ஈஸ்வரனைக் காணும் போதெல்லாம் எனக்கு சந்தோசமாக இருக்கும். இவ்வளவு சின்ன வயதில் அரசியலில் அதுவும் ஒரு பிரபலமான கட்சியில் இணைந்து ஒன்றியக் குழு  உறுப்பினராகி, தன்னைத் தேர்ந்தெடுத்த பகுதி மக்களுக்காய் அவன் பணி செய்வதை நான் ரசித்திருக்கிறேன்.  படித்து விட்டு வேலையில்லாமலிருந்த  இளம்வயதில்  நாங்கள் பொழுது போக்காய் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டலைந்து திரிந்தோம். சுவர்களில் சின்னம் வரைவதில் தொடங்கி,  தேர்தல் நாளில் வாக்குச் சாவடியில் முகவராய் உட்காருவது வரையில் எல்லாப் பணிகளுக்கும் நாங்களே பொறுப்பாளிகள். எங்களை அரசியல் கட்சிக்காரர்கள் தேவையான அளவுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் எங்களில் ஒருவரும் அரசியல் கட்சியில் பதவிகளுக்கு வந்ததில்லை.

 

ஈஸ்வரனின் வளர்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. திருவிழாவுக்காய் சொந்தவூர் சென்று திரும்பும் போதெல்லாம் “அண்ணே வணக்கம்“ என்று கரகரத்த குரலில் பேசி வரவேற்பான். அவனோடு எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும்.

 

ஒரு திருவிழாவுக்காய் ஊருக்குச் சென்றபோது ஈஸ்வரன் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் சிரித்தபடி காட்சி தந்தான். அவனது இறப்பு என்னால் ஜீரனிக்க முடியாததாய் இருந்தது.  துக்கம் விசாரிக்க அவன் வீட்டுக்குப் போன போது “படிச்சு முடிச்ச கையோடு ஒழுங்கா ஏதாவது கம்பெனியில வேலைக்குச் சேர்ந்து கல்யாணம் காட்சின்னு வளர வேண்டியவன் இப்படி அரசியலுக்குள்ள போயி குடி.. கூத்தியா.. கும்மாளமுன்னு  கதைய முடிச்சிட்டானே…”  என்று ஈஸ்வரனின் தந்தை புலம்பினார்.

 

அங்கிருந்து வந்து இரண்டு மூன்று நாட்கள் “அரசியல், குடி, கும்மாளம், கூத்து“ என்ற வார்த்தைகள் மட்டும் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது. அரசியலுக்கு வரும் இளைஞர்கள் எல்லாம் குடிகாரர்கள் ஆகிறார்களா…? குடிகாரர்களாவதற்காகவே அரசியலுக்கு வருகிறார்களா…? என்ற விவாதம் தமிழகம் முழுவதும் மட்டுமல்ல..  தேசிய அளவில் விவாதிக்க வேண்டிய கேள்வி.

 

அரசியல் என்பது அகில  உலக சுரண்டல்வாதிகளின் குருகுலமாகிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு இளைஞர்கள் பொறுப்பேற்பது ஆரோக்கியமான நிலைதான். ஆனால் அவர்களின் பணிகளும் பண்புகளும் ஆரோக்கியமாக உள்ளதா…? நாடு முழுவதுமுள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளில் 45 வயதுக்குக் கீழே உள்ள ஆண் பிரதிநிதிகளில் அரசு மதுபானக் கடைக்குச் செல்லாத அப்பாவிகளின் எண்ணிக்கை  மிகமிகக் குறைவு.

 

நமது  தேசத்தில் உள்ள இளைஞர்களின் மதுப் பழக்கம் தொடர்பாக  சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் கல்லூரிகளில் தங்கிப் படிக்கும் இளைஞர்கள் உள்பட 19 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் மது அருந்துவது சமீப ஆண்டுகளில் 60 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாகவே தமிழக, “டாஸ்மாக்’ நிறுவனத்திற்கு அரசு நிர்ணயம் செய்த இலக்கையும் தாண்டி மது விற்பனை நடைபெற்றுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேண்மை தாங்கிய நமது தமிழக அரசால் கடந்த 2003 நவம்பர் முதல் தமிழகத்தில், “டாஸ்மாக்’ மூலம் மது விற்பனையை அரசாங்கமே நடத்தும் என்ற புனிதப் பணி தொடங்கப்பட்ட பிறகு ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனையில் 2,000 கோடி ரூபாய் வரை அதிகரித்து வருகிறது. இதனால் அரசும் மது இலக்கு விற்பனையை தொடர்ந்து அதிகரித்து வந்தள்ளது. நிர்ணயிக்கப்படும் இலக்கையும் தாண்டி மது விற்பனையில் சாதனை படைக்கப்பட்டும் வருகிறது. தமிழகத்தில் 7,434, “டாஸ்மாக்’ கடைகள் மூலம் மது விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த மது விற்பனைக் கடைகளில் விற்பனையாளர், கடை மேற்பார்வையாளர், ஏரியா சூப்பர் வைசர் என 34 ஆயிரத்து 323 பேர் பணி செய்து வருகின்றனர். இவர்கள் எல்லோரும் இளைஞர்கள் என்பதும், இந்தப் பணிக்கு வருவதற்கு முன் இவர்களில் 70 விழுக்காட்டினர் சாராய வாசனையையோ… சாராயக் கடைகளையோ பார்த்தறியா அப்பாவிகள் என்பதும், தற்போது பணி நிமித்தம் கட்டாயம் குடித்தே தீர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் என்பதும் உண்மை. நாளது தேதி வரையில் நமது அரசாங்க மதுபானக் கடைகளில் தினம் தோறும் சராசரியாக 1.35 லட்சம் பெட்டிகள் ஐ.எம்.எஃப்.எல்., மது பானங்களும், 75 ஆயிரம் கேஸ்   ( ஒரு கேஸில் 12 பாட்டில்) பீர் பாட்டில்களும் விற்பனை செய்யப்படுகிறது. வார நாளில் சாரசரி விற்பனை அளவு 52 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. இதுவே சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மது விற்பனை சராசரியாக 57 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விழா நாட்களின் சராசரி மது விற்பனை 92 கோடி ரூபாய் வரை நடந்துள்ளது.

 

நிலமை இப்படி இருக்க நாம் இளைஞர்களை குடிக்க வேண்டாம் என்று எப்படிச் சொல்ல முடியும்? குடி தொடர்பாக நாம் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாலும் மதுபானக் கடைகளை அடைக்கும் மனம் இந்த கட்டுரை வெளியாகும் நாளிலாவது அரசுக்கு வரும் என்று நம்பிக்கை கொள்வோம். இங்கு நாம் எதிர்கால சமுதாயத்தை தலைதாங்கி வழிநடத்த வல்ல இளைய தலைமுறை பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.  (எதைத் தொட்டாலும் அது சாராயக் கடைக்கே நம்மை இழுத்துச் செல்கிறது)

 

இளைஞர்கள் அரசியலில் ஈடுபடலாகாது. மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது.  வந்தால் அவர்கள் கெட்டுப் போவார்கள் என்று சில முன்னுதாரனங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி  இளைய பாரதம்  அரசியல் அறிவில்லாமல் போனதற்கு யார் காரணம்….? கல்லூரிகளில் பயிலும் மாணவர் கூட்டமோ,  அரசியலுக்கு வர விரும்பவில்லை. காரணம் அது ஒரு சாக்கடை, விழுந்தால் எழுந்திருக்க இயலாது, என்று குருட்டுத்தனமாக மூக்கைப் பொத்துகிறார்கள். கல்லூரி செல்லாத சொந்தத் தொழில் செய்யும் இளைஞர்களோ அரசியலுக்கு வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்ற பயத்தால் தள்ளி நின்று கொள்கிறார்கள்.  படித்தவர்களும் சமுதாயத்தின் மீது மதிப்பு கொண்டவர்களும் தள்ளி நிற்பதால் கழிசடைகள் எல்லாம் சட்டசபைக்குச் செல்கின்றன. அரிதாரங்கள் எல்லாம் அவதாரங்களாய் கற்பனை செய்து கொண்டு அலைகின்றன

 

விடுதலைக்கு முன்னர் வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒட்டு மொத்த இலக்கு இருந்ததால், இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு எழுந்தனர். விடுதலைக்குப் பின்னர் அத்தகைய இலக்குகள் எதுவும் இல்லாததால், அல்லது உருவாக்கப் படாததால், பெரும்பாலான இளைஞர்கள், அன்றாட அரசியலுக்கு வெளியிலேயே நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர். தற்போதைய தலைமுறையினருக்கு, அரசியல் அவ்வளவு பிடித்தமான விஷயமாக இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. உளவியல் ரீதியாகவே அரசியல் என்பதை, தங்களுக்கு தொடர்பற்ற ஓர் அற்ப உலகமாகப் பார்க்கும் போக்கு இளைஞர்கள் மத்தியில் உருவாகி உள்ளது.

இதற்கு காரணம் நம்முடைய நடைமுறை அரசியல்தான். அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், ஆட்சியைப் பிடிப்பதுமான புற அதிர்வுகள் மட்டுமே அரசியலாக இளைய தலைமுறையினருக்கு அடையாளம் காட்டப்படுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உண்மையான அரசியலின் பக்கம் இருந்து இளைஞர்களின் கவனத்தை திசை திருப்பும் இத்தகைய சாகசங்கள்,  இனிதே நிறைவேறி வருகின்றன.

மூன்றாம் உலக நாடுகள் அனைத்தையும், சிந்தாமல் சிதறாமல், நுகர்வு பொருளாதார பாதைக்குள் செலுத்திவிட வேண்டும் என்பதில், பெரிய அண்ணன்களான வளர்ந்த நாடுகள் கங்கணம் கட்டி செயல்படுகின்றன.

சுயச்சார்பு, உற்பத்தி சார்ந்த வளர்ச்சி, பொதுத்துறை நிறுவனங்களை வலிமைப்படுத்துதல், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்பட்ட வகுப்பினருக்கு அரசியல், சமூக, பொருளாதார பாதுகாப்பிற்கான உத்தரவாதம் போன்றவைதான் உண்மையான அரசியலின், அடிப்படையான பிரச்சனைகள். தனிமனித போட்டியையும், நுகர்வு வேட்கையையும் வளர்த்தெடுப்பதன் மூலம், இத்தகைய பிரச்சனைகளில் இருந்து, இளைஞர்களின் கவனம் வேறு திசைக்குத் திருப்பப்படுகிறது. அதனால்தான் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான  போராட்டங்கள் குறைந்து கொண்டேயிருக்கிறது.

உலகம் முழுவதும், ஒரு வேதிவினையைப் போல் நிகழ்ந்துவரும் இத்தகைய அரசியல் அகற்ற நடவடிக்கை, இந்தியாவில் சற்று விரைவாகவே அரங்கேறி வருகிறது. சுருக்கமாக  சொல்லப்போனால், இன்றைய இளைஞர்களின் மூளையில் இருந்து, அரசியல் முற்றிலுமாக அகற்றப்பட்டு ஒரு நாடு கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றப்படுகிறது என்பதைத் தவிர, சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை

“படித்த இளைஞர்கள் அதிக உடல் உழைப்பில்லாத நாகரிகமான சூழ்நிலை இருக்க கூடிய, தன்னை பிறர் மதிக்க கூடிய இடத்தில்தான் பணிபுரியவிரும்புவார்கள். அரசியலில் அப்படி ஒரு நிலையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், அரசியல் என்பது கடின உழைப்பைக் கொண்டது. அதில் நுழையும் வழி நேர்வழியாகவும் இருக்கலாம். தவறான வழியாகவும் இருக்கலாம். ஆனால் அதற்கும் பல இடர்களைக் கடந்தாக வேண்டும். கீழ்த்தர விமர்சனங்களைக் கூட சகித்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். படித்தவர்களிடம் இந்த சகிப்புத்தன்மையை எதிர்பார்க்க முடியாது. எனவே, அதற்கெல்லாம் துணிந்தவர்கள் மட்டும்தான் அரசியலில் தலைதூக்க முடியும். ஒருவேளை அரசியல் என்பது பன்னாட்டு நிறுவன வேலை போலவோ, அலுவலக உத்தியோகம் போலவோ ஆக்கப்பட்டால் படித்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடும்.“ என்று படித்த மேதாவிகளாகத் தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்டு திரியும் ஒரு வட்டம் எல்லா ஊடகங்களிலும் இந்தக் கருத்தைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படியானால் அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் படிக்காதவர்களா….? தற்போது அரசியலில் உள்ள எல்லோரும் ஊதாரிகளா….? வேலை வெட்டி இல்லாதவர்களா…? நல்லவர்கள் இல்லையா….? யாரும் யாரையும் விமர்சிக்கக் கூடாது என்பதுதான் நமது கல்வி முறை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் பாடமா….?  இளைய தலைமுறையினருக்குள் மெல்லத் தலைதூக்கும் அரசியல் பற்றிய ஆர்வத்தை காயடிக்கும் நோக்கில் பரப்பப்படும் நச்சு வார்த்தைகள் இவை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. படித்த இளைஞர்கள் அரசியல் பக்கம் வந்து விட்டால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அல்லக்கை வேலை பார்க்க ஆளிருக்காது. அவர்களது கடையை இங்கிருந்து துடைத்தெடுத்துக் கொண்டு ஓட வேண்டும். அதனால்தான் படித்தவர்கள் அரசியலுக்கு  வரக்கூடாது என்பதை போதிப்பதற்காகவே ஒரு கூட்டத்திற்கு மதிப்பூதியம் தந்து வைத்திருக்கின்றன இந்நிறுவனங்கள்.

வருங்கால அரசியல் இளைஞர்களின் பங்கேற்பு இல்லை என்றால், மிகச் சிறந்த அரசியலாக இருந்தாலும், எதிர்காலத்தை இழந்து விடும். உலகில் இளைஞர்களிடம் அரசியல் பேசிய தலைவர்களின். அரசியல் உரைகள் உலகப் புகழ் பெற்றது,  லெனின், மா சே துங், சேகுவேரா, போன்ற தலைவர்கள் தங்கள் நாடுகளில் புரட்சிகர நடவடிக்கைகளின் போதும், புரட்சியின் வெற்றிக்குப் பிறகும் அதிகளவில் இளைஞர்களிடம் பேசினார்கள்.

அக்டோபர் 2, 1920ல் லெனின், கம்யூனிஸ்ட் இளைஞர் கழக ஊழியர்களிடம் உரை நிகழ்த்தும் போது   ‘‘புரட்சிக்கு முந்தைய முதலாளித்துவ சமூகம் உருவாக்கி வைத்த கண்டு பிடிப்புகளை, தொழில் நுட்பத்தை, நல்ல அம்சங்கள் எனப்படும் அனைத்தையும், இளைஞர்கள்  கற்றுத் தேர வேண்டும்“ என வலியுறுத்துகிறார்.

இளைஞர்களின் பங்களிப்பு அதிகார மாற்றத்துடன் நின்று விடக்கூடாது. இளைஞர்கள் சமூக ஆக்கத்திற்கான பணிகளில் முன்நிற்க முடியும் என்பதை அறிவியல் பூர்வமாக உணர்ந்திருந்த காரணத்தாலேதான் இன்றும் இத்தலைவர்கள்  தங்களின் புகழால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

”ஒரு நாடு வளர்ச்சி பெற இளைஞர்களிடம் முதலீடு செய்ய, அரசுகள் முன்வர வேண்டும்” என்பதே உலகளாவியக் கருத்து. இதன் இடிப்படையில்தான் இளைஞர் நலம், இளைஞர் மேம்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய துறைகள் நமது ஆட்சி அமைப்பில் உள்ளது. இளைஞர் நல மேம்பாட்டுத் துறையின் அமைச்சர்களாக நமது அரசுகள்  முதியவர்களையே நியமித்து நமது தேசத்தில் உள்ள முதியோர்களின் எண்ணிக்கையை உலகினுக்கு எடுத்தியம்பும் பணியை மிகச் சிறப்பாகச் செய்கின்றன.

ஆனால் உலகிலேயே மிக அதிகமான இளைஞர்களைக் கொண்டிருக்கும் நாடு இந்தியா என்பதும், . இங்கிருக்கும் அரசியல் இயக்கங்களோ, முதலாளித்துவ இளைஞர் இயக்கங்களோ, இளைஞர்களைத் தொலை நோக்குப் பார்வையுடன் அனுகுவதற்கு மாறாக இளைஞர்களின் உணர்ச்சி வேகத்தை மட்டும் பயன் படுத்துகின்றனர் என்பதும், உலகறிந்த உண்மை.

காஷ்மீரத்து போராட்டங்கள், வடகிழக்கு மாநிலங்களின் போராட்டங்கள், மாவோயிஸ்டுகள் போராட்டங்கள் ஆகிய அனைத்தும், இளமையின் வேகத்தைப் பயன் படுத்திக் கொள்ளும் சிந்தனையில் கருக் கொண்டதே. இளைய சக்தியை அரசாங்கம் முறையாக பயன்படுத்தாவிட்டால் அதை தவறாகப் பயன்படுத்த ஒரு கூட்டம் தயாராக இருப்பதும் நாமறிந்த செய்திதான்.

இன்றைய இந்திய சூழ்நிலையில், இளைஞர்கள் ஏன் அரசியலில் ஈடுபட வேண்டும்? என்ற பகத்சிங் எழுதிய கட்டுரை, சில விளக்கங்களை முன் வைக்கிறது. இன்றைய அரசியலில் புரட்சி புரட்சி என்று பேசுவோர்க்கும், , சமூக மாற்றம் அரசியலுக்குமான வித்தியாசத்தினை தெளிவுபடுத்துகிறது. ஊழல் குற்றச்சாட்டுகள் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. பணத்தை விதைத்து, நாற்காலிகளுடன், நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் செல்வது எளிது, என்ற அரசியல் வியாபாரம் கண்டு, அதிருப்தி கொள்வது நியாயமே. அதிருப்தி காரணமாக அரசியல் வனவாசம் கொள்ள முடியாது.

இளைஞர்களை வசீகரிக்கும் ஒட்டு மொத்த அரசியல் மையமாக எந்த தலைமையும் இல்லை என்பதும் அப்படிப்பட்ட ஒரு தலைமை காலத்தின் கட்டாயத் தேவை என்பதும், தன்னலம் கருதாத் தலைமை ஒன்று கருக்கொள்ள வேண்டும் என்பதும் வெளிப்படையான உண்மை.

இந்தியாவில் அகில இந்திய அளவில் மட்டுமல்ல பிராந்திய அளவிலும் கூட, ஒரு விதமான அரசியல் வெற்றிடமே எங்கும் வியாபித்திருப்பதைக் காணமுடிகிறது. ஊழலும், சுரண்டலும் இளைஞர்கள் மத்தியில் ஒருவிதமான அரசியல் விரக்தியை ஏற்படுத்தி இருப்பது உண்மைதான். ஆனாலும் ஊழலை ஒழிக்கும் முழக்கத்தையே அரசியலாகத் திரட்ட முடியாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அழுத்தமான தத்துவ அடிப்படைகள் இன்றி கட்டி எழுப்பப்படும் அரசியல் இயக்கங்கள், அர்த்தமற்ற நீர்க்குமிழிகளாக, காலப்போக்கில் கரைந்து போகும் நிகழ்வுகளை, வரலாறு நெடுகிலும் பார்க்க முடிகிறது. மக்கள் தங்களுக்கு எந்த கட்சியால் லாபம் என்று பார்க்கத் துவங்கிவிட்டனர். .தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் குறிப்பிட்ட ஒரு படிப்புப் படித்து, வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் அல்லது தங்கள் தொழிலைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதைப் போலவே  அரசியல்வாதிகளும் தங்கள் பிள்ளைகள் அவர்களுடைய குலத்தொழிலான அரசியலுக்கு வரவேண்டும்  என்று நினைக்கின்றனர். அப்படி நினைப்பது ஒன்றும் தவறில்லை என்றே படுகிறது.

இந்தியாவில் காலகாலமாய் வாரிசு அரசியலே நடந்து கொண்டிருக்கிறது. இதுமாநிலங்களிலும் நடக்கிறது. மக்களுக்கான பணியை யார் வேண்டுமானாலும் செய்ய முன் வரலாம். அப்படி வரும் இளைஞர்களாவது மாற்றுக்கருத்துடன் செயல்பட்டு, லஞ்சம் ஊழலற்ற அரசாங்கத்தை ஏற்படுத்தி, அடித்தட்டு மக்களுக்கு இலவசமல்லாத நிரந்தர நலப்பணிகளை செய்யும் நோக்கத்தோடு வர வேண்டும். அப்படிச் செய்வார்களேயானால் 2020-ல் இந்தியாவைப் பற்றின டாக்டர்.அப்துல் கலாமின் கனவுகள் அதற்கு  முன்னதாகவே கூட  நிறைவேறிவிடும்வாய்ப்புகள் உண்டு.

முதலில் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே அரசியல்,சமூகம், பொருளாதாரம் குறித்த நல்லப் பதிவை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்களும் கல்வியை வியாபாரமாகப் பார்க்கும் மனப்போக்கையும், நமக்கேன் வம்பு என்று ஒதுங்குவதையும் விடுத்து, தங்கள் பிள்ளைகளை சமூக அக்கறை உள்ள மனிதனாக, தலைச் சிறந்த அரசியல் வல்லுநராக  வளர்க்க வேண்டும். தேசப்பற்று என்பது காஷ்மீர் போரில் மரணமடைந்த வீரர்களுக்காக வருத்தப்படுவதும், நிதித் திரட்டித் தருவதும் மட்டுமல்ல; வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்களைப் பார்த்து அவர்களின் பசியையும், தேவைகளையும் போக்க என்ன வழி என்று யோசிப்பதும்தான்.

எந்த மனிதனிடத்தில் இந்த சிந்தனை பிறக்கிறதோ,அவன் தனக்காக அதிக செல்வம் தேடி அலைய மாட்டான்; அரசியலை நிச்சயம் ஒதுக்க மாட்டான்; ஊழல் போன்ற செயல்களை ஏற்க மாட்டான்.  நல்ல மனிதர்களின் பாதம் பட்டு நமது நாடாளுமன்றங்களும் சட்டமன்றங்களும் அலங்கரிக்கப்படும் நாளுக்காய் காத்திருப்போம். இந்த காத்திருப்பு அர்த்தமான காத்திருப்பாய் இருக்கும் என்றே நம்பிக்கை கொள்வோம்.

(பசுமைத் தாயகம் அக்டோபர்2012)

 

Advertisements