நதி பற்றிய கவிதையை
நான் எழுதியபோது
அருகில் வந்த மகள்
வரைந்த நதியைக் காட்டினாள்
தாளில் ஓடியது
பென்சில் நதி

ராஜா சந்திரசேகர்

 

“அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர், முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட, பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின்,”  என்று பரிபாடலில் வரும் வரிகளை எங்கு எப்போது படித்தாலும் எனக்கு வைகையில் நீராடிய நினைவுகள் வந்து செல்லும். வைகைக்குப் பல முகங்கள் உண்டு. ஐப்பசி கார்த்திகை மாதங்களில் யாரையும் பக்கத்தில் நெருங்கவிடாமல் பேரிரச்சலோடு ஓடும் வைகைதான் பங்குனி சித்திரை மாதங்களில் தண்ணீருக்கே தவியாய் தவித்துக் கொண்டிருக்கும். “யாராவது ஒரு குடம் தண்ணீரை என்மீது ஊற்றுங்களேன்…. மேனியெல்லாம் காந்தலெடுக்கிறது… என்று கெஞ்சுவது போல கோடை வெயில் சுடு நெருப்பில் சுருண்டு கிடக்கும்.  வைகைக்கு பல நிறங்கள் உண்டு. மழை பெய்யச் தொடங்கியவுடன் நிமிடத்தில் கரைபுரண்டு ஓடும் நீர் செந்நீராய் ஓடும். நேரம் கூடக்கூட கருநீல நிறமாக மாறும். இரண்டு நாட்கள் கழித்துதான் ஆற்றில் இறங்க முடியும்.அப்படி இறங்கும்போது சாந்தமாக இருக்கும்… குளிப்பதற்கும் ஏதுவாக இருக்கும். எப்போது தண்ணீர் வந்தாலும் எங்களுக்கு  வைகையில் நீர் வரும் பிடித்த மாதம் மார்கழிதான்.  பனி போர்த்திக் கொண்டு இருகரைகளிலும் பச்சை நாணலை ஆடையாக்கிக் கொண்டு நீரோடும் நளினத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

இளம் பருவத்தில் நண்பர்களோடு  அதிகாலையில் மார்கழி மாதங்களில் நீராடியது வாழ்வில் வசந்த காலம் மார்கழியில் குளிச்சுப்பாரு”… என்ற ஒன்பது ரூபா நோட்டு படத்தின் பாடல் அனுபவத்தின் வெளிப்பாடுதான். வைகையில் நீர் வரும் மாதங்களில் எங்கள் மலை கிராம மக்களுக்கு ஆற்றில்தான் குளியலும் துவையலும். எங்கள் ஊரில் பாலத்திற்குக் கீழே பெண்களும் பாலத்திற்கு மேலே ஆண்களும் என்பது எழுதப்படாத விதியாகவே பின்பற்றப்படுகிறது. என்பதுகளின் துவக்கத்தில் பாலம் இல்லாத போது தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த காலத்தில் மரங்களை ஏற்றிவந்த லாரியொன்னு நீரில் சிக்கிக் கொண்டது. இதில் லாரியின் ஓட்டுநர் இறந்து விட்டார். நீண்ட நாட்கள் கழித்து நீர் வற்றியபிறகே லாரியை எடுத்தார்கள். லாரி இருந்த பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில்தான் நாங்கள் நீச்சல் பழகினோம்.  அதிகமாகக் குளிப்பதால் காய்ச்சல் வந்துவிடும். அப்படி காய்ச்சல் கண்டவர்கள் எல்லோரும் செத்துப்போன மலையாளி டிரைவர்தான் பேயாகப் பிடித்துக் கொண்டதாகச் சொல்வார்கள். இப்படிப்பட்ட பேய்க்கதைகளும் நிறைய உண்டு

கார்கால வைகையில் வெள்ளம் பார்க்க ஊரோடு செல்வோம். எங்கள் தோட்டம் வைகைக் கரையில் உள்ளது. வெள்ளத்தில் அடித்துவரப்படும் மரங்கள் எல்லாம் எங்கள் தோட்டத்து கரையில்தான் ஒதுங்கும். 1984-ல் எம்.ஜி. ராமச்சந்திரன் இங்கு போட்டியிட்டு வென்ற பிறகு கடமலைக்குண்டுக்கு மேற்கே உள்ள 47 கிராமங்களை இணைக்கும் வகையில் வைகையில் பாலம் கட்டினார். கட்டுமானப் பணிகள் நடந்த போது ஆற்றின் வேகத்தை அறியாமல் கட்டப்பட்ட பாலம் இரு முறை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. பாலம் கட்டிய பிறகு பாலத்தின் நின்று ஊர் சனமே வெள்ளம் பார்க்கும்.

வைகையின் நீரோட்டம் மட்டுமல்ல வைகையின் கிளையாறுகளும் படுவேகமாய் ஓடும் தன்மை வாய்ந்தவை. சிறாறு, மூங்கிலாறு, உப்போடை,அருகவெளி ஓடை, பஞ்சந்தாங்கி  போன்ற கிளையாறுகள் வைகையை விடவும் வேகம் மிகுந்தவை. மழைகாலங்களில் விவசாயப் பணிகளுக்காகச் செல்லும் மக்கள் ஆற்றின் நீரின் அளவைக் கணக்கிடாமல் இறங்கினால் அவர்களை குண்ணூர் கூட்டாற்றில்தான் பிணமான எடுக்க வேண்டும். இப்படி ஒரு முறை பங்குனி மாசத்தில்(1983 என எண்ணுகிறேன்) இரவெல்லாம் மழை பெய்து காலையில் வெள்ளம் வந்தது. அந்த வெள்ளத்தில் ஒரு குடும்பமே பலியானது. இன்றும் அந்த சம்பவத்தை மக்கள் ”அண்ணாமலைத்தேவர் வெள்ளம்  என்றே சொல்கிறார்கள். பகலெல்லாம் சீற்றத்தோடு ஓடிக்கொண்டிருந்த வெள்ளத்தை எல்லோரும் ஆவலாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது நாகமுத்து நாயக்கர் மட்டும் மிகக் கவலையாகச் சொன்னார். “பங்குனியில பகல் வெள்ளம் போனா கார்த்திகையில கண்மாய் காயும் என்று. அந்த ஆண்டு அப்படித்தான் நிகழ்ந்தது. தென்மேற்குப் பருவக்காற்று காலங்களில் வலுத்த சாரல்பெய்தாலே கரைபுரண்டோடும் வைகை அந்த ஆண்டில் ஐப்பசி வரையில் வறண்டு கிடந்தது.

வைகை நதி என்பது ஆற்றின் நீளம் 258கிலோமீட்டர் என்றும், பாசனப் பரப்பு 7031 சதுர கிலோமீட்டர் என்றும் வெறும் புள்ளி விபரங்களால் மட்டுமே சொல்லிவிட்டுச் செல்வதல்ல…. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஓயாமாரியில்…. சந்தனக்காவில்…… வெள்ளிமலையில்…… மேகமலையில் பச்சை விரித்துக் கிடக்கும் தாவரக்காடுகளின் அடிமடியிலிருந்து சுரந்து வரும் சுதேசி நதியின் தடம். நூற்றுக்கணக்கான நீரோடைகளின் கூட்டுச் சங்கமம். மதுரையை எரித்த கண்ணகி கரை வழியே நடந்ததால்  சீற்றம் குறையாத நீரண்டமாக விளங்கியது.உலகு புரந்தூட்டும் உயிர்ப் பேரொழுக்கத்துப்புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி வையை என்ற பொய்யாக் குலக்கொடி என சிலப்பதிகாரம் புகழ்நத வைகை  இன்று கரையழிந்து மணலழிந்து நீரோடிய தடமழிந்து கொண்டிருப்பதைக் காணும் போது நம்மால் மௌனமாக அழமட்டுமே முடிகிறது.. மேற்குத் தொடர்ச்சி மலையின் வருஷநாடு மலைப் பகுதியில் தொடங்கி, சோழவந்தான் வழியாக மதுரைக்கு வந்து மாசு படுத்துவதற்காகவா? ரத்தக் கண்ணீர் விடுவதற்காகவா? என்ற கேள்விகளோடு தொக்கி நிற்கிறது

மாசு பட்டிருப்பது வைகைஆறு மட்டும்தானா…..?. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர், கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அழிக்கப்படும் காடுகளுக்கும், ஆறுகளில் நீர்வளம் குறைந்ததற்கும் தொடர்பு இருக்கிறது. இந்த மலைத் தொடர்களில் கட்டப்படும் சுற்றுலா ரிசார்ட்டுகள், நீர் விளையாட்டு மையங்கள், தேயிலை, காபி, காய்கறி பயிர் சாகுபடி போன்ற காரணங்களுக்காக காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் நீராதாரம் குறைந்து, மண்ணரிப்பு ஏற்படுகிறது.

நெல்லைச் சீமையின் ஜீவநதியான தாமிரபரணியில். சுமார் 65 இடங்களில் குடிநீர் எடுக்கப்படுகின்றது. மதுரா கோட்ஸ், சன் காகித ஆலை, சங்கர் சிமெண்ட், ஸ்பிக் உரத் தொழிற்சாலை, தாரங்கதாரா தொழிற்சாலை, டாக் ஆலை, கனநீர் ஆலை, அனல்மின் நிலையம் துறைமுகம் ஆகியவற்றுக்கும் முக்கியமாக இந்த ஆற்று நீர் ஆதாரமாக உள்ளது. சுமார் 65 இடங்களில் குடிநீர் எடுக்கப்படுகின்றது. மதுரா கோட்ஸ், சன் காகித ஆலை, சங்கர் சிமெண்ட், ஸ்பிக் உரத் தொழிற்சாலை, தாரங்கதாரா தொழிற்சாலை, டாக் ஆலை, கனநீர் ஆலை, அனல்மின் நிலையம் துறைமுகம் ஆகியவற்றுக்கும் முக்கியமாக இந்த ஆற்று நீர் ஆதாரமாக உள்ளது.

தாமிரவருணித் தண்ணீரை ஆற்று நீரை அப்படியே அள்ளிக் குடித்த காலமெல்லாம் மலையேறி விட்டது. ஆற்றின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை ஒரு சில பெரிய தொழிற்சாலைகளும், 19 சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளாலும் கொட்டப்படும் கழிவுகளின் சங்கமத்தால் தாமிரவருணி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறது இந்த ஜீவநதியால் இம்மாவட்டங்களில் 1.5 லட்சம் ஏக்கர் நிலத்தில் இரண்டு போக நெல் சாகுபடியும், சுமார் 25,000 ஏக்கரில் மூன்று போகச் சாகுபடியும் நடைபெற்று வந்தது. பாசனம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் முக்கியக் குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஆறு உள்ள பரணி அவலப் பரணி பாடிக்கொண்டிருக்கிறது..

ஈரோடு மாவட்டம் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணைநீர் முற்றிலும் நஞ்சாக்கப்பட்டிருக்கிறது. கோவை, திருப்பூர் வழியாக ஒரத்துப்பாளையத்தை வந்தடையும் நொய்யல் ஆறு கொடுமுடி அருகே காவிரியுடன் கலக்கிறது. 1992இல் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்ட ஒரத்துப்பாளையம் அணை ஏறத்தாழ 25,000 ஏக்கர் பாசனத்திற்காகத்தான் கட்டப்பட்டது. ஆனால், திருப்பூர் நகரின் சலவை சாயப்பட்டறை முதலாளிகள் ஆலைக்கழிவுகள்   முழவதையும் நொய்யல் ஆற்றில்தான் திறந்து விடுகின்றனர்.

இதனால் அணையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலம், நீர், காற்று, குடிநீர், குடிநீர் ஆதாரங்கள், கால்நடைகள், விவசாயப் பயிர்கள், மரங்கள், செடி கொடிகள் என அத்தனையும் பாழ்பட்டு விட்டன. விவசாய நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்பட்டதோடு, கழிவுநீர் காவிரியில் கலந்து, அதனால் காவிரியிலிருந்து குடிநீர் பெறும் கரூர், நாமக்கல், திருச்சி, ஈரோடு, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கெல்லாம் இந்தக் கழிவுநீர் கலந்த தண்ணீர்தான் குடிநீர். இத்தனைக்குப் பிறகும் “”நொய்யல் ஆற்றில் கழிவுநீரை விடக் கூடாது; உடனே தடுத்து நிறுத்த வேண்டும்” என்று மட்டும் உயர்நீதி மன்றம் ஆணை பிறப்பிக்க மறுக்கிறது. காரணம், “”தொழில்பாதிப்பு, ஏற்றுமதி பாதிப்பு, அன்னியச் செலாவணி இழப்பு” என்றெல்லாம் முதலாளிகள்கூறும் வாதத்தை உயர்நீதி மன்றம் வேதவாக்காக ஏற்றுக் கொள்கிறது

சவுத் இண்டியா விஸ்கோஸ் ஆலை பவானியிலிருந்து அன்றாடம் 400 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்துப் பயன்படுத்திவிட்டு அதேஅளவு நீரை கழிவாக பவானி ஆற்றில் விடுகிறது. இதனால் பவானி நீர்த்தேக்கத்தில் அதிகஅளவு ரசாயனங்களும், கனரக உலோகக் கழிவுகளும் கலந்திருக்கின்றன. மேலும், யுனைடெட் பிளீச்சர்ஸ், டேன் இண்டியா, டி.டி.கே. அட்டைத் தொழிற்சாலை, சர்க்கரை ஆலைகள் போன்றவைகளும் தங்கள் கழிவுகளை பவானி ஆற்றில் கொட்டுகின்றன. சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் போன்ற நகரங்களின் சாக்கடைகளும் இதில் கலக்கின்றன. இதனால் பவானி ஆற்றுக் குடிநீரைப் பயன்படுத்துபவர்கள் வயிற்றுப்போக்கு, சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள சுமார் 100 தோல் தொழிற்சாலைகளால் குடகனாற்றில் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் கழிவுநீர் ஆற்றில் விடப்படுகிறது. இதனால் சுற்றுப்புறக் கிராமங்களில் 20 சதுர கி.மீ நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விட்டது. கிணறு வெட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து விவசாயிகள் திவாலாக்கப்பட்டுள்ளனர்

பாலாற்றுப் படுகையில் கட்டப்பட்டுள்ள சுமார் 100 சிறிய, பெரிய தோல் தொழிற்சாலைகள், இரசாயனத்தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அன்றாடம் 450 லட்சத்திலிருந்து 500 லட்சம் லிட்டர் ஆற்றில் கொட்டப்படுகின்றன.  பாலாற்றுப் படுகையில் ஒரு நாளைக்கு 110 லட்சம் கிலோ தோல் பதனிடப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 100 கிலோ எடையுள்ள பதனிடப்படாத தோல், பதனிட்டபின் 20லிருந்து 30 கிலோ வரை எடையுள்ள தோலாக மாறுகிறது. மீதமுள்ள கழிவுத்தோல் முழுவதும் திடக் கழிவுகளாக ஆற்றில் கொட்டப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் 317 ஏரிகளுக்குத் தண்ணீர் வழங்குகிறது பாலாறு. இந்த ஆற்றிலிருந்து பாசனத்திற்கு 606 ஆற்று ஊற்றுக் கால்வாய்கள் இருந்தன. பாலாற்றில் ஆற்றடி நீரோட்டம் 30 அடியிலிருந்து 40 அடி ஆழம் வரை உள்ளது. இது இந்த ஆற்றுக்கே உரிய சிறப்பு. பல நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குக் குடிநீரையும், ஆயிரக்கணக்கான கிணறுகளுக்கு நீரூற்றையும் இது அளித்து வந்தது. ஆனால், இவையெல்லாம் இன்று சாகடிக்கப்பட்டு விட்டன. இப்போதும் சென்னையைநோக்கிச் செல்லும் பகல்நேரப் பயணங்களில்போது நீண்டு வறண்ட பாலையாய் பாலாறு காட்சியளித்துக் கொண்டுதானிருக்கிறது. நாம் மட்டுமல்ல நம் ஆட்சியாளர்களும் குளிரூட்டப்பட்ட ஊர்திகளில் அமர்ந்து பார்த்தக் கொண்டேதான் செல்கிறார்கள்

இப்படி ஒவ்வொரு ஆறும் யாரால் எந்த அளவுக்கு நஞ்சாக்கப்பட்டுள்ளது என விரிவாக விளக்க முடியும். அந்த அளவிற்கு ஏராளமான ஆதாரங்கள், புள்ளி விவரங்கள் உள்ளன. மாசு பட்டிருப்பதில், நஞ்சாக்கப்பட்டிருப்பதில் கூவம் முதலிடமும், காவிரி இரண்டாம் இடமும், நொய்யல் பவானி அடையாறு அடுத்தடுத்த இடங்களையும் பெறுகின்றன என்று அண்ணா பல்கலைக்கழகச் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது. (இந்து, 29.4.2005) (நன்றி புதிய கலாச்சாரம் 2008)

இன்றைய உலகளாவிய வணிகக் கலாச்சாரத்தால் நமது நதிக்கரை நாகரீகம் கேள்விக்குறியாகிவிட்டது. ஆற்றில் இறங்கு… ஆற்றில் குளி….. ஆற்றில் நீந்து… ஆற்று நீரைக்குடி… என்று சொன்ன காலம்மாறி ஆற்றில் இறங்காதே… ஆற்றில் குளிக்காதே… ஆற்று நீரைக்குடிக்காதே… நோய் தாக்கும் என பயமுறுத்தும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இருபதாண்டுகளுக்கு முன்பு ஆற்றுநீர் வாதம் போக்கும்… அருவிநீர் பித்தம் போக்கும் என்ற பழமொழிக்கு உயிர் இருந்தது. ஆனால்… இன்று…..? ”ஆத்துல குளிச்சா ஒடம்பெல்லாம் அரிக்குது…” என்று பாஞ்சாலங்குறிச்சி படத்தில் வடிவேலு பேசிய வசனம் வெறும் நகைச்சுவையல்ல….. நமது நதிகளின் நிறமாற்றத்தை எடுத்துச் சொல்லும் அவலச்சுவை.

இறந்து போனவர்களின் அஸ்தியை கடலில் கரைக்க வசதியில்லாதவர்கள் தாங்கள் வாழும் ஊர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நதிகளில் கரைத்தார்கள்.  ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்தோடி கடலில் கலக்கும் போது , செத்துப்போன தங்களின் உறவுகளும் கடலில் கரைவார்கள் என்று நம்பினார்கள். அந்த நம்பிக்கை  நமக்கு முந்தைய தலைமுறைவரைக்கும் உயிரோடிருந்தது. இப்போது இல்லை.

காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தமிழ்கண்டதோர் வைகை, பொருநை என மேவிய ஆறுகள் பல ஓடிய தமிழ்கூறும் நல்லுலகில்தான்  தொழிற்சாலைக் கழிவுகள், வீட்டுக் கழிவுகள், நகரச் சாக்கடைகள், ஆற்றோரச் சுடுகாட்டுக் கழிவுகள், வாகன சுத்திகரிப்புக் கழிவுகள், சல்பேர், சோடியம், காஸ்டிக் சோடா, பிளீச்சிங் தண்ணீர், தொழிற்சாலைகள், இரசாயனத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரெல்லாம் கரையடைத்தோடி நதிகளைச் சாயம் போகச் செய்து கொண்டிருக்கின்றன.

 (பசுமைத்தாயகம் ஆகஸ்ட்2010 இதழில் வெளியானது)

Advertisements