் நிலவாமல் காப்பாற்ற முடியும். அரசாங்கம் வேறு கௌரவமான பயிர்ப் பாதுகாப்பு முறைகளை வடிவமைக்காமல் இருப்பதனால் நுண்கடன் மேல் வேளாண் குடிமக்களுக்கு அபரிதமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழைகளின் வருமானம் உயர வாய்ப்பு இல்லை. மாறாக அவர்களின் வருமானம் அவர்களுக்குள்ளேயே சுழல்கிறது. இதனால் அன்றைய தினத்தை /நிகழ்வை/குடும்பக் கனவைத் தள்ளி விட முடிகிறது. ஏதாவது நல்லது செய்ய ‘ஒரு கட்டுப் பணம்’ தேவை என்றால் அதற்கு நுண்கடனை எதிர்பார்த்து இருக்கும் ‘பற்று மனப்பான்மையும்’ இதனால் உருவாகிறது.
சுயஉதவிக் குழுக்கள் மூலம் நுண்கடன் வழங்குவதால் மட்டும் ஏழ்மை மறைந்து சமத்துவ சமூகம் மலர்ந்து விடாது. இது ஒரு தற்காலிக நிவாரணம். இதை முகமது யூனுசும் உணர்ந்து இருக்கிறார். எனவேதான் ‘கிராமீண்’ நுண்கடன் வழங்குவதோடு மட்டும் ‘அமைதி’ பெற்று விடவில்லை. காப்பீடு, வீட்டுவசதிக் கடன், மீன்பிடித் தொழிற்கடன், சிறுதொழிற்கடன், சூரிய ஒளித் திட்டம், கிராமத் தொலைபேசித் திட்டம் என்று பரந்துபட்ட வகையில் வங்கதேசத்தின் கிராமப் பொருளாதாரத்தில் தன் தலையீடுகளைச் செய்கிறது. ஆனால் நுண்கடன் மூலம் பலமான பொருளாதார அமைப்பை உருவாக்க முடியும் என்ற கனவு வீண். இவ்வளவு வெற்றி பெற்ற பிறகும் ‘கிராமீண்’ உட்பட சுய உதவிக் கூட்டமைப்புகளுக்கு அரசு பல்வேறு மானியங்களை வழங்குகிறது. மானியங்கள் தடைபட்டால் செயல்பாடுகள் நஷ்டக்கணக்கில் தான் ஓடும். எனவே ‘முட்டைத் தோடு பொருளாதாரம்’ பற்றிய எச்சரிக்கை எல்லோரையும் போல முகமது யூனுசுக்கும் இருக்கிறது. அவரது நேர் கொண்ட பார்வை நிலத்தினில் சில மாற்றங்களைக் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு வளர்ந்து கொண்டே இருக்கிறது.நுண்கடன் வழங்கும் நிறுவனங்களின் துன்புறுத்தலால் நிகழ்ந்திருக்கும் மரணங்கள், ஊரை விட்டு வெளியேற்றம் போன்ற சம்பவங்களை முழுமையாக விசாரித்து உண்மையை அறிந்திட விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். இத்தகைய மரணங்களை வறுமையால் நடைபெற்ற தற்கொலை என காவல் துறை பதிவு செய்வதை தடுத்து உண்மையான காரணத்தை இணைக்க வேண்டும். என்பன உள்ளிட்டவை அந்த பரிந்துரைகள். நுண்நிதி நிறுவனங்கள் தோன்றியது என்பது ஏதோ தற்செயலான நிகழ்வல்ல. நவீன தாராளமயச் சூழலில் நிதித்துறைச் சீர் திருத்தங்கள் இவற்றின் தோற்றத்திற்கு வழி கோலின. நுண்நிதி கட்டுப்பாட்டு வரைவு மசோதாவுக்கு பதிலாக வரவுள்ள புதிய மசோதா அல்லது ஆந்திர மாநிலத்தின் அவசரச் சட்டம் ஆகிய இரண்டுமே இத்தகைய நுண்நிதி நிறுவனங்கள் விதிக்கும் வட்டி விகிதத்திற்கு உச்சவரம்பினை விதித்திட மறுத்துவிட்டன. இந்த குறிப்பிட்ட பிரச்சனையை எடுப்பதுடன், மத்திய அரசு பின்பற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான பாதையையும் விவாதத்திற்கு உள்ளாக்கிப் போராட வேண்டும். இல்லையெனில் நமது தேசம் நுண்கடன் தருவோர்களின் பினாமி பூமியாக மாறிவிடும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை.

(பசுமைத்தாயகம் சுற்றுச்சுழல் ஜனவரி2010)


“கொல்லிமலை எனக்கிளைய செல்லிமலை அம்மே….

கொழுநனுக்கு காணிமலை பழனிமலை அம்மே….

எள்ளுலவும் விந்தைமலை எந்தைமலை அம்மே

இமயமலை என்னுடைய தமையன்மலை அம்மே….“

-குற்றாலக் குறவஞ்சி

பண்டைய இலக்கியங்களை வாசிக்கும் போதெல்லாம் குற்றாலக்குறவஞ்சியின் வரிகள் வந்து வந்து செல்லும். தமிழ்க்கடவுள் முருகனுக்கு குறமகள் வள்ளியை மணமுடித்துக் கொடுத்தபோது ஆதினத்து மலைகளையெல்லாம் முருகனுக்கு சீதனமாய்க் கொடுத்ததாக குறவஞ்சி செய்தி சொல்கிறது. நமது தெய்வங்கள் எல்லாம் மலைமேல் நின்றே நமக்கு தரிசனம் தருகிறார்கள். அதுவும் மேற்குத் தொடர்ச்சிமலைகள் என்றால் தெய்வங்களுக்கெல்லாம் கொள்ளை  ஆனந்தம்.

வருசநாட்டுப் பள்ளத்தாக்கில் கிழக்குப் பக்கமாக உள்ள மலைகள் சதுரகிரி மலைகள். இவை 480 சதுர கி. மீ., பரப்பளவு கொண்டது. கடல் மட்டத்திலிருந்து நாலாயிரத்து ஐந்நூறு அடி உயரத்தில் உள்ளது. இது மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களை இணைக்கிறது. இதில் சாப்டூர்- வத்ராயிருப்பு இடையே 230 ச.கி.மீ.,பரப்பில் மதுரை மாவட்ட மலை பகுதியில் 60 கிராமங்கள் உள்ளன. மலைமேல் கோவில் கொண்ட சதுரகிரி சுந்தர மகாலிங்கப் பெருமானைத் தரிசிக்க மக்களின் மலையேற்றம், ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையை முன்னிட்டு நடைபெறும்.  முதல்நாள் மாலையில் தொடங்கி இரவெல்லாம் அடர்ந்த வனத்தில் நடந்து, அதிகாலையில் சதுரகிரி கோயிலில் போய் சேரும். இந்த நீண்ட பயணத்தில் ஆண்களும் பெண்களுமாய் ஏறக்குறைய மூன்று லட்சம் மக்கள் பயணம் செய்கிறார்கள். சூரிய உதயத்தில் மலை உச்சியிலிருந்து கிழக்குப் பக்கம் பார்த்தால் கடல் வரையிலான நீண்ட சமவெளி தெரியும். மனிதர்கள் எறும்புகளாக மாறி ஊர்ந்து செல்வதைப்போல ஒரு இனிப்பான பயணம். பயணச் சோர்வை கொஞ்சம் தணித்துக் கொள்ள எருமைப்பாறையில் இளைப்பாறுதல் இருக்கும். குடிக்கத் தண்ணீர் இருக்கும். சதுரகிரி மலை மூலிகைகளுக்குப் பெயர்போன மலை. இன்றும் பல மூலிகைகள் இருக்கின்றன. மூலிகைகளின் வகை தெரியாமல் அவற்றை வேரோடு தோண்டி எடுத்துச் செல்லும் மனிதர்களால்  வனம் தன்னியல்பைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது. கிரிவலம் என்பது வெறும் ஆண்மீகத்தோடு மட்டும் தொடர்புடையதல்ல…. மலைவலம் வரும்போது இயற்கையின் எழில் நிறைந்த மூலிகை வாசம் மனதுக்குள் இதம் தரும். உடல் ஆரோக்கியம் பெறும். இதற்காகவே நமது முன்னோர்கள் கிரிவலம் வருவதை வாழ்வின் ஒரு கட்டாயமாகக் கொண்டிருந்தார்கள். ரஜினி போன்ற ஆண்மீகவாதிகள் அல்லது வசதியானவர்கள் இமயமலைக்குச் சென்றாலும், சாதாரண மக்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது குற்றாலம், பழனி, கொல்லிமலை, ஊட்டி, கொடைக்காணல், சதுரகிரி, சபரிமலை போன்ற மலைகளில் ஏறி இறங்க வேண்டும் என வேண்டுதல் ஏற்படுத்திக்கொண்டு அதை தமது வாழ்நாள் கடமையாகவே கருதுகிறார்கள்.

சதுரகிரி மலையிலும்,  குற்றால மலையிலும் உள்ள  ஆண்டிகளாய் சுற்றிக் கொண்டிருக்கும் பலர் தங்களின் வாழ்வில்  சமூக மயமாக்கப்பட்ட உலக நடைமுறையில் கிடைக்கப் பெறாத நிம்மதியை மலைத் தளங்களில் பெற்றுள்ளார்கள். இதில் இறைவழிபாடு எந்தளவுக்குத் தொடர்புடையதோ எனக்குத் தெரியாது….. ஆனால் இயற்கை  வழிபாடே மனிதனை இயல்பாக்கி அவனது மன நலத்தைப் புதுப்பிக்கிறது.  இயற்கையோடு இயைந்த வாழ்வே  உயிரினங்களுக்கான புத்துயிர்ப்பாய் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. (இது பட்டறிவு. எங்கள் கிராமம் குக்கிராமமாக இருந்தபோது மக்கள் தங்களுக்கான வைத்தியங்களுக்குப் பெரும்பாலும் மூலிகைகளையே நம்பியிருந்தனர். குக்கிராமம் பேரூராட்சியான பிறகுதான் தொட்டதுக்கொல்லாம் ஊசிகுத்தும் வைத்தியமுறை வந்துவிட்டது)

ஆனால்…….?

அன்மைக்காலங்களில் நம்முடைய  இறைவழிபாடுகளும் இன்பச்சுற்றுலாக்களும் புவி வனப்பின் மீதுள்ள ஆயிரமாயிரம் இயற்கை உயிரிங்களுக்கு துன்பம் ஈந்து கொண்டிருக்கின்றன.  தென் மேற்குப் பருவக்காற்று தொடங்கும் காலமான ஆடி மாதத்தில்  மரங்களும் செடிகளும் கொடிகளும் மழையை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் போது லட்சக்கணக்கான மக்கள் மலையேறுகிறார்கள். தங்களின் மனச்சுமையையும், துன்பங்களையும் கடவுளிடம்  கொட்டுவதற்காக மலையேறும் மக்கள், துன்பங்களோடு தாங்கள் கொண்டு வரும் துயரக் குப்பைகளையும் மலைகளிலேயே விட்டுவிட்டுச் செல்கிறார்கள். மக்களின் மனச்சுமை நீங்கியதோ இல்லையோ மலைகளின் அவலச்சுமை மட்டும் நீங்கவேயில்லை. திருவிழா முடிந்த பிறகு மலையில் ஏறிப்பார்த்தால் எங்கெங்கு காணினும் எல்லா இடங்களிலும் நீக்கமற நெகிழிகளே  கொண்டிக்கிடக்கின்றன. சலசலக்கும் நீரோடைகளையெல்லாம் சரசரக்கும் நெகிழிக் குப்பைகள் மூடிக்கொண்டதால் நீரூற்றுகள் அடைபட்டுப் போய்விடுகின்றன. இது சதுரகிரிக்கு மட்டுமல்ல….. சபரிமலைக்கும் பொருந்தும்.

கார்த்திகை மார்கழி மாதங்களில் காலைநேரப் பனியைக் கிழித்துக்கொண்டு பெரியாறு புலிகள் சரணலாயத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள சபரிமலைக்குச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் தெரியாது…. அங்கு அய்யப்பன் மட்டுமல்ல… ஆயிரமாயிரம் கானுயிர்களும் குடியிருக்கின்றன என்று…. முன்பு மகரவிளக்கு திருவிழா மட்டுமே இங்கு நடந்தது. ஆரம்பத்தில் தமிழ்நாடு, கேரள பக்தர்கள் மட்டுமே வந்தனர். நாளடைவில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்று அகில இந்தியாவில் இருந்தும் பக்தர்கள் வர தொடங்கினர். இதனால் கார்த்திகை முதல் தேதி முதல் 41 நாட்கள் மண்டலகாலம் தொடங்கப்பட்டது. பின்னர் மாதபூஜை, சித்திரை விஷூ, பங்குனி உத்திரம் போன்ற நாட்களிலும் நடைதிறக்கப்பட்டது.  என்றாலும் மண்டல – மகரவிளக்கு காலத்தில்தான் அதிகமாக பக்தர்கள் வருகின்றனர். சபரிமலையை நிர்வகித்து வருவது திருவிதாங்கூர் தேவசம் போர்டு. இதன் கீழ் உள்ள பிற கோயில்களுக்கு, சபரிமலை வருமானம் பயன்படுத்தப்படுகிறது. இங்கு வரும் பக்தர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களே அதிகம். அடுத்ததாக ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்தவர்கள் இடம் பெறுகின்றனர். பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்காமல் இருக்க தேவசம்போர்டு காரணம் சொல்வதில்தான் குறியாக இருக்கிறதே தவிர, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டவிலை. சபரிமலையில் சீசன் நேரத்தில் கிடைக்கும் 200 கோடி ரூபாய் வருமானத்துடன், பக்தர்கள் கேரளா வழியாக பயணம் செய்வதன் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது என்பதை கேரள அமைச்சர்களே பலமுறை ஒப்புக்கொண்டு விட்டனர். எனினும் சபரிமலை விஷயத்தில் போதுமான கவனமின்மைதான் அடிக்கடி உயிர்பலியை ஏற்படுத்தி வருகிறது. குமுளியில் தொடங்கி பம்பைநதி வரையில் திருவிழாக்காலங்களில் கொட்டப்படும் குப்பைகள் கணக்கில் அடங்காதவை. (“கங்கைநதிபோல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி…. ” என்ற  வீரமணியின் பாடல் கங்கையைப் போலவே பம்பையும் பக்தியின் பெயரால் அசுத்தப்படுத்தப்படுகிறது என்பதை மறைமுகமாக ஒத்துக் கொள்கிறதோ….)

கடந்தாண்டு பக்தர்கள் நெரிசலில் செத்துமாண்ட புல்மேடு விபத்து உலகறிந்த கதை. இது போன்ற விபத்துகளுக்கான காரணம் எது? புல்மேடு விபத்தை பொறுத்த வரை கேரள அரசின் அலட்சியம்தான் காரணம். போதிய வெளிச்சம் இல்லாததால் கீழே விழுந்தவர்களை பக்தர்களே மிதித்து கொன்ற சம்பவம் மிகவும் பரிதாபகரமானது. புல்மேட்டில் யானையும், புலிகளும் சாதாரணமாக நடந்து செல்லும். இங்கு லட்சக்கணக்கான் பக்தர்களை அனுமதிப்பதே தவறு. அதுவும் இரவு நேரத்தில் அனுமதித்தது எப்படி என்பது இன்னும் விடை தெரியாத கேள்வி. 1999ல் பம்பையில் நடைபெற்ற விபத்தை தொடர்ந்து அமைக்கப்பட்ட நீதிபதி சந்திரசேகர மேனன் கமிஷன் அளித்த அறிக்கையில், பம்பை போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க மகரஜோதி தரிசிக்க பக்தர்கள் அதிகமாக கூடும் புல்மேட்டில் தேவையான ரோடு, மின்சாரம், குடிநீர், பாதுகாப்பு போன்ற வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், அவைகிடப்பில் போடப்பட்டது.

1999ல் பம்பை நெரிசலில் 53 பேர் பலியான சம்பவத்திற்கு தீர்வு காண, சபரிமலையில் இருந்து 7 கி.மீ., தூரமுள்ள புல்மேடு பகுதியில் இருந்து மகரஜோதியை காணலாம் என்ற கருத்து அப்போது எழுந்தது. புல்மேடு வழியாக சென்றால், குமுளியில் இருந்து 46 கி.மீ., தூரத்தில் சன்னிதானத்தை அடையலாம். 30 ஆண்டுகளுக்கு முன் புல்மேட்டில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள உப்புபாறை பகுதியில், மரங்களை கொண்டு வருவதற்காக புதியதாக ஜீப் பாதை அமைக்கப்பட்டது. வள்ளக்கடவு வரை அமைக்கப்பட்ட ஜீப் பாதைதான் தற்போது பக்தர்களின் வாகனங்கள் செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது. புல்மேடு வனப்பகுதி 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 25 ஏக்கர் ஒரே சீரான புல்வெளியுடன் அமைந்த மலைப்பகுதி. இப்பகுதியில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்ந்து மகரஜோதியை தரிசனம் செய்யலாம் என்ற நிலை இருந்தாலும் வனவிலங்குகள் தொந்தரவும் மிகச் சரிவான மலையாகவும் உள்ளது.  இப்பகுதியில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் பக்தர்கள் வந்த வாகனங்கள் நிறுத்தப்படும் உப்புபாறை உள்ளது. புல்மேட்டில் இருந்து உப்பு பாறைக்கு வருவதற்கு சிறிது தூரம் ஒற்றையடி பாதையும், மீதி தூரம் ஜீப் பாதையும் உள்ளது. புல்மேட்டில் மகரஜோதியை தரிசனம் செய்த பின், லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் உப்புபாறைக்கு வருவது தான் பிரச்னை. ஜன.14ல் மகரஜோதி தரிசனம் செய்ய புல்மேட்டில் 3 லட்சம் பக்தர்கள் இருந்துள்ளனர். உப்புபாறையில் பக்தர்கள் வந்த 2500 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. எவ்வித பாதுகாப்பு ஏற்பாடு செய்யாத இப்பகுதியில் அதிகமான வாகனங்களும், லட்சக்கணக்கான பக்தர்களும் எப்படிவந்தார்கள். வண்டிப்பெரியாரில் இருந்து புல்மேடு வருவதற்கு இடையில் வள்ளக்கடவில் வனத்துறை செக்போஸ்ட் உள்ளது. இங்கு ஜீப், கார்களுக்கு நுழைவுக்கட்டணமாக 50 ரூபாயும், மினிபஸ்களுக்கு 100 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறதுஇப்படி வனவழிபாட்டைத் தங்களின் கருவூலத்தை  நிரப்புவதற்கான வருமானப் பெருக்குத் திட்டமாக அரசாங்கங்கள் எடுத்துக் கொண்டதால்தான் அதிகமான மக்கள் மலையேறுவதும் அதனால் விபத்துகளோடு மக்கள் உயிரிழப்பதும், வனங்கள் அழிவதும் தொடர்கதையாகிவிட்டது.

வனங்களில் இயற்கையின் குழந்தைகளான பழங்குடிகள் தங்களின் சகோதரர்களாக, முன்னோரகளாக, தெய்வங்களாக, மண்ணையும்,மரங்களையும், நீரையும், விலங்குகளையும் வழிபட்டனர் பழங்குடிகளின் வாழ்க்கைத் தேவைகளை வனங்களே நிறைவு செய்தன. அவர்களின் தேவைகளும் மிகக் குறைவு. எளிய வாழ்க்கை முறை, இயற்கையை சிதைக்காமல், இணைந்து வாழ்ந்தனர். சிதைப்பது குற்றம் எனக் கருதினர்.

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு வனத்திற்குள் சுதந்திரமாக சுற்றித் திரிந்து, காய்களை, கனிகளை, கிழங்குகளை உணவாகக் கொண்டனர். தேவைக்கு சிறு விலங்குகளை வேட்டையாடினர். வேட்டையின் போது சினையாக உள்ள விலங்குகளை வேட்டையாடமாட்டார்கள். இனப்பெருக்க காலத்தில் வேட்டைக்கு செல்வதை தவிர்த்தார்கள். வேட்டையை அந்த கிராமமே பகிர்ந்து கொள்வர். இது அவர்களின் சிறந்த பண்புக்கு எடுத்துக்காட்டு. தங்களது உணவுத் தேவைக்கு அளவான இடத்தில் விவசாயம் செய்தனர். கலப்புப் பயிர் விவசாயம் செய்தனர்.

மண்ணின் வளத்திற்கு ஏற்ப இடம் பெயர்ந்து விவசாயம் செய்தனர். 10, 15 குடும்பங்களைக் கொண்ட ஒரு இனக்குழு ஒரு கிராமமாக இருந்தது. விவசாயத்திற்காக கிராமமே இடம் பெயர்வது, எளிமையானது. சிறிய வீடுகள், அதே சமயம் தட்பவெப்பநிலைக்கு ஏற்புடையது. தங்களுக்கென தனி மொழி, நீதி, நிர்வாகம், உறவு, எல்லைகளைக் கொண்ட வாழ்க்கை முறை. வனம், நிலம், தனி நபர்களின் உடைமையாக இல்லாமல் வளங்கள் அனைத்தும் சமூக உடமையாகக் கொண்டு வாழ்ந்தனர். ஆங்கிலேயர்களின் காலத்தில்வனங்களிலுள்ள கனிமங்களை எடுக்க மரங்களை வெட்டினர் ஆங்கிலேயர். வனங்களைச் சிதைத்துக் கொள்ளை அடித்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக வனத்தைக் காக்கும் போராட்டத்தை பழங்குடிகள் நடத்தினர். பழங்குடிகளை ஒடுக்கி, வனத்தின் வளத்தை வசப்படுத்த, பழங்குடிகளின் பாரம்பரிய உரிமையைப் பறிக்கிற வனக் கொள்ளைகளை, சட்டங்களை ஆங்கிலேய அரசு, 1882லிருந்து கொண்டு வந்தது. பாதுகாக்கப்பட்ட காடுகள், ஒதுக்கப்பட்ட காடுகள் என்று அரசு எல்லை நிர்ணயித்து, அந்த பகுதிக்குள் பழங்குடிமக்கள் செல்லவே தடை போட்டது. வேட்டையாட, விவசாயம் செய்ய, கால்நடைகள் மேய்க்க, சிறு வனப்பொருட்களை பயன்படுத்த உரிமை மறுக்கப்பட்டது. மீறினால் அபராதம், சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. வனப் பாதுகாப்பிற்கென வனத்துறை அதிகாரிகள் தங்க, ஆங்கிலேய அதிகாரிகள் ஒய்வெடுக்க வசதியான இல்லங்கள் வனப்பகுதியில் கட்டப்பட்டன. வன விலங்குகளை வேட்டையாடுவது ஆங்கிலேயர்களுக்குப் பொழுதுபோக்கு. கிராமக்காடுகள் என ஒதுக்கப்பட்ட நிலங்களில் பட்டா வழங்கப்பட்டது. தங்களுக்கென தனித்தனியாக சொத்துக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையற்ற பழங்குடிகளின் உயர்ந்த பண்புகள் வசதி படைத்த பழங்குடி அல்லாதவர்களுக்கு வசதியானது. அதிகாரிகளின் துணையோடு பழங்குடி அல்லாதார் மலை நிலங்களுக்குப் பட்டா பெற்றனர். காப்பி, தேயிலை போன்ற பணப்பயிர் பயிரிட பல்லாயிரம் ஏக்கர் மலை நிலங்கள் ஆங்கிலேயருக்கும், அவர்களுக்குத் துணை நின்ற பணம் படைத்தவர்களுக்கும் தாரை வார்க்கப்பட்டது. நிலத்தை இழந்த பழங்குடிகள் தேயிலைத் தோட்டக் கூலிகளாயினர்.

வேட்டையாடும் உரிமை முற்றாக பறிக்கப்பட்டு வன வெளியேற்றம் தொடர்ந்தது. வன விலங்கு சரணாலயம், தேசிய பூங்காக்கள் ஆகியவற்றிற்கு எல்லை வகுக்கப்பட்டு அப்பகுதியில் வாழ்ந்த பழங்குடிகள் வெளியேற்றப்பட்டனர். காகித ஆலைகளுக்கு வனத்திலுள்ள மரங்கள் வெட்டப்பட்டன. ஆலைகளின் தேவைகளுக்காக மரங்கள் வளர்க்க வனப்பகுதி ஒதுக்கப்பட்டது. கனிமங்கள், கருப்புக்கல் போன்றவை எடுக்கவும் மரங்கள் வெட்டவும் தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சந்தன மரக் கிடங்குகள் உருவாக்கப்பட்டு பல கோடி மதிப்பு மிக்க சந்தன மரங்கள் வனத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டன. வனத்தில் விளைகின்ற நெல்லி, கடுக்காய், சிறு வனப்பொருட்கள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டன. வன வளம் அரசிற்கு வருவாய் ஈட்டித் தரும் பகுதியாகவே மாற்றப்பட்டது. பாசன அணை, மின்சார அணை, தேயிலை – காப்பி தோட்டங்கள், நிலக்கரி, எண்ணை, இரும்பு, கருங்கற்கள், தைல, ரப்பர் மரங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், ஆலைகள், அரசு-தனியார் ஓய்வில்லங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற அரசு மற்றும் தனியார் வளர்ச்சித் திட்டங்களுக்காக தொன்று தொட்டு வனங்களை அழித்துக் கொண்டிருக்கிறது அரசு.

உலகமயச் சூழலில் மலை நிலங்கள் வீட்டுமனைகளாக, சுற்றுலா தலங்களாக மாற்றப்படுகின்றன. இயற்கை சுற்றுலாவிற்கும் திறந்து விடப்படுகிறது. தண்ணீர் குடிக்கும் பணப்பயிர் விவசாயம், ஆழ்குழாய் கிணறுகள், புதிய வேளாண்முறைகள் போன்றவை, ஓடைகளை வற்ற வைத்துவிட்டன. வன விலங்குகள் கோடையில் தண்ணீருக்கு அலைகின்றன. பழங்குடிகளின் தற்சார்பு வாழ்க்கை முறை சிதைந்து நுகர்வு கலாச்சாரத்தால் சாலையோரம் நின்று வாகனங்களில் வருவோரை பிச்சை கேட்கும்  நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஊட்டி, ஏற்காடு, கொடைக்காணல், வால்பாறை, மூணாறு, தேவிகுளம், பீர்மேடு, சபரிமலை சதுரகிரி, ஹைவேவிஸ் என நீண்டு செல்லும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கட்டப்படும் ஆயிரக்கணக்கான கட்டிடங்களின் உரிமையாவுமே நம்மை ஆண்ட…. ஆண்டுகொண்டிருக்கும்…. ஆளப்போவதாக கனவு கண்டு கொண்டிருக்கும் ஆதிக்க சக்திகளின் வருமானத்திற்கும் அதிகமான சொத்துகளின் பதுக்கலே. தேசத்தில் நிலவும் வரலாறு காணாத ஊழலை எதிர்த்து தனது உரத்த குரலை அன்னா ஹசாரே பதிவு செய்து கொண்டிருக்கிறார். இதை வரவேற்போம். அதே நேரத்தில் நமது மாண்புமிகு ஊழல்வாதிகள் தங்களது அதிகார காலத்தில் திருடிச் சேர்த்த பணத்தையெல்லாம் உயர்ந்த மலைகளின் உச்சியில் உயர்தரத் தங்கும் விடுதிகளாகவும், கோடை வாழிடங்களாகவும் நிறமாற்றம் செய்துள்ளார்கள். இதனால் இயற்கையின் இயல்பே உருமாற்றமாகிக் கொண்டிருக்கிறது.

 

பக்தி, சுற்றுலா, பொருளாதாரப் பெருக்கம் போன்ற போலி முகங்களின் தயவில் மலைவளங்கள் அழிக்கப்படுகின்றன….. திருடப்படுகின்றன. எழுபது விழுக்காடு வேளாண் உற்பத்தியை மட்டுமே நம்பியுள்ள தேசத்தில் மலை வளத்தை, இயற்கையின் வளத்தைப் பாதுகாக்க புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.

 

அசுத்தவாதிகளிடமிருந்தும், கனிமத் திருடர்களிடமிருந்தும், ஆக்கிரமிப் பாளர்களிடமிருந்தும்   இயற்கையைக் காப்பாற்ற நாடு தழுவிய  இயக்கம் உடனடியாகத் தேவை. முதல் குரலை யார் உயர்த்தப் போகிறார்கள்?

( பசுமைத் தாயகம் நவம்பர்2011)

 

 

 

 


சென்ற வாரம் எனது சொந்த கிராமத்தின் திருவிழாவிற்குச் சென்றேன். பல வருடங்கள் நான் பார்த்துச் சலித்த நிகழ்ச்சிகளும், முகங்களுமே இருந்தாலும் ஒவ்வொரு முறையும் புதுப்புது அனுபவங்களை திருவிழாக்கள் கற்றுத் தருகின்றன. ஏனெனில் திருவிழாக்களை எந்த பஞ்சாங்கங்களும் முடிவு செய்வதில்லை. உழைக்கும் மக்களால் உருவாக்கப்பட்டுள்ள கிராமக் கமிட்டிகளே முடிவு செய்கின்றன. அவர்களுக்கு  ஏதுவாக நாட்களில் தங்கள் மண்ணின் தட்ப வெப்பத்தின் தன்மையறிந்து திருவிழாக்களை முடிவு செய்கிறார்கள். பொது மக்களின் ஏகோபித்த சம்மதங்களின் அடிப்படையிலேயே விழாக்களை நடத்துகிறார்கள்.

 

கரகம் எடுத்தல் என்ற நிகழ்ச்சிதான் கிராம திருவிழாக்களின் தொடக்க நிகழ்ச்சி. தமிழகம் முழுவதும் உள்ள எல்லா கிராமங்களுக்கும் இது பொருந்தும். மண் பாண்டத்தில் வேப்பிலையும், தென்னம்பாலையும் மல்லிகையும் மஞ்சளும் சேர்த்து, சந்தனம் குங்குமம் விபூதி வாசனையோடு அம்மன் உருவாக்கப்பட்டு நள்ளிரவில் பூசாரியின் மஞ்சள் நீராட்டத்தோடு புறப்படும் அம்மன் புறப்பாடு விடிய விடிய மக்கள் வெள்ளத்தில் நீந்தி வைகறை வேளையில் ஊர் சேரும்.  வெப்பம் தகிக்கும் வேனிற்காலத்தில் நடத்தப்படும் திருவிழாக்கள் யாவும் அறிவியல் பூர்வமாக நிகழ்ச்சிகளைக் கொண்டதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

“பக்தி என்பது ஒடுக்கப்பட்டவனின் புலம்பல்” என்பார் கார்ல்மார்க்ஸ். பெருங்கோவில்களுக்குள் சென்று கடவுளிடம் புலம்பி, தனது உளவியல் நெருக்கடியை தீர்த்துக் கொள்ள ஆதிக்க சக்திகளுக்கு உரிமையளிக்கப்பட்டிருந்தது. ஆனால் உழைக்கும் அடித்தள மக்கள் தங்களின் உளவியல் நெருக்கடியை தீர்த்துக் கொள்ளும் இடமாக சங்க காலத்தில் “நடுகல் வழிபாடு” என்றும், பின்னால் “நாட்டார் வழிபாடு” என்றும் தங்களுக்கான வழிமுறைகளைக் கட்டமைத்துக் கொண்டனர். “சென்று சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம்” எனத் திருநாவுக்கரசர் பாடியது. இவர்களின் மீது எந்தளவு வெறுப்பு இருந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. எனினும் ஒன்று மற்றொன்றின் கூறுகளை உள்வாங்கிக் கொண்டும் வரலாற்றில் பயணித்தது. கல்வி, அறிவுள்ள ஆதிக்க சக்திகள், தங்களது அனுபவங்களையும், எண்ணங்களையும் கல்வெட்டு, இலக்கியம், செப்பேடு போன்றவற்றில் பதிவு செய்தபோது, கல்வி மறுக்கப்பட்ட இவர்கள் தங்களது அனுபவங்களையும், எண்ணங்களையும், “வாய்மொழி வரலாறாகவும்”, வழக்காறுகளாகவும், சமயச் சடங்குகளாகவும், கலைகளாகவும் உருவாக்கிக் கொண்டனர். அவர்களது மனங்களின் பதிவுப்படிமங்களாக, நனவிலியில் தொன்மங்களாக, இயற்கை வாழ்வில் ஏற்படும் நெருக்கடியைத் தளர்த்தி, மீண்டும் கூட்டு மனத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் பண்பாட்டுத்தளமாக திருவிழாக்களைக் கட்டமைப்பு செய்து கொண்டனர்.

கடந்த நான்காண்டுகளாய் ஆற்றில் சாமி செய்யும் நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை. பின்னிரவு தாண்டி புறப்படும் இந்த ஊர்வலத்தில் எழுபது விழுக்காட்டினர் போதையின் உச்சத்திலிருப்பார்கள். கோவிலுக்கான தலைக்கட்டு வரி வசூலைக் காட்டிலும் டாஸ்மார்க்கடையில்  இரண்டு மடங்கு தொகைக்கு விற்பனை நடந்துள்ளது. (டாஸ்மார்க் கடையில் திருவிழா நடந்த மூன்று நாட்களில் மட்டும் மொத்த விற்பனை ஆறு லட்சத்து ஐம்பதாயிரம். திருவிழாவுக்கான வசூல் தொகை ஒரு லட்சத்து அறுபதாயிரம்.) எனவே நான் கடந்தாண்டுகளில் இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்தாண்டு நானும் சுந்தரும் கலந்து கொண்டோம். எனது நண்பர் வட்டத்தில்  பலர் மாறிப்போன பிறகும் சுந்தர் மட்டும் இன்னும்  எனக்கான எண்ணங்களோடும், பிற பழக்கங்கள் இல்லாமலிருப்பதும் ஆறுதலான ஒன்று.

 

எங்கள் ஊர்த்திருவிழாவில் ஒட்டுமொத்த சாதிக்காரர்களும் சேர்ந்து சாமி கும்புடு நடத்துவது சுற்று வட்டாரத்தில் எப்படி பிரபலமோ அதே போல சாமியெடுத்தலும் பிரபலமான நிகழ்வு. சாமி செய்தல் என்ற நிகழ்வின் பின்னால் பலர் தங்களின் உழைப்பைத் தந்து கொண்டிருக்கிறார்கள். அம்மன் சிலையை மண்சட்டியில் வேப்பிலையைச் சொருகி, மண்சட்டியைச் சுற்றிலும் மல்லிகைப் பூக்களைச் சுற்றி, அதில் நட்ட நடு மையத்தில் மஞ்சள் வைத்து அதன் மீது அம்மனின் உருவம் பொறித்த ஐம்பொன் முகத்தை வைப்பார்கள்.

 

இதில் ஒவ்வொரு பணியையும் ஒவ்வொருவர் தாமாகவே எடுத்துக் கொள்கிறார்கள். மல்லிகைப் பூக்களைக் கட்டிக் கொடுப்பது என சிலர், வேப்பிலை பறித்துத் தருவதென சிலர்,  கரகம் எனப்படுகிற சாமி செய்யும் போது பக்கத்திலிருந்து அதற்கான பணிவிடைகள் செய்வதென சிலர், சாமி ஊர்வலத்தில் குடை பிடிப்பதென சிலர், பூசாரி அதிகமாக அருள் வந்து சாய்ந்துவிடாமல் அவரைப் பிடித்துக்கொள்வதென சிலர் நேர்த்திக் கடன் பட்டிருக்கிறார்கள். அவரவர் பணியை அவரவர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

அதிகாலை மூன்று மணிக்குப் புறப்படும் சாமி ஊர்வலம் வரும் வழியெல்லாம்  நூற்றுக்கணக்கான சாமியாடிகளுக்கும் ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கும் காட்சி தந்து விட்டு  காலை ஐந்து மணிக்குப் பிறகே ஆலயம் வந்தடைகிறது. சாமியாடிகளில் பல பழைய முகங்களாக இருப்பதைக் காணும்போது இளைய சமுதாயத்தினரின் மத்தியில் பகுத்தறிவு பிறந்து விட்டது என்று நம்பத் தோன்றியது.

 

கொட்டு முழக்கமும் வானவேடிக்கை ஆரவாரமும் பலருக்கு சாமியாடும் வாய்ப்பைத் தருகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் சாமியாடுவதால் அனைவருக்கும் விபூதியிட்டு சாமிகளைமலைஏறச் செய்யும் பெரும் பொறுப்பை பூசாரியால் மட்டுமே செய்ய முடியாத காரணத்தால் பல துணைப் பூசாரிகளும் முளைத்து விடுவார்கள். இந்தாண்டு பல துணைப் பூசாரிகளுக்குள் யார் பெரியவர் என்ற சண்டைபிறந்து பிறகு கிராமத்தார் சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று.

 

பெரியமேளம், தாரை, தப்பாட்டம், உருமி, கரகாட்டம், வான வேடிக்கை  என அனைத்து ஆரவாரத்தோடும் புறப்பட்டு வரும் காளியம்மனுக்கு முன்னால் காளி வேடமிட்டு ஆடுவதற்குத் தயாராக சிலர் இருந்தார்கள்.  எனது சின்ன வயதில் தொடங்கி நீண்ட நாட்கள்  என் பள்ளித் தோழன் கருப்பையாவின் தந்தைதான்  காளி வேடமிடடு ஆடுவதை நான் பார்த்திருக்கிறேன். தற்போது இளம் வயதுக்காரன் ஒருவன் தயாராக இருந்தான். கருப்பையாவின் அண்ணன் மகனாம். யாரும் யாரையும் கட்டாயப்படுத்தாமலே வாழையடி வாழையாக இந்தப் பொறுப்புகளை எடுக்க நமது ஜனங்கள் பழகிக்கொண்டார்கள். கடந்த பத்தாண்டுகளாய் எனது தம்பிதான் எங்கள் குடும்பத்தின் சார்பில் சாமிக்குக் குடைபிடிக்கிறான். இதற்கு முன் எனது அண்ணன் இந்தப் பணியைச் செய்தார். குடைபிடிப்பதற்காக பங்குனி மாதம் முழுவதும் விரதமிருப்பதும் வேறு பழக்கங்களை ஒத்திவைப்பதும் பக்தியாலா…? அல்லது பயத்தாலா….?

 

சாமி வரும் வழியெல்லாம் கோலமிட்டிருந்தனர். உள்ளூர் மற்றும் வெளியூர்ப் பெண்கள் அவரவர் வீட்டு முன் இந்தப் பணியைச் சிறப்பாகவே செய்திருந்தார்கள். சாமி கோவிலை அடைந்தவுடன் மாவிளக்கு எடுத்து வரப்பட்டது. அன்று பகலெல்லாம் ஆட்டங்களும் கொண்டாட்டங்களுமாய் பொழுது மிக வேகமாய்ச் சென்றது.  கிராமத்திலிருக்கும் மக்கள் அவரவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தங்களால் முடிந்த வேடங்களைப் போட்டு தெருவெல்லாம் ஆடித்திரிந்தார்கள். வேடமிடுவதில், ஆடுவதில் மணியார்களே எப்போதும் பிரமாதப் படுத்துவார்கள். இந்தாண்டும் அப்படியே இருந்தது. அதிலும் பதினிக்கார மாமாவின் பலவேசம் மிகச் சிறப்பாக இருந்தது.

 

முளைப்பாரி எடுத்துக் கொண்டு வரும் நேரத்தில் நாங்கள் கிளம்பினோம். எனது பிள்ளைகளுக்கு ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டு வந்தேன்.

 

மாலையில் நான் எங்கள் ஊருக்குப் பக்கத்திலிருக்கும் சித்தார்பட்டிக்குச் சென்றேன். இங்கும் இன்று திருவிழா. எங்கள் ஊரைப் போன்று ஆண்டுதோறும் கொண்டாடாமல் கிடப்பில் கிடந்த திருவிழா. ஊருக்குள் சண்டை வந்தால் முதலில் சாமி கும்பிடைத்தான் பழிவாங்குவார்கள். பதினைந்தாண்டுகள் திருவிழா நடத்தாத   ஊரில் திருவிழா நடப்பதால் அதைக்காணும்  ஆவலில் அங்கு சென்றேன். எங்கள் ஊரை விட எல்லா வகையிலும் சின்ன கிராமமான சித்தார்பட்டியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் திருவிழா நடந்தது.

 

சாமியாட்டங்களுக்கும் குறைவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாக கிடா வெட்டி, பொங்கல் வைத்து விருந்துக்கு  சொந்த பந்தங்களை அழைத்து அவர்களுக்கு உணவு படைத்து, தாங்களும் உண்டு, மறுநாள் காலையில் ஊரே மஞ்சள் நீராட்டில் நனைந்து என ஒட்டுமொத்த கிராமமும் குதூகலத்தில் இருப்பது பங்குனி… சித்திரை…. வைகாசி மாதங்களில் மட்டுமேதான்.

 

திருவிழா முடிந்த அடுத்த நாளில் மிகவும் பரபரப்போடு தங்களின் வாழ்வாதார இருப்பிடங்களுக்கு மக்கள் கூட்டம் படையெடுத்தது.

 

ஒவ்வொரு திருவிழாவுக்கும் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களோடு சண்டையிட்டு விடுப்பு வாங்கிவருவதும், பின்னர் அவசர அவசரமாகப் புறப்பட்டுச் செல்வதுமாய் பலரின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. தான் எவ்வளவு துன்பப்பட்டாலும் தனது கடவுளையும்  அதனை வணங்குவதற்கான நேரத்தையும் உழைக்கும் மக்கள் ஒரு நாளும் தள்ளிப் போட்டதில்லை. தங்களுக்குள் ஏற்படும் சின்னச் சின்ன கோபங்களால் சிலநேரம் வழிபாடு தள்ளிப் போனாலும் பின்னர் ஒரு நாளில் மொத்தமாய் தனது தெய்வ கடமையைத் தீர்த்தக் கொள்வதில் அடித்தட்டு மக்களே எப்போதும் சிறந்தவர்கள்

 

கிராமங்களின் திருவிழாக்களில் காணப்படும் சின்னச் சின்ன குறைபாடுகளை ஒதுக்க வேண்டிதில்லை அதை கவனத்தில் கொள்ள வேண்டும். சித்தார்பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் வரி வாங்குவதில்லை. கடமலையில் ஆதிகாலத்திலிருந்து வரி வாங்கினாலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிராமக் கமிட்டியின் நிர்வாகக்குழுவில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு இன்று வரையில் வழங்கப்படவில்லை.

 

“அரசியல் மற்றும் பொருளாதாரத் தளத்தில் அடித்தள மக்களைத் திரட்டி, ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராக போராட முயலும் ஒரு போராளி கூட, தனது குடும்பம், சாதி, கிராமம் மற்றும் வட்டாரம் சார்ந்த பண்பாட்டு நிகழ்விற்கு அடி பணிந்து போகும் தன்மையைக் காண்கிறோம். திருமணச் சடங்கு, பூப்புச்சடங்கு, சவ அடக்கச் சடங்குகளில் ஐக்கியப்பட்டுப் போவதைக் காண முடியும். பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றான நாட்டார் தெய்வ வழிபாடுகளை செவ்வியல் தெய்வங்களைப் போல் இதையும் ஒரு கருத்துமுதல் கோட்பாடுகளைக் கொண்ட தெய்வ வழிபாடாகக் காணும் போக்கு உள்ளது. இதனால் அடித்தள மக்களின் மனவிலியில் அமுக்கம் பெற்று இருக்கும் தொன்மங்களையும், வரலாற்றையும் புரிந்து கொள்ள தவறி விடுகிறார். இதனால் ஆய்வுகளால் கட்டமைக்கப்பட்ட நாட்டார் வழக்காற்றியல் பனுவல்கள் கூட, இவருக்கு கருத்துமுதல் கோட்பாடுகளாகக் கண்டுணர முடிகிறது. அரசியல் மற்றும் பொருளாதார தளத்தில் இவரோடு நெருங்கி இருக்கும் அடித்தள மக்கள், பண்பாட்டு அசைவியக்கத்தால் அந்நியமாகிப் போகும் விந்தையும் நடைபெறுகிறது. இங்குதான் ஆதிக்க சக்திகள், அடித்தள மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் கட்டிப் போட்டு வைக்கிறார்கள். போராளி தனிமைப்படுத்தப்படுகிறார்.“ என்று நாட்டார் வரலாற்று ஆய்வாளர் ஈரோடு தி. தங்கவேலு தனது செம்மலர் கடடுரையில் குறிப்பிட்டுள்ளார்.

நமது தேசத்தின் ஆதாரங்களான கிராமங்கள்தான் ஒற்றுமையின், பண்பாட்டின். சின்னங்களாகவும் இன்று வரையில் விளங்குகின்றன. மண்ணை…  மனிதனை….. இயற்கையை நேசிக்கும் விழாவை கிராமங்கள்தான் இன்றும் நடத்திக் கொண்டிருக்கின்றன.

காலமழைக்காகவும், கோடை மழைக்காகவும் விரதமிருப்பதும்… விழா நடத்துவதும் கிராமங்கள்தான். உற்பத்திக்கான புதுப்பித்தலுக்கே விழாக்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

 

வெளி நாடுகளில் அறுவடைத் திருவிழாக்களை உழைக்கும் மக்களோடு இணைந்து நடத்தும் வழக்கத்தை அரசியல் தலைவர்கள் கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் மருத்துவர் அய்யா, வைகோ போன்ற ஒரு சிலரே கடைபிடிக்கிறார்கள். கிராமங்களை உயிரோட்டமாக்குவதன் மூலமே நகர்மயமாதலைத் தடுக்க முடியும். கிராமங்களின் பண்பாடு, கலாச்சாரம் யாவும் இயற்கையோடு இயைந்து வருவதாகும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் பண்பை கிராமங்களிடமிருந்துதான் வள்ளலார் பெற்றார்.

கேரளத்தில் மலையாளம் பேசும் மக்கள் “உங்கள் ஊர் எது?” என்று கேட்பதற்கு “நிங்ஙளுடே நாடு ஏதாணு?” என்பார்கள். நாடு எனும் சொல் தோன்றிய மிகப் பழங்காலத்தில் நாடு என்பது ஒரு கிராமத்து வட்டார அளவுதான் போலும்! இன்றும் கூடத் தமிழ்நாட்டில் சில `நாடுகள்’ உண்டு அவை: செட்டிநாடு, மேலாண்மறைநாடு, வருசநாடு, ஒரத்தநாடு, பாப்பாநாடு… பின்னர் ஒவ்வொரு கால அளவிலும் நாடு எனும் சொல் உணர்த்தும் நிலப்பரப்பு விரிவடைந்துகொண்டே போயுள்ளது. என்றாலும், மரபார்ந்த அடையாளமாக -ஆகுபெயராக- இன்றும் அந்த ‘நாடு’ என்பது நாட்டுப்புறமாக விளங்கி வருகிறது. கேரளத்திலும் அந்த `நாடுகள்’ உள்ளன. அவை வயநாடு, குட்டநாடு. ஆக நாட்டுப் பற்றையும், நாடடு நடப்பையும் கிராமங்கள்தான் தனது பழக்கங்களின் மூலம் மக்களுக்குப் பொதித்து வருகின்றன.

கிராம விழாக்கள் பலப்படுத்தப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும்.  கிராமங்களில் பிறந்து நகரங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தங்களின் கிராமத்தின் பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கான உதவிகளைச் செய்ய வேண்டும். கிராம மக்களின் வருவாய் பெருக்கத்திற்கான வழியை உருவாக்கும் பொருட்டு தங்களது முதலீடுகளையும் தொழில்களையும் கிராமத்தில் தொடங்க வேண்டும்.

 

தங்களின் கிராமத்திலிருந்து படித்து வெளியே வரும் அனைத்து இளைஞர்களுக்கும் தங்களால் இயன்ற வழிகாட்டுதலை வழங்க வேண்டும். வழிகாட்டுதலின்றியே பல இளைஞர்கள் தங்களது வாழ்வை பல தவறான பழக்கங்களுக்குள் திணித்துக் கொண்டு சிரழிந்து போய்விட்டார்கள். தொலைந்து கொண்டிருக்கும் கிராமங்களின் அடையாளங்களை மீட்டெடுக்கும் பணியை யார் முதலில் தொடங்குவது?

(பசுமைத் தாயகம் சுற்றுச் சூழல் சூலை2011 இதழில் வெளியானது)

நாமும் நமது தொழில்களும்

-இரா. தங்கப்பாண்டியன்

 

சமீபத்தில் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். மிகப் பழமையான அந்த திருமண முறையில் திருப்பூட்டுதலுக்கு முன்னும் பின்னுமாய் மணமக்கள் தங்களின் திருமணத்திற்குத் துணைபுரிந்த நாவிதர், சலவைத்தொழிலாளி, குயவர், நெசவாளர், கொல்லாசாரி, தச்சாசாரி, வளையல் செட்டி, பூக்காரர், மேளம் இசைப்பாளர்  என  ஒன்பது கைவினைஞர்களுக்குத் தட்சனை கொடுத்தார்கள். தமிழகத்தில் இருக்கும் மிகப் பழமையான சிறு இனக்குழுக்களில் இன்னும் இப்படிப்பட்ட முறை பின்பற்றப்படுவதை நாம் காணலாம். வாழும் இடங்களுக்குத் தகுந்த சிற்சில வேறுபாடுகள் மட்டும் இருக்கும்.

 

மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைவன அவர்கள் செய்கின்ற உழைப்பும், அந்த உழைப்பால் உயரும் தொழிலும்தான் என்பதை நமது முன்னோர்கள் அறிந்திருந்தனர்.  இதன் காரணமாகவே நம் தமிழர் பழங்காலந்தொட்டு தொழில் துறைகளை ஆதரித்தும்,  கைவினைத் தொழில்களில் சிறந்து விளங்கியும் வந்தனர்.  நமது பண்டைய கிராமங்கள் யாவும் பல்தொழில் செய்வோரின் கூட்டுக் குழுமங்களாகவே போற்றப்பட்டு வந்தமைக்கு தக்க சான்றுகளே சிலப்பதிகாரமும் பட்டிணப்பாலையும்.

 

தொழில்களே நாட்டிற்கு வளத்தைத் தருகின்றன. பலவகை தொழில்கள் நிறைந்திருக்கும் சமுதாயமே சிறந்த சமுதாயம் ஆகும். மக்கள் கல்விக்கும் அறிவுக்கும் திறமைக்கும் உடல் வலிமைக்கும் தக்கனவாக அவர்கள் செய்யும் பணிகளும் பலவாகும்.

 

இங்குத் தொழில் எனக் கொள்ளப்படுவது கைத்தொழில் மட்டுமன்று. உடலுழைப்பினாலோ அறிவுத்திறமையினாலோ கல்வியினாலோ பண்பினாலோ வீரத்தினாலோ ஆற்றப்படும் பணிகளைனைத்துமே கொள்ளப்படுகின்றன. கலைகளும் பொழுதுபோக்குகளும் கூட தொழில்களாகவும் நமது கலாச்சாரத்தில் கருதப்பட்டு கலைஞர்கள் பாராட்டவும் பாதுகாக்கவும் பட்ட வரலாறு இன்னும் அழியாமல் உள்ளது.  எது தொழில்?  எது கலை? இசை ஒரு கலை. இசை மூலமாகவே ஊதியம் பெறுபவருக்கு அதுவே தொழிலுமாயிற்று. கூத்து, நாடகம் ஆகியவை கலைகள். இவற்றை வாழ்நாள் முழுதும் பயின்று அவற்றின் மூலம் ஊதியம் பெறுவோருக்கு அவை தொழிலுமாகும்.

 

“காவிரிப்  பூம்பட்டினத்தில் பட்டினபாக்கம், மருவூர்பாக்கம் என்று இரு பிரிவுகள் இருந்தன. வணிகர்கள் வசித்து வந்த அவ்விடத்தே சுங்கச்சாலையும் கலங்கரை விளக்கமும் இருந்தன. அங்கே கடல் வழியே வந்த குதிரைகளும், நிலத்தின் வழியே வந்த மிளகுப்பொதிகளும், இமயத்திலுண்டான மணிகளும் பொன்னும், குடகுமலையில் பிறந்த சந்தனமும் அகிலும், காவிரியில் உண்டான வளங்களும், ஈழநாட்டிலிருந்து வந்த உணவுப்பொருள்களும், பிற அரிய பொருள்களும் கூடி வளம் மிகுந்த பரந்த இடத்தையுடைய தெருக்கள் இருந்தன. இப்பண்டங்களில் சிலவான, தக்கோலம், தீம்பு இலவங்கம், கற்பூரம், சாதி முதலிய மணப்பொருள்களை விற்பவர்கள் வாசவர் எனப்பட்டனர். வெற்றிலை கட்டி விற்கும் தொழிலையும், கயிறு திரித்து விற்கும் தொழிலைச் செய்தவரும் பாசவர் எனப்பட்டனர்……“ என்று நீண்டு செல்லும் சிலப்பதிகாரத்தின் பதிவுகள் யாவுமே நமது அடுத்த தலைமுறைக்கு வெறும் கற்பனைகள் என்ற எண்ணத்தைப் போதிப்பவையாகிக் கொண்டிருக்கின்றன.

 

திண்டுக்கல் பூட்டு,   திண்டுக்கல் சுருட்டுத், கும்பகோணம் பாத்திரத்தொழில், காஞ்சிவரம் நெசவுத் தொழில்  உடன்குடி பனைத்தொழில்,சில்லுகருப்பட்டி,  பவானி ஜமுக்காளம், மதுரை சுங்கடி, கூறைப்புடவை, ஊத்துக்குளி வெண்ணை, மணப்பாடு மீன்பிடித் தொழில், பெரியதாழை கருவாடு என நடுத்தர மக்களும்,  அடித்தட்டு மக்களும் தங்களின் உயிரோடும் உடலோடும் கலந்து வளர்த்து வந்த  தொழில்கள் அனைத்தும் கத்தியின்றி கத்தலின்றி சத்தமில்லாமல் வழக்கழிக்கப்படுகிறது. நெடுங்காலமாக சாத்தூரில் நடந்து வந்த பேனா நிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியா மட்டுமல்லாமல் மேலை நாடுகளுக்கும் நிப்புகள் இங்கிருந்து அனுப்பப்பட்டன. அலுமினியக் கழிவுகளிலிருந்து செய்யப்படும் இந்த நிப்பு குடிசைத் தொழிலாக நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்தது. பால்பாயிண்ட் பேனா வந்ததிலிருந்து இந்தத் தொழில் நசித்துவிட்டது. அதை நம்பியிருந்த குடும்பங்கள் இன்றைக்கு வறுமையில் வாடுகின்றன.

 

 

கும்பகோணம் வெற்றிலை சீவல், கோவில்பட்டி கடலை மிட்டாய்,  நெல்லை அல்வா, கடம்பூர் போளி, உடன்குடி சில்லுக்கருப்பட்டி,  மணப்பாறை முறுக்கு,  திருவில்லிபுத்தூர் பால்கோவா,  கல்லிடைக்குறிச்சி அப்பளம், தூத்துக்குடி மக்ரோன், சாத்தூர் சேவு, திண்டுக்கல் மலைப்பழம், மதுரை மல்லிகை, மதுரை இட்லி, மாப்பிள்ளை விநாயகர்கோடா, அய்யனார் கலர்கம்பெனி, ஆம்பூர் பிரியாணி, செட்டிநாட்டுச் சமையல் என ஊரின் பெயரிலேயே வாசனையும், சுவையும்  கலந்திருந்த  நமது உணவுத் தொழில்களும்  பெரு வியாபாரிகளின் வாழ்வாதாரங்களாகி விட்டதால் சிறு குறு வியாபாரிகளின் ஜீவாதாரம்  கேள்விக்குறியாகிவிட்டன.  குடிசைத் தொழில்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் ஈடுபடுகின்ற தொழில்கள் யாவும் நசுக்கப்படுகின்றன.

 

ஒரு நாட்டின் நல்வாழ்விற்கு உழவர், வணிகர்,  சான்றோர் இன்றியமையாதவர்களாகப் பண்டைத் தமிழர்கள் கருதினார்கள்  ஒரு நாட்டின் தொழில்களிலே உழவும் வணிகமுமே தலை சிறந்தன என்பது அறிஞர் கொள்கை. ஒரு நாட்டின் மேம்பாட்டுக்கு இவ்விரு தொழில்களும் ஒருங்கு செழித்திருந்தல் வேண்டும். தமிழகமும் சங்க காலத்தில் இவ்விரு தொழிலையும் குறைவறப் பெற்றிருந்தது. மதுரைக் காஞ்சியில்,

 

“வியன்மேவன் விழுச்செல்வத்து

இருவகையா னிசைசான்ற

சிறுகுடிப் பெருந்தொழுவா;

குடிகெழீ இய நானிலவரொடு”

என வரும்  அடிகளாலும், அப்பகுதிக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் “உலகத்துத் தொழில்களில் மேலாகச்சொல்லும் உழவு வாணிகம் என்கின்ற இரண்டு கூற்றாலே அகலம் பொருந்துதலையுடைய சீரிய செல்வத்தாலே புகழ் நிறைந்த குடிமக்கள் பொருந்தின நான்கு நிலத்து வாழ்வாருடனே” எனக் கூறும் உரையாலும் தமிழ்நாட்டில்  உற்பத்திக்கும் வாணிபத்திற்கும் தக்க சான்று

 

பாரம்பரியமிக்க நம்முடைய தொழிற்கூடங்களையெல்லாம் அழித்தொழித்து  விட்டு தங்களின்  தொழிற்சாலைகளை வெள்ளையர்கள் கட்டமைத்துக் கொண்டபிறகு, நாடு விடுதலையடைந்து தனது சொந்தக்காலில் நாம் நாமாகவே நிற்கத் தொடங்கிய காலத்தில் பசுமைப் புரட்சியும், இருபதம்சத் திட்டமும் நடைமுறையில் இருந்த போது ஆளும் காங்கிரஸ் கட்சி ஒரு ஒலிப்பேழையை வெளியிட்டது. அதில் “தொழில்முதலீட்டில் துனிந்து பணம்போடும் தூயவர்க்கே துணை செய்திருவோம்…. வழிபலவும் தந்து வர்த்தகம் உற்பத்தி வாழப்புதுமுறை செய்திடுவோம்…“ என்று ஒரு வரி வரும்.

 

இதற்கான விடை தொன்னூறுகளில்தான் தெரிந்தது. இந்தியாவில் மீண்டும் அந்திய முதலீடுகளை கால்பரவ விட்டு அதன் வேர்களுக்கு உள்ளூர்த் தொழில்களை உரமாக்கும் சூட்சுமத்தை மிகச் சிறப்பாகச் செய்து விட்டார்கள். வாழைப் பழத்தில் அல்ல.. தண்ணீரில் ஊசி ஏற்றும் வித்தையை உலகில் கண்டுபிடித்த பெருமை நமதாட்சியாளர்களைத் தவிர வேறுயாரைச்சாரும்? 1998-க்குப் பிறகு மத்திய தொழில்த்துறை அமைச்சராய் பொறுப்பு வகித்த மென்மைதாங்கிய முரசொலி மாறன் நமது பாரம்பரியத் தொழில்களில் 133 வகைகளை அந்நியருக்குத் தாரை வார்த்து அவரும் புண்ணியம் தேடிக் கொண்டார். (மாமன் உழவர் சந்தையில் காய்கறி விற்கிறார்… மருமகன் உலக வங்கியில் உள்ளூர் தொழில்களையே விற்கிறார்… மொத்தத்தில் குடும்ப வியாபாரம் சிறப்பாக நடக்குது என்று ஒருவர் கவிதை எழுதினார்)

 

 

இத் தொழில்களை நம்பிய மக்கள் வேலைவாய்ப்பை இழந்து திருப்பூர் பனியன் ஆலையில் வேலை கிடைக்கும் என்று அங்கு செல்லத் தொடங்கினர். அங்கும் வேலை இன்றி, பலர் துயருறுகின்றனர்.  பாரம்பரியத் தொழில்களின் காப்புரிமையை பன்னாட்டுப் பன்னாடைகளுக்குத் தாரை வார்க்கத்தொடங்கி இருபதாண்டுகளாகி விட்டன. சென்ற தலைமுறையின் உற்பத்திச் சமுதாயத்தைக் கூலிக்காரர்களாக மாற்றியதன் விளைவு அவர்களின் வாரிசுகளும் கூலிக்காரர்களாய் பன்னாட்டுக் கம்பெனிக்காரனிடம் வரிசையில் நிற்கிறார்கள். குறைந்த கூலிக்கு இரவு பகல் பாராமல் உழைக்கும் மக்களை ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனத்தின் வாசலிலும் பார்க்கலாம்.

நவயுக இந்திய வரலாற்று இயந்திரமயமாக்கலில் ஒரு சில ஆதிக்க சக்திகள்தான் பயனடைகின்றனவே தவிர ஏழைகளும் குறுந்தொழில் செய்வோரும் கைவிணைஞர்களும் அரசாங்கத்தால் கைவிடப்பட்டவர்களாகி விடடார்கள்.  பாரம்பரியத் தொழில் முனைவோருக்கு நமது ஆட்சியாளர்கள் பள்ளத்தூருக்குத்தான் தொடர்ந்து வழி காட்டுகிறார்கள். மேட்டூருக்கு வழிகாட்ட மறந்து விட்டார்களா…….. மறுத்து விட்டார்களா….? பாமர விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக ஒரு ஆணியைக் கூட புடுங்க லாயக்கற்றவர்களையே நாம் மத்தியிலும் மாநிலத்திலும் மாறி மாறித் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

 

உலகமயமாக்கலால் ஏற்கெனவே லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன கதையை எல்லோரும் அறிவர். அம்மாதிரியான கொடுமைகள் நமக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம், தற்போது ஏற்பட்டுள்ளது. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற நிலையில் சிறு தொழில்கள் விலைவாசி உயர்வு, அறிவிக்கப்படாத மின்தடை. இவற்றால் தமிழக மக்களின் வாழ்வாதாரம் சிதைந்துள்ளது.

அதிலும் குறிப்பாக அறிவிக்கப்படாத மின்தடை அனைத்து தரப்பு மக்களையும், ஆலை, விசைத்தறி, கோழிப்பண்ணை, லாரி பாடி கட்டும் தொழில், விவசாயிகள், மருத்துவமனைகள் ஆகியவை பாதிக்கும் வகையில் தமிழகத்தின் பொருளாதாரத்தை வீழ்த்தும் அளவுக்கு உள்ளது.

 

சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் நாட்டின் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரமான சிறுதுண்டு நிலங்களையெல்லாம் பிடுங்கி பெருமுதலாளிகளின் வசம் ஒப்படைக்கும் இந்திய அரசு, அதே மக்களின் உணவுத் தேவையை நிறைவேற்ற வெளிநாடுகளில் நிலம் வாங்கும்படி முதலாளிகளை ஊக்குவிக்கிறது. ஒட்டுமொத்த நாட்டின் உணவு உற்பத்தியை நாட்டை ஆளும் பெருமுதலாளிகளுக்கு வாங்கித் தரும் தரகு வேலையைத்தான் இந்திய அரசு முழு வேகத்தில் செய்து வருகிறது.

 

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியப் பொருளாதாரத்தில், சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளுக்குப் பிறகும் பொருளாதாரச் சமச்சீரின்மை தொடரும் மோசமான சூழலில், நாட்டின் மொத்த ஜனத் தொகையில் 36 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். விவசாய நிலங்களின் அளவு 37.05 சதவீதமாக குறைந்து விட்டது என்ற அபாயகரமான செய்தி தமிழக அரசின் 11ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்கான அணுகுமுறை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. குறைந்து விட்டது என்பதைவிட குறைக்கப்பட்டு விட்டது என்பதே சரியான வார்த்தைப் பயன்பாடு. அதிலும் தமிழக விவசாயத்துறையின் இன்றைய நிலை குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 1993-94ல் 25 சதவீதமாக இருந்த வேளாண் உற்பத்தி, 2005-06ல் 13.03 சதவீதமாக சரிந்துள்ளது. அதேபோல் 2001-02 ல் 76.89 இலட்சம் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி, 2004-05ல் 61.40 இலட்சம் டன்னாக குறைந்துள்ளது. ஏன் இந்த அவலநிலை என்று பார்த்தால் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு, வயல்வெளிகளில் வீட்டுமனைகள் தோற்றம் போன்ற பல காரணங்கள் நம்முன் தெரிகின்றன.

 

உணவை உற்பத்தி செய்யும் விளைநிலங்களை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரை வார்த்துக் கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்தாவிட்டால், மண்ணைத் தின்று வாழும் ஹைத்தி மக்களைப் போல, எத்தியோப்பிய மக்களைப் போல நாமும் பட்டினியால் கூட்டங் கூட்டமாக மடியும் நாள் வெகு தூரத்திலில்லை. எனவே இந்திய விளை நிலங்களை பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்பனை செய்வதையும், வெளிநாடுகளில் இந்திய கம்பெனிகள் விளை நிலங்களை வாங்கிக் குவிப்பதையும், எதிர்த்து தெரடர் போராட்டங்களை முன்னெடுப்பது நமது அவசரமான, அவசியமான கடமை. ஏனெனில் இவை ஒரே பிரச்சினையின் இரண்டு கூறுகள். வேளாண் வல்லாதிக்கத்தின் இரண்டு முனைகள்.

இழந்த தொழில்களை மறு புணரமைப்பு செய்து மீண்டும்  உற்பத்தி சமுதாயத்தை பலமான சமுதாயமாக்கினால்தான் நமக்கான உணவுத் தேவைகளை நாமே பூர்த்தி செய்ய முடியும். இல்லையெனில் எல்லாவற்றிற்கும் வெளிநாட்டுக்னாரனிடமே கையேந்தும் இழி நிலை தொடருவதைத் தவிர்க்க இயலாது.

( பசுமைத் தாயகம் சுற்றுச் சூழல் சூன்2011)

 

 


அன்னை பூமியின்

நெஞ்சம் மகிழ்ந்து

அமுதம் சுரக்காதோ…. பல

ஆயிரமாயிரம் கோடி யுகங்கள்

வசந்தம் தளிர்க்காதோ….

          -பிரளயன்

”ஈரோடு பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட, 32 சாய, சலவைப் பட்டறைகள் இடித்து தள்ளப்பட்டன. துணிச்சலான இந்நடவடிக்கையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கணக்கெடுப்பின் படி, மொத்தம், 624 சாய ஆலைகளும், 44 தோல் ஆலைகளும் உள்ளன. அரசு அனுமதியின்றி சிறிதும், பெரிதுமாக நூற்றுக்கணக்கான ஆலைகள் மறைமுகமாக இயங்கி வருகின்றன. இவை வெளியேற்றும் கழிவு நீரால் காலிங்கராயன் வாய்க்கால், பவானி ஆறு, காவிரி ஆறு ஆகியவை பெரிதும் மாசுபட்டன. சென்னை ஐகோர்ட்டில் , விவசாய சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன. சுத்திகரிப்பு நிலையம் (ஆர்.ஓ.,) அமைக்காத ஆலைகளை, “சீல்’ வைக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. ஈரோடு மாவட்டத்தில், 300க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கு, “சீல்’ வைக்கப்பட்டது. “சீல்’ உடைத்து இயங்கிய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையும் மீறி, ஈரோடு அருகே வீரப்பன்சத்திரம், பி.பி.அக்ரஹாரம், சூளை, இடையன்காட்டு வலசு, நாராயணவலசு, மாமரத்துபாளையம், காசிபாளையம், சூரம்பட்டி ஆகிய பகுதிகளில் பல பட்டறைகள் முறைகேடாக இயங்குவது கண்டறியப்பட்டது. அவை முறைகேடாக மின்சாரத்தை பயன்படுத்தியதும் தெரியவந்தது. அவற்றை இடித்து தள்ள மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். ஈரோடு ஆர்.டி.ஓ., தலைமையில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தலைமையிலான குழுவினர், 32 சாயப்பட்டறைகளை, இயந்திரங்கள் மூலம் இடித்து தள்ளினர். ஆலை சுவர்கள், கூரைகள் இடித்து தள்ளப்பட்டன. ஜே.ஸி.பி., இயந்திரம் மூலம், துணி பதனிடும் இயந்திரங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டன. கிரேன் உதவியுடன், அவை ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. ஒரு பக்கம் பட்டறைகள் இடிக்கும் பணி நடந்து கொண்டிருக்க, மற்றொரு பக்கம் பதனிடும் இயந்திரத்தில் இருந்த காடா துணி, சாயங்கள், கெமிக்கல் கேன்கள் போன்றவற்றை பட்டறை முதலாளிகளும், தொழிலாளர்களும் அவசர அவசரமாக மீட்க முயன்றனர். எனினும், ஓரளவே அவற்றை எடுக்க முடிந்தது. மற்றவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆர்.டி.ஓ., சுகுமார் கூறுகையில், “”பட்டறைகளில் பணியை நிறுத்துமாறு ஒரு வாரத்துக்கு முன் அறிவிப்பு கொடுத்தோம். அவை பணியை நிறுத்தவில்லை. முதல்கட்டமாக, 32 சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டுள்ளன. பட்டறை நடத்த நிலம் கொடுத்தவர் மீதும், பட்டறை உரிமையாளர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். முறைகேடாக இயங்கிய பட்டறைகள் இடிக்கப்பட்டு, இயந்திரங்கள் பறிமுதல் செய்வது இதுவே முதல்முறை. திருப்பூரில் கூட மின் இணைப்புதான் துண்டிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதி அமலில் உள்ளதால், அரசியல் தலையீடு இல்லாத நிலையில், ஈரோடு மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் துணிகர நடவடிக்கையில் ஈடுபட்டு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.” ஆதாரம் தினமலர்23-4-2011) என்ற செய்தியை உலக பூமி நாளில் வாசித்த போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

 

கடந்த பத்தாண்டுகளில் மேற்கு மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறைகளால் நீர் நிலைகள் பாதிப்புக்குள்ளாகி வருவதை  பசுமைத் தாயகம், சுற்றுச்சூழல் புதியகல்வி, பூவுலகின் நண்பர்கள் போன்ற சுற்றுச் சூழல் நேசர்கள் பல்வேறு தளங்களில்.. பல களங்களில் எடுத்துச் சொன்னதன் விளைவாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முறைகேடான சாயப்பட்டறைகளை இழுத்து மூடும் பணியை நமது ஆட்சியாளர்கள் செய்தார்கள். இதனால் திருப்பூரிலிருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்தவர்கள் ஏற்கனவே நொய்யலாற்றை சாயம் போகச் செய்தது போதாதென்று காவிரியையும் கெடுக்கத் தொடங்கினார்கள். ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரம், அனுமதியின்றி ஏராளமான சாய, சலவை பட்டறைகளை அமைத்துள்ளனர். அங்கிருந்து வெளியேறும் கழிவு நீர், அப்படியே நேரடியாக காவிரியில் கலக்கிறது. ஈரோட்டிலிருந்து நாகை மாவட்டம் வரை பல பகுதியில் காவிரி தண்ணீரை தான் மக்கள் குடிநீராக பயன்படுத்துகின்றனர். அப்படிப்பட்ட நிலையில் காவிரியில், சாயகழிவு நீர் கலப்பது பெரும் விபரீதத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப் பட்ட சூழ்நிலையில் முறைகேடான சாயப்பட்டறைகளின் மீதான நடவடிக்கை எடுத்த நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தைப் பாராட்ட வேண்டும்.

சாயப்பட்டறைகளுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் முன்முனைப்போடு ஈடு பட்டதற்கு மற்றுமொரு சான்று பள்ளிபாளையம். இங்குள்ள  9வது வார்டில், விபத்து ஏற்படுத்திய சாயப்பட்டறைக்கு சொந்தமான தண்ணீர் லாரியை கிராம மக்கள் மடக்கி பிடித்து, போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சாயப்பட்டறையில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வெளியேற்றப்படுவதால், சுற்றுவட்டாரத்தில் குடிநீர் முற்றிலும் பாதிக்கப்பட்டதாக அங்குள்ள மக்கள் புகார் எழுப்பியுள்ளனர்.  இந்நிலையில் சாயப்பட்டறைக்கு சொந்தமான தண்ணீர் லாரி ஒன்று அதிவேகமாக 9வது வார்டு வழியாக சென்றுள்ளது. அப்போது, சாலையோரத்தில் நின்றிருந்த பைக் மற்றும் சைக்கிளில் சென்றவர் மீதும் மோதியுள்ளது. கொதிப்படைந்த அப்பகுதி மக்கள், சம்மந்தப்பட்ட லாரியை சிறைபிடித்தனர். (ஆதாரம் தினமலர் 23-04-2011)

இப்படி நாலாபக்கமும் ரவுண்டு கட்டி அடிப்பதைப் பார்த்த பிரபல (ர)சாய(ன)வாதிகள் தங்களின் சாயக் குப்பைகளை மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். அப்படி ஓடித் தப்பிக்கப் பார்த்தும் பொது மக்கள் கண்ணில் படாமல் இருக்க முடியவில்லை. ”தூத்துக்குடி மாவட்டம் கீழவிளாத்திகுளத்தில் சாய கழிவுகளை கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விளாத்திகுளம் அருகேயுள்ள கீழவிளாத்திகுளம் கிராமத்தில் இருந்து முத்தையாபுரம் செல்லும் பாதையில் உள்ள தரிசு நிலத்தை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சாய கம்பெனி வைத்திருப்பவர் விலைக்கு வாங்கியதாக தெரிகிறது. அந்த கம்பெனியில் உள்ள சாய கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து கீழவிளாத்திகுளம் தரிசு நிலத்தில் கொட்டி வைத்துள்ளனர். நேற்று காலை ஒரு லாரியில் சாய கழிவுகளை கொண்டு வந்த போது பொதுமக்கள் கொட்ட விடாமல் மடக்கி பிடித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த எம்.எல்.ஏ., சின்னப்பன் சாய கழிவு கொட்டப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார். இந்த சாய கழிவுகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார். பின்னர் பொதுமக்கள் மடக்கி பிடித்த லாரி போலீசில் ஒப்படைக்கப்பட்டது.” (ஆதாரம் தினமலர்22-04-2010) என்ற செய்தியைப் படிக்கும்போதும் மனம் மகிழ்கிறது. இப்படி தினந்தோறும் சூழலுக்கு ஆதரவான செய்திகள் வெளி வந்தாலே பிரபல சீர்கேட்டாளர்கள் தங்களின்  கடையை மூடிவிடுவார்கள். ஒருவன் பிழைக்க பலரைக் கெடுக்கும் கேடும் ஒழியத் தொடங்கும். நாமக்கல்லில் தொடங்கி பள்ளிப்பாளையம் விளாத்திகும் என்று விரிந்துள்ள சூழல் விழிப்புணர்வு தமிழகத்தின் நாலா பக்கமும் பல்கிப் பெருக வேண்டும்.

உலக நாகரிக வளர்ச்சியால் வனங்கள், நீர் நிலைகள், விளை நிலங்களை  அழித்தும், தொழிற்சாலை மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஓசோன் மண்டலத்தை ஓட்டை போட்டும்  நாள் தோறும் சூழல் சீர்கேடுகளைச் செய்துவரும் பணியைத்தான் வளர்ச்சி என்று சொல்கிறார்களா….? எது வளர்ச்சி?  ஒரு உற்பத்திக்காக பல உயிரினங்களை அழிப்பதுதானா வளர்ச்சி?

இயற்கைக்கு எதிராக, நாம் தெரிந்தே செய்யும் சதியால்தான் நாமே நமக்கான ஆபத்தை  கர்ணனின் கவச குண்டலாமாய் நம் தலையில் சுமந்து கொண்டிருக்கிறோம்.

நம் முன்னோர்கள் நமக்குத் தந்த இயற்கை வளத்தில் பத்தில் ஒரு பகுதியையாவது மாசில்லா பூமியாக நம் சந்ததிக்கு விட்டுச் செல்ல முடியுமா நம்மால்….? ஒவ்வொரு ஆண்டும் சூழல் தொடர்பாக கருத்தரங்கங்களும் மாநாடுகளும் நடத்திக் கொண்டிருந்தாலும் சூழல் தொடர்பான விழிப்புணர்வை இன்னும் நம்மால் வேகப்படுத்த முடியவில்லை. அத்தி பூத்தாற்போல அங்கொன்றும் இங்கொன்றுமாய் புவி மாசுபடுவதைத் தடுக்கும் முயற்சிகள் உருவாகிக்கொண்டிருந்த போதிலும் இது இன்னும் முழு வீச்சில் மக்கள் இயக்கமாக பரந்து விரிய வேண்டும்.

நீர், நிலம், காற்று, ஒளி, ஒலி மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் இன்னும் துரிதமாக இருக்க வேண்டும்.. தற்போது பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கியத்துவம் தரவேண்டும். சூரிய சக்தியை முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும். வீட்டுத்தோட்டங்கள் அமைத்து, அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும். நீரை மறுசுழற்சி செய்தல், காகித பயன்பாட்டை குறைக்க வேண்டும். உணவில் பழங்கள், காய்கறிகள், கீரைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். மனவள மாற்றமே மண்ணை வளமாக்கும்.

தமிழகத்தில் நம் வீடுகளில் 2 கோடியே 10 லட்சம் குண்டு பல்புகளை பயன்படுத்துகிறோம். இதனால், இரவில் 4.3 சதவீதம் வெப்பநிலை அதிகரிப்பதால், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவியல் அறிஞர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். குண்டு பல்புகள் பயன்பாட்டை 2015 க்குள் முற்றிலும் தடுக்க  தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது பாராட்டத் தகுந்ததே. மாற்றாக சி.எப்.எல்.,பல்புகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை  ஏற்படுத்தி வருவதும் பாராட்டத் தகுந்நதே.

“டிவி’ பிக்சர் டியூப்கள் ஆயுளில் 22 ஆயிரம் மணி நேரம் எரிந்தால் 12 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கிறது. எல்.சி.டி., மற்றும் பிளாஸ்மா “டிவி’ 2 மணி நேரம் பயன்படுத்தினாலே அவற்றிலிருந்து வெளியாகும் வெப்பம் காற்றில் கலக்கிறது. ஒளிரும் பாதரச டியூப் லைட்டுகள், எலக்ட்ரிக்கல் அடுப்புகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். மாற்றாக எல்.பி.ஜி.,காஸ் பயன்படுத்தலாம். பூமி சூடேற்றத்திற்கு கதிர்வீச்சு சாதனங்கள் பயன்பாடே காரணம். இந்தோனேசியாவில் பெட்ரோல் பயன்பாட்டை 60 சதவீதம் குறைத்து, மாற்றாக தேங்காய் எண்ணெயை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் இதை ஊக்கப்படுத்த வேண்டும். ஓசோன் படலத்தின் மிருதுத்தன்மையை பாதுகாக்காவிடில், கதிர்வீச்சு புற ஊதா கதிர்களின் வீச்சு அதிகரிக்கும். தோல் மற்றும் புற்றுநோய்கள் பரவும். மரங்கள் 60 சதவீதம் நட்டால், 3 சதவீத வெப்பநிலை குறையும். இது பற்றி பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு நாட்டின் நிலப்பரப்பிலும் மூன்றில் ஒரு பங்கு மரம் மற்றும் வனப்பரப்பு இருக்க வேண்டும். காடுகள் மனிதர்களுக்கு மட்டுமின்றி பிற உயிரினங்களுக்கும் வாழ்விடமாக உள்ளது. இயற்கை காடுகளை பாதுகாக்க வேண்டும். ஆக்கிரமிப்பு, ரோடு அமைத்தல், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதால் காடுகள் அழிந்து வருகின்றன. வாகன பெருக்கத்தால் காற்று மாசுபடுகிறது. குறைந்தபட்சம் ஒவ்வொருவரும் பிறந்தநாளின் போது,  தாங்கள் பூமியில் பிறந்து வாழ்வதற்கு இடம் தந்த பூமிக்கு நன்றி சொல்லும் விதமாகநினைவாக மரக்கன்றுகள் நட வேண்டும்.  பூமியின் முகத்தை பசுமையாய் மாற்றும் புரட்சிப் பணியைத் தொடர வேண்டும்.

(பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் மே2011)

”பச்சை பட்டுடுத்தி…. முகமெல்லாம் மஞ்சளிட்டு….. கழனியில் தலை கவிழும் நெல் மகள்”  என்று வயல் வெளிகளைப் பற்றி கலைஞர் குறிப்பிடுவார்.  பூமியில் ஆயிரமாயிரம்  விளை பயிர்கள் வளர்ந்தாலும்  நெல் முளைத்த வயல்களும்….. நெல் விளையும் கழனியும் பார்க்கப் பார்க்கத் திகட்டாதவைகள்.  அதனால்தான் ”பூவிரியும் காவிரியின் ஆற்றங்கரைகள்…. பொன் வயல்கள் விரியும் அடி வானம் வரையில்…” என்று காவிரியைப் பற்றிய ஒரு கவிஞன் கவிதை எழுதினான். பொன் விளைந்த களத்தூர், பொன்பதர்க்கூடம் என்று  பொன்னுக்கு இணையாகவே நெல்லை மதித்து அது விளையும் கிராமங்களுக்குப் பெயரும் சூட்டினார்கள். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் காவிரி டெல்டாவுக்கு அடுத்தபடியாக நெல் விளையும் களங்களைக் கொண்டவை கம்பம் பள்ளத்தாக்கு.  ஆகாயவூர்தியிலிருந்து பார்க்கும் போது இயற்கை அன்னை நான்கு பக்கமும் மலைகளை வேலியாக்கி நடவில் பச்சைமரகத் பட்டை விரித்துப் பாதுகாப்பது போலத் தோற்றமளிக்கும். நெல்,  கரும்பு, திராட்சை,  காய்கறிகள் பயிராகும் உயிர் பூமி. மதுரை, ஒட்டன் சத்திரம் காய்கறி நாளங்காடிகளில் அழகு சேர்க்கும் எல்லா விளைபொருளுக்கும் தொப்புள் கொடி கம்பம் பள்ளத்தாக்கு.

புவி அமைப்பில் பள்ளத்தாக்கு (valley) அமைப்பு இயற்கையிலேயே வளமான பகுதியாகும். நீர் வளம் நிறைந்தும், மற்றொரு புறம் அரணாக அமையப் பெற்ற மலையமைப்பும் உள்ளதால், வெப்பத்தை கட்டுப்படுத்தவும், சூழலின் தட்பவெப்ப நிலையை நிலைப்பாடுடையதாக மாற்றி அமைத்துக் கொள்ளவும் பேருதவி புரிகிறது. அடர்ந்த காடுகள் உள்ளதால் சுற்றுச்சூழல், பயோ டைவர்சிட்டியும், பேருயிர், சிற்றுயிர் , வன விலங்குகள் பூச்சியினங்கள் போன்றவை துன்பமின்றி வாழ உதவி செய்கிறது. இந்தியாவின் கடை கோடியான கம்பம் பள்ளதாக்கு சிறப்புமிக்க வளமான பூமி. தேனி “மாவட்டம்” ஆக்கப்படுவதற்கு முன் வெளியோரின் பார்வை படாமல் அதன் பசுமைத்தன்மை காக்கப்பட்டது.  1997 ம் ஆண்டு தேனி  மாவட்டமாக உதயமான பிறகு கம்பம் பள்ளத்தாக்கின் எழில் மெல்ல மெல்ல பொலிவிழக்கத் தொடங்கி விட்டது. இதன் விளைவு?

தற்போது நோக்கம் திசையெல்லாம் காற்றாலைகளாகவும், செங்கற்சூளைகளாகவும்…. திடீர் நகரங்களாகவும் மறுமாற்றம் பெற்று வளமே கேள்விக்குறியாகி வருகிறது. கடந்த பதினைந்தாண்டுகளில் வெளி மாநிலத்தவர்களும், வெளி மாவட்டத்தவர்களும்  இங்கே வருவதும், உல்லாசப் பயணம் மேற்கொண்டு வருவதும், இன்னும் பிற காரணங்களால் அரசியல் வாதிகள், சினிமாக்காரர்கள், திடீர் பணக்காரர்கள் என எவனாவதொருவன் தினந்தோறும் இந்த விளை பூமியை விலை பேசி வாங்கி தனது  பணத்தை முதலீடு செய்யும் தளமாக்கிக் கொண்டிருக்கிறான். ஏற்கெனவே முல்லை பெரியார் பிரச்சினையால் தினந்தோறும் அவதிக்கு ஆளாகும் இந்த மக்கள்,ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நடக்கும் விலையேற்றம், அடி தடி, மிரட்டல் கலாச்சாரம் என அடக்கடுக்கான தொல்லைகள் இப்போது துவங்கி உள்ளது.

பென்னிக்குக் என்ற இயற்கை நெசனால் வடிவமைக்கப்பட்ட கம்பம் பள்ளத்தாக்கை அணுக்கதிர் வீச்சு கண்காணிப்பு மையமாக மாற்றும் சதியையும்  பத்திரைகளில் படிக்க நேர்ந்த போது மனசு பதறுகிறது. சமீபத்தில் கோயமுத்தூர் வந்த ஜெயராம் ரமேஷ் கம்பம் பள்ளத்தாக்கில் அமைக்க உத்தேசம் உள்ளது என்றார்.சற்று நேரம் கழித்து அங்கேயே அமைப்போம் என்றார். தற்போது வழக்கம் போலவே இம்மையம் அமையப்பெற்றால் என்ன விளைவுகள் ஏற்படும்? கண்ணுக்கு புலப்படாத இக்கதிர்வீச்சு அதிக வெப்பத்தை உமிழும் தன்மை கொண்டது.சூரியனிலிருந்து ஒரு வினாடிக்கு 200 டிரில்லியன், டிரில்லியன் டிரில்லியன் வெப்பம் வெளிவரலாம் என அறிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஒரு டிரில்லியன் என்பது 10 கோடி என அளவிடப்படுகிறது.இவ்வளவு வெப்பத்தால் பூமி எவ்வாறு தாக்குண்டிருக்கும் ,அப்போது எவ்வகையான விலங்குகள் வாழ்ந்தன?அவை எப்படி அழிந்தன? தற்போது கடல் மட்டம் உயர்வதும், பனி உருகுவதும் இதன் தாக்கமா? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை தேடவும், இந்திய நியூட்ரினோ கதிர்கள் பூமிக்கோளை தாக்கும் பட்சத்தில் ஏற்படும் சேதம் எத்தகையது? அதிலிருந்து எப்படி நம்மை காத்துக் கொள்வது ?போன்ற வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியே இம்மையம் அமைப்பது என்கிறார் இதன் இயக்குனர் .இம்மையம் அமைய உகந்த இடமல்ல இப்பகுதி என்பது எம்மக்களின் ஆழமான கருத்து.

பள்ளத்தாக்கின் உச்சியிலிருந்து 2,370 மீ நீளமும்,8.5 மீ அகலமும் கொண்ட சுரங்கம் அமைக்கப்பெற்று இதன் உள்ளே சுமார் 50,000 டன் எடையுள்ள இரும்பு கலோரிமீட்டர் அமைக்கப்படும். இதனை சுற்றி ஒரு கிலோ மீ தொலைவிற்கு வெறும் கற்பாறைகளாவே இருக்கவேண்டும்.அப்போது தான் சூரிய வெப்பம் உறிஞ்சப்பட்டு ஆராய வசதியாக இருக்கும். இந்த கற்பாறைகள் ஆபத்தான சமயங்களில் அரணாகவும் இருக்கும்.திடீரென அதிக வெப்பம் உமிழப்பட்டால் ,அது கசிவுறும் நிலையில் ,இந்த பாறைகளால் உள்ளிழுக்கப்பட்டு தடுக்கப்படும் .இவ்வாறான நிகழ்வுகளுக்கு கம்பம் பள்ளத்தாக்கு பகுதி சரியானதா?அதிக பசுமை வளம் மிக்க பகுதி ,அதிக வெப்ப கசிவால் பாலைவனம் ஆகிவிடாதா?ஏற்கெனவே முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளம் காட்டும் ஓர வஞ்சனையால் நீர் பஞ்சம் வந்துவிடுமோ என தினம்தினம் செத்து பிழைத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, தீர்வு காணாமல் ,நீர் பஞ்சத்தையே நிரந்தரமாக்க மத்திய அரசு முடிவெடுத்துவிட்டதா? உலகிலேயேஅதிக விளைச்சல் தரும் திராட்சை தோட்டங்களும்,மொச்சை காடுகளும்,தற்சார்பு சுருளியாறு மின்திட்டமும் பெறும் பாதிப்புக்கு உள்ளாகாதா? புலிகளும், வன விலங்குகளும், யானைகளும் அதிகம் நடமாடும் பகுதி இது.  இந்த ஒர காரணத்தை வைத்தே வனத்துறையால் அனுமதி மறுக்கப்படலாம். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

அணு ஆராய்ச்சியாளர்கள் குண்டுகளை மட்டும் தயார்செய்து விட்டு சும்மா இருப்பதில்லை. பிற துறைகளில் இருந்து வரும் கதிர்வீச்சுகளைக் கண்டறிந்து அதனை ஆராய்ச்சியும் செய்வார்களாம்.சூரியனில் இருந்து வரும் ஒளிக்கதிர் வீச்சில் உள்ள சாதக பாதகங்களை கண்டறியவே இம்மையம் அமைக்கப்பட உள்ளது.பொதுவாக ஒரு அணு பிளந்தாலோ அல்லது இணைந்தாலோ கதிர் வீச்சு உருவாகும்.இந்த கதிர் வீச்சு கண்ணுக்கு புலப்படாது.வழக்கமாக ஆராயப்படும் கூடங்களில் இதை கண்டுபிடிக்க முடியாது என்பதால் நடுவண்அரசு,இதற்காக பிரத்யேக ஆய்வு மையத்தை நிறுவுகிறது. தேசிய அளவிலான “நியூட்ரினோ அப்சர்வேட்டரி” எனப்படும் சிறப்பு அணுக்கதிர் வீச்சு கண்காணிப்பு மையம் பள்ளத்தாக்கு பகுதிகளில் மட்டுமே நிறுவப்பட முடியும்.

ஜப்பான்,பிரான்சு,ஜெர்மனி போன்ற நாடுகள் இவ்வகையான அமைப்பை நிறுவி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.புவி வெப்பமடைதலையும் ஆய்வு செய்யும் மையமாக செயல்படும்.இவ்வகையான மையத்தை நம்நாட்டிலும் நிறுவிட விரும்பி நடுவண் அரசு தமிழநாட்டை தேர்ந்தெடுத்துள்ளது.ஏனெனில் இங்குள்ள பாறைகள் மட்டுமே திட திறன் உள்ளது.கேரளா, கர்நாடகாபகுதிகள் இதற்கு உகந்ததாக இராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சூரிய கதிர்கள் ஆந்திராவில் விழும் கோணம் கணித அறிவியல் அடிப்படையில் ஆராய்ச்சிக்கு ஒத்துவராது எனக் கூறப்பட்டதால், தமிழ்நாடு “பலிகடா” ஆனது. சென்னை தரமணியில் உள்ள கணித அறிவியல் ஆராய்ச்சி மையத்திடம் இடத்தை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தீவிர ஆய்வுக்குப் பின் நீலகிரி மாவட்டம் “சிங்காரா” பள்ளத்தாக்கு தேர்வு செய்யப்பட்டது. அமைதி பள்ளத்தாக்கு என அழைக்கப்பெறும் இப்பகுதியில் கண்காணிப்பு மையம் நிறுவ பெரும் எதிர்ப்பும் சர்ச்சையும் உருவானது. வன விலங்குகள், குறிப்பாக புலி, யானை போன்ற பேருயிர்கள் நடமாடும் பகுதிகளில் இம்மையம் அமைவதை வனத்துறை அனுமதிப்பதில்லை.வன ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் வாதிகள் ,பொதுமக்கள் ஆகியோரின் ஏகோபித்த எதிர்ப்பை கணக்கில் எடுத்துக்கொண்ட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை,சிங்காரா பகுதியில் ஆய்வு மையம் அமைவதற்கு தடை விதித்தது. இப்போது கம்பம் பள்ளத்தாக்கு பலிகடாவாக்கப்படும் சூழல் உள்ளது. அரசியலில் மட்டுமல்ல அனைத்திலும் இங்கு ராஜாங்கம் செய்வது வந்தேரிகள்தான்.

இது கம்பம் பள்ளத்தாக்கில் மட்டுமல்ல…காவிரி  டெல்டாவில் தொடங்கி கன்னியாகுமரியின் நெய்யாறு,​​ டெல்லா….. அமராவதியின் நீர்ப்பிடிப்பான பாம்பாறு,​​ ​​ கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தின் ஜீவாதாரமான பவானி,​​  என எல்லா நீர்ப்பிடிப்புப் பகுதிகளும் அழித்தொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இயற்கையை அழித் தொழிக்கும் பணியை அரசியல் பிழைப்புக்காக பலரும் செய்கிறார்கள். இப்பணிகளைக் கையாள்வோரின் விகிதாசாரமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.​ ​ மக்கள் நலம் சார்ந்த அரசியல் நிலைப்பாடுகள் மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசப்படுகின்றன என்பது அவரவர் கொள்கையாக இருந்தாலும் அதை ​ ஏற்றுக்கொள்ளவியலாது.​ ​ தமிழகத்தின் நீர்த்தேவை தமிழக மக்களுக்கு மட்டும் பலனளிப்பதல்ல.​ ​ பக்கத்து மாநிலங்களின் உணவு மற்றும் பிற தேவைகளையும் சார்ந்தே இருக்கிறது என்பதை அங்குள்ள ஆட்சியாளர்கள் உணர மறுக்கின்றனர்.

உயர்ந்த அதிகாரம் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையே மதிக்காமல் சட்டமியற்றிய கேரளத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அனைவரும் அறிவர்.​ தமிழக மக்களின் நிலங்களில் விளையும் உணவுப் பொருள்கள்தான் கேரளத்துக்குச் செல்கின்றன.​ ​கேரள மக்களுக்கான உயிராதாரப் பொருட்களான அரிசி முதல்  காய்கறி. கருவேப்பிலை வரை அனைத்தும் கம்பம் பள்ளதாக்கில் இருந்துதான் செல்கின்றன.​ ஆனால் அதே கம்பம் பள்ளத்தாக்கு  விவசாயத்துக்குப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் விட மறுக்கிறது கேரளம்.

பாவம் மக்கள் ஒரு புறம் இயற்கை மாற்றங்களாலும், மறுபக்கம் ஆட்சியாளர்களின் தவறான அல்லது லாப நோக்கமாக கொள்ளையாலும் தங்களின் ஜீவாதாரத்தை மெல்ல மெல்லத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அடுத்து தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் அரசு தமிழகத்தின் சூற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் செயல்பட வேண்டும் என்பதே சூழல் ஆர்வலர்களின் மேலான எதிர்பார்ப்பு.


கடந்த வாரம் எனக்கொரு மின்னஞ்சல் வந்தது.  முன்பு என்னோடு பணியாற்றிய  பெண்மணி அனுப்பிய மின்னஞ்சல். அதில் “எங்கள் நிறுவனத்தில் பெண்களுக்கு நல்லா பாதுகாப்பு உண்டு. இது போல் ஒரு பாதுகாப்பாக நிறுவனத்தை எங்கும் நீங்கள் காண முடியாது” என்று சொல்லித்தான் பெண்களை வேலைக்குச் சேர்க்கிறார்கள்.  ஆனால் இங்கு பெரிய பதவியில் இருக்கும் ஒரு அயோக்கியன் செய்யும் பல செயல்கள்  வெளியில் வருவதில்லை. அவனுக்கு திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகள் உள்ளனர் . அவனால் இம்சை படும் பெண்கள் அதை வெளியில் சொல்ல சங்கடப்பட்டு உள்ளுக்குள் அழுவதைக் காணும்போது எதுவும் செய்ய முடியாத நிலையில் நானிருப்பது மனதிற்கு மிகவும் சங்கடமாக  உள்ளது. சக பணியாளரான பெண்ணைப் பார்த்து சேலை கட்டினால் நல்லா அழகா இருக்கே… உன்னை மாதிரி அழகான பெண்ணை பார்க்கவே நான் புண்ணியம் செய்திருக்கேன். நீ ஏன் நடந்து போகிறாய்? உன்னை போல் பெண்களை ஏற்றிச்  செல்லத்தானே நான் வண்டி வைத்து உள்ளேன்… என்று கண் அடித்து கேட்டு இருக்கிறான். இந்த கொடுமையை யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் அதே ஆள் அவனை விட உயர்த்த பதவியில் இருக்கும் பெண்ணை மிகப் பணிவோடு வண்டியில் ஏற்றி செல்கிறான். ஒரு வேலை தன்னை விட உயர்த்த பதவியில் இருப்பதால் அவர்களிடம் அவன் வேலையை கட்டாமல் கூட இருக்கலாம். அந்த இறைவனுக்குதான் அது தெரியும்.  தனக்கு கீழ் வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் அவன் எப்படி நடந்து கொள்வான் என்று யோசித்து பாருங்கள். ஒரு விழா நடந்து  கொண்டு இருக்கும் போது அந்தப் பெண்ணின் பின்புறம்  இருந்து காலை வைத்து உரசி இருக்கிறான். அந்ப் பெண்ணின் பின்புறம் விரலை வைத்து உரசி இருக்கிறான் . அவள் பயந்து அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள். இவனுக்கு பயந்து அவள் வேலை விட்டு சென்றால் அவளின் குடும்பத்தை யார் பார்ப்பது? குடும்ப வறுமைக்காக வேலைக்கு வரும் பெண்கள் இவனை போல் ஆட்களுக்கு பயந்து வேலையை விடுவது மிகப் பெரிய கொடுமை ? இந்த சமுதாயத்தில் இதற்கு ஒரு தீர்வு இல்லையா..? என்ன கொடுமை இது ? கடவுளே உனக்கு தெரியவில்லையா ? பெரிய பதவியில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?  இதைப் படிப்பவர்கள் ஒரு நல்லா பதிலை சொல்ல கேட்டு கொள்கிறேன்.”  என்று நீண்டு சென்ற அந்த மின்னஞ்சலுக்கு பதில் சொல்ல இயலாத நிலை எனக்கு மட்டுமல்ல…..  தனியார் நிறுவனங்களிலும், கார்ப்பரேட் நிறுவனங்களிலும்  பணியாற்றும் பலருக்கும் உண்டு.

 

ஆதிக்க மனோபாவம் உள்ள சமுதாயக் கட்டமைப்பில் அடித்தட்டுப் பணியாளர்களாய் இருக்கும் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் சொல்லிமாள இயலாதவை. அதிலும் இருவர் வேலை செய்யும் குடும்பங்களில் உள்ளவர்களின் துன்பத்தைப் பதிவு செய்ய யாராலும் இயலாது. கணவன், சொந்தங்கள்…. குழந்தைகள்…. பணியிடம்…. பணியிடத்து சகப் பணியாளர்கள்….. உயரதிகாரிகள்….. குடியிருப்பு இடம்…. என எல்லா கரங்களாலும் வேலைக்குப் போகும் பெண் குட்டப்படுகிறாள். முதல்நாள் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் பெண் பணியாளர்கள் அடுத்த நாளில் வீங்கிய முகத்தோடும், செயற்கைப் புன்னகையோடும் வருவதைப் பார்த்தாலே தெரியும் வீட்டில் என்ன நடந்திருக்கும் என்று… அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் வரவேண்டிய கட்டாயத்தில் நகரப் பேருந்துகளில்…. சேர் ஆட்டோக்களில்…….. இருசக்க வாகனங்களில் அரக்க பரக்க வந்து சேரும் பெண்களின் மனநிலையை எந்த நிறுவனமும் புரிந்தபாடில்லை. உயர் பொறுப்பிலிருக்கும் பெண்ணதிகாரிகள் வீட்டு வேலை செய்ய ஆள் வைத்திருப்பார்கள். தங்களின் நிலையிலிருந்தே மற்றவர்களையும் எடைபோடும் வேதனை எப்போது தீருமோ….

இந்த சமுதாயத்தில் பெண்ணின் ஒவ்வொரு செயலையும் விமர்சிக்கும் போக்கு உள்ளது. இதையும் தாண்டி முற்போக்காக யோசிக்கும் அல்லது செயல்படும் பெண்களைப் பற்றிய கட்டுக்கதைகளை பெண்களே பரப்புவதும் நடந்து கொண்டுதானிருக்கிறது. அதிலும் குறிப்பாக நிறுவனங்களை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பெண்கள் தனது பணியாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாய் நினைத்துக் கொண்டு சக பெண் பணியாளர்களின் ஒவ்வொரு செயலையும் கண்காணிப்பதும், விமர்சிப்பதும் வேதனையானது. தொடர்ந்து நான்கு முறை கழிவறைக்குச் சென்றாலே அந்தப் பணியாளரை மேலதிகாரியான பெண் அதிகாரி அழைத்துக் காரணம் கேட்கும் போக்கு பல நிறுவனங்களில் உள்ளது. “பெண்களின் விடுதலை, அதாவது, இருபாலர்களுக்குமிடையிலான முழு சமத்துவம், அடையப்படுவதானது, மிக முக்கியமான, ஆனால் அவ்வளவாக அங்கீகரிக்கப்படாத முன் தேவைகளில் ஒன்றாகும்.” என்று சமீபத்தில், “உலக அமைதிக்கான வாக்குறுதி,” எனும் தங்களின் சாசனத்தில் உலக நீதி மன்றம் குறிப்பிட்டுள்ளது. இதில் இரு அடிப்படையான கேள்விகள் உள்ளன. ஒன்று ஆண் பெண் சமத்துவம் அடையப்படுவது குறித்தது. மற்றது, உலக அமைதி அடையப்படுவது குறித்தது.  பெரும்பாலும் மரபுச்சமயங்களில் காணப்படும், பெண்கள் சமத்துவமற்ற வகையில் நடத்தப்படுவதும், மற்றொரு முறையாக, அவள் கற்புநெறியின் முன்மாதிரியெனவும், பக்தை எனவும், கன்னித் தன்மையுடையவள் எனவும், கீழ்ப்படிபவள் எனவும், சாது எனவும், ஆணுக்கு அடிபனிபவள் எனவும், வீட்டுப் பணிகளுக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவள் எனவும், சட்டரீதியிலோ அரசியல் ரீதியிலோ அதிகாரம் இல்லாதவள் எனவும், பகுத்தறிவு சார்ந்த எந்த விஷயமாயினும், அதை தனது கனவனிடமோ, தந்தையிடமோ, சகோதரனிடமோ, சுருக்கமாக ஓர் ஆணிடமே கொண்டுசெல்ல வேண்டியவள் எனக் கருதப்படுவதாகவே உள்ளது.

பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY) உயிரியல், (BIOLOGY) சமூகவியல் (SOCIOLOGICAL) வர்க்கம் (CLASS) பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION) சக்தி (FORCE) மானுடவியல் (ANTHOROPOLOGY) உளவியல் (PHYCHOLOGY) என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக கேட் மில்லட் குறிப்பிடுகிறார். எந்த நாட்டுக் கலாச்சாரத்தை உற்று நோக்கினாலும் பெண்ணடிமைத்தனம் என்பது இன்னமும் வெறித்தனமாய் வளர்ந்து கொண்டிருப்பதை கண்கூடாக காணலாம். எத்தனையோ போராட்டங்களின் பின்னாலும் கூட இன்று வரை உலகில் பெண்ணடிமைத் தனத்தை களைந்தெறிய முடியவில்லை என்பது வருத்தத்துக்குரியதே. அதிலும் முக்கியமாக தமிழ்க் கலாச்சாரத்திலும், இசுலாமிய மதக்கலாச்சாரத்திலும், சீனம், யூத இனக் கலாச்சாரங்களிலும் பெண்ணடிமைத்தனம் என்பது தலைவிரித்தாடுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அதனால்தான் இன்றும் கூட கலாச்சாரத்தைக் காப்பாற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஸ்ரீராம் சேனா, சங்க பரிவாரங்கள் போன்ற இந்து மதவெறி இயக்கத்தினர் காதலர் தினத்தில் இந்தியா முழுவதும் பெண்களையே குறி வைத்துத் தாக்கியுள்ளார்கள். ஆணாதிக்கமும், இந்து மதவெறியும் சேரும்போது அதனுடைய வெறி தீவிரமாகத்தான் இருக்கின்றது. இங்கும் கூட கவனியுங்கள் பெண்தான் குறிவைக்கப்படுகின்றாள். ஆண்கள் டாஸ்மாக் தொட்டு நட்சத்திர விடுதி மதுவறைகள் வரை குடித்து விட்டு ஆடலாம். ஆனால் இதை இயல்பு எனக் கருதும் இந்து மனம் பெண்கள் குடிப்பதை மாபெரும் கவுரவக் குறைச்சலாக நினைக்கின்றது.

 

சமீபத்தில் மாநகரங்களைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களிடத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.  இவர்களில் ஐ.டி துறையில் பணிபுரியும் பெண்களும் உண்டு.  எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் படி 75விழுக்காட்டினர் பெற்றோர் நிச்சயம் செய்யும் திருமணத்தைத்தான் செய்யப் போவதாகத் தெரிவித்திருந்தார்கள். பெண்ணுக்கு உரிமை என்பது தனிநபர் உரிமையாக சுருக்கிப் பார்த்தால், பஃப்புக்கு செல்வது, மானாட மயிலாட அல்லது ஜோடி ஒன்று நிகழ்ச்சியில் பங்கேற்பது, பார்வையாளராகச் செல்வது, தனியாக ஸ்கூட்டரிலோ, காரிலோ ஓட்டிச் செல்வது, வேலைகளில் ஏற்றத்தாழ்வின்றி எல்லா வகை வேலைகளுக்கும் செல்வது… இப்படித்தான் பலரும் புரிந்து கொள்கின்றனர். ஆனால் இத்தகைய தனிநபர் உரிமைகளைப் பெற்றுள்ள பெண்கள் தமது மணவாழ்க்கையைச் சுயேச்சையாக முடிவெடுக்க முடியாது. அப்படி மீறி எடுத்தால் கொலைவெறியைச் சந்திக்க வேண்டும் எனும் போது இங்கே எது பெண்ணுரிமை? ஏது பெண்ணுரிமை?  இங்கு பொம்மக்காவும், தம்மக்காவும்( அதாங்க தம்மனா…) ஒண்ணுதான்.

 

ஒரு பெண் தன் காதலை, திருமணத்தை, குடும்பத்தை, வேலையை, மொத்தத்தில் வாழ்வை தான் விரும்பியபடி தெரிவு செய்யும் சுதந்திரம் இல்லை. வேலைக்குச் சென்று தனது பொருளாதார சுயேச்சை நிலையை அடைந்திருக்கும் பெண்ணுக்குக் கூட முழுச் சுதந்திரத்தை இந்தச் சமூகம் கொடுத்து விடுவதில்லை. சமூகம் மரபாகப் பின்பற்றி வரும் எல்லாப் பிற்போக்குத்தனங்களுக்கும் பெண்தான் முதல் பலிகடாவாகின்றாள். சாதி, மத, இனங்களின் கவுரவமே ஒரு பெண்ணின் ‘தூய்மையை’ வைத்தே அளவிடப்படுகின்றது.

 

“பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது! பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக, ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக, இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு, பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது. ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும்.”  என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரகன் ஒரு கலந்தரையாடலில் தெரிவித்திருந்தார். ஒரு போராளியால் மிக எளிமையாய் வெளிப்படுத்தப்பட்ட கருத்தை எட்ட ஏன் அறிவு ஜீவிகளால் முடியவில்லை?

மகளிர் தினம் என்பது இரும்புப் பெட்டியில் புழுங்கிக்கொண்டிருந்த தங்க நகைகளையும், தங்க சரிகைச் சேலைகளையும் அணிந்து கொண்டு தடபுடலான விருந்து உபசாரங்கள், சம்பிரதாயச் சொற்பொழிவுகள் என்று நடாத்தி முடிப்பதாகவே உள்ள இன்றைய சூழலில்,  பெண் விடுதலையை… பெண்ணடிமைத்தன ஒழிப்பை முன்மொழியவோ…. முழங்கவோ மேல்த்தட்டுப் பெண்களுக்கு எப்படி தைரியம் வரும்?

கடந்த முப்பதாண்டுகளில் பெண்கள் பொருளாதார, சமூக, கலாச்சாரத் துறைகளில் தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஒற்றை வாதம் மட்டுமே ஒட்டுமொத்த பெண் விடுதலையல்ல…… ஆணால்  ஆதிக்கம் செலுத்த இயலாத அல்லது கூடாத துறைகளையே பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

ஒவ்வொரு நூற்றாண்டின் இறுதியும்சரி, தொடக்கமும் சரி பெண்களுக்கான பெண்களுக்கான புதிய சவால்களையே தந்து கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் ஆயிரம் ஆலமரங்களை நட்டு அதையே தனது பிள்ளைகளாய் பாவித்து வந்த மாத்தாயும், மதுரையில் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி ஏழைப் பெண்களின் புதிய வழிகாட்டியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் சின்னப்பிள்ளையும் தங்கள் முன்னிருந்த தடைகளை மோதி மிதித்து உடைத்த தடை தகர்த்த பிராட்டிகள்.

தன்மீது விழும் எல்லாத் தடைகளையும் பெண்மை வெல்லும் என்றே கூத்திடுவோம்.

(பசுமைத்தாயகம் மார்ச் 2011 இதழில் வெளியானது)

 

 

‘’தக்காளி ஒரு கிலோ….கத்திரிக்காய் கால்கிலோ……. காலிபிளவர் ஒண்ணு……. முட்டைக்கோஸ் கால்கிலோ…….. பல்லாரி நூறு கிராம்……. அப்புறம்…. வேற என்ன வேணும்?”

“அவ்வளவுதான். பில் எவ்வளவுப்பா?”

” 500 ரூபாய் கொடும்மா”

”என்னாது….? ஐநூறா…?”

“இன்னக்கித்தான் இந்த வெல நாளை எழுநூறாகும்“

மேற்கண்ட உடையாடல் கதைக்கான கற்பனையல்ல…. நமது தேசத்தின் காய்கறிக்கடைகளில் எல்லா மொழிகளிலும் ‘கதை‘க்கப்படுவதன் தமிழாக்கமே.

வட மாநிலத்தில் ஒரு டயர் கம்பெனிக்காரன்  டயர் வாங்கினால் பல்லாரி வெங்காயம் இலவசம் என்று எழுதியிருக்கிறானாம்…. லாரி டயர் வாங்கினால் ஐந்து கிலோ… கார் டயர் வாங்கினால் ரெண்டு கிலோ…..  என்று விளம்கரம் செய்யும் அளவுக்கு விலை உயர்ந்து வரலாறு படைத்துள்ளது.

மதுரை மாநகரின் நாளங்காடியில் கொட்டிவைக்கப்பட்டுள்ள காய்கறிகளைத் தொட்டுப் பார்த்துவிட்டு நகரும் மக்களின் எண்ணிக்கை  நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

மதுரை மாநகரின் நாளங்காடியின் ஜீவாதாரமே தேவாரம், கம்பம், தேனியை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்தும்,  வத்தலக்குண்டு, கொடைக்கானல், பகுதிகளில் இருந்தும் வரும் காய்கறிகள்தான். காய்கறிகளின் வரத்து மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து விட்டதால் காய்கறிகளின் விலையும் மூன்று மடங்கு உயர்ந்து விலை உச்சத்திற்கு சென்றுள்ளது.

 

காய்கறிகளின் விலை (கிலோவில்): சென்ற மாதம் 10 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்பாது 40 ரூபாயை நெருங்கியுள்ளது. வெங்காயத்தின் விலையும் 20 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்ந்துள்ளது. 8 ரூபாயாக இருந்த அவரைக்காய் 24 ரூபாயாகவும், 10 ரூபாயாக இருந்த புடலங்காய் 30 ரூபாயாகவும், 12 ரூபாயாக இருந்த முருங்கை பீன்ஸ் 28 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. ஐந்து ரூபாய்க்கு விற்ற தேங்காய் இன்று 15 ரூபாயாக உள்ளது.  தற்போதைய நிலையில் கிலோ 30 ரூபாய்க்கும் குறைவாக காய்கறியே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.(ஆதாரம் தினமலர் 23-12-2010 நாளிதழ்)

 

மதுரை மட்டுமல்ல கொங்கு மண்டலத்தின் ஆகப்பிரதான காய்கறி மார்க்கெட்டான ஒட்டன் சத்திரத்திலும் இதே நிலைதான். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஆந்திராவின் காய்கறிகளின் வரத்தும் குறைந்ததால் அங்கும் விலைவாசி உயர்ந்துள்ளது.  இரண்டு மாதங்களுக்கு முன் ஐந்து நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு நூற்றி ஐம்பது ரூபாய்க்கு காய்கறிகள் வாங்கி ஒரு வாரம் பயன்படுத்தினார்கள். இப்போது அதே அளவு காய்கறிகள் வாங்க அறுநூறு ரூபாய் செலவாகிறது.  நீண்ட மழை பெய்து முடித்த பிறகு, வேலைவாய்ப்பு கிடைக்காத அன்னாடங்காய்ச்சிகளால் இதை சமாளிக்க முடியவில்லை. ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி, நூறு ரூபாய் செலவழித்து குழம்பு வைக்க வேண்டி நிலை உள்ளதால் குடும்பத்தலைவிகள் குழம்பிப் போய்  உள்ளனர். (பாவம் மக்கள் எவ்வளவுதான் தாங்குவார்கள்)  எவ்வளவுதான் சிக்கனமாக இருந்தாலும் மாதக்க டைசியில் பட்ஜெட்டில் துண்டல்ல… வேட்டியெ விழுகிறது. இதன்பொருட்டே பல குடும்பங்களில் சண்டைகள் வருகிறது.

 

நாடு முழுவதும்  சமையல் காய்கறிகளின் விலையேற்றத்தால் மக்கள் தடுமாறிக் கொண்டிருக்கிற சூழ்நிலையில்தான் நம் இளவரசர் மதுரையில் செட்டிநாடு உணவு வகைகளை ருசித்துச் சாப்பிட்ட செய்தியையும் படிக்க நேர்ந்தது.

நவம்பருக்கும் டிசம்பருக்கும் இடையில் மூன்று மடங்கு விலையேறியதால்  அடித்தட்டு மக்கள் மட்டுமல்ல…. ஐ.டி. நிறுவனங்களின் பணிபுரிபவர்கள் கூட அரண்டு போயிருக்கிறார்கள். ((லைக்கற்றை ஒதுக்கீடு). ராசாவுக்கு வழக்கு பயம். அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு வாழ்க்கையே பயம்.)

ஆனால் இப்படி உயர்த்தப்படும் விலைவாசியால் காய்கறி உற்பத்தியாளர்களாக விவசாயிகளின் பொருளாதாரம் உயருமா..? இந்த விலை ஏற்றத்தால் அவர்களின் வாழ்க்கை ஏற்றம் பெற்றிருக்குமா..? பருவகாலங்களொடு போராடிப்போராடியே வெளிரிப்போன முகங்களோடிருக்கும் அவர்கள் மகிழ்ச்சியடைவார்களா…? மேற்கண்ட வினாக்களுக்கெல்லாம் ஒரே விடை இல்லை. என்பதே.

சென்னை, மதுரை போன்ற பெருநகர நாளங்காடிகளில் கொட்டிவைக்கப்பட்டு அடுத்த சில நிமிடங்களில் இதை விட நான்கு மடங்கு விலைக்கு விற்கப்படும் ரகசியம் வெங்காயங்களுக்கும் தெரியாது… தக்காளிகளுக்கும் தெரியாது…… அவைகள் அடைக்கப்பட்ட கோணிப்பைகளுக்கும் தெரியாது… விவசாயிகளுக்கும் தெரியாது. விவசாயிகள் பொறுமுகிறார்கள். அவர்களின் வெங்காயத்திற்கு கிலோவுக்கு பத்துரூபாய் கூட கிடைக்கவில்லை. ஆனால் கிலோ அறுபதுக்கும் எழுபதிற்கும்   நுகர்வோரிடம் விற்கப்படுகிறேதே……. இது என்ன விசித்திரமான முரண்பாடு?

இன்றைய நுகர்வு  வாழ்வில் //
உற்பத்தி செய்யப்படும் எந்தப் பொருளுக்கும் விலை நிர்ணயம் செய்து விற்பவர் உற்பத்தியாளர்தான். ஆனால் வேளாண் விளைபொருள் விற்பனைக்கு மட்டும் விலை நிர்ணயம் செய்பவர் உற்பத்தியாளராகிய விவசாயிகளல்ல… இடைத்தரகர்கள்தான். விவசாயிகளுக்கும் நுகர்வோருக்குமிடையில் காலாட்டிக்கொண்டே தரகர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். காய்கறி மார்க்கெட்டுகளில் காய்கறிகளைக் குவித்து வைத்துவிட்டு  ஒரு டீ குடித்து வருவதற்குள் பேரம் முடிந்து விடுகிறது. வாங்கிய பொருளை விற்பதற்கான மார்ஜின் வரைமுறை இல்லாமலிருப்பதால் விலைவாசி விண்ணைத் முட்டுகிறது. சாமானியருக்கு கவலை கண்ணைக் கடடுகிறது.

”1928 ஆம் ஆண்டில் வெள்ளையர் அரசு அமைத்த ராயல் கமிஷன் அளித்த அறிக்கையின்படி நடைமுறைப் படுத்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் 1959 திருத்தியமைக்கப்பட்டு, பின்பு 1987ல் மீண்டும் திருத்தி(எத்தனை திருத்தி..?)யமைக்கப்பட்டு. தமிழகத்தில் விளையும் சுமார் 40 விழுக்காடு விளைபொருட்கள் இந்த விற்பனைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு 21 விற்பனைக் குழுக்களும், 277 விற்பனைக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.”  (யோவ் என்ன செஞ்சு என்னய்யா புண்ணியம்… வெலைவாசிய கட்டுக்குள்ள வைக்கமுடியலையே…) விற்பனைக் கூடங்கள் வெறும் அலுவலகங்களை வைத்துக் கொண்டு விற்பனை கட்டணம் வசூலித்து, அனுமதிச்சீட்டு கொடுக்கும் வேலையை மட்டும் செய்து வருவதால் தரகர்கள் கண்டபடி விலை வைக்கத்தொடங்கியதன் விளைவே இந்த விலையேற்றம்..

மக்கள் தொகை 3 சதவீதம் என்ற அளவில் உயர்கிறபோது உணவு தானிய உற்பத்தி 1.6 சதவீதம் தான் உயர்கிறது. காரணம் என்ன? உணவு தானியங்களை விடுத்து பணப்பயிர்களை நோக்கிய நகர்வு விவசாயத்தில் உள்ளது. லேஸ், குர்குரே போன்ற சிப்ஸ்களை தயாரிக்க வடமாநில உருளைக்கிழங்கு விளைச்சலை பெப்சி வளைத்துப் போட்டிருக்கிறது. பெப்சியின் வருமானத்தில் 50 சதவீதம் உருளைக் கிழங்குகள் மூலமாகவே கிடைக்கிறது.  உணவுப் பயிர் உற்பத்தியை ஊக்கப்படுத்த நமது ஆட்சியாளர்கள் தவறியதால் விலை உயர்வு அலைக்கற்றை ஒதுக்கீட்டின் முறைகேடுகளையும் தாண்டி விண்ணோக்கிப் பாய்கிறது.

தமிழக அரசின் 11ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்கான அணுகுமுறை அறிக்கையில் //
விவசாய நிலங்களின் அளவு 37.05 விழுக்காடாக குறைந்து விட்டது என்ற அபாயகரமான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 1993- 94ல் 25 விழுக்காடாக இருந்த வேளாண் உற்பத்தி, 2005- 06ல் 13.03 விழுக்காடாக சரிந்துள்ளது. அதேபோல் 2001- 02 ல் 76.89 இலட்சம் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி, 2004- 05ல் 61.40 இலட்சம் டன்னாக குறைந்துள்ளது. (நெலத்துல வெவசாயம் செஞ்சா அதை எப்பிடி செறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு குடுக்குறது….? அவங்களுக்கு குடுத்த வாக்குறுதியவாவது காப்பாத்த வேணாமா…?) சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் விவசாயிகளை மட்டும் விரட்டாமல் இலட்சோப லட்சம் சிறிய வியாபாரிகளையும் கோடிக்கணக்கான ஊழியர்களையும் துரத்துகின்றது.

பால்க்காரர், தயிர்கார அம்மா, கீரைக்கார பாட்டி, பச்சரிக்காரத்தெரு, நெய்க்காரன்பட்டி என தொழிலையே தங்களின் விணைப் பெயராக்கிக் கொண்டவர்கள் தமது முன்னோர்கள்.

 

“காவிரிப்  பூம்பட்டினத்தில் பட்டினபாக்கம், மருவூர்பாக்கம் என்று இரு பிரிவுகள் இருந்தன. வணிகர்கள் வசித்து வந்த அவ்விடத்தே சுங்கச்சாலையும் கலங்கரை விளக்கமும் இருந்தன. அங்கே கடல் வழியே வந்த குதிரைகளும், நிலத்தின் வழியே வந்த மிளகுப்பொதிகளும், இமயத்திலுண்டான மணிகளும் பொன்னும், குடகுமலையில் பிறந்த சந்தனமும் அகிலும், காவிரியில் உண்டான வளங்களும், ஈழநாட்டிலிருந்து வந்த உணவுப்பொருள்களும், பிற அரிய பொருள்களும் கூடி வளம் மிகுந்த பரந்த இடத்தையுடைய தெருக்கள் இருந்தன. இப்பண்டங்களில் சிலவான, தக்கோலம், தீம்பு இலவங்கம், கற்பூரம், சாதி முதலிய மணப்பொருள்களை விற்பவர்கள் வாசவர் எனப்பட்டனர். வெற்றிலை கட்டி விற்கும் தொழிலையும், கயிறு திரித்து விற்கும் தொழிலைச் செய்தவரும் பாசவர் எனப்பட்டனர்……“ என்று நீண்டு செல்லும் சிலப்பதிகாரத்தின் பதிவுகள் யாவுமே நமது அடுத்த தலைமுறைக்கு வெறும் கற்பனைகள் என்ற எண்ணத்தைப் போதிப்பவையாகிக் கொண்டிருக்கின்றன.

 

திண்டுக்கல் பூட்டு,   திண்டுக்கல் சுருட்டுத், கும்பகோணம் பாத்திரத்தொழில், காஞ்சிவரம் நெசவுத் தொழில்  உடன்குடி பனைத்தொழில்,சில்லுகருப்பட்டி,  பவானி ஜமுக்காளம், மதுரை சுங்கடி, கூறைப்புடவை, ஊத்துக்குளி வெண்ணை, மணப்பாடு மீன்பிடித் தொழில், பெரியதாழை கருவாடு என நடுத்தர மக்களும்,  அடித்தட்டு மக்களும் தங்களின் உயிரோடும் உடலோடும் கலந்து வளர்த்து வந்த  தொழில்கள் அனைத்தும் கத்தியின்றி கத்தலின்றி சத்தமில்லாமல் வழக்கழிக்கப்படுகிறது.

கும்பகோணம் வெற்றிலை சீவல், கோவில்பட்டி கடலை மிட்டாய்,  நெல்லை அல்வா, கடம்பூர் போளி, உடன்குடி சில்லுக்கருப்பட்டி,  மணப்பாறை முறுக்கு,  திருவில்லிபுத்தூர் பால்கோவா,  கல்லிடைக்குறிச்சி அப்பளம், தூத்துக்குடி மக்ரோன், சாத்தூர் சேவு, திண்டுக்கல் மலைப்பழம், மதுரை மல்லிகை, மதுரை இட்லி, மாப்பிள்ளை விநாயகர்கோடா, அய்யனார் கலர்கம்பெனி, ஆம்பூர் பிரியாணி, செட்டிநாட்டுச் சமையல் என ஊரின் பெயரிலேயே வாசனையும், சுவையும்  கலந்திருந்த  நமது உணவுத் தொழில்களும்  பெரு வியாபாரிகளின் வாழ்வாதாரங்களாகி விட்டதால் சிறு குறு வியாபாரிகளின் ஜீவாதாரம்  கேள்விக்குறியாகிவிட்டன.  குடிசைத் தொழில்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் ஈடுபடுகின்ற தொழில்கள் யாவும் நசுக்கப்படுகின்றன.

பெருவணிக வளாகங்களில் விற்பனைப் பெண்களாய் இருப்பவர்களின் பூர்வீகம் கேட்டுப்பாருங்கள்….. இவர்களின் பாட்டனார் பாரம்பரியத் தொழிலின் நிபுனத்துவமானவராய் இருந்திருப்பார்.

உற்பத்தியாளர்களாய் இருந்த ஒரு சமூகத்தை நுகர்வோராக மாற்றியதால்தான்  விலையேற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. “ஒரு கிராமத்திற்குத் தேவையானவற்றை அந்த கிராமே உற்பத்தி செய்ய முயற்சிக்க வேண்டும்“ என்றார் ஜே.சி. குமரப்பா. ஆனால் நடைமுறையில் எல்லாமே தலைகீழாய் உள்ளது. கடந்த இருபதாண்டு காலத்தில் நம்முடைய ஆட்சியாளர்களின் உற்பத்தி தொடர்பான தவறாக கொள்கைகளால்தான் விலையேற்றங்கள் நிகழ்கின்றன என்று பொருளாதாரம் படித்தவர்கள் சொல்கிறார்கள். இது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விசயம்.  உயர்ந்து நிற்கும் விலைவாசியை தேர்தலுக்குள்ளாவது குறைப்பார்களா….. இல்லையெனில் வெங்காயத்திற்கான விலையாய் ஆட்சி அதிகாரங்களைக் கொடுப்பார்களா…..?

(சூரியக்கதிர்15-01-2011 இதழில் வெளியான கட்டுரை)

 

மாரி மும்மாரி பொழிய…. மதகணை பெருக்கெடுக்க…

மண்ணிடை மரம் செடி கொடியெல்லாம் தழைக்க….

பாரிடை உயிரெல்லாம் பல்வளம் பெற்றிடுக….

பாங்குடன் மானிடம் ஓங்கியே வளர்க……..

– பாவலர் வேங்கையன்

சென்ற மாதம் இறுதி வாரத்தில் மதுரையை ஒட்டியுள்ள நாகமலை அடிவாரத்தில் இருந்தேன். அந்த வாரம் முழுதும் வலுத்த மழை. காற்றில்லாமல்… இடியிடிக்காமல் வானம் கிழிந்து நீரூற்றியது போல இரவெல்லாம் மழை பொழிந்து கொண்டே இருந்தது. “பத்து வருசத்துக் முந்தி இப்பிடி பேஞ்சது… அதுக்கப்புறம் இன்னிக்கித்தான் பேயுது“ என் ஒரு பெரியவர் சொன்னார்.

மறுநாள் காலையில் நான்கு வழிச் சாலைக்காக கட்டப்பட்ட வைகையாற்றின் கரையில் நின்று வெள்ளம் பார்த்தேன். நீரோடிய தடமழிந்து கிடந்த ஆற்றில் திபுதிபுவென செந்தண்ணீர் வந்தது. நேரம் அதிகரிக்க…. அதிகரிக்க…. வெள்ளத்தின் வேகம் கூடிக்  கொண்டேயிருந்தது.  தண்ணீர் வராது என்ற தைரியத்தில்  கரைகளைச் சுருக்கி நிலமாக்கிக் கொண்டவர்களின் எண்ணத்தையெல்லாம் சில நொடிகளில் பொசுக்கிப் போட்டுவிட்டு, ஆனந்தத் தாண்டவத்தோடும், தனக்கான தடத்தை  தானே மீண்டும் உருவாக்கிக்கொண்டு எக்காளத்தோடும், எகத்தாளத்தோடும் வைகை ஓடியது. பத்தாண்டுகளுக்குப் பிறகு ராமநாதபுரம் பெரிய கண்மாய் நிறைந்திருக்கிறது.  எப்போதாவது கடலில் கலக்கும் தேனி மாவட்டத்து மழை நீர் இந்தாண்டு  கடலில் கலந்தது.

மதுரையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே மழை பெய்து கொண்டிருக்கிறது. அதிலும், கனமழை. ஆம்பூரில் தொடங்கி செங்கல்பட்டுவரையிலான பயணத்தில் எப்போதும் மணலாறாய் காட்சியளித்த பாலாற்றில் இருகரையடைத்துத் தண்ணீர் சென்றது.  நீர் நிலைகள் எல்லாமே நிரம்பிக் கொண்டிருக்கிற இந்த மாதம்தான் இயற்கையின் எழிலான மாதமாய் இருக்கிறது. பார்க்கும் இடமெல்லாம் பச்சைப் பட்டாய் பூமி பூரித்துப் போய் இருக்கிறது.  ஏறக்குறைய தமிழகத்தின் எல்லா அணைகளும் நிரம்பிக் கொண்டிருக்கின்ற காரணத்தால் கடலில் கலக்கும் நீரின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே  செல்கிறது.  கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆறு, திருச்சி மாவட்டம் கொள்ளிடம்….. நெல்லையில் தாமிரபரணி ஆகியவற்றில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டபடி ஓடிக் கொண்டிருக்கிறது.  தஞ்சை நாகை மாவட்டங்களை வழக்கம் போலவே வெள்ளம் சூழ்ந்து கொண்டிருக்கிறது. குமரி மாவட்டத்தின் அணைகளெல்லாம் நிரம்பியதால் இந்துமகா சமுத்திரத்தில் தண்ணீர் கலந்து கொண்டிருக்கிறது.

தொடர் மழை காரணமாக கொடைக்கானல் மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையில் விழுந்து கிடக்கின்றன இதனால் பெரியகுளம்-கொடைக்கானல், வத்தலகுண்டு-கொடைக்கானல், பழனி-கொடைக்கானல் ஆகிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. சிறுமலையில் மலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. உதகையில் வழக்கம் போலவே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏரிகளும் குளங்களும் நிறைந்து எங்கெங்கு காணினும் தண்ணீராய்த் தெரிகிறது.

இப்படி மழைக்காலச் செய்திகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். நதிகள் கடலைத்தொடும் போதும், கழிமுகங்களில் செந்நீரும், மழைநீரும் உப்பு நீராய் மாறும் மாற்றத்தைக் காணும் போதும் ஏற்படும் ஆனந்தம் தண்ணீர் வீணாகிறதே என்ற எண்ணம் தோன்றும் போது மறைந்து விடுகிறது.

மழை நீர் வீணாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இவற்றைத் தேக்கி வைக்கும் அணைகளும், ஏரிகளும், குளங்களும் நமது ஆட்சியாளர்கள் கடைபிடித்த  நீர்நிலை கட்டமைப்பிற்கான மெத்தனத்தாலும்,, ரியல் எஸ்டேட் புரோக்கர்களாலும், ஆதிக்கவாதிகளின் ஆக்கிரமிப்பாலும்  ஏறக்குறைய நாற்பத்தி ஐந்து விழுக்காடு ஏரி,  குளங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.  அவைகள் வீட்டுமனைகளாக…. போக்குவரத்துப் பணிமனைகளாக….. புதிய பேருந்து நிலையங்களாக…… நீதி மன்றவளாகங்களாக ‘ஞானஸ்தானம்‘ பெற்று விட்டன.

தமிழகத்தில் வரலாற்று ரீதியாகவே மழை நீர் சேமித்து வைக்கப்படும் பழக்கம் கடைபிடிக்கப்பட்டகாலம் இருந்தது. காலகாலமாய் நமது பண்போடு கலந்திருக்கிற உயிர் நிலைகள்… நம் கண்மாய் ஏரி நீர்நிலைகள். என்று எங்கள் பாவலர் வேங்கையன் பாடியது மிகையல்ல… வரலாற்று ஆவணம்.  இந்த கலாச்சாரத்தின் வெளிப்படுதான் ஏரி, குளம், கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர் ஆதார அமைப்புகள்.

புவியியல் அமைப்பின்படி  தமிழகம் மலை மறைவு பிரதேசம். தமிழகத்தின் புவிமேற் பரப்பு 73 விழுக்காட்டிற்கும் அதிகமான பாறைகளை கொண்டதாகும். எனவே, நிலத்தடி நீர் சேமிப்பு என்பது நமக்கு சவாலான விஷயம். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு மற்றும் மாநில அரசின் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் நிலத்தடி நீரை சேமிக்க குளங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்பின் கீழ் 16 ஆயிரத்து 477 சிறு குளங்களும், 3,936 நடுத்தர குளங்களும் மழையை நம்பியுள்ளது.

மாநில அரசின் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் ஐந்தாயிரத்து 276 குளங்கள் மழையை நம்பியும், மூன்றாயிரத்து 627, குளங்கள் நதி நீர் பெறும் குளங்களாகவும் உள்ளன. இது தவிர  தனியார் குளங்கள் ஒன்பதாயிரத்து 886 உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் ஏற்பட்டு வரும் ஆக்ரமிப்புகள் மற்றும் நிலப்பயன்பாட்டு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாலும், நீர் பிடிப்பு பகுதியின் வனப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாலும் குளங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. கடந்த 2008 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 32 ஆயிரத்து 202 குளங்கள் இருந்தன. தமிழ்நாடு சுற்று சூழல் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இதில், 30 விழுக்காடு குளங்கள் நீரை தாங்கி நிற்கும் தன்மையை இழந்துவிட்டது தெரிய வந்தள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மேலும் 15 விழுக்காடு குளங்கள் நீரை தாங்கி நிற்கும் தன்மையை இழந்ததோடு இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. மீதமிருக்கும் குளங்களும் தூர்வாராத காரணத்தால் மழை நீரைச் சேமிக்கும் சக்தியைக் கொஞ்சங்கொஞ்மாக இழந்து கொண்டிருக்கிறது

இந்நிலையில் கடந்த 2007-08 ம் ஆண்டு ஏரி, குளம் ஆகியவற்றை பாதுகாக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், 2009 ம் ஆக்கிரமிப்பு பகுதியில் பத்தாண்டுகளுக்கும் மேல் ஆண்டாக குடியிருந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. (“ஆறு கண்டார் அதனாலே சோறு கண்டார் என்று கவிதை எழுதிய நம் முதல்வரின் ஆட்சியில்தான் இந்த முரண்பாடு)

பிட்டுக்கு மண்சுமந்து கடவுளே குடி மராமத்து செய்த வரலாற்றுப் பெருமை படைத்த மதுரையில் 39 விழுக்காடும், சென்னையில் 60 விழுக்காடு குளங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் குப்பைகளை கொட்டும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், நீர் நிலை ஆதாரம் உள்ள பகுதிகளிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர் நிலை ஆதாரங்கள் மறைந்து வருகிறது.

தமிழகத்தில் 1950களில் ஏரி நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவது 17.3 விழுக்காடு என்று இருந்தது. இப்போது 2010ல் 6.1விழுக்காடாகக்  குறைந்துள்ளது. இந்த 60 ஆண்டுகளில் 29விழுக்காடாக இருந்த கிணற்று நீர் பாசனமும் இப்போது 22 விழுக்காடாகக் குறைந்து விட்டது.  மேடுதட்டிப் போன அல்லது இருந்த தடமழிந்த நீர் நிலைகளில் எப்படி தண்ணீர் தேங்கி நிற்கும்?

சென்னை போன்ற பெரு நகரங்களின் தண்ணீர்  தேவைக்கு  80 விழுக்காடு தண்ணீர் மாநகருக்கு வெளியிலிருந்துதான் கொண்டுவரப்படுகிறது. அப்படிக் கொண்டு வந்து கொடுத்தும்கூட பற்றாக்குறை உள்ளது. 174 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சென்னை மாநகரில் பெய்யும் மழையை ஆண்டுக்கு  60 நாள்களுக்கு மட்டும் சேமித்தாலே இந்த மழையின் அளவு 1,200 மில்லி மீட்டராகும்.  இந்த மழை நீர் மூலம், நாள் தோறும் 5 பேர் உள்ள குடும்பத்துக்கு 125 லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.

சிங்கப்பூர், டோக்கியோ நகரங்களிலும் ஜெர்மனியிலும் புத்திசாலித்தனமான மழைநீர் சேமிப்பு முறைகளைக் கையாள்கிறார்கள். கடந்த தலைமுறையில் நமது பாட்டிமார்கள் நம் வீட்டு முற்றத்தில் அண்டா உள்ளிட்ட பாத்திரங்களில் மழைநீரைச் சேமித்து வைத்து, அந்தத் தூய்மையான நீரை ஒரு வாரம் சமையலுக்குப் பயன்படுத்திய அதே பாணிதான். ஆனால் இவர்கள் கட்டடங்களில் அமைக்கப்பட்ட தொட்டிகளில் மழைநீரைச் சேமித்து வைக்கிறார்கள்.

சிங்கப்பூர் விமான நிலைய கட்டடத்தின் மேற்பரப்பிலும், சுற்றுப் பகுதியிலும் பெய்யும் மழையைத் தரைதளத் தொட்டிகளில் சேமித்து வைக்கிறார்கள். இதன் பெரும் பகுதி கட்டடத்தைப் பராமரிப்பதிலும், கழிவறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மழை நீர் விமான நிலையத்துக்கு ஒர் ஆண்டுக்குத் தேவைப்படும் தண்ணீரில் மூன்றில் ஒரு பகுதியைச் சமாளிக்க உதவுகிறது. இதனால் அவர்களுக்கு ஆண்டுக்கு 4 லட்சம் டாலர் சேமிப்பு.

இதே முறை வானுயர் கட்டடங்களிலும் பயன்படுகிறது. சிங்கப்பூரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் அனைத்திலும் மழைநீர்த் தொட்டி உள்ளன. அவர்கள் இந்த நீரைக் குடிநீருக்காக ஒரு பகுதியையும், மீதியை பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர்.

ஜெர்மனியில் உள்ள வீடுகள் மழைநீர்த் தொட்டியை கருவூலம் போலக் காக்கின்றனர். ஏனென்றால், அங்கே தொழில்துறை மாசு அதிகம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்துக்குக் கட்டணம் அதிகம். ஆகவே அவர்கள் மழை நீரை வீட்டின் அடியில் பெரிய தொட்டிகளில் சேமித்து வைத்து, அதைக் குடிக்கவும் சமையலுக்கும் பயன்படுத்துகிறார்கள்.  ( நன்றி. தினமணி தலையங்கம் 18-11-2010)

இயற்கை தரும் மழையை நாம் எந்த அளவிற்கு சேமிக்கிறோம். ஒரு கணக்கீட்டைப் பார்ப்போம் 2400 சதுர அடி கொண்ட இடத்தில் (1கிரவுண்டு) பத்து  மில்லி மீட்டர் மழை பெய்தால் கிடைக்கும் நீர் சுமார் 2,230 லிட்டர். ஒரு  ஏக்கரில் பத்து  மில்லி மீட்டர் மழை பெய்தால் கிடைக்கும் நீர் சுமார் 40,460 லிட்டர். 1 சதுர  கிலோ.மீட்டர் நிலத்தில் பத்து  மில்லி மீட்டர் மழை பெய்தால் கிடைக்கும் நீர் சுமார் 10,000,000 லிட்டர் இதில் நாம் எவ்வளவு நீரை சேமிக்கிறோம்….? எவ்வளவு பேர் உண்மையில் வீட்டில் மழை நீர் சேமிப்பு செய்கிறோம…..? எவ்வளவு விவசாய நிலங்களில் பண்ணை குட்டைகள் உள்ளன…? எவ்வளவு ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டது….? இயற்கை நம் நாட்டிற்கு இரண்டு பருவ மழைப் பொழிவை தருகிறது, திட்டமிடாமை காரணமாக சேமிக்காமல் வெள்ளம் ஏற்பட்டு உயிர் இழப்புக்களையும் நஷ்டங்களையும் சந்திக்கிறோம்.

ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியில் கழிவு நீரை சுத்தம் செய்து குடி நீராக அடுத்த வருடமே வினியோகம் செய்யப்போகிறார்கள் என்று இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

நம் நாட்டின் சராசரி மழை பொழிவு 12.50   மில்லி மீட்டர். சுமார் ஒரு பில்லியனுக்கு மேல் மக்கள் தொகை உள்ள , உலகில் அதிக கால்நடை உள்ள, சுமார் 70விழுக்காடு மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ள நாம் நமக்கான நீராதாரங்களைக் காக்கும் திட்டங்களை முழு வீச்சில் நடைமுறைப்படுத்தியதில்லை.

மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறைக்காக நமது பழம்பெரும் பாரம்பரியங்களையெல்லாம் தாரை வார்த்துக் கொண்டதைத் தவிர வேறெந்த ஆணியையும் நம்மால் புடுங்க முடியவில்லை.

”ஆற்று நீர் என்பது மாதச் சம்பளம் மாதிரி. அந்தந்த மாசம் எடுத்துச் செலவு செய்து கொள்ளலாம். நிலத்தடி நீர் அப்படியில்லை. அது காலம் காலமாய் பூமித்தாய் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் பூர்வீகச் சொத்து. ஒரு மாதம் மளிகைச் சாமான் வாங்குவதற்காக யாராவது பூர்வீகச் சொத்தை விற்பார்களா?” என்று எப்போதோ ஒரு திரைப்படத்தில் கேட்ட வாசகம் இன்னும் மனதில்    இருந்து கொண்டுதானிருக்கிறது.

கனமழையல்ல… மாமழை பெய்துகொண்டே இருக்கிறது மலையில் விழுந்து தரையில் விழுந்து  வீதிகளிலும்,  மொட்டை மாடிகளிலும்… நடந்து கடைசியில் வீணாகக் கடலில் கலக்கிறது.  இருக்கிற நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தெரியாமல் வாழ்ந்த   பரம்பரை இந்தப் பரம்பரை என பிற்காலத்தில் வரலாறு நம்மைப் பழிக்குமே என்ற வெட்க உணர்வு  தூய மழைத்துளிகள் முகத்தில் விழும்போதெல்லாம் எழுகிறது.

(பசுமைத்தாயகம் சுற்றுச்சூழல்2011ஜனவரி இதழில் வெளியான கட்டுரை)

Follow

Get every new post delivered to your Inbox.