You are currently browsing the category archive for the ‘கல்வி’ category.

கற்றல் கற்பித்தல்

-அப்பச்சி

“சார்”
ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்.
அனுப்பினேன்.
“சார்”
உடனே மற்றொருவன்
அதட்டினேன்.
நொடிகள் நகர
உள்ளேயே ஈரம்
வகுப்பு முழுவதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்.
– பழ. புகழேந்தி
(“கரும்பலகையில் எழுதாதவை”)

எனது நண்பரின் மகளை முதுகலை படிப்பிற்காக ஒரு பிரபலமான கல்லூரியில் சேர்த்து விட்டார்கள்.  இளங்கலை பட்டப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவள் அவள். முதுகலை பயிலுவதற்காக சேர்த்து விடப்பட்ட கல்லூரியிலிருந்து தலைதெரிக்க ஓடி வந்து விட்டாள். நண்பர் குடும்பத்தில் பிடிபிடியென்று அந்த இளம் பெண்ணைப்  திட்டித் தீர்த்து விட்டு  “படிப்பும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் கழுதைக்கு காலாகாலத்துல கலியாணம் பண்ணிவைக்க வழியைப் பார்க்கலாம்” என்று குடும்பத்தின்  ‘அதிகார மையம்‘ கூடி முடிவெடுத்து அதை செயல்படுத்தும் பணியிலும் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள்.   அவள் கல்லூரியை விட்டு வந்ததற்கான காரணம் வேறொன்றுமில்லை. கல்லூரியில் உள்ள  பேராசிரியர்கள் புத்தகங்களைப் பார்த்தே பாடம் நடத்துகிறார்களாம். ஐயம் கேட்கும் போதெல்லாம் அதட்டி உட்கார வைத்து விடுகிறார்களாம். பாடப் புத்தகம் தவிர்த்து வேறெந்தக் கருத்து சொன்னாலும் அதிகபிரசங்கி என்று திட்டுகிறார்களாம். இது ஒரு பதம் தான் இது போல  ஆயிரக்கணக்கான இளம் மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களின் தெளிவிலாக் கற்பிக்கும் முறையால் ஆண்டு தோறும் பழி வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளைக்காரன் விட்டுச் சென்ற கல்வி முறையைக் கட்டியழுது கொண்டிருக்கும் நம்முடைய கல்வி முறையில்  பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் போற்றிப் பாதுகாத்து வரும் கற்பித்தல் மரபை முட்டி  மோதி உடைத்துவிட்டு புதியன கற்பிக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள் உருவாகும் காலம் எப்போது மலரும்? எளிதில் விடைகிடைக்காத வினாக்களோடுதான் நாமும் கற்றோம்….. நம் பிள்ளைகளையும் கல்விச் சாலைகள் நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறோம்.

கற்றல் கற்பித்தல் இரண்டுக்குமான உறவுகளும் தொடர்புகளும் மிக நுட்பமானவை.  கற்றுக் கொள்ளும் மனநிலையில் வருபவர்கள் ……….. கட்டாயத்தினடிப்படையில் வருபவர்கள்……….. சும்மா வருபவர்கள் என தினுசு தினுசாக பங்கேற்பாளர்கள் வருவார்கள்……. வந்து கொண்டிருப்பார்கள்.  இவர்கள் அனைவரின் நாடி பிடித்துப் பார்ப்பது சாத்தியமானதா………?.

“ Teaching is a  political  activity. Teaching cannot  be natural .  கற்பித்தல்  ஓர் அரசியல் நடவடிக்கை. ஆசிரியர் என்பவர் நடுநிலையாக இருக்க முடியாது.  என்றும்,  அறிதல் என்பதே ஓர் அரசியல் செயல்பாடுதான்.  ஐம்பது விழுக்காடு ஆசிரியராகவும், ஐம்பது விழுக்காடு மாணவனாகவும் இருக்க வேண்டும்.“ என்றும் பாவ்லோ பிரைரே அடித்துச் சொல்லும் கருத்திலிருந்து கற்றலை…. கற்பித்தலை மதிப்பீடு செய்து பார்க்கலாமா…? கற்பித்தல் என்பது மொழி தொடர்புடையதா….? அறிவு தொடர்புடையதா…..? மொழி அறிவைப் புகட்டுமா…? அறிவு மொழியைப் புகட்டுமா….?  தாய் மொழிக் கல்வியும் தாய் மொழியில் பயிற்றுவிப்பதும் மனதிற்கு மிகவும் சுகமானது. மற்ற மொழிகளைவிட தமிழ் ஒரு வசீகரமான மொ​ழி, பிறரை எளிதில் வசீகரிக்கும் மொழி. அதனால்தான் நம்மில் பலர் வேறு வேலை பார்த்தாலும் தமிழை இன்னும் நேசிக்கிறார்கள். தமிழ் மொழியின் சிறப்பு இப்படி இருக்கையில் பிற மொழியின் மோகத்தால் கட்டப்படும் பயிற்றுவிக்கும் முறை சரியாக உள்ளதா….?

கற்பித்தல் – மதிப்பிடுதல் என்பது நடுவதற்கும்  அறுவடைக்குமான உறவு.  விதைத்தவை யாவும் விளைய வேண்டும் என்பதில் எந்த முரண்பாடுமில்லை.  ஆனால், விளையாததால் விதைகள் யாவும் மலடுகளல்ல, விளைவிக்காததால் மண்ணும் மலடல்ல ,  தட்ப வெப்பங்களே விளைச்சலை முடிவு செய்கின்றன.  இதே போலவே கற்றல் – கற்பித்தல் – மதிப்பிடுதல் முறையில் நாம் எதிர்பார்ப்புகளோடுதான் மதிப்பிடுகிறோம்.  நம்முடைய எதிர்பார்ப்புகள்  பூர்த்தியாகாத போது நமது கோபத்தை கற்றல் மீதோ …….. கற்பித்தல் மீதோ உமிழ்ந்து விடுகிறோம்.  கல்வி என்பது ஒரு வாளியை நிரப்புவதல்ல, சில தீப்பந்தங்களை ஏற்றுவது. நம் கற்பித்தல் முறை மாணவர்களை உரசி உரசி சில தீப்பொறிகளை உண்டாக்க வேண்டும். இதற்கு மாறாக ஒரு டம்ளர் பாலைக் குடிக்கச் சொல்லி ஒரு டம்ளர் ரத்தத்தை எடுப்பது போல உடனக்குடனான மதிப்பீடு முறையை  நாம் கடைபிடித்து வழி நடத்தி நமது செம்மறித்தனத்தை மேம்படுத்திக் கொண்டோம். எங்கெல்லாம் மதிப்பீடுதலில் குறைகள் ஏற்படுகிறதோ… அங்கெல்லாம் கற்பித்தல் தரமில்லை என்று தராதரமற்ற மதிப்பீட்டை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். இதை என்ன செய்யப் போகிறோம்…? எப்போது மாற்றப் போகிறோம்.

எப்போதுமே புதியனவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புவோரும், தேடல்தான் முன்னேற்றத்துக்கான ஊற்றுக்கண் என்று நம்புவோரும்  நம்மிடம் இருக்கும் போது நாம் நமது கற்பித்தலை  முழு அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும். நாம் செய்யும்  காரியத்தில் ஈடுபாடு இல்லையென்றால் அது முழுமை பெறாது. முழுமையான பலனும் கிட்டாது.

“ஆசிரியர் என்பவர் பார்க்கப்பட வேண்டியவரே தவிர, கேட்கப்பட வேண்டியவர் அல்ல. ஆசிரியர்கள் கல்வி கற்றுத் தரும் முறை மாற்றப்பட வேண்டும். இவர்கள் மாணவர்களுக்கு ஸ்டேண்ட் போட்டு சைக்கிள் ஓட்ட சொல்லித் தருகிறார்கள். மாறாக, அவனை சைக்கிள் ஓட்டச் சொல்லி, அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டு உடன் ஓடிக் கொண்டே சொல்லித் தருபவர்களாக ஆசிரியர்கள் மாற வேண்டும்.“  என்று பேராசிரியர் ச. மாடசாமி ஒரு நேர்காணலில் சொல்லியுள்ளார். நமது ஆசிரியப் பெருமக்களில் எத்தனை பேரை இந்த அளவுகோலால் அளந்து பார்க்க முடியும்? எத்தகை பேர் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்ள முன்வருவர்? “கல்வி என்பது பங்கேற்பாக இருக்க வேண்டும். மாணவர்களின் மேல் திணிப்பதாக இருக்கக் கூடாது. மாற்று வகுப்பறைகளை உருவாக்க வேண்டும்” என்று பேராசிரியர் மாடசாமி  கூறுவது காலத்தின் கட்டாயம்.

பயிற்றுவித்தல் – செய்ய வைத்தல் என்பதும் கூட மேற்கண்டது போலொரு முரண்பாட்டின் வடிவம்தான்.  தொலைக்காட்சிகளும் ஊடகங்களும் போகிற போக்கில் சொல்லிச் செல்லும் செய்திகளையெல்லாம் உடனடியாகச் செய்து பார்க்கும் மனநிலை உருவாகும்போது நம்மால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் ஏன் செயல்படுத்துவதில்லை?  பதின் பருவங்களில் உள்ள குழந்தைகளை விளம்பரங்களும், திரைப்பாடல்களும் தங்கள் வசப்படுத்திக் கொள்கின்றன. ஆனால் பாடத்திட்டங்களாலும், பயிற்சிகளாலும் அவ்வளவு எளிதில் ஒன்றும் செய்ய முடியவி்ல்லையே…. என்ற ஆதங்கத்தில் பல ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை எதிரிகளாக எண்ணத் தொடங்கி விடுகிறார்கள்.

ஆர்வத்தின் மீது கட்டப்படும் அல்லது விதைக்கப்படுபவை எல்லாம்  பயிற்றுவித்தவர்கள் எதிர்பார்த்த விளைச்சலைத் தருகிறது.  ஆனால் அவையெல்லாம் சரியான விளைச்சலா?  விளைவதெல்லாம் மகசூலாகுமா?  இங்கு மகசூல் எது?

ஒருமுறை விதைத்த விதைகள் குறிப்பிட்ட காலத்தில் மட்டும்தான் முளைக்க வேண்டுமா?  நடுவதற்கும் விதைப்பதற்குமான இடைவெளி எது?  நாம் செய்து கொண்டிருப்பது நடுதலா?  விதைத்தலா? “ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு நட்சத்திரம் இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்க கண்கள் வேண்டும்” என்றார் எமர்சன். உண்மைதான். “ஆசிரியர்களுக்கு நூறு கண்கள் வேண்டும். அப்போதுதான் ஆற்றலுள்ளவர்களைத் கண்டுபிடித்து ஆசிரியர்கள் ஊக்குவிக்க முடியும். ‘நல்ல மார்க்’ வாங்கினால், ஒரு பத்து பேர் ஆசிரியர் கண்ணுக்குத் தெரிவார்கள். விளையாட்டில் முன் நிற்கும் ஒரு ஐந்து பேர், பாடக்கூடியவர்கள், வரையக் கூடியவர்கள் என்று ஒரு ஐந்து பேர் தெரிவார்கள். இந்த இருபது பேர்களைத் தவிர மிச்சமிருக்கும் நாற்பது மாணவர்கள் வெளிச்சத்திற்கு வருவதே இல்லை. அதற்கு உரிய வாய்ப்பினைத் தருவது மிகவும் முக்கியம். வகுப்பிலிருக்கும் படிக்கக் கூடியவன், பாடக் கூடியவன், ஓடக் கூடியவனைத் தவிர விடுபட்டவர்களை, மற்ற ஆற்றல்கள் பெற்றிருந்தும் வெளிச்சத்திற்கு வரக் கூசுபவர்களை இனம் கண்டு, அத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்களுக்குத் தேவையான கண்களும், காதுகளும் இருக்க வேண்டும்.” என்று பேராசிரியர் மாடசாமி தனது எனக்குரிய இடம் எங்கே என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் அவரின் கல்விப் பணிகளின் அனுபவத் தொகுப்பு. தமது பணிகளின் அனுபவங்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் எத்தனை பேருக்குள் நீறுபூத்த நெருப்பாய் இருக்கிறது? கற்பித்தல் என்பது ஆசிரியப் பணி மட்டும் தானா…? குறிப்பிட்ட வயதினருக்கு மட்டும் கற்பிப்பதுதான் கல்வியா…? வயது வந்தோருக்கு கற்பிப்பதை எந்தக் கணக்கில் வரவு  வைப்பது?

மேற்கண்ட வினாக்களோடுதான் கடந்த எட்டாண்டு கால கற்பித்தல் பணி நடந்து கொண்டிருக்கிறது. கற்பித்தல் பணியிலிருந்து தற்காலிகமாய் துண்டித்துக் கொண்டாலும் எட்டாண்டுகளாய் என் மீது அழுத்தமாய் விழுந்த பயிற்சியாளனுக்கான அடையாளத் தழும்பை எந்த கழிம்பு போட்டாலும் மாற்ற முடியவி்ல்லை. ஊதியக் குறைவு தவிர்த்து வேறெந்தக் குறைவுமில்லாத, செய்யும் பணிகளில் நூறு விழுக்காடு பணிச் சுதந்திரம் உள்ள ஒரு பணியை விட்டுவிட்டு, எந்தவொரு பணிச் சுதந்திரமுமில்லாத ஒரு பணியில் அதுவும் தற்காலியமாய் உட்கார்ந்து கடந்த காலத்தைப் பற்றி அசை போடுதல் சரியா… தவறா.. என்பது ஒரு புறம் இருந்தாலும் வளர்ச்சிப் பணிகளில் ஏற்படும் அனுபவமும், அதன் பகிர்வும்தான் நமது கடந்த காலத்தை மதிப்பீடு செய்யப் பயன்படுகிறது. வளர்ச்சிப் பணிகளில் அணியாக இணைந்தவர்கள் தங்களின் பணி காலத்தின் அனுபவங்களைத் தொகுக்க வேண்டிய காலமிது.

1998ம் ஆண்டு ஒரு ஆகஸ்ட் மாதத்தின் இறுதி வாரத்தில் நான் வசித்த கிராமத்தில் இருந்த ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாளனாக நுழைந்தேன். அதற்கு முன் வரையில் தொண்டு நிறுவனங்களை விமர்சினம் செய்து வந்த நான் எனது பிழைப்பூதியத்திற்காக ஒரு தொண்டு நிறுவனத்திற்குள் நுழைந்ததை எனது நண்பர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவாவது ஒரு வருமானம் வேண்டும். என்று நுழைந்து, ஒரு தலைமுறை காலம் அதில் தொலைந்து விட்டது.  இதைப் பற்றி எழுதினால் தனி புத்தகமே போடலாம். அது கிடக்கட்டும். அந்தப் பணியில் சேர்ந்த நான்காண்டு காலம் கழித்து நான் பயிற்றுநராய் ‘ஞானஸ்தானம்‘ பெற்று  நானும் வாத்தியாருடோய் எனச் சத்தம் செய்து வேலை செய்த நாட்கள் ஏராளம். இந்த நாட்களில் நானும்  எனது சக பயிற்றுநர் கண்ணனும் எங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொண்ட செய்திகளை விட பல மடங்கு பங்கேற்பாளர்களிடம்தான் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். தொண்டு நிறுவனங்களின் பணிகளை மக்களிடம் கொண்டு செல்லும் ஆணி வேர்களான களப் பணியாளர்களை பயிற்றுவிக்கும் பெரும் பணியில் நாங்கள் இணைந்திருந்தோம். அதிகாலையில் ”மக்களின் பணிக்கே அர்ப்பணித்தோம்… இது மாபெரும் பணியென அனுதினம் எண்ணி எண்ணி…..” எனத் தொடங்கும் பாடலோடு வகுப்புகளுக்குள் நுழையும் பயிற்சிகள் “வெற்றி பெறுவோம்…. வெற்றி பெறுவோம்…“ என்ற பாடலோடு முடியும்  பதினைந்தாவது நாளில் கார்கால மேகங்களைப்  போன்று கனத்த கண்ணீரோடு விழிகள் விடைபெறும் வரையிலான கால கட்டத்தில்  சந்தோஷமோ ………. சங்கடமோ ……….. எதுவானலும் சில நொடிகள் மட்டுமே அனுபவித்து விட்டு அடுத்த காட்சிக்குத் தயாராகும் மேடைக் கலைஞர்ளைப் போலவே பயிற்றுனர்களாக நாங்கள் இருந்தோம். எங்களைப் போன்றே இன்றும் பல பயிற்சி மையங்களில் உணர்வுகளும் கடமைகளும் பிண்ணிப் பிணைந்த பயிற்சி வல்லுனர்களாய் பலர் உருவகமாகி கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் பத்தாம் வகுப்பைக் கூட தாண்டாதவர்கள். பள்ளிக் கூட பாடத்திட்டத்தால் பெயிலாக்கப் பட்டவர்கள். தனது சொந்த வாழ்க்கையில் தோல்வி கண்டு சொந்தங்களாலும் சமுதாயத்தாலும் புறந்தள்ளப்பட்டவர்கள்.  தொன்னூறுகளின் முற்பகுதியில் அறிவொளி இயக்கத்தில் தங்களைத் தொண்டர்களாய் பதிவு செய்து கொண்டு தெருவிளக்கடியில் உட்கார்ந்து உழைப்பாளிகளுக்கு பட்டா.. பாடம் படி என்று எழுத்தறிவித்தவர்கள்….. காலப் போக்கில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக தொண்டு நிறுவனங்களில் களப்பணியாளராகச் சேர்ந்து தனது பணிகளைச் செவ்வனே செய்து அதை மற்றவர்களுக்கும் கற்றுத் தரும் வாத்தியார்களாய் மலர்ந்தவர்கள்.

ஆசிரியராவதற்கு நம்முடைய கல்வி முறை காலங்காலமாய் கட்டிக்காத்து வரும் எந்தவொரு  முறையான கல்வித் தகுதியையும் பெறாதவர்கள்  தாம் எடுத்துக் கொண்ட கடமையை சரியாக பங்கேற்பாளர்களிடம் கொண்டு செல்லும் வல்லமையை எப்படிப் பெறுகிறார்கள்?  இந்த வித்தை இவர்களுக்குள் எப்படி தானாக விளைந்தது என்று எனக்கு நானே  கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

1980 – ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கி கடந்த கால் நூற்றாண்டு காலமாய் இந்தியச் சமவெளியெங்கும் வளர்ச்சி நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் தொண்டு நிறுவனங்களும் அவற்றிற்கான பயிற்சி நிலையங்களும் மெல்ல மெல்ல முளைத்து தற்போது நிலைத்த தன்மையடைந்து விட்டன. நுனிநாக்கு ஆங்கிலவாதிகள் தொடங்கி, வட்டார மொழிகளில் வெளுத்துக் கட்டுபவர்கள் வரையில் அனைவருமே கற்பிக்க விரும்புகிறார்கள்.  கரும்பலகையில் இருந்து வெண்பலகைக்கும் சாக்பீஸிலிருந்து மார்க்கருக்கும் மாறியபடியே இன்றைய கற்பித்தல் நடந்து கொண்டிருக்கிறது.

எங்கெங்கு கானினும் தொண்டு நிறுவனங்களும், சுயஉதவிக் குழுக்களும் முளைத்து செழித்து கொப்பும் கிளையுமாய் இருக்கிற காரணத்தால் நிறைய பயிற்சிகளும், பயிற்சி நடத்துவதற்கான பயிற்றுநர்களும் தேவைப்படுகிறார்கள்.  பயிற்சி நிறுவனங்களும் தேவைப்படுகின்றன.  கடந்த இருபதாண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது மத்திய மாநில அரசுகள் சுயஉதவிக் குழுக்களுக்கான திறனூக்கத்தில் அதிக அக்கறை செலுத்துகின்றன.  அரசின் பயிற்சி நிறுவனங்கள் தவிர்த்து பல தனியார் பயிற்சி நிறுவனங்களும் இந்தப் பணியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன.  அரசாங்க மையங்களிலும் சரி, தனியார் மையங்களிலும் சரி பயிற்சி தரும் பயிற்றுநர் ஆசிரியர் பயிற்சியில் தோ்வு  பெற்றவர்கள் அல்ல. தங்களுடைய பணி அனுபவத்தால் ஆர்வம், ஈடுபாடு புதியனவற்றை உருவாக்கல் என்ற இலக்குகளின் மீது  உருவானவர்கள், உருவாக்கப்பட்டவர்கள்.  இவர்களில் பலர் நபர்கள் சிறந்த பயிற்றுநர்களாகப் பரிணாமிக்கிறார்கள்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படும் பாடத்திட்டம் கொண்ட நமது கல்வி முறையில் கூட, அந்த இடைப்பட்ட ஆண்டுகளில் பத்துமுறையாவது  ஆசிரியர்களுக்கான திறனூக்கப் பயிற்சிகளை அரசு கொடுக்கிறது.  ஆனால் ஆண்டுதோறும் மாறுதல் பெறும் வளர்ச்சி நிறுவனங்களின் பணிமுறைகளையும், நடைமுறைகளையும் கற்பிப்பவர்களுக்காக நிறுவனங்கள் செலவிடுவது மிக மிகக் குறைவே. முறை சாராகக் கல்வி முறையில் தாமாக……….. சுயம்புகளாக தங்களைத் தாங்களே கதவமைத்துக் கொண்டு வகுப்பறைகளில் புதியன செய்யும் இவர்களின் கடமை உணர்வு முறை சார்ந்த கல்வி முறையின் ஆசிரியப் பெருமக்களிடம் குறைந்து வருவது  கவலை தருவதாகும். “இன்றைய ஆசிரியர்கள் கற்றுத் தருவதற்கு மேற்கொள்ளும் பயிற்சிகள் மிகவும் பழமையானவை. ஆங்கிலக் கல்வியை பெரிதும் நகல் எடுப்பவை. நவீன உளவியல் காரணிகளோ, உபகரணங்களோ, குழந்தைகளின் இயல்புணர்வுகளையே அவை கணக்கில் எடுத்துக் கொள்ளவேயில்லை.  ஆசிரியர்களைப் போலவே வீட்டில் குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோர்கள் குழந்தைகளை அமுக்கி வைத்து கற்றுத்தருவதும் மனப்பாட இயந்திரங்களாக அவர்களை மாற்றுவது மட்டுமே“ என்று எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

நான் எனது பணி காலத்தில் ஒரு திறனூக்கப் பயிற்சியில் கலந்து கொண்டேன். மிகவும்  தொய்வாக… சோர்வேற்படும் அந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட பாபு ஒரு விளையாட்டு நடத்தினார்.  அந்த மூன்று நாளில் இல்லாத சந்தோசம் பங்கேற்பாளர்களுக்கு பாபுவின் விளையாட்டு மூலம் கிடைத்தது.  அப்படியானால் பாபு பங்கேற்பாளர்களின் நாடி பிடித்து பார்க்கத் தெரிந்தவரா?  பயிற்சி ஒருங்கிணைப்பாளருக்கு இந்த சூட்சுமம் தெரியவில்லையா? எல்லோரையும் ஒருங்கிணைத்து கவனங்களைக் குவியச் செய்வதும், குவிந்த கவனங்களை தனக்குச் சாதகமாக்கிக் கொள்வுதும் ஒரு கலை.  இது எல்லோருக்கும் வாய்க்காது.

அடித்தட்டு மக்களுக்கான கல்வி முறைக்காய் தொடர்ந்து போராடியவர்களில் ஒருவரான பாவ்லோ பிரையரே 1997இல் இறப்பதற்கு சற்று முன்னதாக சொன்னதாக சொல்லப்படுவது, “அன்பில்லாமல் கல்வியினை என்னால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது, நான் அன்பினை உணர்கிறேன், பகிர்ந்தளிக்க நினைக்கிறேன், அதனாலேதான் நான் கல்வியாளனாக இருக்கிறேன்”. என்று சொன்னதாக ஒரு செய்தி நமக்குத் தகவல் தருகிறது. அன்பு செய்தல் மூலமே ஆர்வத்தைக்  குவிக்க முடியும். ஆர்வமானவர்கள் ஒன்று சேருமிடத்தில் கற்றலுக்கும் கற்பித்ததுக்கும் பஞ்சமிருக்காது.

சாதாரண ஆசிரியர் செய்திகளைக் கூறுவார்…… நல்ல ஆசிரியர் அதை  விளக்குவார்……..சிறந்த ஆசிரியர் செய்து காட்டுவார். உன்னதமான ஆசிரியர் வாழ்ந்து காட்டுவார் அல்லது ஊக்க​மூட்டுவார். நீங்கள் சாதாரண​ ஆசிரியரா, அல்லது நல்ல ஆசிரியரா அல்லது சிறந்த ஆசிரியரா அல்லது உன்னதமான ஆசிரியரா என்பதை உங்கள் மாணர்வர்கள் சொல்வார்கள்.

(பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் செப்டம்பர்2012)

 

Advertisements

 

 

படித்தவன் சூதும் வாதும் செய்தால்

போவான்… போவான்….

அய்யோ என்று போவான்

              – பாரதியார்

 

சென்னைப் பள்ளியொன்றில் பதினைந்து வயது கூட முழுமையடையாத ஒருமாணவன் தன் பள்ளி ஆசிரியையைக் குத்தி கொலை செய்தது அதிர்ச்சியாகவும்துயரமாகவும் இருக்கிறது.  என்ற செய்தியை பத்திரிகைகளில் வாசித்த பிறகு நம் கலாச்சாரச் சூழலில்  இப்படியான சம்பவங்கள் எப்படி  நடந்தது….. ? ஏன் நடந்தது…..?  இதில் யார் முதல் காரணம்…..?  என்ற தொனியில் ஆராய புறப்பட்டு,   தன் பாடத்தில் சரியாகத் தேர்ச்சி பெறாத மாணவனின் டயரியில் தன் ஆசிரியை எழுதிய குறிப்புகளின் மேல் ஆத்திரப்பட்டு மாணவன் இந்தக் கொலைச் செயலை நடத்தியிருக்கிறான். அப்படியெனில்  அதற்கு காரணம் பாடத்திட்டமா…. ஆசிரியரா….. என மாறிய கேள்வி எல்லோருடைய மனதிலும்  விடை தெரியாத கேள்வியாய் நின்று பெற்றோர்களா, ஆசிரியர்களா திரைப்படம் ஊடகங்கள் போன்ற புறச்சூழல்களா என்ற விவாதத்திற்கு அழைத்துச் சென்றது.  மேற்கண்ட சம்பவத்தை யார் மீதாவது பழி போட்டுவிட்டு தாங்கள் அல்லது தங்களுக்கு வேண்டிவர்களைத் தப்பிக்கச் செய்யும் விதமாக  பிரச்சினையைக் சுருக்கி அணுகி ஆராய்ந்து  ஒரு வழியாய் வழக்கம் போலவே எந்தத் தீர்வையும் சொல்லத் திரானியற்ற நிலையில் சப்பென ஓய்ந்த பிறகு கடந்த வாரம் மீண்டும் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகேயுள்ள ஒரு மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புத்தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதாக, கலெக்டருக்கு இ,மெயிலில் புகார் வந்தது.
அந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியின் பெற்றோர் அதனை அனுப்பியிருந்தனர்.அந்த தனியார் பள்ளியில் தேர்வு எழுதும் முக்கிய பிரமுகர்கள் மற்றும்கல்வித் துறையில் பணிபுரியும் ஒரு சிலரின் பிள்ளைகளுக்கு பிட்கொடுப்பதாகவும், பள்ளி நிர்வாகமும், தேர்வு கண்காணிப்பு பணியில்ஈடுபட்டுள்ள ஆசிரியர்களும் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் அதில்தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

நன்றாக படித்து எழுதும் தனது மகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எந்தெந்த தேர்வு அறையில் முறைகேடுகள் நடக்கிறது, எந்தெந்தஆசிரியர்கள் இதுபோன்ற தவறில் ஈடுபடுகின்றனர் என்பதையும் புகாரில்குறிப்பிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, தனியார் பள்ளியில் நடைபெறும்முறைகேடுகளை கண்டுபிடிக்க கலெக்டர்  சைரன் பொருத்தாத காரில் சென்றார். பள்ளி அலுவலக அறைக்கு சென்று சோதனை நடத்தினார்., அங்கிருந்தஜெராக்ஸ் மெஷினில் கணக்கு பாடத் தேர்வுக்கான விடைகள் எழுதப்பட்ட பேப்பரைஜெராக்ஸ் எடுத்துக்கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும், ஒரு வினாத்தாளும்அங்கிருந்தது. அவற்றை கலெக்டர் பறிமுதல் செய்தார்.
கலெக்டர் உத்தரவின்பேரில், முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில்அமைக்கப்பட்ட 5 அதிகாரிகள் கொண்ட குழுவினர் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.தேர்வு அறைகளுக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தஆசிரியர்களிடம் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 7 ஆசிரியர்களிடம் தேர்வுக்கான விடைகள் அடங்கிய பிட்பேப்பர்கள் இருந்ததுதெரியவந்தது. மேலும், ஒரு ஆசிரியரின் சட்டை பாக்கெட்டில் இருந்த கவரில், ஒரு மாணவியின் பெயரும், தேர்வு எண்ணும் எழுதப்பட்டிருந்தது. கவருக்குள்ஐநூறு ரூபாய்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
என்ற செய்தி மீண்டும் ஓர் அதிர்வை உருவாக்கியுள்ளது. வழக்கம் போலவே நாளிதழ்கள் தொடங்கி தொலைக்காட்சிகள் வரையில் விவாத மேடைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. சம்மந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாமா…. ஒட்டுமொத்த தேர்வு முறையையே மாற்றலாமா….. என்ற ரீதியில் விவாதங்கள் நீண்டு செல்கின்றன. அங்கீகரத்தை ரத்து செய்வதென்றால் அந்த ஒரு பள்ளியோடு நிறுத்திக் கொள்ளலாமா….? கண்ணுக்குத் தெரியாமல் தொடர்ந்து பிட்டுக்கு ஜெராக்ஸ் சுமந்து கொண்டிருக்கும் கல்வித் தந்தைகளின் பள்ளிகளை என்ன செய்வது..?  உங்கள் பிள்ளைகள் டாக்டராக வேண்டுமா…? எஞ்சினியராக வேண்டுமா….? கவலையை விடுங்கள். எங்களிடம் சேர்த்து விடுங்கள். நீங்கள் துட்டு குடுத்தால் போதும். நாங்கள் பிட்டுக் கொடுத்தாவது உங்களின் கனவை நிறைவேற்றி வைக்கிறோம் என்று வெளியில் தெரியாமல் விளம்பரம் செய்யும் கல்வி நிறுவனங்களை என்ன செய்வது?

இது தனிப்பட்ட கல்விக்கான பிரச்சினை மட்டும் அல்ல;   அடிப்படையான ஒட்டு மொத்தமான  ஒரு பிரச்சினை என்பதுதான் உண்மை. இந்த அடிப்படையான ஒட்டு மொத்தமான  பிரச்சினையின்  பங்கேற்பாளர்களாக (stakeholders) பெற்றோர்களும், ஆசிரியர்களும், பள்ளி மேலாண்மையினரும், மற்றும் மாணவர்களும் அமைகின்றனர். மேலும் திரைப்படங்களின், ஊடகங்களின் பங்கும் இதில் இருக்கின்றன.

படிக்கிற காலத்தில் நல்லாப் படிக்காமல் உரிய மதிப் பெண்கள் எடுக்காமல் நினைத்த வேலைக்குப் போக இயலாமல் கிடைத்த வேலையில் தங்களை இருத்திக்கொண்டுள்ளவர்கள் எல்லாம் ஒன்று கூடி தங்களின் நிறைவேறாத கனவுகளை பிள்ளைகளின் தலையில்  ஏற்றுகிறார்கள். குருவியின் தலை மேல் பனங்காயை அல்ல   பாறாங்கல்லை வைக்கிறார்கள் பெற்றோர்கள்.  தாம் அடையாத கனவை அல்லது தாம் அடைந்த கனவை மீறிய கனவை தம் பிள்ளைகள் அடைய ஆசைப்படுகிறார்கள். அதன் விளைவாக மாணவர்கள் அவர்களின் வயது, மனப்பக்குவத்தை மீறிய மன அழுத்தத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள். சில பெற்றோர்கள் தம் பிள்ளைகளிடம் காது திருகுதல், கோபித்து அடித்தல், சாப்பாடு போடாதிருத்தல்… பேசாதிருத்தல் போன்ற அறச் செயல்களில் (?)  கூட இறங்கி விடுகிறார்கள்.

பள்ளி மேலாண்மையினர் நூறு விழுக்காட்டு தேர்ச்சியை விரும்புவது மட்டுமல்ல, முதல் மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களும் தங்கள் பள்ளிகளிலிருந்து ‘உற்பத்தியாக’ வேண்டுமென்று விரும்புகிறார்கள். இதனால் பள்ளிகள் வணிக வளாகங்களாகி விட்டன. வகுப்புகள் எல்லாம் விற்பனை அரங்கங்களாகி விட்டன.  இப்படியாக வணிக முறையில் நடத்தப்படும் உறையுள் பள்ளிகள் (Residential schools) மாணவர்களைப் படி படி என்று கட்டாயப்படுத்தும் சிறைக்கூடங்களாக மாறி விட்டன. தமிழகத்தில் இப்படியாகப்பட்ட சிறைச் கூடங்களை நல்ல முறையில் பராமரிக்கும் நிறுவனங்களுக்கு ஆள் பிடித்துப் கொடுக்கும் பணியையே தங்களின் தொழிலாக பலர் செய்கிறார்கள். இந்த மண்ணாங்கட்டிகளுக்கு ஹெச். ஆர். நிறுவனங்கள் என்று பெயராம்.

பள்ளி மேலாண்மையினரின் இந்தப் போக்குக்கு பெற்றோர்களும் துணை நிற்கிறார்கள்.  தம் பிள்ளைகள் மேல் அவர்கள் சுமத்தியிருக்கும் அவர்களின் நிறைவேறாத கனவுகளை மேற்சொன்ன பள்ளிகள் நிறைவேற்ற உதவும் என்பது அவர்களது (மூட) நம்பிக்கை.

பெற்றோர்களின் கனவுகளும், பள்ளி மேலாண்மையினரின் எதிர்பார்ப்புகளும் ஆசிரியர்களின் பணியை சாகசத்திற்குரிய காரியமாக்கி விடுகிறது. படிப்பை முடித்துவிட்டு அரசுப் பணி கிடைக்காத சோகத்தில் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாய் ஞானஸ்தானம் பெறும் ஆயிரக்கணக்கான அபலை ஆசிரிய வர்க்கம் தங்களின் தற்காலிய பணியைத் தக்க வைக்க மானவர்களை படிபடி என்று தார்க்குச்சி வைத்து குத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். கற்பிக்க வேண்டிய பாடங்கள் அதிகமாகவும், கடினமானதாகவும் மாணவர்களின் வெவ்வேறு விதமான அறிவு, புரிதல் நிலைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாததாகவும் இருக்கின்றன. இதனால் அவர்கள் மாணவர்களின் தேர்ச்சிக்கு கண்டிப்பாகவும் கறாராகவும், இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது சில சமயங்களில் சரியாய்த் தேர்ச்சி பெறாத மாணவர்களை அடிப்பது போன்ற வன்முறை உத்திகளையும் கையாள வேண்டியுள்ளது. கடைசியில் அந்த மாணவர்களின் கத்திக்குப் பலியான சோகமும் நடந்து விட்டது.

மாணவர்களோ சக்கர வியூகத்தில் அகப்பட்டுக் கொண்ட அபிமன்யுக்களாய் சிக்கிக்கொள்கிறார்கள். பெற்றோர்கள், பள்ளி மேலாண்மையினர், ஆசிரியர்கள், தம்மை விட நன்றாகத் தேர்ச்சி பெறும் தம்முடைய சகாக்கள் என்று சகல திசைகளிலிருந்தும் வரும் அழுத்தங்களால் அவர்கள்  மன அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள். போதாக் குறைக்கு திரைப்படங்களும் , தொலைக்காட்சிகளும் அவர்களுக்கு கல்வி மேலான  கவனத்தைக் குறைக்கின்றன.  பத்தாண்டுக் காலம் என்பது ஐந்து வயதிலிருந்து பதினாறு வயது வரை ‘இம்ப்ரஷனபல் ஏஜ்’ என்று சொல்கிறார்கள். கற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்வதும், ஆர்வத்தை மேம்படுத்திக் கொள்வதற்குமான வயது அது. இம்ப்ரஷனபல் ஏஜ் என்று சொல்லப்படும் பருவத்தில், 10 ஆண்டுகள் என்னதான் படித்திருக்கிறான்? என்னதான் சாதித்திருக்கிறான்? இதைத்தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் மனப்பாட பாடத்தைச் சொல்லவில்லை. அவன் படித்த கல்வியை எந்தளவுக்கு உள்வாங்கிக் கொண்டிருக்கிறான். எந்தளவுக்கு அவன் படித்திருக்கிறான் என்பது ஒரு அளவுகோல்.

கல்வி என்பது “சமூக மேம்பாட்டிற்கான லாப நோக்கற்ற சேவை’ என்ற நிலையிலிருந்து, விற்கத் தக்க, லாபமீட்டக் கூடிய தொழிற் சேவை என உலக வங்கியாலும், உலக வர்த்தகக் கழகத்தாலும் வரையறுக்கப்பட்டு அதைக் கொள்கை ரீதியில் அரசு பின்பற்றி வருகிறது. எனினும் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் சேவை நிறுவனங்களாகக் கருதப்பட்டு, அவற்றின் வருமானத்திற்கு இன்றளவும் வரிவிலக்கும் அளிக்கப்பட்டு வருகிறது என்பதே உண்மை.

நுனி நாக்கு ஆங்கிலமும், டீசென்டான’ நடை, உடை பாவனைகளும், தோற்றமும் இல்லாதவர்களுக்கு கல்விக் கடன் மட்டும் மறுக்கப்படவில்லை, பன்னாட்டுக் கம்பெனிகளின் நுழைவாயில்களும் திறக்க மறுக்கின்றன. அவ்வாறு உபரியாகக் கழித்துக் கட்டப்படும் இளைஞர்கள் சென்னையிலும், பெங்களூரிலும் சில ஆயிரங்களுக்கு, சில இடங்களில் சம்பளம் கூட இல்லாமல் கொத்தடிமைகளாக வேலை செய்கிறார்கள். பலர் சொல்லப்படும் பொறியியல் கல்வி தேவைப்படாத கடைநிலைப் பணிகளுக்கு வேறு வழியின்றி தள்ளப்படுகிறார்கள். என்பதும் ஊரறிந்த செய்தி.

உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளின், நாட்டு மக்களின் முன்னேற்றம், வாழ்க்கைத்தரம், வளர்ச்சி நிலை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி என மொத்தத்தில் மனிதவளம் குறித்த ஆய்வினை ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டு வெளியிட்டு வருகிறது. சரியான வளர்ச்சி நிலையை எட்ட நாம் எங்கே செல்ல வேண்டியுள்ளது ? என்ற கேள்வியை ஒவ்வொரு நாடும், நாட்டு மக்களும் எழுப்ப இவ்வறிக்கை காலக்கண்ணாடியாக இருக்கிறது.  2005ஆம் ஆண்டுக்கான ‘மனிதவள மேம்பாட்டு அறிக்கை ‘யை ஐக்கிய நாடுகள் சபை செப்டம்பர் 7, 2005 அன்று வெளியிட்டது. 177 நாடுகள் உறுப்பினராக உள்ள இவ்வமைப்பில் ஒவ்வொரு நாட்டைப் பற்றிய மதிப்பீடும், தற்போது அந்தந்த நாடுகள் வகிக்கும் இடத்தையும் பட்டியலிட்டுள்ளது. இப்பட்டியலில் இந்தியாவிற்கு 127வது இடமே கிடைத்துள்ளது. இதிலிருந்தே நம்முடைய நாட்டின் மனிதவளத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளலாம். நமக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய இலங்கையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இனச்சண்டைகள் நடந்து வருவதை நாம் அறிவோம். இருப்பினும் கூட மனிதவளத்தில் நம்மை விட அவர்கள் முன்னிற்கின்றனர்; இலங்கை இப்பட்டியலில் 93வது இடத்தை பிடித்துள்ளது.

இன்றைய பள்ளிக் கல்வி முறையில் எல்லோரையும் பிணித்திருக்கும் அழுத்தத்தை விடுவிக்க அல்லது குறைக்க வேண்டும்.  பள்ளி மாணவர்கள் மேல் இருக்கும் பாடங்களின் பளுவைக் கொஞ்சம் குறைக்கலாம். இதற்காகப் பாடங்களின் தரத்தைக் குறைக்க வேண்டுமென்றில்லை; எண்ணிக்கையைக் குறைக்கலாம். இந்தக் கருத்து இன்னொரு முக்கியமான கருத்தோடு தொடர்புள்ளது. இன்றைய மாணவர்கள் தங்களின் பட்டாம் பூச்சி போன்ற விளையாட்டுத் தனத்தை வெகு சீக்கிரமாக இரு வகைகளில் இழந்து விடுகிறார்கள்- ஒன்று கால அவகாசமின்மையில், இன்னொன்று மனப்பாங்கில். முன்னது பாடப்பளுவோடு தொடர்புடையது. அன்றைய  வகுப்புப் பாடங்களை அன்றே படித்து முடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தோடு, ஆசிரியர்கள் தரும் வீட்டுப் பாடங்களும் மாணவர்கள் மேல் அழுத்தத்தைக் கூட்டுகின்றன.  இந்த அழுத்தத்தை மேலும் தீவிரமாக்குகிறது ஊடகங்கள், திரைப்படங்கள், விளம்பரங்கள் போன்ற புறச்சூழல்கள். இந்த புறச்சூழல்கள்தான் கள்ளமில்லாத பிள்ளைப் பருவத்தை மெல்ல மெல்ல வன்முறையை நோக்கி நகர்த்தக் காரணமாகிறது. மாணவர்களின் இயல்பான கள்ளமின்மையிலிருந்து ஒரு வாலிப மனப்பாங்குக்கு உடல்சார் மாற்றத்திற்கு முன்பே நகர்த்துவதால் ஏற்படும் உள்ளச் சலனங்கள் பாடங்களின் மேல் கவனக் குறைவை விளைவிக்கின்றன. இந்த கவனக் குறைவு கால அவகாசமின்மையால்  எழும் சிக்கலோடு சேர்ந்து அழுத்தத்தை மேலும் அதிகரிக்க இன்றைய பள்ளி மாணவர்கள் ஒரு விதமான மோசமான மன அழுத்தச் சுழலில் எளிதில் சிக்கி விடுகிறார்கள். இதிலிருந்து அவர்களை விடுகிக்க வேண்டும். ஒரு சிறந்த கல்வி முறையின் வெற்றி  விரும்பிப் படிக்கும் தாகத்தை மாணவர்களிடம் உருவாக்குவதன் மூலம்தான் நிரூபணமாகும் என்பதற்கு நல்ல சான்று தூத்துக்குடி லூர்துமாள்புரத்தைசேர்ந்தவர் ஆக்னஸ் ராஜ். இவரும்இவருடைய சகோதரரும் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரே வந்தகார் மோதியதில் விபத்தில் சிக்கினர்.  இதில் ஆக்னஸ் ராஜின் கால் உடைந்துதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தனியார் பள்ளியில்பத்தாம் வகுப்பை படித்து வந்த ஆக்னஸ் ராஜ் தனது கடைசி தேர்வைமருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில் வந்து எழுதினார்.  என்ற பத்திரிகைச் செய்திதான்.  ஆர்வத்தின் மீது கட்டப்படும் கனவுகள்தான் வெல்லும் என்பதற்கு இது போன்ற செய்திகளே முன்மாதிரியாகிறது.

அதே போல பாடங்களின் தேர்ச்சியில் எல்லா மாணவர்களையும்  உச்சத்தில் ஒரே தரப்படுத்துதல் என்ற எதிர்பார்ப்பையும் கைவிட வேண்டும். இதிலும் எல்லா மாணவர்களும் எல்லாப் பாடப் பிரிவுகளிலும் அதிக மதிப் பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்ற இன்றைய கல்வி அணுகு முறையும் நடை முறை சாத்தியம் மட்டுமல்ல. அறிவார்த்த, உளவியல் ரீதிகளில் கூட சாத்தியமற்றது. ஒவ்வொரு மாணவனுக்கும் உள்ளார்ந்து ஒரு பாடப் பிரிவில் அல்லது சில பாடப் பிரிவுகளில் –கணிதத்திலோ, அறிவியலிலோ, வரலாற்றிலோ என்று- திறமையும் தேர்ச்சியும் இயல்பாய் அமையும். இந்த இயற்கைப் பான்மையை ஒரு கல்வி முறை அங்கீகரிக்க வேண்டும். நமது கல்வி முறை தான் கணித மேதை இராமானுஜனை கல்லூரி நிலையில் இருமுறை  தேர்ச்சி பெறவில்லை என்று புறந்தள்ளியது என்பதையும் நாம் அடுத்த தலைமுறைக்குச் சொல்ல வேண்டும்.

சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் இன்றைய கல்வி முறையில் புரையோடியிருக்கும் இறுக்கத்தையும் அழுத்தத்தையும் எப்படி விடுவிப்பது அல்லது குறைப்பது என்பது தான் நம் முன்னால் இருக்கும் பெருங்கேள்வி. அதற்கு சென்னைப் பள்ளியில் நடந்த ஆசிரியை கொலை சம்பவமும்  வேலூர் பள்ளியில் நடத்தப்பட்ட பிட்டு சம்பவமும் ஆய்வுக்கான கருப்பொருளாய் எடுத்துக்கொள்ளப்பட் வேண்டியவை.   இதனை ஒரு தனிப்பட்ட அசாதாராண அசம்பாவிதமாக எடுத்துக் கொள்ளாமல் அடிப்படையான சிக்கலாய்க் கருதி  கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் தங்களின் கருத்துகளையும் முன்மாழிவுகளையும் அரசாங்கத்திற்கு வைக்க வேண்டும்.  வளரும் தலைமுறையினரின் நலன் கருதி அரசாங்கம் தனது நிலைபாட்டை வெளிப்படுத்த வேண்டும். அரசின் நிலைப்பாடு இதில் மிக முக்கியம் என்பதில் மிகையில்லை. பள்ளியில் கற்பதும் பள்ளிக்குச் செல்வதும் மாணவர்களுக்கு அறிவோடும், ஆனந்தத்தோடும் கூடிய   வாழ்வாக அமைய வேண்டும். அது எந்தக் கல்வி முறையில் இருந்தாலும் சரி.

( பசுமைத்தாயகம் மே 2012)

இந்தாண்டு தொடக்கத்தில் மார்ச் முதல் வாரம் என்னுடன் பணிபுரியும் ஒரு பெண் பணியாளர் மிகவும் படபடப்போடும்,  ஏதோவொரு தொலைபேசி அழைப்பை எதிபார்த்தவராகவும் காணப்பட்டார். ஒரு நாள் காலை பதினோரு மணிக்கு  ”சார் என்னால இன்னைக்கும் நாளைக்கும் வர முடியாது” என்று சொல்லி எனது பதிலுக்குக் கூட காததிருக்காமல் தொடர்பைத் துண்டித்து விட்டார்.

இரண்டு நாட்கள் கழித்து மிகவும் உற்சாகத்தோடு வந்தவர் ”என் பொண்ணுக்கு  ஸ்கூல்ல ஸீட் கெடச்சிருக்கு” என்று சொல்லிக்கொண்டு எல்லோருக்கும் இனிப்புக் கொடுத்தார்.   ”எந்த வகுப்புக்கு?” என்றேன். ”எல். கே. ஜி. என்றார்.  நான் சற்று ஏளனத்தோடு பார்த்தேன். அவர் சற்றே கோபத்தோடு ”ஒங்க வெட்டி வீராப்பு, வறட்டு கௌரவத்தையெல்லாம் தீயை வச்சுப் பொசுக்குங்க. இந்த காலத்திற்குத் தகுந்த மாதிரியா மாறப் பழகுங்க சார். ஆங்கில அறிவு இல்லாத காரணத்தால நீங்களும் நானும் படுற செரமம் பத்தாதா…?” என்று சீறினார்.

ஆங்கிலம் படித்தவர்கள் மட்டுமே ‘அவையத்து முன்னிருக்க’த் தகுதி படைத்தவர்கள் என்ற போலித்தனமான தோற்றத்தை உருவாக்கியது யார்? சமுதாயமா? அரசியலமைப்பா? எளிதில் விடை புலப்படாத இந்தக் கேள்விக்கான விடையைத் தேடவேண்டியதுள்ளது.

இன்றைய நமது கல்வித் தந்தைகளெல்லாம் நவீனமயமாக்கப்பட்ட சரஸ்வதிக் கோவில்களைத் திறந்து கொண்டு தமிழ்ச் சமூகத்தின் இளைய தலைமுறையை மேல்நாட்டுப் பாணியில் வளர்த்தெடுக்கவும், மேலைநாடு முழுவதும் சென்று டாலர் ஈட்டிக் கொண்டு வரத்தக்க தயாரிப்புகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பணமிருந்தால் கல்வி என்ற நிலை மாறி, பணமிருந்தாலும் தக்க சிபாரிசுகளோடும், பெற்றவர்கள் கற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற விதியை (இந்த விதி இந்திய அரசியலமைப்பச் சட்டத்தில் எந்த இடத்தில் இருக்கிறது? என யாராவது அப்பாவித்தனமாகக் கேட்டு விடாதீகள். அப்புறம் அவையத்து முன்னிற்கத் தகுதிவாய்ந்த(?) கல்வியை உங்கள் குழந்தைகள் இழக்க நேரிடும்) உருவாக்கி இருக்கிறார்கள் நம்முடைய கல்வித் தந்தைகள் .இது சமுதாயத்தின் மீதான அக்கறையல்ல, கல்வி வளம்தரும் தொழிலாகி விட்டது. இதைவிட பன்றிகள் வளர்ப்பதில் அதிக லாபம் இருக்கும் சூழல் உருவாகுமானால் நாளைக்கே அனைத்து பள்ளிகளையும் பன்றித் தொழுவங்களாக்கி விட்டு நல்ல மேய்ப்பர்களாக மாறியும் காட்டுவார்கள்.

”உங்களது  வீட்டிற்கும் பள்ளிக்குமான தூரம் எவ்வளவு?” என்ற கேள்வியை எல்லா சரஸ்வதி ஆலயங்களிலும் நம்முடைய நவீன துரோணாச்சாரியர்கள் கேட்கிறார்களாம். (”அதைத் தெரிந்து கொண்டு நீங்க என்ன பண்ணப் போறீங்க?  ரோடு போட்டுத் தரப் போறீங்களா…?”) பள்ளிக்கும் குடியிருக்கும் இடத்திற்கும் அதிக தூரம் இருந்தால் மாணவர்கள் சோர்ந்து விடுவார்களாம். அதனால் அவர்களின் கற்றல் பாதிக்கப்படுமாம்.(என்னாங்கடா ஒங்க தர்மம்?) மேலும் குழந்தைகளின் பெற்றோர்கள் பட்டப்படிப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும் என்று சில பள்ளிகளில் எழுதப்படாத சட்டமே உள்ளது.(ஆமா… நீங்க சொல்லித்தர்றது பிள்ளைக்கா…?பெத்தவங்களுக்கா…?) பெற்றோர்கள் படித்திருந்தால்தான் வீட்டில் பாடம் சொல்லித்தருவார்களாம்..(நீங்க சொல்லித் தரமாட்டீங்களா..)

தகுதியுள்ள அனைவருக்கும் ஆரம்பக் கல்வி இலவசமாகக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது அரச¤யல் சட்டமாக உள்ள ஒரு நாட்டில், தன்னுடைய குழந்தையை எல். கே. ஜி யில் சேர்ப்பதற்கே ஒரு வாரகாலமாக நடையாக நடந்து போராடி, யார் யாரையோ பிடித்து நன்கொடை அழுது, பள்ளி தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னே கல்விக் கட்டணம் கட்டி, நிம்மதிப் பெருமூச்சு விடுகிற நடுத்தர வர்க்கத்துப் பெற்றோர்களை அனைத்து தனியார் பள்ளி வாசலிலும் காணலாம். இன்று ஓரளவு சுமாராக உள்ள மெட்ரிக் பள்ளிகள் யாவுமே ஆண்டுக்கு சராசரியாக ஒரு மாணவரிடம்  இருபதாயிரம் ரூபாய¢ வரையில் கட்டணமாகக் கறந்து விடுகின்றன.

”கிராமப் புறங்களில் உள்ள மெட்ரிக் பள்ளிகள் எல். கே. ஜி. கட்டணமான மாதம் ஒன்றுக்கு ரூபாய் ஐம்பதும், ஆரம்பக் கல்விக் கட்டணமான ரூபாய் நூறும் மேல்நிலைக் கல்விக் கட்டணமாக ரூபாய் முந்நூறு வரையில் வசூலித்துக் கொள்ளலாம். இதுவே நகர்புறமாக இருந்தால் முறையே நூறு, நூற்றி ஐம்பது, நாநூறு என்றும், மாநகராட்சிப் பகுதியாக இருந்தால் நூற்றி ஐம்பது, இருநூறு, ஐநூறு என்றும் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம்” என்று 2003-ம் ஆண்டு பரிந்துரை செய்த சிட்டிபாபு கமிட்டியின் பரிந்துரைகள் என்னாயிற்று? 

”பெறப்படும் கல்விக் கட்டணத்தில் எழுபது விழுக்காடு தொகையை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியமாக வழங்க வேண்டும்.” என்றும் சிட்டிபாபு கமிட்டி பரிந்துரை செய்தது, இதையும் காற்றோடு  விட்டுவிட்டனர் நமது ஆட்சியாளர்கள். மெட்ரிக் பள்ளிகளின் கல்விக் கொள்(ளை)கையில் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் நலன் பற்றி சிறிதும் அக்கறையில்லை. ஒரு பள்ளி தனது ஆசிரியர்களை அதிகபட்சமாக மூன்றாண்டுகளுக்கு மேல் வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. நாளிதழ்களில் பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர்கள் தேவை என்ற விளம்பரத்தை என்பது விழுக்காடு பள்ளிகள் வெளியிட்ட வண்ணம் உள்ளன. மூன்றாண்டுகளுக்கு மேல் ஆசிரியர்களை வைத்தக் கொண்டிருந்தால் அவர்களுக்கு ஊதிய உயர்வும் பிற சலுகைகளும் செய்து தர வேண்டும். எனவே வகுப்பில் மாணவர்கள் தோல்வியடைந்தாலும் மதிப்பெண்கள் குறைந்தாலும்  அதையே காரணமாகக் காட்டி சம்மந்தப்பட்ட வகுப்பின் ஆசிரியரை ‘நடையைக் கட்ட’ வைத்து விடுகிறார்கள். அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களின் என்று சொல்லிக் கொள்ளுபவர்களுக்க இந்த ‘அத்தக் கூலி ‘ வாத்தியார்களின் நிலை தெரியாமல் போனதேனோ…?

இது  ஒரு புறமிருக்க, நகரங்களிலிருந்து இருபது முப்பது மைல் தள்ளியுள்ள அரசுப் பள்ளிகள் எந்த சலனமுமின்றி அரை மயக்கத்தில் இருக்கின்றன. பள்ளி தொடங்கப்பட்ட பின் மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டிருந்தாலும் பள்ளிக்கு வரும் ஆசிரியப் பெருமக்கள் தங்களின் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்ப்பதற்கான பணியில் இருப்பதால் கிராமத்தானின் பிள்ளைகளை இழுத்தடித்தக் கொண்டிருக்கிறார்கள். போனால் போகிறது என்று பெரியமனது வைத்து ஆளுக்கொரு நாள் பள்ளியைப் பார்த்தக் கொள்கிறார்கள். அதுவும் மதியம் வரை மட்டுமே. (இதுதான் கூட்டணி தர்மமோ….?) அரசு நிறுவனங்களில் பணியாற்றுவோர் தங்களுடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதும், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் படிப்பதும்  நமது நாட்டிலுள்ள எதிரெதிர் முரன்பாடுகள். இதை விளக்குவதற்கு எந்த கோனார் விளக்கவுரையும் தேவையில்லை.  பணம் கட்டமுடிந்தவர்கள்  தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள்.  பணம் கட்ட முடியாதவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.

தாய்மொழிக் கல்வி குறித்தும், சமச்சீர் கல்வி குறித்தும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பல அறிஞர் பெருமக்களின் பிள்ளைகளெல்லாம் சத்தமின்றி ஆங்கில வழிக் கல்வியைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். சமச்சீர் கல்வி தொடர்பாக விவாதங்கள் நடந்னு கொண்டிருந்தபோது பத்திரிகையாளர் ஞாநி ”அரசின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்க வைக்க வேண்டும். அங்குள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளின் தரம் உயரும்” என்றார். இதை யாரும் சட்டை செய்ததாகக் கூடத் தெரியவில்லை.

காமராஜர் காலத்தில் ஐநூறு மக்கள் தொகையுள்ள கிராமத்திலெல்லாம் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டபோது, பள்ளிக்கூடம் கட்ட இடம் கொடுத்ததோடு வெளியூரில் படித்துக் கொண்டிருந்த தங்களது பிள்ளைகளை அழைத்து வந்து உள்ளூர் பள்ளிகளில் படிக்க வைத்தார்களாம் அந்தக் காலத்து அரசியல்வாதிகள் (அதெல்லாம் ஒரு கனவு மாதிரியான காலம்பா..)

சமச்சீர் கல்வியின் சாத்தியங்களை ஆராயுமுன்பு தமிழகத்தில் நடைமுறையில் உள்ள  கல்வி முறை பற்றித் தெரிந்த கொள்வது அவசியம். தமிழகத்தில் பள்ளிக் கல்வியை ஐந்து வகையாகப் பிரித்துள்ளனர் அவை

1. மாநில அரசின் பாடத்திட்டத்தைப் பின் பற்றும் பள்ளிகள்

ஊராட்சி ஒன்றிய அளவில் உள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளும், நகராட்சி- மாநகராட்சி அளவில் உள்ள தொடக்க,  உயர், மேல்நிலைப் பள்ளிகளும் இதில் அடக்கம் தொடக்கப் பள்ளிகளில் எந்த கட்டணமும் கிடையாது.  6,7,8 ஆகிய வகுப்புகளுக்கு  முப்பத்தி இரண்டு ரூபாய் கட்டணமும் 9,10 ஆகிய வகுப்புகளுக்கு நாற்பத்தி ஏழு ரூபாய் கட்டணமும்  பெறப்படுகின்றன. இவை தவிர அரசு உதவி பெறும் பள்ளிகளும் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுகின்றன. மேற்சொன்ன கட்டணங்களில் சில முன் பின் இருந்தாலும் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது. தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் இப்பள்ளிகளை நம்பியே உள்ளனர்.

2. ஓரியண்ட்ஸ் பள்ளிகள்

அரசுப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் அதே பாடத்திட்டத்தோடு தமிழுக்குப் பதிலாக சமஸ்கிருதம், உருது, அரபி போன்ற மொழிகள் கற்பிற்கப்படுகின்றன. தமிழகத்தில் நாற்பதுக்கும் குறைவாக எண்ணிக்கை கொண்டவை இப்பள்ளிகள்.

3. ஆங்கிலோ- இண்டியன் பள்ளிகள்

ஆங்கிலோ இந்தியப் பிரிவு மக்களின் பிள்ளைகளுக்காக ஏற்படுத்தப்பட்டவை. இவையும் ஐம்பது பள்ளிகளுக்கும் குறைவாகவே உள்ளன.

4. CBSF -மத்திய அரசுப் பள்ளிகள்

மாநிலம் விட்டு மாநிலம் செல்லக்கூடிய பணியாளர்களின் குழந்தைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசால் இயக்கப்படும் இப்பள்ளிகளின் எண்ணிக்கையும் குறைவே.

5. நர்சரி மெட்ரிக் பள்ளிகள்

சாலைகள், போக்குவரத்து, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் எட்டிப் பார்க்காத புறநகர் பகுதிகளிலும், வளர்ந்துகொண்டிருக்கும் கிராமங்களிலும், பற்றீசலாய் முளைத்துக் கொண்டிருப்பவை. தமிழகத்தில் ஏறத்தாழ ஐயாயிரம் பள்ளிகள் (அனுமதி பெற்றவை மட்டும்) இருப்பதாகக் கூறப்படுகிறது. தனியாரால் கட்டப்பட்டு, தனியாரால் ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டு, கல்விக் கட்டணத்தையும் நிர்வாகிகளே முடிவு செய்து, நன்கொடைகளைப் பெற்றுக் கொள்ளும் ஏக போக உரிமை கொண்டவை இப்பள்ளிகள்.

மேற்கண்ட அனைத்துப் பள்ளிகளின் பாடத்திட்டங்களிலுமுள்ள நல்ல செயல்களை ஒருங்கிணைத்து, தமிழக மாணவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு கல்வி முறையை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் நமது தமிழக அரசு உள்ளதாக அதன் அமைச்சர் பெரு மக்களும் ஆட்சியை வழி நடத்திக்கொண்டிருக்கும் கட்சிக்காரர்கள் அனைவரும் தெருவெல்லாம்… ஊரெல்லாம்… தமிழ்நாடெல்லாம் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள் (எப்பப்பா சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப் படுத்துவீங்க?)

தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளுக்கான அனுமதி கொடுக்கப்படும் அதே நேரத்தில் மாணவர்களின் வருகைக்குறைவைக் காரணம் காட்டி பத்து விழுக்காடு மாநகராட்சிப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

வளரும் நாடுகளில் பள்ளிக் கல்வியை முடித்து விட்டு உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 20 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. மாறாக நமது நாட்டில் அது வெறும் எட்டு விழுக்காடாகவே உள்ளது. உயர்கல்விக்கான செலவு அதிகரிப்பதாலும், பள்ளிக் கல்வியின் தரத்தில் நகர்புறத்திற்கும் கிராமப்புறத்திற்கும் வேறுபாடு இருப்பதுவுமே இந்த நிலைக்குக் காரணம்.

ஐந்த வயதிலிருந்து ஒன்பது வயது வரையுள்ள குழந்தைகளில் 56 விழுக்காட்டினரே தற்போது பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் மூன்று கோடிக் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படுவதில்லை. பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளில் எட்டாம் வகுப்பு முடிக்கும் முன்பே 52 விழுக்காடு குழந்தைகள் பள்ளிப்படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். அதுவும் தமிழ்நாட்டில் முதல் வகுப்பில் சேரும் 14 லட்சம் குழந்தைகளில்  பனிரெண்டாம் வகுப்புத் தேர்வெழுதுபவர்கள் 5.5 லட்சம் பேர்தான். ஏறக்குறைய 7.5 லட்சம் குழந்தைகள் இடையில் நின்று விடுகிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க ”அனைவருக்கும் இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி கொடுக்க நம்மிடம் நிதியாதாரம் இல்லை” என்று மத்திய அரசு சொல்கிறது. தற்போது கல்விக்கான  ஆண்டு நிதி ஒதுக்கீடு 46,000 கோடிகள் எனவும் ஆறிலிருந்து பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்கக் கூடுதலாக 36 ஆயிரம் கோடிகள் தேவை என்றும், இது சாத்தியமில்லை என்றும் மத்திய அரசு கையை விரிக்கிறது. ஆனால் இதே அரசுதான் 2004-ம் ஆண்டு  தனது குறைந்த பட்ச செயல் திட்டத்தில் அரசின் மொத்த வரவு செலவுத் திட்டத்தில் ஆறு விழுக்காடு கல்விக்காக படிப்படியாக உயர்த்தப்படும் என்று அறிவித்தது.  ஆறு விழுக்காடு ஒதுக்கினாலே அது 99,000 கோடியைத் தொடும். ஆண்டொன்றுக்குத் தேவை 82 ஆயிரம் கோடிதான். ஆனால் ஆறு விழுக்காடு ஒதுக்கீடு என்பது வெறும் அறிவிப்பாக மட்டுமே நின்று போனது. அதற்கு அடுத்த ஆண்டில் ஏற்கனவே கல்விக்கான நிதி  ஒதுக்கீடாக இருந்த 3.81 விழுக்காட்டை 3.54 ஆகக் குறைத்து ஏதோ தன்னால் இயன்ற கல்விச் சேவையை(?) இந்த அரசும் செய்தது.

ஒரு பக்கம் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவை மத்திய அரசும் மாநில அரசும் படிப்படியாகக் குறைத்துக்கொண்டிருக்கும் இதே வேளையில், தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக புதுப்புது அரசாணைகளையும் பிறப்பித்துக் கொண்டுள்ளன. ஆனால் அரசு கல்வி நிலையங்கள் குறிப்பாக கிராமப்புத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையும் பாடம் நடத்தும் நேரமும் கேலிக்குரியதாகவே உள்ளது.

சமீபத்தில் களப் பணிக்காகச் செல்லும் போது  பேருந்துக்காக ஒரு தொடக்கப் பள்ளி முன்பு  காத்திருந்தேன். அந்தப் பள்ளியின் ஆசிரியை,  மாணவர்களைச் சத்தம் போடாமல் இருக்கச் சொல்லி விட்டு தன்னுடைய அலைபேசியில் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசிக்கொண்டிருந்தார். பேசி முடித்தபின் ”சத்தங்காட்டாம இருந்து தொலைய மாட்டிங்களா.. சனியன்களே…” என்று கூப்பாடு போட்டபடியே வகுப்புக்குள் சென்றார். கற்பிக்க வேண்டிய நேரத்தில் கற்பிக்காமல் இருந்தவர், தனது தவறுக்கான குற்றவுணர்வின்றி மாணவர்களைச் சபிக்கிறார். ஆனால் தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் செல்போனை எடுத்துச் செல்வதற்கே பல பள்ளிகள் தடை போட்டுள்ளன. அரசுத்துறை சீரழிந்து கொண்டிருக்கிறது என்று கூப்பாடு போட்டுவிட்டு நாம் சகலத்திற்கும் தனியார் துறையையே தேர்ந்தெடுக்கிறோம். ஒரு பாதை சரியில்லை என்றால் அதை சரி செய்யாமல் புதுப்பாதையைத் தேர்ந்தெடுக்கப் பழ(க்)கிக் கொண்டோம். எல்லா நேரத்திலும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் மாற்றுவழி என்பது சரியான தீர்வாகாது. ”நீ செல்லும் பாதையில் முள் நிறைந்திருந்தாலும், அம்முள் மிதித்து உன் பாதங்களில் ரத்தம் வழிய முன்னேறிச் செல்” என்று தாகூர் சொன்னது வெறும் அலங்காரமல்ல; அவசியமானது.

தன்னுடைய பிரஜைகளுக்குச் சாராயம் ஊத்திக் கொடுத்த வகையில் தனக்குக் கிடைத்த லாபம் ஓராண்டில் எட்டாயிரம் கோடி ரூபாய் என்று அரசாங்கம் சிறிதும் வெட்கமில்லாமல் கணக்குக் காட்டுகிறது. மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று சொல்லிக்கொண்டு, அரசாங்கமே ஊத்திக்கொடுத்துக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் கல்விக் கட்டணம் கட்ட வழியில்லாமல் நகரங்களின் அடித்தட்டு மக்களின் குழந்தைகள் தொழிலாளர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலக் கல்வி மோகத்தில் கும்பகோணம் பள்ளியில் குழந்தைகள் மடிந்தது போதாதா…? கல்வி தனியார் மயமாக்கப்பட்ட பிறகு அங்கு இட ஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லை. காசிருந்தால் கற்றுக்கொள். காசில்லாவிட்டால் விலகிக் கொள். என்ற முழக்கத்தோடு பணப் பசியெடுத்து அலைந்து கொண்டிருக்கும் கல்வித் தந்தைகளிடமிருந்து  ஏழை எளிய மக்களை காப்பாற்ற வேண்டியது ஓர் அரசாங்கத்தின் கடமையல்லவா?

”நாட்டில் முப்பது விழுக்காட்டிற்கும் அதிகமான பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், இருபது விழுக்காடு பள்ளிகள் ஓர் அறையில் மட்டுமே நடைபெறுகிறது என்றும் தேசிய மாதிரி ஆய்வு மையம் தெரிவித்துள்ள சூழலில், அரசாங்கம்  தனது கல்விக் கொள்கைளில் உடனடி மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். மைய அரசு தனது மொத்த வரவு செலவுத் திட்டத்தில் ஆறு விழுக்காட்டை ஒதுக்கவேண்டும். மாநில  அரசுகள் பள்ளிகளுக்குத் தேவையாக அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கித் தரவேண்டும். பற்றாக்குறையுள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்க வேண்டும். கல்வியின் தரம் குறித்த ஆய்வை நிகழ்த்துவதோடில்லாமல் தரம் குறையும் பள்ளிகளின் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.   கிராமப்புறங்களில் குறித்த நேரத்தில் பள்ளிகளைத் திறக்காத, பள்ளிகளுக்குச் செல்லாத, பாடம் நடத்தாத ஆசிரியர்கள் மீது கூட்டணி பாராபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயரளவில் – விவாத அளவில் உள்ள சமச்சீர் கல்வியை இனியும் காலம் தாழ்த்தாது நடைமுறைப்படுத்த வேண்டும்

இலவசக் கல்வி வழங்கிய காரணத்தாலே ஐம்பதாண்டுகள் கடந்த பின்பும் கல்விக்கண் திறந்த காமராஜர் என மூன்றாம் தலைமுறையும் அவரை அழைக்கிறது. சமச்சீர் கல்வியை ஏற்படுத்தி, கல்வி நிலையங்களில் ஏற்ற தாழ்வுகளை அகற்றி, எல்லோருக்கும் கல்வி கிடைக்கச் செய்தால் அடுத்த தலைமுறையும் உங்களை வாழ்த்தும்

சீனாவிலே ஒரு பழ மொழி உண்டு

”ஓராண்டுக்குத் திட்டமிட வேண்டுமா..

நெல்லை விதையுங்கள்.

பத்தாண்டுகளுக்குத் திட்டமிட வேண்டுமா…

மரம் நடுங்கள்.

நூறாண்டுக்குத் திட்டமிட வேண்டுமா..

கல்வியைக் கொடுங்கள்”

ஆமாம். எங்களுக்கு தரமான கல்வியைக் கொடுங்கள்.

(சூன்-2009 பசுமைத்தாயகம் சுற்றுச்சூழல் இதழில் வெளியான கட்டுரை)

Advertisements