இயற்கை.

கவிஞனை உருவாக்கும்

மாபெரும் கவிஞன்….

உண்மையின் நண்பன்…

இயற்கை மனிதனுக்கு வாழ்வளிக்கிறது. வாழ்க்கையினைக் கற்றுக்கொடுக்கிறது. இயற்கையில்லையென்றால் மண்ணில் ஈரமில்லை…. விளைச்சலில்லை… மகசூலில்லை….  மனித வாழ்க்கை இல்லை. ஏன் உயிரினங்களில்லை உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழும் வாய்ப்பை வழங்கி வருவது இயற்கை.  இதனை மிகத் தெளிவாய் உணர்ந்ததால்தான் பழங்காலத்து  மக்கள் தங்களின் வாழ்வை இயற்கையோடு இணைத்தே வாழ்ந்தார்கள். அவர்களின் வாழ்வு இயற்கையோடு இரண்டறக் கலந்திருந்தது. இயற்கையை அவர்கள் நேசித்தார்கள். இயற்கையைக்  காத்தார்கள். அப்போதெல்லாம் மாதம் மும்மாரி மழை பொழிந்தது  அதற்கு சாட்சிகளாய் பழந்தமிழ் நூல்கள் இன்றும் உள்ளன.  இதை அவ்வக்காலத்து எழுந்த இலக்கியங்கள் நமக்கு புலப்படுத்துகின்றன. வைகையில் ஓடிவந்த வெள்ளத்தைப் பரிபாடலும், காவேரியின் எழில் அழகை பட்டினப்பாலையும் நமக்கு இன்றும் உணர்த்தும்  சாட்சிகளால் உள்ளன. மனிதர்களின் வாழ்வில் இயற்கைப் பற்றுக் குறையும்போது  இலக்கியங்களில் இயற்கைப் புனைவுகளும் குறைந்து விடுகின்றன. இதை சங்க இலக்கியங்களிலும் அவற்றிற்குப் பின்வந்த இலக்கியங்களிலும்  இயற்கை புனைவு நிலையில்  உள்ள  வேறுபாடு நமக்கு உணர்த்துகின்றன.

இலக்கியம் எவ்வகையாக இருப்பினும் இயற்கைக்  கற்பனை இலக்கியத்திற்கு இன்றியமையாதது. கற்பனை குறைந்தால்  இலக்கியத் தரம் குறைந்துவிடும்.  அதலால்தான் பிற்காலத் தமிழ்ப் புலவர்கள் கதைப் போக்குக்களோடு தொடர்புபடுத்தி இயற்கைப் புனைவை  நிறைவு செய்தனர்.  இவ்வளர்ச்சியைக் கம்பரின் காப்பியத்தில் முழுமை காணலாம்.

இயற்கை என்ற சொல் பழந்தமிழில் “இயல்பு” என்ற பொருளில் வழங்கியது. மொழி வரலாற்றில் இச்சொல் பல்வேறு பொருளுடையதாக வளர்ந்தது. தமிழ்ப் பேரகராதி தரும் பல பொருள்களில் “செயற்கைக்கு மாறனது” என்ற பொருளும் உண்டு.  செயற்கைக்கு மாறானதாக இயற்கையைப் பல அறிஞர்கள் விளக்கியுள்ளனர். இக்காரணம் பற்றியே இயற்கையையும் கலையையும் முரண்படுத்துவார்கள்.  இயற்கை இறைவன் படைப்பு கலை மனிதன் படைப்பு. மனிதன் உருவாக்காத, உருவாக்க இயலாத அனைத்தும் இயற்கையே. என்று சொல்லும் கூட்டமும் உண்டு. இயற்கை இறைவனின் படைப்பு என்றால் அந்த இயற்கையை அழிக்கும் கூட்டமும் இறைவனை வழிபடுகிறவர்களாக இருக்கிறார்களே….. தனது படைப்பை அழிப்பவர்களை   இறைவன் ஆசிர்வதிப்பது ஏன்? என்று  எதிர்வாதம் செய்பவர்களும் உண்டு.

இயற்கையே செயற்கைக்கும் அடிப்படை ஆகின்றது. இயற்கை இல்லாவிட்டால் செயற்கை இல்லை.  செயற்கை இன்றியும் இயற்கை நிகழும். நடுவாரும் நீர்ப் பாய்ச்சுவாரும் இன்றி மரங்கள் பல வளர்ந்து தொகுதியாகக் கனியளித்து நிற்கும்போது அதை இயற்கைச் சோலை என்கிறோம்.  அதை ஒத்த அல்லது விஞ்சிய சோலையொன்றை மனிதன் உருவாக்கும்போது அது செயற்கைச் சோலை ஆகின்றது. மனிதனின் செயல் திறனால் சோலை பெற்ற  அமைப்பே செயற்கை. சோலையை ஆக்கிய மரங்களும் கனிகளும் இயற்கையே. செயற்கை அமைப்பில் இயற்கை பொலிகின்றது. ஆயின் இயற்கையில் செயற்கை அமைவதில்லை.

இவ்வியற்கை நிலமும் நீரும் நெருப்பும் காற்றும் ஆகாயமும் கலந்த மயக்கம். அறிஞர் பிளேட்டோ நிலமும் நீரும் நெருப்பும் காற்றும் என்ற நான்கின் சேர்க்கையில் இயற்கையைக் கண்டார் ஐம்பூதங்களுடன் பொருள் (matter) என்ற கூறையும் இணைந்து இயற்கையை விளக்குவார் வைட்பீல்டு.  அவர் இயற்கையை நீளம் அகலம் உயரம் காலம் என்ற நான்கனவுடையதாக விளக்கினார்

அவரது விளக்கத்தின்படி மனிதனும் இயற்கை. மனித இயல்பையும் அவனைச் சூழ்ந்த புற உலகையும் இயற்கை என்ற சொல்லால் குறிப்பிடலாம்.  இவ்விரண்டிற்கும் உள்ள உறவையும் இவற்றைச் செயல்படுத்தும் ஆற்றலையும் இயற்கையின் இன்னொரு நிலையாகக் காண்பதும் உண்டு.  இக்கருத்துகளை மறுத்து நம் காட்சி அறிவுக்குத் தென்படுவதே இயற்கை என வரையறுத்தார் வைட்பீல்டு என்னும் மேனட்டறிஞர்.

“மனிதன் அல்லாத பிற அனைத்தும் இயற்கை”  மலையும், மடுவும் இயற்கை மின்னும். மழையும் இயற்கை, முகிலும் இடியும் இயற்கை, காற்றும் கடலும் இயற்கை, புள்ளும் விலங்கும் இயற்கை, மரமும் செடியும் இயற்கை. இவைபோல இறைவன் படைத்த பலவும் இயற்கை.

இயற்கையின் நகல் கலை. அது இயற்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. இயற்கையால் கலையும் கலையால் இயற்கையும் செவ்விப் பெறுகின்றன. இயற்கை கட்டுப்பட்டதோ சலனமற்றதோ அல்ல:  இயற்கை தனி ஆற்றல் உடையது. காலச் சுழற்சியில் அதன் ஆற்றல் பொலிகிறது. வளமும் வளர்ச்சியும் ஆற்றலும் மிக்க இவ்வியற்கையின் உயிர்த் துடிப்பால் அதன் வடிவமும் வண்ணமும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இதனால் இவ்வியற்கையை, வாழ்க்கையைப் போன்று வடிவற்றது என்றும் கூறுவார்கள்      காலை முதல் இரவு வரை, இரவு முதல் விடியல் வரை அலரும் மலர்களும், உதிரும் இலைகளும், ஒளிரும் ஆதவனும் பொழியும் நிலவும் எனக் காட்சி மாறுகிறது. மணிக்கு ஆயிரம் கவினுறு காட்சிகளை வழங்கும் இயற்கைக் கன்னி என்றும் முதிர்வதில்லை.

எழில் மிக்க இயற்கையைக் காரியம் என்பர். இக்காரியத்தை ஆக்கிய காரணன் இறைவனே. இயற்கை வாயிலாகவே ஆதிமனிதன் இறைவனைக் கண்டான். இயற்கை வழிபாடு இறை வழிபாட்டின் தோற்றுவாய் என்பது அறிஞர்கள் கருத்து. இயற்கையை இறைவனின் வெளியீடாகப் பல நிலைகளில் காட்டியுள்ளனர்.

இயற்கை இறைவனின் கலை என்பார் சர். தாமஸ் பிரௌன். நாள் தோறும் மனிதன் ஆற்ற வேண்டிய கடமைகளைக் கற்பிக்கும் நூலாக அமைகின்றது இயற்கை. இறைவனின் ஆற்றலை மனிதனின் சிற்றறிவுக்கு எட்டாத அவன் பேரறிவு மாட்சியினைப் பறைசாற்றுவதும் இயற்கையே.  இறைவனின் படைப்பாம் இயற்கையின் முன் மனிதனின் செயற்கை ஆக்கங்கள் செயலிழந்து விடும்.  கதிரவனின் பேரொளியிலும், மின்மினியின் சிறு ஒளியிலும் நம் எண்ணத்திற்கு எட்டாத இறைவனின் கைத்திறம் ஒளிரும்.

எனவே தான் சார்லஸ் கிங்ஸ்லி இயற்கையை இறைவனின் முகமாகக் கண்டார்.  அதை இறைவனின் உருவாகக் கண்டவர் பாஸ்கல். அவர் இயற்கையில் பொலியும் நிறைவுகள் அது இறைவனின் உரு என்பதை நினைவுபடுத்துமாயின் அதன் குறைகள் அது அவனல்லன் அவன் உருவே ஆகும் என்பதை உறுதிபடுத்தும் எனக் கூறுகின்றார்

இறைவனின் ஆடையாக இயற்கையைக் கண்ட நிலையை கெதெயிடம் காண்கிறோம். அறிஞனுக்கு உள்ளமைந்த பொருளைப் புலப்படுத்தும் மென்திரை ஆகவும் அறிவிலிக்கு அப்பொருளையே மறைக்கும் போர்வையாகவும் இயற்கை அமையுமென்றார் கார்லெல்.

மேலும் இயற்கை இறைவனைப் பிரதிபலிக்கும். ஆடிக் கதிரவனின் ஒளிக் கற்றைகளால் நீலக்கடல் பொன்னாய்ப் பொலிவதைப் போல இறைவனைப் பிரதிபலிப்பதால் இயற்கை அழகு பெறுகின்றது என்றார், யங்..  பேரொளியைச் சூழ்ந்த மென்திறை போன்றது இயற்கை.  இறைவனின் பேரொளி இயற்கையின் மெல்லிழைகளின் ஊடே பரக்கின்றது.  இஸ்ரவேலை ஆண்டு, இறைவனை இன் கீதங்களால் பாடிய தாவீது அரசனது இயற்கை இறைவனின் மாட்சியை வெளிப்படுத்துவதைக்கண்டார்

இவ்வியற்கை மனிதனோடு தொடர்புடையது மனிதனைவிட மிக்க ஆற்றல் வாய்ந்தது. இயற்கையோடு  மனிதன் கூட்டுறவாக இருந்தால் அன்றி அவன் சிறக்க இயலாது. இயற்கை ஒரு பெரிய குறியீடு. அதன் ஒவ்வொரு பொருட்கூறும் ஆய்வுக்குரிய ஒரு உண்மையை மறைத்து வைத்துள்ளது என்று சாப்பின் கருதுவார்.

இயற்கை ஒரு சிறந்த போதகன்.  அதன் ஒவ்வொரு சொற்பொழிவும் கருதும் சிறப்புடையது. போதகனாக மட்டும் அன்றி ஆசிரியனாக அதனைக் கண்டவர் ஸ்ட்ரீட்(street).  இயற்கை மனிதனை வழிப்படுத்தும் நூலாகக் கண்டார் ப்ளும்பீல்டு. ஆய்வாளனுக்கு இயற்கை தன் செல்வங்களை வாரி வழங்குகின்றது. அவன் காட்சியைத் தெளிவுறுத்தி மனத்திற்கு ஒளிகாட்டி உள்ளத்தை தூய்மைப் படுத்துகின்றது. இயற்கையைப் பின்பற்றுபவன் ஒரு போதும் தன் வழியில் நின்று தவறான்.

இக்கருத்தைப் பற்றியே அறிவு எதைக் கூறுகிறதோ அதை இயற்கையும் கூறும் என்றார் ஜீவனல். அறிவு உடையவனையும் தூயவனையும் இயற்கை என்றும் கைவிடுவதில்லை. அன்பையும், அழகையும் உணரத்தக்கதாக அது அவன் உள்ளத்தை ஆக்குகின்றது. சிற்சில வேளைகளில் இயற்கை ஆற்றல் குன்றிக் காணப்படலாம். ஆனால் ஒரு நாளும் அது முற்றிலும் அழிவதுமில்லை: அணைவதுமில்லை. இயற்கையின் செல்வம் அளவிட இயலாதது. இயற்கை தன் மேல்மட்டத்தை மட்டுமே நம் முன் படைக்கிறது. ஆனால் அது அளவிட முடியாத ஆழமுடையது.

எனவேதான் இயற்கையைக் கற்பவன் என்றும் அதில் புதுமையைக் காண்கின்றான். மனிதனின் அனைத்து உணர்வுகளையும் தோற்றுவிப்பது இயற்கையே. இயற்கையின் ஒவ்வொரு காட்சியும் மனிதனின் ஐயங்களையும், கவலைகளையும் போக்கி, அவன் உள்ளத்திற்கு  அலையா அமைதி அளிக்கின்றது என்பர் ஜோனத்தான் எட்வர்ட். அது அவனை அணைக்கும்  தாயாகவும் தேற்றும் துணையாகவும் அமையும்.

இவ்வாறு இயற்கையில் அளவிட இயலாப் பேராற்றலையும் ஆதரவு அளிக்கும் அமைதியையும் கண்டான் மனிதன். அது அவனைக் கவர்ந்தது: இன்பம் அளித்தது: மகிழ்வூட்டியது: அவன் உணர்வைத் தூண்டிக் கற்பனையை ஆக்கிரமித்தது. இயற்கை தன் எழிலால் மட்டுமன்று அது இயற்கை என்பதாலே மனிதனை இயற்கையிலேயே ஆட்கொண்டது.

இத்தகைய இயற்கையோடு ஒத்துணர்வு பெறுவதே ஒரு சிறந்த மனிதனின் மதம் எனத் தத்துவம் பேசுவார் கெட்ஜ் எனும் மேனாட்டு அறிஞர். உண்மையின் நண்பன் இயற்கை. இயற்கை வீணையின் நரம்புகளில் நின்று எழும் ஒவ்வொரு ஒலியும் மனிதனது உள்ளத்தில்….. நரம்புகளில் நின்று எழும் இன்னொலியின் எதிரொலியாக அமைவதை நோவாலிஸ் கண்டார்.

கிரேக்க லத்தீன் இலக்கியங்களில் இயற்கை மனிதனின் வாழ்க்கை நாடக அரங்காகத் தீட்டப்பட்டுள்ளது. அரங்காக மட்டுமின்றி அந்நாடகத்தைக் காணும் அவையாகவும் காண்பதுண்டு.

கவிஞனை உருவாக்கும் மாபெரும் கவிஞன் இயற்கை. கவிஞர்கள் இயற்கையைப் பல கோணங்களில் கண்டனர். தங்கள் உணர்வுக்கும், விருப்புக்கும், அனுபவத்திற்கும் ஏற்ப இயற்கையை விளக்கினர். ஒரு புலவனும் இயற்கையில் கொடுமையைக் காணவில்லை.

கால்ரிட்ஜ் எனும் புலவர் இயற்கையையும் மனிதனையும் ஒன்றாக கண்டார். நாமே இயற்கை: நம் காட்சிக்குத் தென்படும் இந்த உலகு நம் எண்ணத்தின் உருவமே என்பது அவர் தத்துவம். ஆங்கிலப் புலவர் வேட்ஸ்வொர்த் இயற்கையை உயிருள்ளதாகக் கண்டார்.  மனிதனோடு எண்ணங்களைப் பகிர்ந்து அவன் உள்ளத்திற்கு மகிழ்வும் அறிவும் ஊட்டும் ஆற்றல் மிக்கது இயற்கை.  இயற்கையின் ஒவ்வொரு பொருளும், குன்றும்…… மரமும்………… மழை தூவும் மாலை………………ஒளிபூத்த விண்மீன்கள் என அனைத்தும் அவருக்கு உயிர்த் துடிப்புடன் விளங்கிற்று. அதற்கு உள்ளுணர்வும் ஆத்மாவும் உண்டு. எனவே அது உணர்ந்தது. சிந்தித்தது. அன்பு செலுத்தியது.: அதற்குரிய வழியில் மகிழ்ந்தது. ஒரு ஆவி இன்னோர் ஆவியுடன் தொடர்பு கொள்வது போன்று நாமும் இயற்கையுடன் தொடர்பு கொள்ளலாம். அவள் தருபவள். நாம் பெறுநர்;. ஆயின் அவையனைத்தையும் இணைத்து ஒற்றுழை படுத்துவது ஒரு ஆன்மா என்பது அவர் கருத்து.

ஷெல்லி இயற்கையில் தத்துவத்தைக் காணவில்லை அவர் அகிலாண்டமும் உயிருடையது என்பதை ஏற்றுக்கொண்டார். டென்னிசன் இயற்கையிடம் அன்பு கூரவில்லை அவர் இயற்கை உயிர்த்துடிப்பு உடையது என்று கொள்ளவில்லை.  உண்மையான உலகத்தின் ஒரு பொய்க் காட்சியே இயற்கை என்பது அவர் கொள்கை.

இயற்கையைப் பெண்ணாகப் பெரும்பான்மையான புலவர்கள் உருவகித்துள்ளனர். அவர்கள் இயற்கையைச் சுவைத்தனர். ஆராயவில்லை என்பர் ஆண்ட்யங். மனிதனால் மனிதனுக்கு அளிக்க இயலாத விடுதலையை இயற்கையில் பெற்றார் பைரன். துன்பப்பட்ட உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்கும் இயற்கையின் அணை கரங்களில் அர்னல்ட் அடைக்கலம் புகுந்தார்.

இலக்கியத் திறனாய்வு போன்ற நூற்களில் இயற்கை எனும் சொல் இயற்கைக் காட்சிகளைக் குறிக்கும். வானளாவிய மலைகளையும் மலைவீழ் அருவியையும் அருவி புகுந்து வரும் காடுகளையும் வளன் தந்தும், அதன் கண்கவர் எழிலையும் இவை காட்டுவதாலேயே இந்நிலை ஏற்பட்டிருக்க வேண்டும்.

காலற்சுழற்சியில் மனிதன் தனது கண்டுபிடிப்புகளால் இயற்கையை மாசு படுத்தினான். இயற்கை வளங்கள் உள்ள இடங்களையெல்லாம் தனது ஆசாபாசங்களுக்காய் அழித்தான். தனது மிதமிஞ்சிய செல்வ வளங்களைப் பதுக்கிவைக்கும் இடமாய் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளை மாற்றினான்.

இந்தியாவில் உயரமான மலைகளில் எல்லாம் ஆங்கிலேயர்கள் தங்களின் வணிக உற்பத்திக்காக தேயிலைக்காடுகளையும், காபி தோட்டங்களையும் உருவாக்கினார்கள். வானத்திற்கும் பூமிக்கும்  தட்பவெப்பத் தொடர்பாளர்களாய் இருந்த மலைகளை தங்களின் கோடை வாழிடங்களாய் மாற்றியவர்கள் ஆங்கிலேயர்கள்தான். இவர்கள் காலத்தில் உலெகெங்குமுள்ள மலைச் சிகரங்கள்  கோடை வாழிடங்களாய் வணிக நோக்கில் வடிவமைக்கப்பட்டு அதை சுற்றுலா தளங்களாக்கினார்கள்.

மண்ணும் இமய மலையெங்கள் மலை என்றான் பாரதி… கடந்த இருநூறாண்டுகளில் இமய மலையின் இயல்புமாறி அது தனது தட்பவெப்ப சம நிலையை இழந்து கொண்டிருக்கிறது என்ற கருத்தை சுற்றுச்சுழலியலாளர்கள் முன் வைக்கிறார்கள். இது உண்மை.

இயங்கையின் சீற்றங்களைத் தாங்கி தனது அடிவாரத்தில் வாழும் மக்களை மலைகள் காத்து நின்றன. மலைகளையெல்லாம் வெறும் கணிமக் குன்றுகளாய் கருதி, அவைகளை உடைத்தெடுப்பதற்காகவே ஒரு துறையை அரசாங்கம் உருவாக்கிய கொடுமை நமது காலத்தில்தான் நடந்தது.

காலச்சூழலில் இயற்கையின் மாற்றங்களாலும் சீற்றங்களாலும் மனித இனம்  அழிந்த கதையும் நடந்து கொண்டிருக்கிறது. மனிதன் எப்போது இயற்கையோடு இயைந்த வாழ்வுக்குத் தன்னைத் தயார்படுத்துகிறானோ அப்போது முதல் இயற்கையால் மனிதனுக்கு ஏற்படும் துன்பங்களும் குறையும்.

பூமியின் முகமெங்கும் பசுமை பூக்கச் செய்து புவியை பசுமையின் தாயகமாக்கும் ப(அ)ணியில்….. ஒவ்வொரு மனிதனும் இணைய வேண்டும். எவனொருவன் நாளைய சமூகத்திற்கு நல்ல சூழலை உருவாக்கிக் கொடுக்கிறானோ…. அவனே எதிர்காலத்திற்கான தலைசிறந்த அடையாளம்.            (பசுமைத்தாயகம் ஏப்ரல்2013)

Advertisements