ஊரெங்கும் பீ வாசம்….

ஊராட்சித் தலைவருக்கு

தூய்மை கிராமம் விருது

            (அச்சேறா கவிதை)

சமீபத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் பேசிய பேச்சு பலத்த எதிர்ப்புகளைச் சம்பாதித்தது. மத்திய அமைச்சர்களின் பேச்சுக்கள் எல்லாமே எதிர்ப்புகளுக்கு உள்ளாகிக் கொண்டுதானிருக்கிறது.. அது வேறு விசயம். ஆனால் இந்த அமைச்சரின் பேச்சுக்கு இவ்வளவு எதிர்ப்பு கிளம்ப வேண்டியதன் அவசியம் என்ன…? கோவில்களை விட கழிப்பறைகள் முக்கியமானவை என்றும்….. புதிதாகத் திருமணமாகும் பெண்கள் புகுந்த வீட்டில் கழிப்பறைகள் இருக்கிறதா என்று தெரிந்த பிறகே திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும். என்றும் அவர் பேசியதில் என்ன குறை கண்டார்களோ தெரியவில்லை மனிதரை பிடிபிடி என்று பிடித்து விட்டார்கள்.  அவர் பேசியது தனிப்பட்ட கருத்து என்றும் அந்த கருத்துக்கும் அரசுக்கோ… அவர் சார்ந்த கட்சிக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அரசாங்கமும் கட்சியும் கையெடுத்துக் கும்பிட்டு அவரைக் காப்பாற்றினார்கள்.

இப்படித்தான் நம்ம ஊர் திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது ஒரு முறை சட்டப்பேரவையில் பேசும்போது, ‘ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறீர்கள். அதை வாங்கிச் சாப்பிட்டு விட்டு காலையில் இயற்கைக் கடனை கழிப்பதற்கு இரண்டு ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது!’ என்று குறிப்பிட்டார். நாத்தமடிக்கும் இந்த பேச்சுகளையெல்லாம் கேட்டு  இதை சிரித்து மறக்கக்கூடிய நகைச்சுவையாக எடுத்துக்கொள்வதா……? இல்லை. இது  யோசிக்க வேண்டிய யதார்த்தம்.

இரண்டு ரூபாய் கொடுப்பதுகூட பரவாயில்லை. ஆனால், அப்படிக் கொடுத்தாலும் பயன்படுத்தக் கூடியவையாக நம்முடைய கழிப்பறைகள் இருக்கின்றனவா….. நகராட்சிகளெல்லாம் வளர்ந்து மாநகராட்சிகளாகி விட்டன. நாலணா கழிப்பறைகள் எல்லாம் நாலு ரூபாயாய் மாறி நவீனமாக்கப்பட்டு விட்டது. அப்படியிருந்தும் நம் தேசத்தில் மூத்திரைக் கொச்சையும் பீ நாத்தமும் வீசாத நகரங்கள் உண்டா…. கிராமங்கள் உண்டா…..? ” அய்யா.. நம்ம ஊருக்கு பீயூர்ன்னு பேரு மாத்துங்கையா….. நாலு பக்கமும் கால் வைக்க முடியல…” என்று ஒருவர் தனது கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் சொன்னாராம்.  இவை வேடிக்கையாய் வடிந்த  வார்த்தைகளா…. வேதனையில் வெடித்த வார்த்தைகளா…..? மனிதன் கழிவை மனிதன் சுமந்து மல நாற்றமன்றி மற்றொரு நாற்றம் அறியா நாசிகளோடு ஒரு கூட்டம் வாழ்வது நியாயமா….? (மல நாற்றம் பிடித்தே  உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் உள்ள தேசத்தில்  மலம் குறித்தும்  விவாதிக்க வேண்டிதுள்ளதால், மூக்கைப் பொத்திக் கொண்டு என்னோடு பயணிக்குமாறு வேண்டுகிறேன்)

கிழக்கிந்தியக் கம்பெனிக்காரன் இந்தியாவில் நுழைந்த பிறகு நம்முடைய திறந்த வெளி மலங்கழிப்பகங்களைக் கண்டு மிரண்டு…. கழிப்பறைகள் உருவாக்க நினைத்து அதற்காக பெங்காலி திட்டம் என்று ஒரு திட்டத்தையும் தயாரித்து அதை நடைமுறைப்படுத்த பணமில்லாமல்  (மனமில்லாமல்) கைவிட்ட கதையும் உண்டு.

கழிப்பறை வசதி என்பது ஆரோக்கியத்தின் அடிப்படையாகும். இயற்கையின் அழைப்பிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. விழித்ததிலிருந்து படுக்கைக்குச் செல்லும் வரை, ஏன்? தூக்கத்திற்கு இடையிலும் கூட இயற்கை உபாதைகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். வீடு, அலுவலகம், பயணம் என்று எங்கே வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும்  கேட்காமல், கொடுக்கும் செல்போன் கம்பெனிக்காரனின் குறுஞ்செய்திகள் போல  இயற்கையின் அழைப்பு வரலாம்.  அதை  இப்போது முடியாது என்றோ, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திப் போட முடியாது. ஆனால் இதைப்பற்றிப் பேசுவதற்குக் கூட யோசிக்கிறோம். அது ஏதோ கூடாத…. கெட்ட செயல் போல எண்ணுகிறோம். இயற்கை உபாதைகள் ஏற்பட்டால், வெளிப்படையாகச் சொல்ல பலர் கூச்சப்படுகிறோம்.

வீதிக்கு வீதி வகை வகையான உணவகங்கள், கடைகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் கழிப்பறை மட்டும் நாம் தேடும் இடத்தில் அல்லது தேவைப்படும் இடத்தில் இருப்பதில்லை. வீட்டைவிட்டுப் புறப்படுவதற்கு முன்பே எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு புறப்பட வேண்டிய கட்டாயநிலை உள்ளது. பல நேரங்களில் அவசரத்துக்கு இடம் கிடைக்காமல் உரிய இடம் தேடி அலைந்து அல்லல்படுகிறோம்…. இது கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கை.

மதுரைக்கு அருகில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் குழந்தைகள் காலைக் கடன் முடிப்பதற்கு அவசரமாக தண்டவாளம் கடந்து செல்கையில்  ரயிலில் அடிபட்டுச் செத்துப் போன சோகச் செய்தியையும் படிக்கத்தானே செய்தோம்.

தமிழ் நாட்டில் மட்டுமல்ல.. இந்தியா முழுமைக்குமே இதுதான் நிலவரம். ‘கழிப்பறை என்பது அவ்வளவு முக்கியமா?’ என்று உங்களுக்குக் கேள்வி எழலாம். சரியான கழிப்பறை வசதி இல்லாததால், வெட்டவெளியில் மனிதர்கள் கழிக்கும் மலத்தாலும் மூத்திரத்தாலும் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. ‘உலகெங்கும் வயிற்றுப்போக்கால் உயிரிழக்கும் குழந்தைகளில் சுமார் 15 லட்சம் குழந்தைகள் இப்படி சுகாதாரமற்ற திறந்த வெளிக்கழிப்பிடங்களால் ஏற்படும் தொற்றுநோய்கள் காரணமாகவே உயிரிழக்கிறார்கள்!’ என்று யூனிசெப் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது. பெண்களுடைய கண்ணியத்தைக் காப்பதில் கழிப்பறைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. வெட்டவெளியை கழிப்பறையாகப் பயன்படுத்துவது பெண்களைப் பொறுத்த வரை எவ்வளவு கொடூரமானதாக இருக்கும். இருள் பிரியாத அதிகாலை நேரத்தையும், இருள் கவியும் மாலை நேரத்தையும் மட்டுமே அவர்கள் பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது.  இதனால் அவர்கள் தொற்றுநோய், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.  அண்மையில், உலக வங்கியின் முன்முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், ‘தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்துவதற்கு பள்ளிகளில் போதுமான கழிப்பறைகள் இல்லாதது ஒரு காரணம்’ என்று கூறப்பட்டுள்ளது.  உலக அளவில் 260 கோடி நபர்கள் (அதாவது உலக மக்கள் தொகையில் 40 விழுக்காட்டினர்) கழிவறை உள்ளிட்ட அடிப்படைவசதிகள் இல்லாமல் இருக்கிறார்கள். இதில், 98 கோடி பேர் சிறுவர், சிறுமியர்கள். இவர்கள் வயல்வெளிகளில்….ஆறு குளங்களின் கரைகளில்……கடற்கரை மணல்வெளிகளில்…தெரு ஓரங்களில்…..தங்கள் கழிவுகளை இறக்கி வைத்து அசிங்கப்படுத்தி  வருகிறார்கள். இதன் மூலம் பரவும் நோய்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை.

ஆண்டு தோறும் தண்ணீர் மற்றும் சுகாதாரக் குறைவு தொடர்பான நோய்கள் மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மரணம் அடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது. இதில் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிகம்.

உடல் ரீதியான வேறுபாட்டால் பெண்கள் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் நேரம் ஆண்களை விட அதிகம். ஆகவேதான் பெண்களுக்கும் ஆண்களுக்குமான கழிப்பிட வசதிகள் 2:1 என்றவிகிதத்தில் இருப்பது நல்லது என்று உலக அளவிலான IPC (International Plumbing Code) அறிவுறுத்தியுள்ளது. பெரும்பாலான மேலை நாடுகள் ஆண்களுக்கு ஒரு கழிப்பிடம் கட்டினால் அந்த இடத்தில் பெண்களுக்கு இரண்டு கழிப்பிடங்கள் கட்ட வேண்டும் என சட்டம் இயற்றி உள்ளன. (நம்ம ஊர்ல அது இல்லைங்க)

கழிப்பறை வசதியை நான்கு விதமாக இந்த அறிக்கை பிரித்துக் காட்டுகிறது. அதாவது வெட்டவெளியைக் கழிப்பறையாகப் பயன்படுத்துகிறவர்கள், சுகாதாரக்குறைவான கழிப்பிடங்களைப் பயன்படுத்துகிறவர்கள், பொதுக்கழிப்பிட வசதிகளைப் பயன்படுத்துகிறவர்கள், தண்ணீர் வசதி நன்றாக உள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்துகிறவர்கள் என்று அந்த அறிக்கை வகைப்படுத்தி இருக்கிறது.

2006-ம் ஆண்டு நிலவரப்படி ஆப்பிரிக்க நாடுகளில் 28 விழுக்காடு மக்கள் வெட்டவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் அது ஏழு விழுக்காடாக இருக்கிறது. மேற்காசிய நாடுகளில் அது ஐந்து விழுக்காடு மட்டுமே. ஆனால், தெற்காசிய நாடுகளில் உள்ள மக்களில் 48 விழுக்காடு பேர் திறந்தவெளியையே கழிப்பிடமாகப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. உலகில் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளுக்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதை குறிப்பிட்ட ஆண்டுக்குள் எட்டவேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. அந்த இலக்கை எட்டிக்கூடப் பார்க்காத நாடு  இந்தியா மட்டும்தான்.

உலக அளவில் சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லாத 260 கோடி மக்களில் 180 கோடி பேர் தெற்காசிய நாடுகளில் மட்டும் வசிக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரை 28 விழுக்காடு மக்கள் மட்டுமே நல்ல கழிப்பறை வசதியோடு வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் காங்கோ, உகாண்டா, தான்சானியா போன்றவை இந்தியாவைவிட மேம்பட்ட சுகாதார வசதியோடு இருக்கின்றன என்பது கூடுதல் தகவல்.

திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகிற மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. உலகில் 120 கோடி பேர் இப்படி திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 13 நாடுகளில் இந்தப் பழக்கம் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. சீனா, நைஜீரியா, பிரேசில், பங்களாதேஷ், நேப்பாள், சூடான், வியட்நாம் உள்ளிட்ட அந்த 13 நாடுகளில் முன்னிலை வகிப்பதும் இந்தியாதான். இங்கு 66 கோடி பேர் திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று யுனிசெப் அறிக்கை குறிப்பிடுகிறது. அதாவது உலகில் திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தும் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான். (சும்மா காத்தாட உட்கார்ந்து வெளிக்கு போறதுல நாமதானய்யா நம்பர் ஒண்ணு…)

கழிப்பிட வசதி என்பது வீட்டு வசதியோடு தொடர்பு கொண்டது என்பதை நாம் அறிவோம். குடியிருக்க வீடே இல்லாதவர்கள், எப்படி மேம்படுத்தப்பட்ட கழிப்பறை வசதியோடு இருக்க முடியும்? உலகிலேயே குடிசைகள் அதிகமாக இருக்கும் நம்முடைய நாட்டில் கழிப்பறை இல்லாதவர்கள் அதிகமாக இருப்பதில்… ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஒண்டுவதற்கே சிரமமாக இருக்கும் குடிசை வீடுகளில் கழிப்பறை கட்டுவது என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விசயம். 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டிலுள்ள வீடுகளில் 20 விழுக்காடு வீடுகளுக்கு மின்சாரமும், கழிப்பறை வசதியும் இல்லை என்று கண்டறியப்பட்டது. கிராமப் பகுதிகளில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.  27 விழுக்காடு வீடுகளில் மின் வசதியும், கழிப்பறை வசதியும் இல்லை. மின்சாரமும், கழிப்பறை வசதியும் உள்ள வீடுகள் வெறும் 33 விழுக்காடு மட்டுமே. சுமார் 65 விழுக்காடு வீடுகளில் கழிப்பறை வசதி இல்லையென்று சென்செஸ் அறிக்கை கூறுகிறது. மொத்தமுள்ள ஒரு கோடியே 41 லட்சத்து 73 ஆயிரம் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாத வீடுகள் சுமார் ஒரு கோடியாகும்.

கழிப்பறை பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி உலக கழிவறை அமைப்பு ( World Toilet Organisation – WTO). உருவாக்கப்பட்டது. சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் உலகம் முழுவதும் உள்ள கழிவறை தொடர்பான 15 அமைப்புகள் ஒன்று கூடி நவம்பர் 19 ஆம் தேதியை உலக கழிப்பறை தினம் என  (World Toilet Day, November 19 ) அறிவித்தன. (ச்ச்சீ….. இதுக்குக்கூடவா தினம்…???? என்று நீங்கள் முகம் சுளிப்பது தெரிகிறது. இது முகஞ்சுளிக்கும் விஷயமல்ல….) கழிப்பறைச் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தையும் அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதுதான் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆண்டு தோறும் உலக கழிவறை தின உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. 2007 ல் இந்தியாவில் புதுடெல்லியில் இம்மாநாடு நடந்தது. இதில், சுகாதாரத் துறை கல்வியாளர்கள், சுகாதார நிபுணர்கள், கழிவறை வடிமைப்பாளர்கள், சுற்றுச் சூழலாளர்கள் பங்கேற்றார்கள்.  ஒவ்வொரு கழிவறை அமைப்பும் தான் சார்ந்துள்ள நாடுகளில் தூய்மையான கழிவறைகளை உருவாக்க பாடுபட்டு வருகின்றன. பெண்கள், கைக்குழந்தை இருக்கும் பெண்கள், பார்வையற்றவர்கள் ஆகியோருக்கு அதிக வசதியுடன் கூடிய தூய்மையான கழிவறைகளை அமைக்க உதவி வருகிறது. இந்த அமைப்பில் இப்போது சுமார் 105 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

இந்த அமைப்பு 2005 ல் உலகின் முதல் உலக கழிவறை கல்லூரியை (World Toilet College) தொடங்கியது. இங்கு கழிவறை வடிமைப்பு, பராமரிப்பு, பள்ளிக்கூட சுகாதாரம், அவசரகால சுகாதாரம் போன்றவை குறித்து கற்றுத்தரப்படுகிறது.

பிந்தேஸ்வர் பாடக் என்பவர் ‘சுலப் இண்டர்நேஷனல்’ என்ற தன்னார்வ சேவை நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் முக்கிய நகரங்களில் சமுதாயக் கழிப்பறைகளை அமைத்துள்ளார். நாள்தோறும் சுமார் 1 கோடிக்கும் மேலான மக்கள் பயன்படுத்தும் வகையில் 5000க்கும் மேற்பட்ட கழிப்பறைகளை இவரது அமைப்பு நிர்வகித்து வருகிறது.

சக்கரங்கள் பொருத்திய நடமாடும் அல்லது நகரும் நவீன கழிப்பறைகள் மேலை நாடுகளில் புழக்கத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. எங்கெல்லாம் தற்காலிகமாக இந்த வசதி தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் இத்தகைய கழிப்பறைகளைப் பயன்படுத்தலாம். பத்தாண்டு உத்திரவாதத்துடன் பல நிறுவனங்கள் இத்தகைய கழிப்பறைகளை விற்பனை செய்கின்றன.

சென்ற ஆண்டு (2011) மே மாதம் இந்தியாவிலேயே முதன் முதலாக நாணயம் போட்டதும் இயங்கும் ‘நவீன இயந்திரக் கழிப்பறை’ திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பறையை உபயோகிப்பவர்கள் அதற்கான நாணயத்தை நுழைவாயிலில் உள்ள இயந்திர துவாரத்தில் போட்டதும் கதவு திறக்கும், மின் விளக்கு எரியத் தொடங்கும். அதன் பின்பு உள்ளே சென்று கழிப்பறையை பயன்படுத்திவிட்டு கதவை திறந்து வெளியே வந்தவுடன் தானாகவே தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும்.

சுகாதாரக் கழிப்பிடத் திட்டம் குறித்து மக்கள் மத்தியில் குறிப்பாக கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் மூலம் சுகாதாரமான வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கவும் நம்முடைய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

2000மாவது ஆண்டு முதல் ‘முழு சுகாதார இயக்கம்’ (Total Sanitation Campaign) செயல்பட்டு வருகின்றது. நகர்புற, கிராமப்புற பாகுபாடின்றி அனைவருக்கும் இத்திட்டத்தின் பயன் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. கழிவறை அமைத்தல், திட, திரவக்கழிவு மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, பள்ளிச் சுகாதாரக் கல்வி போன்ற செயல்களை உள்ளடக்கியது இந்த இயக்கம்.

இந்த திட்டத்தின் கீழ் அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தருவதில் மத்திய மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து அந்தந்தப் பகுதி மக்களின் ஒத்துழைப்போடு முழு சுகாதார இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றன.

கழிப்பறை வசதி என்பது வீட்டு வசதியோடு தொடர்புடையது. மலம், சிறுநீர் கழிக்க, அவற்றை அகற்றத் தேவையான தண்ணீர் வசதி போன்றவற்றை உள்ளடக்கியதே கழிப்பறை வசதி எனப்படும். சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லாது போனால் தனிமனித ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். ஆரோக்கியமற்ற குடிமக்களால் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்.  சுகாதாரக் குறைவால் அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் செலவாகிறது. அந்தப் பணத்தை கழிப்பறைகள் கட்டுவது போன்ற ஆக்கபூர்வமான பணிகளில் செலவழித்தால் நிரந்தர தீர்வு ஏற்படும் என்பது சுகாதாரத்துறை வல்லுநர்களின் கருத்தாகும். சுகாதாரத்திற்காய் செலவிடப்படும் ஒரு ரூபாய் என்பது  வளர்ச்சிக்கான ஐந்து ரூபாய்க்குச் சமம்.

திறந்தவெளியில் மலம் கழிப்பதில்   சுதந்திரமிருப்பதாக பலர் கருதுகின்றனர். ‘வந்தால் போகலாம்…. போனால் வரலாம்…….. என்றில்லாமல் கழிவறையைக் கட்டிக்கொண்டு அதைக் கழுவிக் கொண்டு என்று சலித்துக் கொள்பவர்களும் உண்டு. இந்த எண்ணம் அண்மைக் காலமாக மாறி வருகிறது. வீட்டோடு இணைந்த கழிப்பறைகளைக் கட்டிக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.(சிலர் வாஸ்து பார்த்து கூட கட்டுகிறார்கள் என்பது கூடுதல் தகவல்) இதற்கெல்லாம்  காரணம், திறந்த வெளியில் மலம் கழிப்பது தவறு என்று விழிப்புணர்வு அல்ல….. ‘அவசரத்துக்கு’ ஒதுங்கக் கிடைத்த மறைவிடங்கள் இன்று கிராமங்களில் கூட காணாமல் போய்விட்டது. இயற்கை உபாதைகளை வெளியேற்றவிரும்பும் ‘அந்த‘க் கணத்தில் கழிப்பறை வசதி கிடைப்பது என்பது ஒரு வரப்பிரசாதம். அதனை ஒவ்வொரும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

சுகாதாரம் என்பது மக்கள் வாழ்வின் அடிப்படை உரிமை என்று உலக அளவில் குரல்கள் வலுத்து வருகின்றன. 2025ம் ஆண்டுக்குள் கழிப்பறை பிரச்சனைக்கு தீர்வு காண ஐ.நா. தீர்மானித்துள்ளது. ’2015ல் அனைவருக்கும் கழிப்பறை வசதி’ என்ற இலக்கை அடைவதற்கான செயல்பாடுகளுக்கு உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 11வது உலக கழிப்பறை உச்சி மாநாடு  இந்தாண்டு நவம்பர் 22 முதல் 25 வரை சீனாவில் நடைபெற்றுள்ளது.

அரசு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்தாலும் அதை பயன்படுத்துகிற, பராமரிக்கிற பொறுப்பு பொதுமக்களைச் சார்ந்ததுதான். அரசாங்கம் ஏற்படுத்தித் தருகிற பொதுச் சுகாதார வளாகங்களை மக்கள் எவ்வாறு  பராமரிக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தண்ணீர் வசதி இல்லாமல் சுகாதார வளாகங்களை உருவாக்குவதால் தான் இப்படியான சிக்கல் எழுகிறது என்று சொல்லப்பட்டாலும் அது மட்டுமே காரணமல்ல. மக்களிடையே போதிய விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் இல்லாததும் கூட காரணம்.

நகரங்களை திட்டமிடுபவர்களும், வீடு கட்டுபவர்களும் கழிப்பறைக்கு இடம் ஒதுக்குவதை, பணம் செலவிடுவதை ஒரு வீண் வேலையாக, வீண் செலவாகக் கருதாமல் அதனை ஒரு பயனுள்ள மூலதனமாகக் கருத வேண்டும். ‘ஒரு தேசத்தின் வளர்ச்சியை அதன் கழிப்பறை வசதிகள் எளிதாகக் காட்டி விடும்’ என்கிறார்கள் சர்வதேச சுகாதார நிபுணர்கள். அரிசி இலவசமாகக் கிடைக்கும் சமூகச் சூழலில் சிறுநீர் கழிக்க இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் என்பது மிகப் பெரிய சமூக முரண்பாடு. கழிப்பறை வசதிகளை மேம்படுத்தாத சமூகம், அடிப்படைச் சுகாதாரக் கேடுகளில் சிக்கி ஆரோக்கியமற்ற தலைமுறையைத்தான் உருவாக்கும்.

கழிப்பறை வசதியை மேம்படுத்தி, அத்துடன் கழிப்பறையை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்  இன்னும் தன் முனைப்போடு செயல்பட வேண்டும்.

சுத்தம் சோறு போடும்’ என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. அதன் பொருள், மனிதர்களுக்கு அகச்சுத்தம், புறச்சுத்தம் இரண்டுமே அவசியம். அப்போதுதான் ஆரோக்கியமான வாழ்வு சாத்தியமாகும். ‘நாம் சுத்தமாக இருக்க நினைத்தாலும், நம்முடைய சூழ்நிலை அதற்கு இடம் கொடுப்பதில்லையே…’ என்று நம்மில் பலரும் வருந்தியிருப்போம். ஏனென்றால், மிகவும் அடிப்படையான சுகாதார வசதிகளைப் பொறுத்த வரை நாம் இன்னமும் மிக மிகப் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறோம்.

நகரங்களுக்குப் போனால் திரும்பிய பக்கமெல்லாம் ஹோட்டல்கள். ஆனால், அவசர ஆத்திரத்துக்கு ஒரு கழிப்பறை வேண்டுமென்றால், நீங்கள் தெருத்தெருவாகத் தேடி அலைய வேண்டும் அல்லது சாப்பிடுவது போல் பாவனை செய்து ஏதாவது ஒரு ஹோட்டலுக்குள் நுழைய வேண்டும். அதிலும், பெரிய ஹோட்டல்களாக இருந்தால் தப்பித்தோம். இல்லாவிட்டால், கழிப்பறையைப் பார்த்துவிட்டு, வாந்தி எடுக்காமல் திரும்புவது கஷ்டம். இதுதான் நம்முடைய நகரங்களின் நிலவரம்.

நான்காண்டுகளுக்கு முன் பல ஆஸ்கார் பரிசுகளை அள்ளிக் குவித்த ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ திரைப்படத்தில் ஒரு காட்சிவரும். அந்தப் படத்தின் நாயகனான சிறுவன் திறந்தவெளி கழிப்பறையில் மலம் கழித்து கொண்டிருப்பான். அப்போது அமிதாப்பச்சன் அங்கு வந்திருப்பதாக யாரோ சொல்லிக்கொண்டு போவார்கள். அவன் அந்த மலக்குழியில் குதித்துக் கரையேறி அப்படியே அமிதாப்பைப் பார்க்க ஓடுவான். படம் பார்ப்பவர்களை குமட்டச் செய்த காட்சி அது. இந்தியாவின் தரத்தைத் தாழ்த்தும் காட்சி என்ற விமர்சனங்களும் கிளம்பின. ஆனால், நம்முடைய தேசத்தில் பல இடங்களைப் போய் பார்த்தால்… அத்தகைய காட்சிகள் அன்றாட நிகழ்வுகளாக இருப்பதை உணரலாம். இந்த நிலையை மாற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமே உள்ளது.மனிதன் மலத்தை சகமனிதன் அள்ளும் நிலையும், ஒரு மனிதன் மலத்தை மற்றொருவன் பார்த்து முகம் சுளிப்பதும் ஆரோக்கியமான செயல் அல்ல என்பதை நம் பிள்ளைகளுக்காவது சொல்லித் தருவோம்.

(பசுமைத்தாயகம் டிசம்பர் 2012)

Advertisements