You are currently browsing the category archive for the ‘சமூகம்’ category.

 

 

ஈஸ்வரனைக் காணும் போதெல்லாம் எனக்கு சந்தோசமாக இருக்கும். இவ்வளவு சின்ன வயதில் அரசியலில் அதுவும் ஒரு பிரபலமான கட்சியில் இணைந்து ஒன்றியக் குழு  உறுப்பினராகி, தன்னைத் தேர்ந்தெடுத்த பகுதி மக்களுக்காய் அவன் பணி செய்வதை நான் ரசித்திருக்கிறேன்.  படித்து விட்டு வேலையில்லாமலிருந்த  இளம்வயதில்  நாங்கள் பொழுது போக்காய் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டலைந்து திரிந்தோம். சுவர்களில் சின்னம் வரைவதில் தொடங்கி,  தேர்தல் நாளில் வாக்குச் சாவடியில் முகவராய் உட்காருவது வரையில் எல்லாப் பணிகளுக்கும் நாங்களே பொறுப்பாளிகள். எங்களை அரசியல் கட்சிக்காரர்கள் தேவையான அளவுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் எங்களில் ஒருவரும் அரசியல் கட்சியில் பதவிகளுக்கு வந்ததில்லை.

 

ஈஸ்வரனின் வளர்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. திருவிழாவுக்காய் சொந்தவூர் சென்று திரும்பும் போதெல்லாம் “அண்ணே வணக்கம்“ என்று கரகரத்த குரலில் பேசி வரவேற்பான். அவனோடு எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும்.

 

ஒரு திருவிழாவுக்காய் ஊருக்குச் சென்றபோது ஈஸ்வரன் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் சிரித்தபடி காட்சி தந்தான். அவனது இறப்பு என்னால் ஜீரனிக்க முடியாததாய் இருந்தது.  துக்கம் விசாரிக்க அவன் வீட்டுக்குப் போன போது “படிச்சு முடிச்ச கையோடு ஒழுங்கா ஏதாவது கம்பெனியில வேலைக்குச் சேர்ந்து கல்யாணம் காட்சின்னு வளர வேண்டியவன் இப்படி அரசியலுக்குள்ள போயி குடி.. கூத்தியா.. கும்மாளமுன்னு  கதைய முடிச்சிட்டானே…”  என்று ஈஸ்வரனின் தந்தை புலம்பினார்.

 

அங்கிருந்து வந்து இரண்டு மூன்று நாட்கள் “அரசியல், குடி, கும்மாளம், கூத்து“ என்ற வார்த்தைகள் மட்டும் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது. அரசியலுக்கு வரும் இளைஞர்கள் எல்லாம் குடிகாரர்கள் ஆகிறார்களா…? குடிகாரர்களாவதற்காகவே அரசியலுக்கு வருகிறார்களா…? என்ற விவாதம் தமிழகம் முழுவதும் மட்டுமல்ல..  தேசிய அளவில் விவாதிக்க வேண்டிய கேள்வி.

 

அரசியல் என்பது அகில  உலக சுரண்டல்வாதிகளின் குருகுலமாகிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு இளைஞர்கள் பொறுப்பேற்பது ஆரோக்கியமான நிலைதான். ஆனால் அவர்களின் பணிகளும் பண்புகளும் ஆரோக்கியமாக உள்ளதா…? நாடு முழுவதுமுள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளில் 45 வயதுக்குக் கீழே உள்ள ஆண் பிரதிநிதிகளில் அரசு மதுபானக் கடைக்குச் செல்லாத அப்பாவிகளின் எண்ணிக்கை  மிகமிகக் குறைவு.

 

நமது  தேசத்தில் உள்ள இளைஞர்களின் மதுப் பழக்கம் தொடர்பாக  சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் கல்லூரிகளில் தங்கிப் படிக்கும் இளைஞர்கள் உள்பட 19 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் மது அருந்துவது சமீப ஆண்டுகளில் 60 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாகவே தமிழக, “டாஸ்மாக்’ நிறுவனத்திற்கு அரசு நிர்ணயம் செய்த இலக்கையும் தாண்டி மது விற்பனை நடைபெற்றுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேண்மை தாங்கிய நமது தமிழக அரசால் கடந்த 2003 நவம்பர் முதல் தமிழகத்தில், “டாஸ்மாக்’ மூலம் மது விற்பனையை அரசாங்கமே நடத்தும் என்ற புனிதப் பணி தொடங்கப்பட்ட பிறகு ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனையில் 2,000 கோடி ரூபாய் வரை அதிகரித்து வருகிறது. இதனால் அரசும் மது இலக்கு விற்பனையை தொடர்ந்து அதிகரித்து வந்தள்ளது. நிர்ணயிக்கப்படும் இலக்கையும் தாண்டி மது விற்பனையில் சாதனை படைக்கப்பட்டும் வருகிறது. தமிழகத்தில் 7,434, “டாஸ்மாக்’ கடைகள் மூலம் மது விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த மது விற்பனைக் கடைகளில் விற்பனையாளர், கடை மேற்பார்வையாளர், ஏரியா சூப்பர் வைசர் என 34 ஆயிரத்து 323 பேர் பணி செய்து வருகின்றனர். இவர்கள் எல்லோரும் இளைஞர்கள் என்பதும், இந்தப் பணிக்கு வருவதற்கு முன் இவர்களில் 70 விழுக்காட்டினர் சாராய வாசனையையோ… சாராயக் கடைகளையோ பார்த்தறியா அப்பாவிகள் என்பதும், தற்போது பணி நிமித்தம் கட்டாயம் குடித்தே தீர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் என்பதும் உண்மை. நாளது தேதி வரையில் நமது அரசாங்க மதுபானக் கடைகளில் தினம் தோறும் சராசரியாக 1.35 லட்சம் பெட்டிகள் ஐ.எம்.எஃப்.எல்., மது பானங்களும், 75 ஆயிரம் கேஸ்   ( ஒரு கேஸில் 12 பாட்டில்) பீர் பாட்டில்களும் விற்பனை செய்யப்படுகிறது. வார நாளில் சாரசரி விற்பனை அளவு 52 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. இதுவே சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மது விற்பனை சராசரியாக 57 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விழா நாட்களின் சராசரி மது விற்பனை 92 கோடி ரூபாய் வரை நடந்துள்ளது.

 

நிலமை இப்படி இருக்க நாம் இளைஞர்களை குடிக்க வேண்டாம் என்று எப்படிச் சொல்ல முடியும்? குடி தொடர்பாக நாம் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாலும் மதுபானக் கடைகளை அடைக்கும் மனம் இந்த கட்டுரை வெளியாகும் நாளிலாவது அரசுக்கு வரும் என்று நம்பிக்கை கொள்வோம். இங்கு நாம் எதிர்கால சமுதாயத்தை தலைதாங்கி வழிநடத்த வல்ல இளைய தலைமுறை பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.  (எதைத் தொட்டாலும் அது சாராயக் கடைக்கே நம்மை இழுத்துச் செல்கிறது)

 

இளைஞர்கள் அரசியலில் ஈடுபடலாகாது. மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது.  வந்தால் அவர்கள் கெட்டுப் போவார்கள் என்று சில முன்னுதாரனங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி  இளைய பாரதம்  அரசியல் அறிவில்லாமல் போனதற்கு யார் காரணம்….? கல்லூரிகளில் பயிலும் மாணவர் கூட்டமோ,  அரசியலுக்கு வர விரும்பவில்லை. காரணம் அது ஒரு சாக்கடை, விழுந்தால் எழுந்திருக்க இயலாது, என்று குருட்டுத்தனமாக மூக்கைப் பொத்துகிறார்கள். கல்லூரி செல்லாத சொந்தத் தொழில் செய்யும் இளைஞர்களோ அரசியலுக்கு வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்ற பயத்தால் தள்ளி நின்று கொள்கிறார்கள்.  படித்தவர்களும் சமுதாயத்தின் மீது மதிப்பு கொண்டவர்களும் தள்ளி நிற்பதால் கழிசடைகள் எல்லாம் சட்டசபைக்குச் செல்கின்றன. அரிதாரங்கள் எல்லாம் அவதாரங்களாய் கற்பனை செய்து கொண்டு அலைகின்றன

 

விடுதலைக்கு முன்னர் வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒட்டு மொத்த இலக்கு இருந்ததால், இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு எழுந்தனர். விடுதலைக்குப் பின்னர் அத்தகைய இலக்குகள் எதுவும் இல்லாததால், அல்லது உருவாக்கப் படாததால், பெரும்பாலான இளைஞர்கள், அன்றாட அரசியலுக்கு வெளியிலேயே நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர். தற்போதைய தலைமுறையினருக்கு, அரசியல் அவ்வளவு பிடித்தமான விஷயமாக இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. உளவியல் ரீதியாகவே அரசியல் என்பதை, தங்களுக்கு தொடர்பற்ற ஓர் அற்ப உலகமாகப் பார்க்கும் போக்கு இளைஞர்கள் மத்தியில் உருவாகி உள்ளது.

இதற்கு காரணம் நம்முடைய நடைமுறை அரசியல்தான். அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், ஆட்சியைப் பிடிப்பதுமான புற அதிர்வுகள் மட்டுமே அரசியலாக இளைய தலைமுறையினருக்கு அடையாளம் காட்டப்படுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உண்மையான அரசியலின் பக்கம் இருந்து இளைஞர்களின் கவனத்தை திசை திருப்பும் இத்தகைய சாகசங்கள்,  இனிதே நிறைவேறி வருகின்றன.

மூன்றாம் உலக நாடுகள் அனைத்தையும், சிந்தாமல் சிதறாமல், நுகர்வு பொருளாதார பாதைக்குள் செலுத்திவிட வேண்டும் என்பதில், பெரிய அண்ணன்களான வளர்ந்த நாடுகள் கங்கணம் கட்டி செயல்படுகின்றன.

சுயச்சார்பு, உற்பத்தி சார்ந்த வளர்ச்சி, பொதுத்துறை நிறுவனங்களை வலிமைப்படுத்துதல், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்பட்ட வகுப்பினருக்கு அரசியல், சமூக, பொருளாதார பாதுகாப்பிற்கான உத்தரவாதம் போன்றவைதான் உண்மையான அரசியலின், அடிப்படையான பிரச்சனைகள். தனிமனித போட்டியையும், நுகர்வு வேட்கையையும் வளர்த்தெடுப்பதன் மூலம், இத்தகைய பிரச்சனைகளில் இருந்து, இளைஞர்களின் கவனம் வேறு திசைக்குத் திருப்பப்படுகிறது. அதனால்தான் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான  போராட்டங்கள் குறைந்து கொண்டேயிருக்கிறது.

உலகம் முழுவதும், ஒரு வேதிவினையைப் போல் நிகழ்ந்துவரும் இத்தகைய அரசியல் அகற்ற நடவடிக்கை, இந்தியாவில் சற்று விரைவாகவே அரங்கேறி வருகிறது. சுருக்கமாக  சொல்லப்போனால், இன்றைய இளைஞர்களின் மூளையில் இருந்து, அரசியல் முற்றிலுமாக அகற்றப்பட்டு ஒரு நாடு கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றப்படுகிறது என்பதைத் தவிர, சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை

“படித்த இளைஞர்கள் அதிக உடல் உழைப்பில்லாத நாகரிகமான சூழ்நிலை இருக்க கூடிய, தன்னை பிறர் மதிக்க கூடிய இடத்தில்தான் பணிபுரியவிரும்புவார்கள். அரசியலில் அப்படி ஒரு நிலையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், அரசியல் என்பது கடின உழைப்பைக் கொண்டது. அதில் நுழையும் வழி நேர்வழியாகவும் இருக்கலாம். தவறான வழியாகவும் இருக்கலாம். ஆனால் அதற்கும் பல இடர்களைக் கடந்தாக வேண்டும். கீழ்த்தர விமர்சனங்களைக் கூட சகித்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். படித்தவர்களிடம் இந்த சகிப்புத்தன்மையை எதிர்பார்க்க முடியாது. எனவே, அதற்கெல்லாம் துணிந்தவர்கள் மட்டும்தான் அரசியலில் தலைதூக்க முடியும். ஒருவேளை அரசியல் என்பது பன்னாட்டு நிறுவன வேலை போலவோ, அலுவலக உத்தியோகம் போலவோ ஆக்கப்பட்டால் படித்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடும்.“ என்று படித்த மேதாவிகளாகத் தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்டு திரியும் ஒரு வட்டம் எல்லா ஊடகங்களிலும் இந்தக் கருத்தைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படியானால் அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் படிக்காதவர்களா….? தற்போது அரசியலில் உள்ள எல்லோரும் ஊதாரிகளா….? வேலை வெட்டி இல்லாதவர்களா…? நல்லவர்கள் இல்லையா….? யாரும் யாரையும் விமர்சிக்கக் கூடாது என்பதுதான் நமது கல்வி முறை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் பாடமா….?  இளைய தலைமுறையினருக்குள் மெல்லத் தலைதூக்கும் அரசியல் பற்றிய ஆர்வத்தை காயடிக்கும் நோக்கில் பரப்பப்படும் நச்சு வார்த்தைகள் இவை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. படித்த இளைஞர்கள் அரசியல் பக்கம் வந்து விட்டால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அல்லக்கை வேலை பார்க்க ஆளிருக்காது. அவர்களது கடையை இங்கிருந்து துடைத்தெடுத்துக் கொண்டு ஓட வேண்டும். அதனால்தான் படித்தவர்கள் அரசியலுக்கு  வரக்கூடாது என்பதை போதிப்பதற்காகவே ஒரு கூட்டத்திற்கு மதிப்பூதியம் தந்து வைத்திருக்கின்றன இந்நிறுவனங்கள்.

வருங்கால அரசியல் இளைஞர்களின் பங்கேற்பு இல்லை என்றால், மிகச் சிறந்த அரசியலாக இருந்தாலும், எதிர்காலத்தை இழந்து விடும். உலகில் இளைஞர்களிடம் அரசியல் பேசிய தலைவர்களின். அரசியல் உரைகள் உலகப் புகழ் பெற்றது,  லெனின், மா சே துங், சேகுவேரா, போன்ற தலைவர்கள் தங்கள் நாடுகளில் புரட்சிகர நடவடிக்கைகளின் போதும், புரட்சியின் வெற்றிக்குப் பிறகும் அதிகளவில் இளைஞர்களிடம் பேசினார்கள்.

அக்டோபர் 2, 1920ல் லெனின், கம்யூனிஸ்ட் இளைஞர் கழக ஊழியர்களிடம் உரை நிகழ்த்தும் போது   ‘‘புரட்சிக்கு முந்தைய முதலாளித்துவ சமூகம் உருவாக்கி வைத்த கண்டு பிடிப்புகளை, தொழில் நுட்பத்தை, நல்ல அம்சங்கள் எனப்படும் அனைத்தையும், இளைஞர்கள்  கற்றுத் தேர வேண்டும்“ என வலியுறுத்துகிறார்.

இளைஞர்களின் பங்களிப்பு அதிகார மாற்றத்துடன் நின்று விடக்கூடாது. இளைஞர்கள் சமூக ஆக்கத்திற்கான பணிகளில் முன்நிற்க முடியும் என்பதை அறிவியல் பூர்வமாக உணர்ந்திருந்த காரணத்தாலேதான் இன்றும் இத்தலைவர்கள்  தங்களின் புகழால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

”ஒரு நாடு வளர்ச்சி பெற இளைஞர்களிடம் முதலீடு செய்ய, அரசுகள் முன்வர வேண்டும்” என்பதே உலகளாவியக் கருத்து. இதன் இடிப்படையில்தான் இளைஞர் நலம், இளைஞர் மேம்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய துறைகள் நமது ஆட்சி அமைப்பில் உள்ளது. இளைஞர் நல மேம்பாட்டுத் துறையின் அமைச்சர்களாக நமது அரசுகள்  முதியவர்களையே நியமித்து நமது தேசத்தில் உள்ள முதியோர்களின் எண்ணிக்கையை உலகினுக்கு எடுத்தியம்பும் பணியை மிகச் சிறப்பாகச் செய்கின்றன.

ஆனால் உலகிலேயே மிக அதிகமான இளைஞர்களைக் கொண்டிருக்கும் நாடு இந்தியா என்பதும், . இங்கிருக்கும் அரசியல் இயக்கங்களோ, முதலாளித்துவ இளைஞர் இயக்கங்களோ, இளைஞர்களைத் தொலை நோக்குப் பார்வையுடன் அனுகுவதற்கு மாறாக இளைஞர்களின் உணர்ச்சி வேகத்தை மட்டும் பயன் படுத்துகின்றனர் என்பதும், உலகறிந்த உண்மை.

காஷ்மீரத்து போராட்டங்கள், வடகிழக்கு மாநிலங்களின் போராட்டங்கள், மாவோயிஸ்டுகள் போராட்டங்கள் ஆகிய அனைத்தும், இளமையின் வேகத்தைப் பயன் படுத்திக் கொள்ளும் சிந்தனையில் கருக் கொண்டதே. இளைய சக்தியை அரசாங்கம் முறையாக பயன்படுத்தாவிட்டால் அதை தவறாகப் பயன்படுத்த ஒரு கூட்டம் தயாராக இருப்பதும் நாமறிந்த செய்திதான்.

இன்றைய இந்திய சூழ்நிலையில், இளைஞர்கள் ஏன் அரசியலில் ஈடுபட வேண்டும்? என்ற பகத்சிங் எழுதிய கட்டுரை, சில விளக்கங்களை முன் வைக்கிறது. இன்றைய அரசியலில் புரட்சி புரட்சி என்று பேசுவோர்க்கும், , சமூக மாற்றம் அரசியலுக்குமான வித்தியாசத்தினை தெளிவுபடுத்துகிறது. ஊழல் குற்றச்சாட்டுகள் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. பணத்தை விதைத்து, நாற்காலிகளுடன், நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் செல்வது எளிது, என்ற அரசியல் வியாபாரம் கண்டு, அதிருப்தி கொள்வது நியாயமே. அதிருப்தி காரணமாக அரசியல் வனவாசம் கொள்ள முடியாது.

இளைஞர்களை வசீகரிக்கும் ஒட்டு மொத்த அரசியல் மையமாக எந்த தலைமையும் இல்லை என்பதும் அப்படிப்பட்ட ஒரு தலைமை காலத்தின் கட்டாயத் தேவை என்பதும், தன்னலம் கருதாத் தலைமை ஒன்று கருக்கொள்ள வேண்டும் என்பதும் வெளிப்படையான உண்மை.

இந்தியாவில் அகில இந்திய அளவில் மட்டுமல்ல பிராந்திய அளவிலும் கூட, ஒரு விதமான அரசியல் வெற்றிடமே எங்கும் வியாபித்திருப்பதைக் காணமுடிகிறது. ஊழலும், சுரண்டலும் இளைஞர்கள் மத்தியில் ஒருவிதமான அரசியல் விரக்தியை ஏற்படுத்தி இருப்பது உண்மைதான். ஆனாலும் ஊழலை ஒழிக்கும் முழக்கத்தையே அரசியலாகத் திரட்ட முடியாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அழுத்தமான தத்துவ அடிப்படைகள் இன்றி கட்டி எழுப்பப்படும் அரசியல் இயக்கங்கள், அர்த்தமற்ற நீர்க்குமிழிகளாக, காலப்போக்கில் கரைந்து போகும் நிகழ்வுகளை, வரலாறு நெடுகிலும் பார்க்க முடிகிறது. மக்கள் தங்களுக்கு எந்த கட்சியால் லாபம் என்று பார்க்கத் துவங்கிவிட்டனர். .தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் குறிப்பிட்ட ஒரு படிப்புப் படித்து, வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் அல்லது தங்கள் தொழிலைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதைப் போலவே  அரசியல்வாதிகளும் தங்கள் பிள்ளைகள் அவர்களுடைய குலத்தொழிலான அரசியலுக்கு வரவேண்டும்  என்று நினைக்கின்றனர். அப்படி நினைப்பது ஒன்றும் தவறில்லை என்றே படுகிறது.

இந்தியாவில் காலகாலமாய் வாரிசு அரசியலே நடந்து கொண்டிருக்கிறது. இதுமாநிலங்களிலும் நடக்கிறது. மக்களுக்கான பணியை யார் வேண்டுமானாலும் செய்ய முன் வரலாம். அப்படி வரும் இளைஞர்களாவது மாற்றுக்கருத்துடன் செயல்பட்டு, லஞ்சம் ஊழலற்ற அரசாங்கத்தை ஏற்படுத்தி, அடித்தட்டு மக்களுக்கு இலவசமல்லாத நிரந்தர நலப்பணிகளை செய்யும் நோக்கத்தோடு வர வேண்டும். அப்படிச் செய்வார்களேயானால் 2020-ல் இந்தியாவைப் பற்றின டாக்டர்.அப்துல் கலாமின் கனவுகள் அதற்கு  முன்னதாகவே கூட  நிறைவேறிவிடும்வாய்ப்புகள் உண்டு.

முதலில் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே அரசியல்,சமூகம், பொருளாதாரம் குறித்த நல்லப் பதிவை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்களும் கல்வியை வியாபாரமாகப் பார்க்கும் மனப்போக்கையும், நமக்கேன் வம்பு என்று ஒதுங்குவதையும் விடுத்து, தங்கள் பிள்ளைகளை சமூக அக்கறை உள்ள மனிதனாக, தலைச் சிறந்த அரசியல் வல்லுநராக  வளர்க்க வேண்டும். தேசப்பற்று என்பது காஷ்மீர் போரில் மரணமடைந்த வீரர்களுக்காக வருத்தப்படுவதும், நிதித் திரட்டித் தருவதும் மட்டுமல்ல; வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்களைப் பார்த்து அவர்களின் பசியையும், தேவைகளையும் போக்க என்ன வழி என்று யோசிப்பதும்தான்.

எந்த மனிதனிடத்தில் இந்த சிந்தனை பிறக்கிறதோ,அவன் தனக்காக அதிக செல்வம் தேடி அலைய மாட்டான்; அரசியலை நிச்சயம் ஒதுக்க மாட்டான்; ஊழல் போன்ற செயல்களை ஏற்க மாட்டான்.  நல்ல மனிதர்களின் பாதம் பட்டு நமது நாடாளுமன்றங்களும் சட்டமன்றங்களும் அலங்கரிக்கப்படும் நாளுக்காய் காத்திருப்போம். இந்த காத்திருப்பு அர்த்தமான காத்திருப்பாய் இருக்கும் என்றே நம்பிக்கை கொள்வோம்.

(பசுமைத் தாயகம் அக்டோபர்2012)

 

Advertisements


சென்ற வாரம் எனது சொந்த கிராமத்தின் திருவிழாவிற்குச் சென்றேன். பல வருடங்கள் நான் பார்த்துச் சலித்த நிகழ்ச்சிகளும், முகங்களுமே இருந்தாலும் ஒவ்வொரு முறையும் புதுப்புது அனுபவங்களை திருவிழாக்கள் கற்றுத் தருகின்றன. ஏனெனில் திருவிழாக்களை எந்த பஞ்சாங்கங்களும் முடிவு செய்வதில்லை. உழைக்கும் மக்களால் உருவாக்கப்பட்டுள்ள கிராமக் கமிட்டிகளே முடிவு செய்கின்றன. அவர்களுக்கு  ஏதுவாக நாட்களில் தங்கள் மண்ணின் தட்ப வெப்பத்தின் தன்மையறிந்து திருவிழாக்களை முடிவு செய்கிறார்கள். பொது மக்களின் ஏகோபித்த சம்மதங்களின் அடிப்படையிலேயே விழாக்களை நடத்துகிறார்கள்.

 

கரகம் எடுத்தல் என்ற நிகழ்ச்சிதான் கிராம திருவிழாக்களின் தொடக்க நிகழ்ச்சி. தமிழகம் முழுவதும் உள்ள எல்லா கிராமங்களுக்கும் இது பொருந்தும். மண் பாண்டத்தில் வேப்பிலையும், தென்னம்பாலையும் மல்லிகையும் மஞ்சளும் சேர்த்து, சந்தனம் குங்குமம் விபூதி வாசனையோடு அம்மன் உருவாக்கப்பட்டு நள்ளிரவில் பூசாரியின் மஞ்சள் நீராட்டத்தோடு புறப்படும் அம்மன் புறப்பாடு விடிய விடிய மக்கள் வெள்ளத்தில் நீந்தி வைகறை வேளையில் ஊர் சேரும்.  வெப்பம் தகிக்கும் வேனிற்காலத்தில் நடத்தப்படும் திருவிழாக்கள் யாவும் அறிவியல் பூர்வமாக நிகழ்ச்சிகளைக் கொண்டதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

“பக்தி என்பது ஒடுக்கப்பட்டவனின் புலம்பல்” என்பார் கார்ல்மார்க்ஸ். பெருங்கோவில்களுக்குள் சென்று கடவுளிடம் புலம்பி, தனது உளவியல் நெருக்கடியை தீர்த்துக் கொள்ள ஆதிக்க சக்திகளுக்கு உரிமையளிக்கப்பட்டிருந்தது. ஆனால் உழைக்கும் அடித்தள மக்கள் தங்களின் உளவியல் நெருக்கடியை தீர்த்துக் கொள்ளும் இடமாக சங்க காலத்தில் “நடுகல் வழிபாடு” என்றும், பின்னால் “நாட்டார் வழிபாடு” என்றும் தங்களுக்கான வழிமுறைகளைக் கட்டமைத்துக் கொண்டனர். “சென்று சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம்” எனத் திருநாவுக்கரசர் பாடியது. இவர்களின் மீது எந்தளவு வெறுப்பு இருந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. எனினும் ஒன்று மற்றொன்றின் கூறுகளை உள்வாங்கிக் கொண்டும் வரலாற்றில் பயணித்தது. கல்வி, அறிவுள்ள ஆதிக்க சக்திகள், தங்களது அனுபவங்களையும், எண்ணங்களையும் கல்வெட்டு, இலக்கியம், செப்பேடு போன்றவற்றில் பதிவு செய்தபோது, கல்வி மறுக்கப்பட்ட இவர்கள் தங்களது அனுபவங்களையும், எண்ணங்களையும், “வாய்மொழி வரலாறாகவும்”, வழக்காறுகளாகவும், சமயச் சடங்குகளாகவும், கலைகளாகவும் உருவாக்கிக் கொண்டனர். அவர்களது மனங்களின் பதிவுப்படிமங்களாக, நனவிலியில் தொன்மங்களாக, இயற்கை வாழ்வில் ஏற்படும் நெருக்கடியைத் தளர்த்தி, மீண்டும் கூட்டு மனத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் பண்பாட்டுத்தளமாக திருவிழாக்களைக் கட்டமைப்பு செய்து கொண்டனர்.

கடந்த நான்காண்டுகளாய் ஆற்றில் சாமி செய்யும் நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை. பின்னிரவு தாண்டி புறப்படும் இந்த ஊர்வலத்தில் எழுபது விழுக்காட்டினர் போதையின் உச்சத்திலிருப்பார்கள். கோவிலுக்கான தலைக்கட்டு வரி வசூலைக் காட்டிலும் டாஸ்மார்க்கடையில்  இரண்டு மடங்கு தொகைக்கு விற்பனை நடந்துள்ளது. (டாஸ்மார்க் கடையில் திருவிழா நடந்த மூன்று நாட்களில் மட்டும் மொத்த விற்பனை ஆறு லட்சத்து ஐம்பதாயிரம். திருவிழாவுக்கான வசூல் தொகை ஒரு லட்சத்து அறுபதாயிரம்.) எனவே நான் கடந்தாண்டுகளில் இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்தாண்டு நானும் சுந்தரும் கலந்து கொண்டோம். எனது நண்பர் வட்டத்தில்  பலர் மாறிப்போன பிறகும் சுந்தர் மட்டும் இன்னும்  எனக்கான எண்ணங்களோடும், பிற பழக்கங்கள் இல்லாமலிருப்பதும் ஆறுதலான ஒன்று.

 

எங்கள் ஊர்த்திருவிழாவில் ஒட்டுமொத்த சாதிக்காரர்களும் சேர்ந்து சாமி கும்புடு நடத்துவது சுற்று வட்டாரத்தில் எப்படி பிரபலமோ அதே போல சாமியெடுத்தலும் பிரபலமான நிகழ்வு. சாமி செய்தல் என்ற நிகழ்வின் பின்னால் பலர் தங்களின் உழைப்பைத் தந்து கொண்டிருக்கிறார்கள். அம்மன் சிலையை மண்சட்டியில் வேப்பிலையைச் சொருகி, மண்சட்டியைச் சுற்றிலும் மல்லிகைப் பூக்களைச் சுற்றி, அதில் நட்ட நடு மையத்தில் மஞ்சள் வைத்து அதன் மீது அம்மனின் உருவம் பொறித்த ஐம்பொன் முகத்தை வைப்பார்கள்.

 

இதில் ஒவ்வொரு பணியையும் ஒவ்வொருவர் தாமாகவே எடுத்துக் கொள்கிறார்கள். மல்லிகைப் பூக்களைக் கட்டிக் கொடுப்பது என சிலர், வேப்பிலை பறித்துத் தருவதென சிலர்,  கரகம் எனப்படுகிற சாமி செய்யும் போது பக்கத்திலிருந்து அதற்கான பணிவிடைகள் செய்வதென சிலர், சாமி ஊர்வலத்தில் குடை பிடிப்பதென சிலர், பூசாரி அதிகமாக அருள் வந்து சாய்ந்துவிடாமல் அவரைப் பிடித்துக்கொள்வதென சிலர் நேர்த்திக் கடன் பட்டிருக்கிறார்கள். அவரவர் பணியை அவரவர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

அதிகாலை மூன்று மணிக்குப் புறப்படும் சாமி ஊர்வலம் வரும் வழியெல்லாம்  நூற்றுக்கணக்கான சாமியாடிகளுக்கும் ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கும் காட்சி தந்து விட்டு  காலை ஐந்து மணிக்குப் பிறகே ஆலயம் வந்தடைகிறது. சாமியாடிகளில் பல பழைய முகங்களாக இருப்பதைக் காணும்போது இளைய சமுதாயத்தினரின் மத்தியில் பகுத்தறிவு பிறந்து விட்டது என்று நம்பத் தோன்றியது.

 

கொட்டு முழக்கமும் வானவேடிக்கை ஆரவாரமும் பலருக்கு சாமியாடும் வாய்ப்பைத் தருகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் சாமியாடுவதால் அனைவருக்கும் விபூதியிட்டு சாமிகளைமலைஏறச் செய்யும் பெரும் பொறுப்பை பூசாரியால் மட்டுமே செய்ய முடியாத காரணத்தால் பல துணைப் பூசாரிகளும் முளைத்து விடுவார்கள். இந்தாண்டு பல துணைப் பூசாரிகளுக்குள் யார் பெரியவர் என்ற சண்டைபிறந்து பிறகு கிராமத்தார் சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று.

 

பெரியமேளம், தாரை, தப்பாட்டம், உருமி, கரகாட்டம், வான வேடிக்கை  என அனைத்து ஆரவாரத்தோடும் புறப்பட்டு வரும் காளியம்மனுக்கு முன்னால் காளி வேடமிட்டு ஆடுவதற்குத் தயாராக சிலர் இருந்தார்கள்.  எனது சின்ன வயதில் தொடங்கி நீண்ட நாட்கள்  என் பள்ளித் தோழன் கருப்பையாவின் தந்தைதான்  காளி வேடமிடடு ஆடுவதை நான் பார்த்திருக்கிறேன். தற்போது இளம் வயதுக்காரன் ஒருவன் தயாராக இருந்தான். கருப்பையாவின் அண்ணன் மகனாம். யாரும் யாரையும் கட்டாயப்படுத்தாமலே வாழையடி வாழையாக இந்தப் பொறுப்புகளை எடுக்க நமது ஜனங்கள் பழகிக்கொண்டார்கள். கடந்த பத்தாண்டுகளாய் எனது தம்பிதான் எங்கள் குடும்பத்தின் சார்பில் சாமிக்குக் குடைபிடிக்கிறான். இதற்கு முன் எனது அண்ணன் இந்தப் பணியைச் செய்தார். குடைபிடிப்பதற்காக பங்குனி மாதம் முழுவதும் விரதமிருப்பதும் வேறு பழக்கங்களை ஒத்திவைப்பதும் பக்தியாலா…? அல்லது பயத்தாலா….?

 

சாமி வரும் வழியெல்லாம் கோலமிட்டிருந்தனர். உள்ளூர் மற்றும் வெளியூர்ப் பெண்கள் அவரவர் வீட்டு முன் இந்தப் பணியைச் சிறப்பாகவே செய்திருந்தார்கள். சாமி கோவிலை அடைந்தவுடன் மாவிளக்கு எடுத்து வரப்பட்டது. அன்று பகலெல்லாம் ஆட்டங்களும் கொண்டாட்டங்களுமாய் பொழுது மிக வேகமாய்ச் சென்றது.  கிராமத்திலிருக்கும் மக்கள் அவரவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தங்களால் முடிந்த வேடங்களைப் போட்டு தெருவெல்லாம் ஆடித்திரிந்தார்கள். வேடமிடுவதில், ஆடுவதில் மணியார்களே எப்போதும் பிரமாதப் படுத்துவார்கள். இந்தாண்டும் அப்படியே இருந்தது. அதிலும் பதினிக்கார மாமாவின் பலவேசம் மிகச் சிறப்பாக இருந்தது.

 

முளைப்பாரி எடுத்துக் கொண்டு வரும் நேரத்தில் நாங்கள் கிளம்பினோம். எனது பிள்ளைகளுக்கு ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டு வந்தேன்.

 

மாலையில் நான் எங்கள் ஊருக்குப் பக்கத்திலிருக்கும் சித்தார்பட்டிக்குச் சென்றேன். இங்கும் இன்று திருவிழா. எங்கள் ஊரைப் போன்று ஆண்டுதோறும் கொண்டாடாமல் கிடப்பில் கிடந்த திருவிழா. ஊருக்குள் சண்டை வந்தால் முதலில் சாமி கும்பிடைத்தான் பழிவாங்குவார்கள். பதினைந்தாண்டுகள் திருவிழா நடத்தாத   ஊரில் திருவிழா நடப்பதால் அதைக்காணும்  ஆவலில் அங்கு சென்றேன். எங்கள் ஊரை விட எல்லா வகையிலும் சின்ன கிராமமான சித்தார்பட்டியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் திருவிழா நடந்தது.

 

சாமியாட்டங்களுக்கும் குறைவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாக கிடா வெட்டி, பொங்கல் வைத்து விருந்துக்கு  சொந்த பந்தங்களை அழைத்து அவர்களுக்கு உணவு படைத்து, தாங்களும் உண்டு, மறுநாள் காலையில் ஊரே மஞ்சள் நீராட்டில் நனைந்து என ஒட்டுமொத்த கிராமமும் குதூகலத்தில் இருப்பது பங்குனி… சித்திரை…. வைகாசி மாதங்களில் மட்டுமேதான்.

 

திருவிழா முடிந்த அடுத்த நாளில் மிகவும் பரபரப்போடு தங்களின் வாழ்வாதார இருப்பிடங்களுக்கு மக்கள் கூட்டம் படையெடுத்தது.

 

ஒவ்வொரு திருவிழாவுக்கும் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களோடு சண்டையிட்டு விடுப்பு வாங்கிவருவதும், பின்னர் அவசர அவசரமாகப் புறப்பட்டுச் செல்வதுமாய் பலரின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. தான் எவ்வளவு துன்பப்பட்டாலும் தனது கடவுளையும்  அதனை வணங்குவதற்கான நேரத்தையும் உழைக்கும் மக்கள் ஒரு நாளும் தள்ளிப் போட்டதில்லை. தங்களுக்குள் ஏற்படும் சின்னச் சின்ன கோபங்களால் சிலநேரம் வழிபாடு தள்ளிப் போனாலும் பின்னர் ஒரு நாளில் மொத்தமாய் தனது தெய்வ கடமையைத் தீர்த்தக் கொள்வதில் அடித்தட்டு மக்களே எப்போதும் சிறந்தவர்கள்

 

கிராமங்களின் திருவிழாக்களில் காணப்படும் சின்னச் சின்ன குறைபாடுகளை ஒதுக்க வேண்டிதில்லை அதை கவனத்தில் கொள்ள வேண்டும். சித்தார்பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் வரி வாங்குவதில்லை. கடமலையில் ஆதிகாலத்திலிருந்து வரி வாங்கினாலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிராமக் கமிட்டியின் நிர்வாகக்குழுவில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு இன்று வரையில் வழங்கப்படவில்லை.

 

“அரசியல் மற்றும் பொருளாதாரத் தளத்தில் அடித்தள மக்களைத் திரட்டி, ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராக போராட முயலும் ஒரு போராளி கூட, தனது குடும்பம், சாதி, கிராமம் மற்றும் வட்டாரம் சார்ந்த பண்பாட்டு நிகழ்விற்கு அடி பணிந்து போகும் தன்மையைக் காண்கிறோம். திருமணச் சடங்கு, பூப்புச்சடங்கு, சவ அடக்கச் சடங்குகளில் ஐக்கியப்பட்டுப் போவதைக் காண முடியும். பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றான நாட்டார் தெய்வ வழிபாடுகளை செவ்வியல் தெய்வங்களைப் போல் இதையும் ஒரு கருத்துமுதல் கோட்பாடுகளைக் கொண்ட தெய்வ வழிபாடாகக் காணும் போக்கு உள்ளது. இதனால் அடித்தள மக்களின் மனவிலியில் அமுக்கம் பெற்று இருக்கும் தொன்மங்களையும், வரலாற்றையும் புரிந்து கொள்ள தவறி விடுகிறார். இதனால் ஆய்வுகளால் கட்டமைக்கப்பட்ட நாட்டார் வழக்காற்றியல் பனுவல்கள் கூட, இவருக்கு கருத்துமுதல் கோட்பாடுகளாகக் கண்டுணர முடிகிறது. அரசியல் மற்றும் பொருளாதார தளத்தில் இவரோடு நெருங்கி இருக்கும் அடித்தள மக்கள், பண்பாட்டு அசைவியக்கத்தால் அந்நியமாகிப் போகும் விந்தையும் நடைபெறுகிறது. இங்குதான் ஆதிக்க சக்திகள், அடித்தள மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் கட்டிப் போட்டு வைக்கிறார்கள். போராளி தனிமைப்படுத்தப்படுகிறார்.“ என்று நாட்டார் வரலாற்று ஆய்வாளர் ஈரோடு தி. தங்கவேலு தனது செம்மலர் கடடுரையில் குறிப்பிட்டுள்ளார்.

நமது தேசத்தின் ஆதாரங்களான கிராமங்கள்தான் ஒற்றுமையின், பண்பாட்டின். சின்னங்களாகவும் இன்று வரையில் விளங்குகின்றன. மண்ணை…  மனிதனை….. இயற்கையை நேசிக்கும் விழாவை கிராமங்கள்தான் இன்றும் நடத்திக் கொண்டிருக்கின்றன.

காலமழைக்காகவும், கோடை மழைக்காகவும் விரதமிருப்பதும்… விழா நடத்துவதும் கிராமங்கள்தான். உற்பத்திக்கான புதுப்பித்தலுக்கே விழாக்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

 

வெளி நாடுகளில் அறுவடைத் திருவிழாக்களை உழைக்கும் மக்களோடு இணைந்து நடத்தும் வழக்கத்தை அரசியல் தலைவர்கள் கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் மருத்துவர் அய்யா, வைகோ போன்ற ஒரு சிலரே கடைபிடிக்கிறார்கள். கிராமங்களை உயிரோட்டமாக்குவதன் மூலமே நகர்மயமாதலைத் தடுக்க முடியும். கிராமங்களின் பண்பாடு, கலாச்சாரம் யாவும் இயற்கையோடு இயைந்து வருவதாகும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் பண்பை கிராமங்களிடமிருந்துதான் வள்ளலார் பெற்றார்.

கேரளத்தில் மலையாளம் பேசும் மக்கள் “உங்கள் ஊர் எது?” என்று கேட்பதற்கு “நிங்ஙளுடே நாடு ஏதாணு?” என்பார்கள். நாடு எனும் சொல் தோன்றிய மிகப் பழங்காலத்தில் நாடு என்பது ஒரு கிராமத்து வட்டார அளவுதான் போலும்! இன்றும் கூடத் தமிழ்நாட்டில் சில `நாடுகள்’ உண்டு அவை: செட்டிநாடு, மேலாண்மறைநாடு, வருசநாடு, ஒரத்தநாடு, பாப்பாநாடு… பின்னர் ஒவ்வொரு கால அளவிலும் நாடு எனும் சொல் உணர்த்தும் நிலப்பரப்பு விரிவடைந்துகொண்டே போயுள்ளது. என்றாலும், மரபார்ந்த அடையாளமாக -ஆகுபெயராக- இன்றும் அந்த ‘நாடு’ என்பது நாட்டுப்புறமாக விளங்கி வருகிறது. கேரளத்திலும் அந்த `நாடுகள்’ உள்ளன. அவை வயநாடு, குட்டநாடு. ஆக நாட்டுப் பற்றையும், நாடடு நடப்பையும் கிராமங்கள்தான் தனது பழக்கங்களின் மூலம் மக்களுக்குப் பொதித்து வருகின்றன.

கிராம விழாக்கள் பலப்படுத்தப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும்.  கிராமங்களில் பிறந்து நகரங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தங்களின் கிராமத்தின் பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கான உதவிகளைச் செய்ய வேண்டும். கிராம மக்களின் வருவாய் பெருக்கத்திற்கான வழியை உருவாக்கும் பொருட்டு தங்களது முதலீடுகளையும் தொழில்களையும் கிராமத்தில் தொடங்க வேண்டும்.

 

தங்களின் கிராமத்திலிருந்து படித்து வெளியே வரும் அனைத்து இளைஞர்களுக்கும் தங்களால் இயன்ற வழிகாட்டுதலை வழங்க வேண்டும். வழிகாட்டுதலின்றியே பல இளைஞர்கள் தங்களது வாழ்வை பல தவறான பழக்கங்களுக்குள் திணித்துக் கொண்டு சிரழிந்து போய்விட்டார்கள். தொலைந்து கொண்டிருக்கும் கிராமங்களின் அடையாளங்களை மீட்டெடுக்கும் பணியை யார் முதலில் தொடங்குவது?

(பசுமைத் தாயகம் சுற்றுச் சூழல் சூலை2011 இதழில் வெளியானது)


கடந்த வாரம் எனக்கொரு மின்னஞ்சல் வந்தது.  முன்பு என்னோடு பணியாற்றிய  பெண்மணி அனுப்பிய மின்னஞ்சல். அதில் “எங்கள் நிறுவனத்தில் பெண்களுக்கு நல்லா பாதுகாப்பு உண்டு. இது போல் ஒரு பாதுகாப்பாக நிறுவனத்தை எங்கும் நீங்கள் காண முடியாது” என்று சொல்லித்தான் பெண்களை வேலைக்குச் சேர்க்கிறார்கள்.  ஆனால் இங்கு பெரிய பதவியில் இருக்கும் ஒரு அயோக்கியன் செய்யும் பல செயல்கள்  வெளியில் வருவதில்லை. அவனுக்கு திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகள் உள்ளனர் . அவனால் இம்சை படும் பெண்கள் அதை வெளியில் சொல்ல சங்கடப்பட்டு உள்ளுக்குள் அழுவதைக் காணும்போது எதுவும் செய்ய முடியாத நிலையில் நானிருப்பது மனதிற்கு மிகவும் சங்கடமாக  உள்ளது. சக பணியாளரான பெண்ணைப் பார்த்து சேலை கட்டினால் நல்லா அழகா இருக்கே… உன்னை மாதிரி அழகான பெண்ணை பார்க்கவே நான் புண்ணியம் செய்திருக்கேன். நீ ஏன் நடந்து போகிறாய்? உன்னை போல் பெண்களை ஏற்றிச்  செல்லத்தானே நான் வண்டி வைத்து உள்ளேன்… என்று கண் அடித்து கேட்டு இருக்கிறான். இந்த கொடுமையை யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் அதே ஆள் அவனை விட உயர்த்த பதவியில் இருக்கும் பெண்ணை மிகப் பணிவோடு வண்டியில் ஏற்றி செல்கிறான். ஒரு வேலை தன்னை விட உயர்த்த பதவியில் இருப்பதால் அவர்களிடம் அவன் வேலையை கட்டாமல் கூட இருக்கலாம். அந்த இறைவனுக்குதான் அது தெரியும்.  தனக்கு கீழ் வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் அவன் எப்படி நடந்து கொள்வான் என்று யோசித்து பாருங்கள். ஒரு விழா நடந்து  கொண்டு இருக்கும் போது அந்தப் பெண்ணின் பின்புறம்  இருந்து காலை வைத்து உரசி இருக்கிறான். அந்ப் பெண்ணின் பின்புறம் விரலை வைத்து உரசி இருக்கிறான் . அவள் பயந்து அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள். இவனுக்கு பயந்து அவள் வேலை விட்டு சென்றால் அவளின் குடும்பத்தை யார் பார்ப்பது? குடும்ப வறுமைக்காக வேலைக்கு வரும் பெண்கள் இவனை போல் ஆட்களுக்கு பயந்து வேலையை விடுவது மிகப் பெரிய கொடுமை ? இந்த சமுதாயத்தில் இதற்கு ஒரு தீர்வு இல்லையா..? என்ன கொடுமை இது ? கடவுளே உனக்கு தெரியவில்லையா ? பெரிய பதவியில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?  இதைப் படிப்பவர்கள் ஒரு நல்லா பதிலை சொல்ல கேட்டு கொள்கிறேன்.”  என்று நீண்டு சென்ற அந்த மின்னஞ்சலுக்கு பதில் சொல்ல இயலாத நிலை எனக்கு மட்டுமல்ல…..  தனியார் நிறுவனங்களிலும், கார்ப்பரேட் நிறுவனங்களிலும்  பணியாற்றும் பலருக்கும் உண்டு.

 

ஆதிக்க மனோபாவம் உள்ள சமுதாயக் கட்டமைப்பில் அடித்தட்டுப் பணியாளர்களாய் இருக்கும் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் சொல்லிமாள இயலாதவை. அதிலும் இருவர் வேலை செய்யும் குடும்பங்களில் உள்ளவர்களின் துன்பத்தைப் பதிவு செய்ய யாராலும் இயலாது. கணவன், சொந்தங்கள்…. குழந்தைகள்…. பணியிடம்…. பணியிடத்து சகப் பணியாளர்கள்….. உயரதிகாரிகள்….. குடியிருப்பு இடம்…. என எல்லா கரங்களாலும் வேலைக்குப் போகும் பெண் குட்டப்படுகிறாள். முதல்நாள் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் பெண் பணியாளர்கள் அடுத்த நாளில் வீங்கிய முகத்தோடும், செயற்கைப் புன்னகையோடும் வருவதைப் பார்த்தாலே தெரியும் வீட்டில் என்ன நடந்திருக்கும் என்று… அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் வரவேண்டிய கட்டாயத்தில் நகரப் பேருந்துகளில்…. சேர் ஆட்டோக்களில்…….. இருசக்க வாகனங்களில் அரக்க பரக்க வந்து சேரும் பெண்களின் மனநிலையை எந்த நிறுவனமும் புரிந்தபாடில்லை. உயர் பொறுப்பிலிருக்கும் பெண்ணதிகாரிகள் வீட்டு வேலை செய்ய ஆள் வைத்திருப்பார்கள். தங்களின் நிலையிலிருந்தே மற்றவர்களையும் எடைபோடும் வேதனை எப்போது தீருமோ….

இந்த சமுதாயத்தில் பெண்ணின் ஒவ்வொரு செயலையும் விமர்சிக்கும் போக்கு உள்ளது. இதையும் தாண்டி முற்போக்காக யோசிக்கும் அல்லது செயல்படும் பெண்களைப் பற்றிய கட்டுக்கதைகளை பெண்களே பரப்புவதும் நடந்து கொண்டுதானிருக்கிறது. அதிலும் குறிப்பாக நிறுவனங்களை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பெண்கள் தனது பணியாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாய் நினைத்துக் கொண்டு சக பெண் பணியாளர்களின் ஒவ்வொரு செயலையும் கண்காணிப்பதும், விமர்சிப்பதும் வேதனையானது. தொடர்ந்து நான்கு முறை கழிவறைக்குச் சென்றாலே அந்தப் பணியாளரை மேலதிகாரியான பெண் அதிகாரி அழைத்துக் காரணம் கேட்கும் போக்கு பல நிறுவனங்களில் உள்ளது. “பெண்களின் விடுதலை, அதாவது, இருபாலர்களுக்குமிடையிலான முழு சமத்துவம், அடையப்படுவதானது, மிக முக்கியமான, ஆனால் அவ்வளவாக அங்கீகரிக்கப்படாத முன் தேவைகளில் ஒன்றாகும்.” என்று சமீபத்தில், “உலக அமைதிக்கான வாக்குறுதி,” எனும் தங்களின் சாசனத்தில் உலக நீதி மன்றம் குறிப்பிட்டுள்ளது. இதில் இரு அடிப்படையான கேள்விகள் உள்ளன. ஒன்று ஆண் பெண் சமத்துவம் அடையப்படுவது குறித்தது. மற்றது, உலக அமைதி அடையப்படுவது குறித்தது.  பெரும்பாலும் மரபுச்சமயங்களில் காணப்படும், பெண்கள் சமத்துவமற்ற வகையில் நடத்தப்படுவதும், மற்றொரு முறையாக, அவள் கற்புநெறியின் முன்மாதிரியெனவும், பக்தை எனவும், கன்னித் தன்மையுடையவள் எனவும், கீழ்ப்படிபவள் எனவும், சாது எனவும், ஆணுக்கு அடிபனிபவள் எனவும், வீட்டுப் பணிகளுக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவள் எனவும், சட்டரீதியிலோ அரசியல் ரீதியிலோ அதிகாரம் இல்லாதவள் எனவும், பகுத்தறிவு சார்ந்த எந்த விஷயமாயினும், அதை தனது கனவனிடமோ, தந்தையிடமோ, சகோதரனிடமோ, சுருக்கமாக ஓர் ஆணிடமே கொண்டுசெல்ல வேண்டியவள் எனக் கருதப்படுவதாகவே உள்ளது.

பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY) உயிரியல், (BIOLOGY) சமூகவியல் (SOCIOLOGICAL) வர்க்கம் (CLASS) பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION) சக்தி (FORCE) மானுடவியல் (ANTHOROPOLOGY) உளவியல் (PHYCHOLOGY) என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக கேட் மில்லட் குறிப்பிடுகிறார். எந்த நாட்டுக் கலாச்சாரத்தை உற்று நோக்கினாலும் பெண்ணடிமைத்தனம் என்பது இன்னமும் வெறித்தனமாய் வளர்ந்து கொண்டிருப்பதை கண்கூடாக காணலாம். எத்தனையோ போராட்டங்களின் பின்னாலும் கூட இன்று வரை உலகில் பெண்ணடிமைத் தனத்தை களைந்தெறிய முடியவில்லை என்பது வருத்தத்துக்குரியதே. அதிலும் முக்கியமாக தமிழ்க் கலாச்சாரத்திலும், இசுலாமிய மதக்கலாச்சாரத்திலும், சீனம், யூத இனக் கலாச்சாரங்களிலும் பெண்ணடிமைத்தனம் என்பது தலைவிரித்தாடுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அதனால்தான் இன்றும் கூட கலாச்சாரத்தைக் காப்பாற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஸ்ரீராம் சேனா, சங்க பரிவாரங்கள் போன்ற இந்து மதவெறி இயக்கத்தினர் காதலர் தினத்தில் இந்தியா முழுவதும் பெண்களையே குறி வைத்துத் தாக்கியுள்ளார்கள். ஆணாதிக்கமும், இந்து மதவெறியும் சேரும்போது அதனுடைய வெறி தீவிரமாகத்தான் இருக்கின்றது. இங்கும் கூட கவனியுங்கள் பெண்தான் குறிவைக்கப்படுகின்றாள். ஆண்கள் டாஸ்மாக் தொட்டு நட்சத்திர விடுதி மதுவறைகள் வரை குடித்து விட்டு ஆடலாம். ஆனால் இதை இயல்பு எனக் கருதும் இந்து மனம் பெண்கள் குடிப்பதை மாபெரும் கவுரவக் குறைச்சலாக நினைக்கின்றது.

 

சமீபத்தில் மாநகரங்களைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களிடத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.  இவர்களில் ஐ.டி துறையில் பணிபுரியும் பெண்களும் உண்டு.  எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் படி 75விழுக்காட்டினர் பெற்றோர் நிச்சயம் செய்யும் திருமணத்தைத்தான் செய்யப் போவதாகத் தெரிவித்திருந்தார்கள். பெண்ணுக்கு உரிமை என்பது தனிநபர் உரிமையாக சுருக்கிப் பார்த்தால், பஃப்புக்கு செல்வது, மானாட மயிலாட அல்லது ஜோடி ஒன்று நிகழ்ச்சியில் பங்கேற்பது, பார்வையாளராகச் செல்வது, தனியாக ஸ்கூட்டரிலோ, காரிலோ ஓட்டிச் செல்வது, வேலைகளில் ஏற்றத்தாழ்வின்றி எல்லா வகை வேலைகளுக்கும் செல்வது… இப்படித்தான் பலரும் புரிந்து கொள்கின்றனர். ஆனால் இத்தகைய தனிநபர் உரிமைகளைப் பெற்றுள்ள பெண்கள் தமது மணவாழ்க்கையைச் சுயேச்சையாக முடிவெடுக்க முடியாது. அப்படி மீறி எடுத்தால் கொலைவெறியைச் சந்திக்க வேண்டும் எனும் போது இங்கே எது பெண்ணுரிமை? ஏது பெண்ணுரிமை?  இங்கு பொம்மக்காவும், தம்மக்காவும்( அதாங்க தம்மனா…) ஒண்ணுதான்.

 

ஒரு பெண் தன் காதலை, திருமணத்தை, குடும்பத்தை, வேலையை, மொத்தத்தில் வாழ்வை தான் விரும்பியபடி தெரிவு செய்யும் சுதந்திரம் இல்லை. வேலைக்குச் சென்று தனது பொருளாதார சுயேச்சை நிலையை அடைந்திருக்கும் பெண்ணுக்குக் கூட முழுச் சுதந்திரத்தை இந்தச் சமூகம் கொடுத்து விடுவதில்லை. சமூகம் மரபாகப் பின்பற்றி வரும் எல்லாப் பிற்போக்குத்தனங்களுக்கும் பெண்தான் முதல் பலிகடாவாகின்றாள். சாதி, மத, இனங்களின் கவுரவமே ஒரு பெண்ணின் ‘தூய்மையை’ வைத்தே அளவிடப்படுகின்றது.

 

“பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது! பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக, ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக, இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு, பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது. ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும்.”  என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரகன் ஒரு கலந்தரையாடலில் தெரிவித்திருந்தார். ஒரு போராளியால் மிக எளிமையாய் வெளிப்படுத்தப்பட்ட கருத்தை எட்ட ஏன் அறிவு ஜீவிகளால் முடியவில்லை?

மகளிர் தினம் என்பது இரும்புப் பெட்டியில் புழுங்கிக்கொண்டிருந்த தங்க நகைகளையும், தங்க சரிகைச் சேலைகளையும் அணிந்து கொண்டு தடபுடலான விருந்து உபசாரங்கள், சம்பிரதாயச் சொற்பொழிவுகள் என்று நடாத்தி முடிப்பதாகவே உள்ள இன்றைய சூழலில்,  பெண் விடுதலையை… பெண்ணடிமைத்தன ஒழிப்பை முன்மொழியவோ…. முழங்கவோ மேல்த்தட்டுப் பெண்களுக்கு எப்படி தைரியம் வரும்?

கடந்த முப்பதாண்டுகளில் பெண்கள் பொருளாதார, சமூக, கலாச்சாரத் துறைகளில் தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஒற்றை வாதம் மட்டுமே ஒட்டுமொத்த பெண் விடுதலையல்ல…… ஆணால்  ஆதிக்கம் செலுத்த இயலாத அல்லது கூடாத துறைகளையே பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

ஒவ்வொரு நூற்றாண்டின் இறுதியும்சரி, தொடக்கமும் சரி பெண்களுக்கான பெண்களுக்கான புதிய சவால்களையே தந்து கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் ஆயிரம் ஆலமரங்களை நட்டு அதையே தனது பிள்ளைகளாய் பாவித்து வந்த மாத்தாயும், மதுரையில் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி ஏழைப் பெண்களின் புதிய வழிகாட்டியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் சின்னப்பிள்ளையும் தங்கள் முன்னிருந்த தடைகளை மோதி மிதித்து உடைத்த தடை தகர்த்த பிராட்டிகள்.

தன்மீது விழும் எல்லாத் தடைகளையும் பெண்மை வெல்லும் என்றே கூத்திடுவோம்.

(பசுமைத்தாயகம் மார்ச் 2011 இதழில் வெளியானது)

 

 

“விசில் ஊதிக் கொண்டே செல்லும்

கூர்க்கா அறிந்திருப்பானா..

தன் குடும்பத்தினரின் உறக்கத்தை..“

“வடபழனி வசந்தபவனில் நேற்றிரவு உணவு சாப்பிட்டு விட்டு காபியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது நான் சாப்பிட்டத் தட்டை எடுக்க தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்த கிளீனர் சிறுவனைப் பார்த்தபோது வித்தியாசமாகப் பட்டது. அவன் வடகிழக்கு மாநிலத்திலிருந்து வந்திருப்பான் போல. சுற்றுமுற்றும் பார்த்த போது அவன் வயதை ஒத்த பல சிறுவர்கள் அங்கு பணியிலிருந்தார்கள். இதே போல் வடகிழக்கு மாநிலச் சிறுவர்களை மதுரை, விழுப்புரம், ராமநாதபுரம் என்று பல இடங்களில் குறிப்பாக உணவகங்களில் சமீபத்தில் பார்த்து வருகிறேன். ஆச்சரியமாக இருந்தது. பிழைப்புக்காக நமது தமிழர் புலம் பெயர்வது குறைந்து வேற்று மாநிலத்தவர்கள் நம்மாநிலத்தில் வரும் அளவுக்கு முன்னேறிவிட்டோமா என கேட்டுக்கொண்டேன்.” என்று நண்பர் ஜானகிராமன் தனது வலைபதிவில் மார்பில் அடித்துக் கொண்டபோது எனக்குள்ளும் கூர்க்கா பற்றிய நினைவுகள் முட்டி நின்றன. “கூர்க்காக்கள் உண்மையிலேயே வீர தீரத்துடன்,1850களிலிருந்து. ஆங்கிலேய ஆட்சியின் போதும் அதற்கு பிறகும் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். கிட்டதட்ட 200 ஆண்டுகள் அயராத ராணுவ பணியில் தம் குடும்ப உறுப்பினர்களை அனுப்பி அர்ப்பணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது நேபாளம். சுதந்திரத்திற்கு பிறகான அண்டை நாடுகளுடனான போரில் மிகுந்த தீரத்துடன் போரிட்டதில் இவர்களின் பங்கும் குறிப்பிடத்தக்கதாகும். இந்திய ராணுவத்தில் தற்போது 7 கூர்க்கா படைப்பிரிவுகளில் இருப்பவர்களையும் சேர்த்து சுமார் 30,000 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.“ என்ற விபரத்தை சமீபத்தில்தான் இணைய தளம் மூலமாகப் படித்துத் தெரிந்து கொண்டேன் கூர்க்காக்களின் வாழ்க்கை இந்திய மண்ணில் இரு விதமாக உள்ளது. ஒரு பிரிவினர் இந்திய நோபாள & பிரிட்டனின் முத்தரப்பு உடன்படிக்கையின் படி இந்தியாவிலும் பிரிட்டனிலும் இராணுவ படைப்பிரிவில் சேர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டவர்கள். இப்போதும் பணியாற்றி வருகின்றனர். மற்றொரு பிரிவினர் தாய் மண்ணை விட்டு வேலை தேடி இந்திய மண்ணை நாடி வந்தவர்கள். இந்தியாவின் பெருநகரங்களிலும், வளரும் நகரங்களிலும் காவலாளிகளாக தங்களின் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள். எங்களூரில் கூர்க்காக்கள் 1995-ல் குடி வந்தார்கள். அவர்கள் குடிவந்த ஆண்டு இன்னும் நினைவில் உள்ளதற்கான காரணம், அப்போது நாங்கள் விடலைகளாய் ஊர் சுற்றிக் கொண்டிருந்தோம். அதுவும் இரவில் ஊர் சுற்றுவதில் விருப்பமானவர்களாய் இருந்தோம். பின்னிரவு தாண்டியும் நீளும் எங்களின் ராஜாங்கத்தின் மீது முதன்முதலில் டார்ச் அடித்தவர்கள் கூர்க்காக்கள்தான். “சார் வண்க்கம்” என்று சொல்லிக் கொண்டு பின்னிரவில் எங்களருகில் வந்து நிற்பதை எங்களில் யாரும் விரும்பவில்லை. (அந்த வயசுல… அந்த நேரத்துல எப்படி இருந்திருப்போம்…) ஆரம்பத்தில் மூன்று நபர்கள் சேர்ந்து ஊர்க்காவல் செய்தார்கள். அப்போது வீட்டிற்கு இரண்டு ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு காவல் காத்தார்கள். ஆறு மாதங்கள் ஆண்கள் மட்டுமே தங்கியிருந்து வேலை பார்த்தார்கள். பிறகு தங்கள் துணைகளையும் அழைத்துக் கொண்டு வந்தார்கள். எங்களது தோட்டத்து வீடுகளில் ஒன்றை வாடகைக்குப் பெற்றுக்கொண்டு குடியிருந்தார்கள். நடுநிசிகளில் ஒலிக்கும் சைக்கிள் மணிகளின் சத்தத்தில் விசிலடித்துச் செல்கையிலேயே ஒவ்வொருவரின் நிம்மதியான உறக்கத்தினூடாக தன் மாத சம்பளத்தை உறுதிப்படுத்திக்கொண்டு செல்லும் கூர்க்கா வாழ்க்கை முறையை முதன் முதலாக அப்போதுதான் நான் கண்டேன். ஒரு ஊரில் மூன்று குடும்பங்கள் தங்கியிருந்தால் வருமானம் பத்தாது என்ற காரணத்தால் வயதில் இளையவரை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்கள் பக்கத்து ஊர்களில் காவலுக்கு இருந்து கொண்டார்கள். மற்றவர்கள் ஆளுக்கொரு திசையில் சென்றுவிட இளைஞர் மட்டும் குடும்பத்தோடு இருந்தார். பாவம் அந்த நேபாள யுவதி. திருமணமான மூன்றாவது மாதமே இங்கு வந்து விட்டாள். ஆரம்பத்தில் திக்குத்தெரியாத காட்டில் தப்பியோடிய வெள்ளாடாய் இருந்தவள் பையப்பைய மண்ணையும் மக்களையும் பழகிக் கொண்டாள்….. தனது கணவனுக்கு இரவில் மட்டும்தான் வேலை என்பதால் பகலெல்லாம் அவனோடி கழித்தாள். அது அவர்களுக்கான தேனிலவு காலமாகவே இருந்தது. ஆம். புதிதாக திருமணமான அந்தத் தம்பதிகள் ஓடி விளையாடியதும்…. ஆற்றில் நீந்தி விளையாடியதும்…… எங்களூர் சேர்மலைராம் திரையரங்கில் முதலாட்டம் சினிமா பார்த்ததும்…. அவர்கள் இரு குழந்தைகளின் பெற்றோர்களானதும் காணக்கிடைக்காத அற்புதங்கள். குறைந்த வருவாயில் மகிழ்ச்சியாகக் குடும்பத்தை நடத்தும் கலையை கூர்க்காக்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களிருவர் மிகமிகச் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் தமிழ் பேச நடுங்கிய அந்தப்பெண் கொஞ்சங் கொஞ்சமாக மிகச் சிறப்பாகத் தமிழ் பேச கற்றுக்கொண்டாள். உள்ளூரில் செயல்பட்டு வந்த ஒரு தொண்டு நிறுவனத்தின் தையல் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து தையல் பயிற்சி பெற்றாள்….. அவளின் ஆர்வத்தைப் பார்த்த தொண்டு நிறுவனத்தார்கள் அவளுக்கு அந்த அலுவலகத்திலேயெ வேலையும் தந்தார்கள். தமிழ் பேசவும் தமிழ் வாசிக்கவும் கற்றுக் கொண்டிருந்த போது, இடையில் ஒரு முறை தனது தாய் நாட்டிற்கு கணவனோடும், பிள்ளைகளோடும் சென்று வந்தாள். “எங்க நடு போறோம்…“ என்று அவள் சொன்னது இன்னும் என் காதில் கேட்டுக்கொண்டிருக்கிறது….. நேபாளத்தில் கிடைக்காதவற்றை…. தனது சொந்தங்களுக்குக் காட்டுவதற்காக இங்கிருந்து எடுத்துச் சென்றாள்… அவள் எடுத்துச் சென்ற பொருளெல்லாம் பணம் கொடுத்துப் பெற்றதில்லை. எனது ஊர் மக்கள் வாஞ்சையோடு கொடுத்தனுப்பியது. ஊருக்குப் போய்விட்டு மூன்று நான்கு மாதங்கள் கழ்த்துத்தான் வந்தார்கள். ஆனால் அதுவரையில் ஊர்க்காவலுக்கு தங்களோடு வந்த ஒருவரை பொறுப்பாக்கி விட்டு அவரை எல்லா தெருவுக்கும் அறிமுகம் செய்து வைத்துவிட்டுத்தான் சென்றார்கள். இது கூர்க்காக்களின் தொழில் நேர்மையைக் காட்டுகிறது. இந்த முறை ஊரிலிருந்து வந்தபோது அவள் மிகச் சந்தோசமாக வந்தாள். முதன்முறையாக வந்தபோதிருந்த அச்சம் இப்போதில்லை. மொழியறியாத…. பழக்கமில்லாத இடத்திற்கு… குலதெய்வ கோயிலுக்கு வெட்டுவதற்கு அழைத்துச் செல்லப்படும் ஆடுபோல முதன் முறையாக அவள் வந்தது போல் இப்போதில்லை. நேபாளிகள் பிரியத்தோடு அணியும் அணிகலன்களை ஒரு பை நிறைய வாங்கி வந்திருந்தாள். அவளுக்குப் பிரியமான… அவளது வயதொத்த…. அவள்மீது பாசங்கொண்ட… என பலதரப்பினருக்கும் ஆனந்தமாய் பரிசளித்தாள். அது பங்குனித் திருவிழா நடந்து கொண்டிருந்து நேரம். அந்த மூன்று நாட்களும் தனது பிள்ளைகளோடு ஊரெல்லாம் துள்ளித்திரிந்தாள். உரிமையோடு எல்லா வீடுகளிலும் சாப்பிட்டாள்… பிள்ளைகளுக்கு வாங்கித்தந்தாள்….. கூர்க்கா… கூர்க்கா பொண்டாட்டி… என்ற அறிமுக நிலையிலிருந்து தாரா….. தாரா புருசன் என்ற நிலைக்கு அவள் உயர்ந்து கொண்டிருந்தாள்……. ஆற்றங்கரையில்… ரேசன்கடையில்…… சினிமா தியேட்டரில்…… மெயின்பஜாரில்…… என எல்லா இடங்களிலும் தாராவைக் காண முடியும். ஆண்களை “அன்ன“ என்றும், பெண்களை “அக்க“ என்றும் பாசம் ஒழுக ஒழுக அழைத்துத் திரிந்தவள்…. ஒரு நாள் ஆற்று மணலில் அரளிவிதை தின்று செத்துக் கிடப்பதாகத் தகவல் வந்தது. ஆற்று மணலில் புரியாத மொழியில் கணவனும் தலைமகனும் அழ… இளையவன் தாயின் உடைபிடித்து இழுக்க….. மனசைப் பொசுக்கிய அந்தக் காட்சி பத்தாண்டுகள் முடிந்த பின்னும் இன்னும் மறையாமல் இருக்கிறது. இப்போதும் எங்காவது நேபாளப் பெண்களைக் கண்டால் எனக்கு தாராவின் நினைவே தட்டுகிறது. அழுது கொண்டிருந்த கணவன் தன்னைத்தானே தேற்றிக்கொண்டு பக்கத்து ஊரில் இருக்கும் தனது சக காவலாளிகளை அழைக்கப் புறப்பட்டான். ஆனால் அவனுக்கு முன்பாகவே அவனது பக்கத்து வீட்டில் குடியிருந்து கவுண்டர் சென்று அவர்களை அழைத்து வந்து விட்டார். அடுத்து என்ன செய்வது என்று கூடிப் பேசினார்கள். பேச்சுவார்த்தையெல்லாம் அவர்கள் மொழியிலேயே இருந்தது. செத்துப்போனவளை சுடுகாட்டில் அடக்கம் என்றும், இதற்கு ஊர்காரர்களிடம் அனுமதி கேட்டபது என்றும் முடிவெடுத்து ஆளுக்கொரு பணியைச் செய்தார்கள். சற்று நேரத்தில் தாராவோடு பழகிய பெண்களெல்லாம் வந்து சேர்ந்து அழுதார்கள். தாராவின் கணவர் இப்போது அழவேயில்லை. தனது மனைவியையும் குழந்தைகளையும் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான். அடுத்த இரண்டு மணிநேரத்தில் அடக்கம் செய்வதற்கான எல்லா பணிகளும் நடந்தன. தாரைவை அடக்கம் செய்ய ஊர்க்காரர்கள் உதவினார்கள். தாராவின் கணவன் வேகமாக வீட்டுக்குச் சென்று தாராவின் துணிகளையெல்லாம் எடுத்து வந்து சுடுகதட்டிலேயே தீயிட்டான். தாரா ஆசையாசையாய் தனக்காய் அவளே தைத்த துணிகள் எல்லாம் எரிந்தன. அடுத்த மூன்றாவது நாளிலிருந்து தனது பணியைத் தொடங்கி விட்டார். ஒரு வாரங்கழித்து தற்செயலாய் தாராவின் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் விசாரித்தேன். “சாகுறதுக்கு மொத நாளு ராத்திரி ரெண்டு பேருக்கும் பெரிய சண்டை. ரெம்ப நேரம் அவுக பாஷையிலேயே திட்டிக்கிட்டாங்க. அந்தப் பையன் இவள அடுச்சுட்டான். நானும் எங்க வீட்டுக்காரரும்தான் வெலக்கி விட்டோம். பெறகு அவன் ஊர்க்காவலுக்குப் போயிட்டான். எதுக்கு சண்டையின்னு நான் அவகிட்ட கேட்டேன்.” என்று சொல்லி ஒரு நிருத்தம் தந்தார். “என்ன சொன்னாள்.“ என்றேன். “ “இவ ஊர்ல எல்லாரு கிட்டேயும் பேசுறது அவனுக்குப் பிடிக்கல. அதுவும் எளந்தாரிகளோட பேசிக்கிட்டுத் திருஞ்சாலே….. புருசனுக்கு சந்தேகம் வந்திருச்சு….. கண்டிச்சு கேட்டான். இவ பதிலுக்கு ஏதோ அசிங்கமா அவக பாஷையில திட்டினா. அவன் இவளப் போட்டு வெளுவெளுன்னு வெளுத்துட்டான். ராத்திரியெல்லாம் தூங்காம இருந்துட்டு காலையில ஆத்துக்குப் போறேன்னு போனவ அப்பிடியே ஒரேயடியாப் போயிட்டா… ஹீம்ம்.. எங்க பெறந்து இங்க சாகனும்னு இருந்திருக்கோ…” என்று முடித்துக் கொண்டார். ”உண்மையிலேயே அவள் நடத்தையில தப்பு இருந்திருக்குமா…?” ”நிச்சயம் இருந்திருக்காது. அவ அப்பிடிப்பட்ட பொம்பள இல்லை. நாளு பேருகிட்டப் பேசுனா நம்ம பாஷையை நல்லாத் தெரிஞ்சுக்கிறலாம்னுதான் அவ பேசுனாளே தவிர கெட்ட எண்ணத்துல கெடையாது” என்றார் மிக தீர்க்கமாக. மொழி தெரியாமலிருந்த போதெல்லாம் தங்களின் மீது விழுந்த பழியைப் புறந்தள்ளியவர்களால் மொழி தெரிந்த பிறகு புறந்தள்ள முடியவில்லை. தாரா தன்னுடைய கணவனைக் கோபமாகத் திட்டி வார்த்தை எதுவாக இருக்கும்? எதுவாகவும் இருந்திருக்கலாம். “கட்டுன பொண்டாட்டி புள்ளைகள சொந்த ஊர்ல வச்சுப் பொழைக்கத் துப்பில்லால நீயெல்லாம் எதுக்குடா சந்தேகப்படணும்“? என்று கூட கேட்டிருக்கலாம். பதிலில்லாத கேள்விகள் தன்மீது விழும்போது அதை எதிர்கொள்ள இயலாமலேயே பல ஆண்கள் கை நீட்டுகிறார்கள். அந்த ஆண்டு கூர்க்கா தனது நாட்டுக்குச் செல்லும் போது தனது குழுந்தைகளையும் அழைத்துச் சென்றார். மூன்று மாதங்கள் கழித்துத் திரும்பி வரும்போது புதுசாய் திருமணம் முடித்திருந்தார். குழந்தைகள் ஊரில் இருப்பதாகச் சொன்னார். “மாதந்தோறும் ஒரு வீடு தரும் வெறும் 5 ரூபாய்க்காக எல்லா இரவுகளிலும் உறக்கத்தைத் தொலைத்த அவர்களின் வாழ்க்கை என்னைச் சலனப்படுத்தும். சில வீடுகளில் இரவு நேர விசில் சத்தம் அவர்களுக்கு கேட்கவில்லை என்று கூறி மாதச்சந்தாவை மறுப்பார்கள். இவர்கள் அரைகுறைத் தமிழில் பேசி அவர் பக்க நியாயத்தை சொல்லித் தோற்று முகம் வாடி போவதை அடிக்கடி சந்தித்திருக்கிறேன். பிறகு ரொம்ப நாள் கழித்து ஒரு நாள் மாலை நேரத்தில் வழியில் அவரை சந்தித்தபோது டீ சாப்பிடுவோம் வாங்க என்று கேட்டபோது அவர் மகிழ்ந்து போனர். நான் எங்கிருப்பதாக விசாரித்தார். என் வீடு சொன்னபிறகு என்னை அடையாளம் கண்டுகொண்டார். யாருமே இதுவரை அவருக்கு டீ வாங்கித்தந்ததில்லை என்று சொல்லிக்கொண்டார். பிறகு அவ்வப்போது சந்திப்போம். ஒரு சகோதரனின் வாஞ்சையுடன் வணக்கம் சொல்வார். குடும்ப தேவைகளுக்காக தெரியாத ஊரில் வாழவிதிக்கபட்டவர்களை எப்போதாவது நாம் சந்திக்க நேர்ந்தால் சிறு புன்சிரிப்பு, சின்ன விசாரிப்பு முடிந்தால் உதவி செய்லாமே. அவர்களை நோக்கிய அக்கறையான சிறு செயலும் அவர்களுக்குள் பெரிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொடுக்குமல்லவா…“ என்று ஜானகிராமன் கேட்பது உண்மைதான். பிறந்தகம் விட்டு பிழைப்பு நடத்தும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மெல்லிய சோகம் உறங்கிக்கொண்டிருக்கும். புலம் பெயர்ந்தவர்களைப் புண்படுத்தாமலும், அவர்களின் உள்மன நிலையறிந்து நடத்தும் பண்பு நமக்கு எப்போது வரப்போகிறதோ….?

(சூரியகதிர் டிசம்பர்1-15 2010 இதழில் வெளியானது)

“அந்தரத்துக் கயிற்றில் நடக்கும் சிறுமியை

அண்ணாந்து பார்க்கிறாள் இன்னொரு சிறுமி

அவள் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது

அடிஅடியாய் நகரும் சிறுபாதங்களில்

பதிந்திருக்கிறது அவள் பார்வை

கையைப் பற்றி இறக்கிவிட வேண்டுமென்று

பரபரக்கின்றன அவள் கைகள்”

-பாவண்ணன்

‘’மதுரை கான்சாமேட்டுத்தெரு, பச்சரிசிக்காரத் தெரு, தொட்டியங்கிணற்று சந்து, பெரியமறவர் தெரு, ஓபுளா சுப்பையர் சந்து, தென்னோலைக் காரத்தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள நகைப்பட்டறைகள், நகைக் கடைகள், டீக்கடைகளில் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் சோதனை நடத்தினார். இதில், 14 வயதிற்கு கீழ் பணியிலிருந்த குழந்தை தொழிலாளர்கள் சிவராமகிருஷ்ணன், ராம்பிரகாஷ், மதனபாண்டியன், சுகதீப், சாரு மீட்கப்பட்டனர். அவர்கள், “தங்களுக்கு படிப்பு வரவில்லை என்பதாலும், பெற்றோரின் வருவாய் குறைவாக உள்ளதாலும் வேலை செய்கிறோம்,“ என்றனர். இவர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும். குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம், மூன்று மாதங்கள் முதல் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். என ஆய்வாளர் தெரிவித்து உள்ளார்’’.(தினமலர் ஜூன் 30,2010.) ஒரு முனையில் மடிப்புக் கலையாத சீருடையில்…. ஒளியில் மின்னும் காலணிகளோடு எதிர்காலத்தையே நவீன பைகளில் அடைத்து வைத்துள்ளதான நினைப்போடு ராஜநடை போட்டுப் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள்….. மறுமுனையில் கையில் ஸ்பேனர், தலையில் மண்சட்டி, வாரக்கணக்கில் தண்ணீர் காணாத உடைகள், டீசல் நாற்றத்தையும் மீறி நாறும் வறுமை….. கல்விக்குப் பதில் கல் உடைத்துக் கொண்டிருக்கும் நிலை. இப்படியாக பள்ளி செல்லும் வயதில் இளம் மொட்டுகள் பாரம் சுமப்பதும், பணிக்கூடங்களில் பணிபுரிவதும் வேதனைக்குரியது. என்று சொல்லிக் கொண்டேதான் நமதரசாங்கங்கள் குழந்தைகள் தினத்தை எந்தவிதமான குற்றவுணர்வுமின்றி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். உலக அளவில் 14 வயதுக்குள்பட்ட 25 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் நமது நாட்டில் மட்டும் ஏறக்குறைய 7 முதல் 8 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் கொண்ட நாடாகவும் இந்தியா விளங்குகிறது. குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் உத்தரப்பிரதேசம், பிகார், ஆந்திரப் பிரதேசத்துடன் தமிழ்நாடும் ஒன்று என்றும், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்ட மாநில அரசுகள்தான் என்றும் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தகவல் சொல்கிறது. (தகவல் சொல்வதோடு அவங்க வேலை முடிஞ்சுருது). தமிழகத்தில் சுமார் 3.45 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன் தன்னார்வத் தொண்டு நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில்….. கிழக்குக் கடற்கரைச் சாலையின் உயர்தர விடுதிகளில்…… நெடுஞ்சாலைக்கடைகளில்……. பலசரக்கு மளிகைக்கடைகளில்.. பட்டாசுக்கடைகளில்….. கட்டிடப் பணிகளில்.. நகைப் பட்டறைகளில்… செங்கற்சூளைகளில்…. என எங்கெங்குகாணினும் பிள்ளைக்கறி சமைக்கப்படுகிறது “14 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை எந்தவித தொழிற்சாலைகளிலோ அல்லது சுரங்கத்திலோ அல்லது வேறு எந்தவிதமான ஊறு விளைவிக்கும் வேலையிலோ பணியமர்த்தக் கூடாது. (24 வது பிரிவு) “ என்றும், “14 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்குதலை அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டிலிருந்து 10 வருட காலக்கட்டத்தில் உறுதிப்படுத்தும் வகையில் அரசு முயற்சிகள் எடுத்தல் வேண்டும் (45 வது பிரிவு) “ என்றும் அரசியல் சாசன சட்டம் வகுத்து வைத்துள்ள நம தேசத்தில்தான் இந்த இழி நிலை. பாவம் நமது சட்டங்கள் யாருக்கும் எந்தவொரு தொந்தரவும் தராமல் தூங்கிக்கொண்டிருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்கள் மதுரையில் மட்டுமல்ல… தமிழகத்தில் எங்கு நோக்கினும் இதுதான். கடந்த இருபதாண்டுகாலத்தில் மிகப் பெரிய தொழில்நகரமாய் வளர்ந்து கொண்டிருக்கும் அல்லது முன்னிலைப்படுத்தப்படும் திருப்பூரின் நிலை சொல்லித் தீராதது. ஊருக்கே சோறு போட்டு ஓட்டாண்டிகளாய்ப் போன 20 மாவட்டங்களின் விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் தங்கள் பிள்ளைகளை உலகத்துக்கு உடை கொடுக்கும் ஜவுளித் தொழிலுக்கு அனுப்புகிறார்கள். 1996- 97-ம் ஆண்டுகளில் ரூ.2255 கோடியாக இருந்த திருப்பூரின் ஏற்றுமதி, 2006- 07-ம் ஆண்டுகளில் 11,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. (நடப்பாண்டில் அது பதினைந்தைத் தொட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்படடுள்ளதாம்) “நீருயர நெல்லுயரும்’ என்பது போல, உற்பத்தி உயர உயர உழைப்பாளிகளின் வாழ்க்கையும் உயரும் என்கிறது அரசாங்கம். இந்த 5 மடங்கு வளர்ச்சி, தொழிலாளர்களின் வாழ்க்கையில் எத்தனை மடங்கு வளர்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறது? “இந்தத் துறையில் பணியமர்த்தப்படும் குழந்தைத் தொழிலாளிகளில், 70% பேர் “தொழிற்பழகுனர்கள்’ (apprentice) என்ற பெயரில் சுரண்டப்படுகிறார்கள். நிரந்தரத் தொழிலாளிகளை வெளியேற்றி, மேலும் மேலும் இத்தகைய தொழிற்பழகுனர்களால் எல்லா ஆலைகளும் நிரப்பப்படுகின்றன. கோவை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 406 பஞ்சாலைகளில் மட்டும் 38,461 பெண்கள் “சுமங்கலித் திட்டம்’ என்ற பெயரில் கொத்தடிமைகளாக, கொடூரமான முறைகளில் சுரண்டப்படுகிறார்கள்” என்று அண்ணா தொழிற்சங்கப் பேரவை அம்பலப்படுத்துகிறது. பஞ்சாலைகளில் முறுக்கிப் பிழியப்படும் பல்லாயிரக்கணக்கான குழந்தைத் தொழிலாளர்களின் கண்ணீர்க் கதை இது. இந்தக் கண்ணீர்க் கதைக்கு, முதலாளிகள் சூட்டியிருக்கும் பெயர் சுமங்கலித் திட்டம். ஏழை, கூலி விவசாயிகள், கிராமப்புற ஏழைகள் ஆகியோரது வீட்டுப் பெண் குழந்தைகளைக் குறிவைத்து, ஜவுளி ஆலை முதலாளிகளால் உருவாக்கப்பட்டிருக்கும் திட்டம்தான், சுமங்கலித் திட்டம். இதற்காகவே கிராமப்புறங்களில் அலையும் தரகர்கள், பள்ளியிறுதித் தேர்வு முடிக்காத. அல்லது முடிக்கமுடியாத பதின்வயதுகளில் இருக்கும் வளரிளம் பெண்குழந்தைகளைக் குறிவைக்கிறார்கள். கிராமப்புறங்களிலிருந்து அழைத்துச் செல்லப்படும் பெண்குழந்தைகள், மில்லுக்கு அருகிலேயே தங்க வைக்கப் படுகிறார்கள். ஓர் அறைக்கு 70 பேர் மந்தைகளைப் போல அடைக்கப்படுகிறார்கள். கால் நீட்டிக்கூடப் படுக்க முடியாமலும், நாள்தோறும் 12 மணி நேரம் வேலை வாங்கப்பட்டும், மறுத்தால் நாள் முழுதும் வெயிலில் நிற்கும் தண்டனைக்குள்ளாகியும். அவர்கள் படும்பாடு சொல்லிமாளாதது. பேசிய கூலியைக் கொடு என்று வாய்திறந்து கேட்கமுடியாது. ஆண்டுக்கு 5 நாள்தான் விடுமுறை. உடம்பு முடியாமல் லீவு போட்டால் சம்பள வெட்டு. மாதவிடாய்க் காலத்திலும் கடினமான வேலைகளிலிருந்து விலக்கு கிடையாது. வேலை நேரத்தில் கழிவறைக்கு ஒதுங்க நினைத்தால், ஆண் கங்காணிகளின் சீண்டல் பேச்சுக்களையும் கழுகுப்பார்வைகளையும் தாண்டித்தான் போக முடியும். வீட்டிலிருந்து வரும் கடிதங்கள் பிரித்துப் படிக்கப்படும். ‘’தொழிலாளர்களின் உடல்நலத்தையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது, ஆண்கள் பெண்கள் மற்றும் பிஞ்சுக் குழந்தைகள் அவமதிக்கப்படாமல் பாதுகாப்பது, அவர்களின் வயது மற்றும் உடல்வலிமைக்கு பொருத்தமில்லாத வேலைகளில் பொருளாதார நிர்பந்தத்திற்காக வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துவதைத் தடுப்பது ஆகியவற்றை உறுதிப்படுத்தும் கொள்கையை வகுக்க வேண்டும் என்றும், (39 வது பிரிவு – இ) “ஆரோக்கியமான முறையிலும், சுதந்திரமான சூழ்நிலையிலும், கண்ணியத்துடனும் வளர்வதற்கான வாய்ப்புகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும். தார்மீக ரீதியிலும், பொருளாதார அடிப்படையிலும் புறக்கணிக்கப்படுவதிலிருந்து குழந்தைப் பருவமும் இளமைப் பருவமும் பாதுகாக்கப்பட வேண்டும் (39 வது பிரிவு – எஃப்). என்றும் அரசியல் சாசனச் சட்டம் சொல்லியுள்ளதை நமது தொழிலதிபர்கள் படிக்கவில்லையோ….(அவகளுக்கு சட்டம் படிக்க நேரமில்லையாம்) கிராமப்புறமெங்கும் கொட்டிக் கிடக்கும் பிள்ளைக் கறியை அள்ளிக்கொண்டு வரத் தரகர்களை ஏவி விடுகிறார்கள். புறம்போக்கைக் கண்டவுடன் விழுங்கத் துடிக்கும் அரசியல்வாதியைப் போல, பெண்களைப் பார்த்தவுடன் எச்சில் ஊறும் காமுகனைப் போல, உழைப்பை உறிஞ்சத் துடிக்கிறார்கள் முதலாளிகள். “வால்மார்ட்’டின் அமெரிக்க வியர்வைக் கடைகளில் சிக்கிக் கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள், ஒரு டாலர் கூலிக்கு நாள் முழுவதும் “நைக்’ காலணிகளைத் தயாரிக்கும் தாய்லாந்தின் சிறுவர்கள், அமெரிக்கக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொம்மைகளை வழங்குவதற்காக, சீனத்தில் கொத்தடிமைகளாக உழைக்கும் பெண்கள், தம் கழுத்தில் தாலி ஏறுவதற்கு முன் நிபந்தனையாக, இந்தியாவின் “ஜவுளி ஏற்றுமதி’யை ஏற்றிக் கொண்டிருக்கும் சுமங்கலித் திட்டத்தின் பெண்கள்.. இந்திய முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும், விரும்பி நேசிக்கும் “மனிதவளம்’ இதுதான் உறிஞ்ச உறிஞ்ச வற்றாத இந்த மனித வளத்தின் விலை (அதாவது கூலி) இந்தியாவில் மிகக் குறைவு. மிகவும் குறைவு! ஜவுளித் தொழிலில் இந்தியா கொடி கட்டிப் பறப்பதன் இரகசியம் இதுதான்.(நன்றி : வசந்தன், புதியகலாச்சாரம்) குழந்தைத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம் 1986: 14 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை, அவர்களின் வாழ்க்கைக்கும் உடல்நலனுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய 13 தொழில்களிலும் 57 வேலைமுறைகளிலும் ஈடுபடுத்த இந்தச் சட்டம் தடை விதிக்கிறது. இந்தத் தொழில்களும் வேலைமுறைகளும் இந்த சட்ட அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் சட்டம் 1948: 14 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை வேலையில் அமர்த்த இந்தச் சட்டம் தடைவிதிக்கிறது. அங்கீகாரம் பெற்றுள்ள ஒரு மருத்துவரிடம் உடல்தகுதிச் சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே 15 வயதிலிருந்து 18 வயது வரையிலான ஒரு குழந்தையை வேலையில் அமர்த்த முடியும். 14 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளிடம் நாளொன்றுக்கு நான்கரை மணிநேரம் வேலை வாங்க வேண்டும் என்று வரையறுத்துள்ள இந்தச் சட்டம், இரவு நேரங்களில் அவர்களை வேலையில் ஈடுபடுத்தத் தடை விதிக்கிறது. (என்ன சொல்லி என்ன செய்ய படிக்க வேண்டி வயசுல பிள்ளைகள் வேலை செய்யும் அவலம் எப்போதுதான் தீருமோ….) வீட்டு வேலைகளுக்காக செல்லும் பெண்கள் தங்களது பிள்ளைகளையும் அழைத்து வந்து முதலில் தாய்க்கு கூடமாட ஒத்தாசை செய்ய வைப்பதும், நாளடைவில் தனது மகளையே வேலைக்காரியாக்குவதும் சத்தமில்லாமல் அரங்கேற்றப்படும் குழந்தைத்தொழிலடிமை முறையே. குழந்தைத் தொழிலாளர்கள் முறையை ஒழித்துக் கட்ட பாடுபடும் சேவை அமைப்பினர் வீடுகளிலேயே குழந்தைகள் வேலை செய்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. பெற்றோர்களின் வறுமையும் பொறுப்பின்மையுமே குழந்தைத் தொழிலாளர்கள் உருவாக முதற்காரணமாக அமைகின்றது. அனைவருக்கும் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னரும் கூட பள்ளி செல்லும் வயதில் பணிக்குச் செல்லும் குழந்தைகள் இருப்பதைக் காண முடிகிறது. முதல் வகுப்பிலிருந்தே இலவச புத்தகம், மதிய உணவு என்று அனைவருக்கும் கல்வி அளிக்க ஊக்குவிப்புத் திட்டங்கள் இருந்தபோதிலும்கூட அனைவருக்கும் கல்வி என்பது இன்னமும் எட்டாத கனவாக உள்ளது. குழந்தைத் தொழிலாளர்களாய் இருப்பவர்களில் பள்ளிக்கூடத்தின் வாத்தியார்களால் மக்குகளாக்கித் துரத்தப்பட்டவர்களும் அடங்குவர். (வாவாவென அழைக்குது இலவசக் கல்வி… வராதே என பிரம்பெடுக்கிறார் வாத்தியார்) குழந்தைகளின் வளர்ச்சிக்கான அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் முறையாகக் கண்காணிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். திட்டங்கள் ஏட்டளவில் நின்றுவிட்டால், எதிர்பார்க்கும் மாற்றங்கள் நிகழ்ந்து விடாது. அதே நேரத்தில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க அரசு திட்டங்கள் மட்டுமின்றி தொழில் அதிபர்களிடத்திலும், பெற்றோரிடத்திலும் போதிய மன மாற்றம் அவசியம். குழந்தைகளைப் பணியிலமர்த்த மாட்டோம் என்று எல்லாத் தொழிலதிபர்களும் மனதாரக் கூற வேண்டும். இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களுக்கான வயது 14 என்று உள்ளது. வெளிநாடுகளில் உள்ளது போல அதை 18 வயது என அறிவிக்க வேண்டும். மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு நீடித்த, நிலைத்த தரமான மறுவாழ்வு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். “குழந்தைத் தொழிலாளர்களுக்கான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசு ஒரு கோடியே இருபத்தைந்து லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி மாநில குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு மற்றும் நல இயக்கத்தினை உருவாக்கியுள்ளது. குழந்தைத் தொழிலாளர் விழிப்புணர்வு ஏற்படுத்த மட்டும் கடந்தாண்டு ரூ. 50 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மட்டும் 809 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 231 வழக்குகளுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. அதன் மூலம் சுமார் இரண்டு கோடி ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டது“ என்று அரசின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. வீட்டுவேலை மற்றும் உணவகங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையை அரசு 2006-ல் தடை செய்துவிட்ட பின்னரும் அவலம் தொடருகிறது. இரவு நேரங்களில்… திருவிழா காலங்களில் தமிழகத்தின் எந்த நகரத்திற்குள் நுழைந்தாலும் குறைந்தது நூறு குழந்தைத் தொழிலாளர்களையாவது காணலாம். நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம். குழந்தைகளை மிகவும் நேசித்த நேருவின் பிறந்தநாள்தான் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் முறை ஒழிக்கப்பட்டுவிட்டதா? மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டிருக்கிறதா? என்ற வினா விடைகளற்று நீண்டு கொண்டிருக்கிறது. மாறிவரும் நுகர்வுக் கலாச்சாரத்தில் எந்த பாவமும் அறியாத மொட்டுகள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. “தினங்களைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?” என்று அப்துல்ரகுமான் கேட்டார். அதையே நாமும் திரும்பச் சொல்வோம் குழந்தைகளைக் கொண்டாடுவது எப்போது?

(பசுமைத்தாயகம் சுற்றுச்சூழல் நவம்பர் 2010 இதழில் வெளியானது)

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை எங்கள் அலுவலகப் பணியாளர்களின் ஊதியம் உயர்த்துவதற்கான குழு உருவாக்கப்படும். இந்தாண்டு அது தாமதமான போதே எங்களுக்கு குடும்பத்தை எப்படி ஓட்டுவது என்ற கவலை பிறந்தவிட்டது. பலர் வேறு வேலையைத் தேடிப் போய்க் கொண்டிருக்கும் சூழலில் புதிய வேலைக்குப் போவதா அல்லது கிடைக்கும் ஊதியத்தில் காலம் தள்ளுவதா என்ற குழப்பம் என்னைப் போன்ற அமைப்புசாரா தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பலருக்கும் இருக்கிறது.

விலையேற்றம் விண்ணை முட்டிக்கொண்டிருக்கிற இன்றைய சூழலில். ஒவ்வொரு மாதமும் எப்படி கடனில்லாமல் வண்டியை ஓட்டுவது என்ற கவலை மாதச் சம்பளக்காரர்களுக்கே இருக்கும் போது அன்னாடங்காய்ச்சிகளின் துயரம் சொல்லி மாளாதது.  கிராமங்களில் வேலையின்றி தவிக்கும் ஏழை மக்களின் வாழ்வும், சொந்த கிராமங்களை விட்டு நகரங்களில் பஞ்சம் பிழைத்துக் கொண்ருக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்வும் கேள்விக் குறியாகிக் கொண்டிருக்கிறது.  மாதச் சம்பளகாரன் அன்னாடங்காய்ச்சி என யாரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் வாட்டியெடுக்கிறது விலை ஏற்றம்.

நியாயவிலைக் கடைகளின் மூலம் வினியோகிக்கப்படும் அரிசியின் விலை ஒரு ரூபாயாக இருந்த போதிலும் அதன் பயன்பாட்டையும் அதன் வினியோக முறையையும் நடுநிலையோடு ஆராயவேண்டிய கட்டாயத்தில் நமது அரசாங்கம் உள்ளது. 

விலைவாசி றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருப்பது பற்றி யாருக்கும் கவலையின்றி அவரவர் பணிகளில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள். விலை உயர்வு, வறுமை, பட்டினி, லஞ்சம், கொள்ளை லாபம் பன்னாட்டு கம்பெனிகளுக்கு வேட்டைக்காடாக இந்திய சந்தையை அடமானம் வைக்கும் ஆட்சியாளர்களின் கையில் தேசம் சிக்கியிருப்பது வேதனையானது…. வெட்கக்கேடானது “ இனிய பொழில்கள்… நெடிய வயல்கள் ……. கனியும் தானியமும் நித்தம் நித்தம் கணக்கின்றி தரும் நாடு“ என்று பாரதி சொன்ன தேசம்தான் இன்று ஒரு வேளை சாப்பாட்டுக்கே தத்தளிக்கும் மக்களை அதிகம் பெற்றிருக்கும் நாடு என்ற அவப் பேரையும் பெற்றுள்ளது.

“கப்பல்களில் நிமிர் பாடிப் புரவிகள் வந்து இறங்குவன; மிளகு மூடைகள் வண்டியில் வருவன; வடமலையிற் திறந்த மணியும் பொண்ணும், குடமலைத் பிறந்த சந்தனமும் அகிலும், தென்கடலிற் பிறந்த முத்தும், குணக்கடலிற் பிறந்த பவளமும் குவிந்து கிடப்பன. கங்கை காவிரி ஆகிய ஆறுகளின் பயன்களும், ஈழத்துணவும், காழகத்து ஆக்கமும் சிறந்து விளங்குவன. இவ்வாறு அருமையும் பெருமையும் சான்ற பொருட்கள் பல காவிரிப்பூம்பட்டிணத்து மறுகுகளில் மண்டியும் மயங்கியும் கிடக்கின்றன.” எனப் பட்டிணப்பாலை  சொல்லியது எல்லாமே கனவாகிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் உணவுப்பொருள் விலைகள் 23 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. இது தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளது.  கடந்த 15ஆண்டுகளில் இவ்வளவு பெரிய விலையேற்றம் நிகழ்ந்ததில்லை என்று பொருளாதார நாளிதழ்கள் தெரிவிக்கின்றன. அரிசி, பருப்பு, கோதுமை, பழம், பால், உருளைக்கிழங்கு என எல்லாப் பொருட்களின் விலைகளுமே ஓராண்டில் 10 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடு வரை தாவியிருக்கின்றன. உணவு உற்பத்தி பற்றிய அபாயச்சங்குகள் ஆட்சியாளர்கள் காதுகளில் விழுவதேயில்லை. மக்கள் தொகை 3 விழுக்காடு என்ற அளவில் உயர்கிறபோது உணவுதானிய உற்பத்தி 1.6 விழுக்காடுதான் உயர்கிறது. நாடாளுமன்றத்தில் நிதியமைச்சகத்தின் நிலைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே “இது எரிகிற பிரச்சினை” “அரசாங்கம் தலையிடத் தவறியிருக்கிறது” “சர்க்கரை விலை உயர்வு பற்றி விசாரணை தேவை” என விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இந்த விலையேற்றம் வெறும் பொருளாதார நிகழ்வல்ல; இதற்குள் அரசியல், இலாபவெறி எல்லாமே இருக்கிறது.

மதுரை நாளங்காடியிலும் கோயம்பேடு நாளங்காடியிலும் கொட்டிவைக்கப்பட்டு பின்னர் விற்கப்படும் வெங்காயங்களுக்குத் தெரியாது அடுத்த சில நிமிடங்களில் இதை விட மூன்று மடங்கு விலைக்கு விற்கப்படும் ரகசியம். விவசாயிகள் பொறுமுகிறார்கள். அவர்களின் வெங்காயத்திற்கு கிலோவுக்கு ரூபாய் மூணோ, நாலோதான் கிடைக்கிறது” என்று. ஆனால் கிலோ பதினைந்திற்கும் இருபதிற்கும்   நுகர்வோரிடம் விற்கப்படுகிறேதே……. இது என்ன விசித்திரமான முரண்பாடு. பணவீக்கத்தின் இரகசியம் இதற்குள்தான் ஒளிந்திருக்கிறது.

.”அதிகப் பணம் குறைவான பொருளைத் துரத்துவதே பணவீக்கம்” என்பது பொருளாதாரப் புத்தகங்களில் தரப்பட்டுள்ள விளக்கம். இவ்வளவு பணவீக்கம் அதிகரித்துள்ளதே! ஆனால் வருமானம் கூடியிருக்கிறதா? வேலைவாய்ப்பு பெருகியிருக்கிறதா? “கனவுத் தொழிற்சாலைகளாக” கருதப்பட்ட கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனங்களில் கூட சம்பளம் அதிகரிக்கவில்லை. மாறாக அங்கிருந்து  பணியாளர்கள் விரட்ப்படுகிறார்கள்.

கடந்தாண்டு ஸ்டேட் வங்கியில் 10,000 உதவியாளர்களின் நியமனங்களுக்காக வந்து குவிந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 34 லட்சம். வேலையின்மை எவ்வளவு பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பதற்கு இது ஒர் கண்ணாடி. உண்மை இப்படி இருக்க  ஜனங்கள் துள்ளிக் குதித்துக் கடைகளுக்குப் போகிறார்கள் என கூறுவது எந்த வகையில் நியாயம்?

கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் பதிலளித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இதற்கு தந்துள்ள விளக்கம் வேடிக்கையானது. நுகர் வோரின் சந்தை வருகை அதி கரித்துள்ளதாலேயே இப்பணவீக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆனால் உண்மை என்ன? இந்தியக்குடிமகனின் சராசரி உணவு நுகர்வு 196 கிலோ கிராம் ஆகும். உலக சராசரியோ 337 கிலோ கிராம் ஆகும். டெக்கான் கிரானிகள் (22.12.09) செய்திப்படி இந்தியச் சராசரி 150 கிலோ கிராமாக குறையுமென்பது மதிப்பீடு. ஆனால் பிரணாப் முகர்ஜியோ ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வேலைவெட்டியின்றி சதாசர்வகாலமும் பொருட்களை நுகர்ந்து கொண்டிருப்பது போல பேசியிருக்கிறார். இந்தியர்கள் சாப்பாட்டு இராமன்கள், அதனால்தான் விலையேறுகிறது என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சொன்னதற்கும், நமது மந்திரி சொல்வதற்கும் என்ன வித்தியாசம்?

விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் விலை ஏற்றத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லும் அரசுக்கு, அரசாங்கம் தலையிட்டால் விலைகளைக் கட்டுக்குள் வைக்க முடியுமென்ற உண்மை மக்களுக்குத் தெரியாமலிருக்க முடியாது என்பது மட்டும் ஏனோ புரியவில்லை.

இதற்கு உதாரணம் வேண்டுமா…….? புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்திலுள்ள கேன்டீயனில், ஒரு தேநீர் விலை ஒரு ரூபாய்தான். நமது தமிழ் நாட்டின் குக்கிராமங்களில் கூட இன்றைக்கு ஒரு ரூபாய்க்கு தேநீர் கிடைக்காது. மதியச் சாப்பாடு அங்கு ரூ. 12.50 தான். நான்கு சப்பாத்தி, சோறு, காய்கறி, தயிர் எல்லாம் உண்டு. மீன் கறியோடு சோறு ரூ.14 தான். காரணம் என்ன? அரசின் மானியம் தான் இதற்காக அரசு ஒதுக்கும் தொகை ஆண்டுக்கு அஞ்சரைக் கோடி. இராகுல் காந்தியும், அழகிரியும் ஒரு ரூபாய்க்கு சர்க்கரையோடு டீ சாப்பிடலாமென்றால் சாதாரண மக்கள் என்ன பாவம் செய்தார்கள்?  

போதிய உணவில்லாத காரணத்ததால் இந்தியா முழுவதும் 3 வயதுக்கு குறைவான குழந்தைகளில் 46 சதவீதம் பேர் சத்துணவுக் குறைவால் வயதுக்கேற்ற வளர்ச்சியை அடையவில்லை என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. விலையேற்றம் தொடர்ந்தால் இது இன்னும் கூடும்.  இன்றைய விலைவாசி ஏற்றத்தால் நகரங்களில் வாழ்பவர்கள் ஒரு நாள் மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு குறைந்தபட்சம் நூறு ரூபாய் செலவளிக்க வேண்டியதுள்ளது. இது ஒரு குடும்பத்தின்  வருமானத்தில் அறுபது விழுக்காடாகும்

.விலைவாசி உயர்வுக்குப் பதில் அளிக்கும் போது பிரணாப் முகர்ஜி பொது விநியோகத்தைப் பலப் படுத்துவது பற்றி வாயே திறக்கவில்லை. 1991ல் அரசின் உணவுக் கிடங்குகளில் 19.13 மில்லியன் டன் தானியங்கள் இருந்தன. 2008ல் எவ்வளவு இருந்தது தெரியுமா? 19.18 மில்லியன் டன்கள்தான். காரணம் என்ன? அரசு கொள்முதல் குறைந்ததுதான். 18 ஆண்டுகளில் மக்கள் தொகை எவ்வளவு கூடியிருக்கிறது! ஆனால் தனியார் கொள்முதலை ஊக்குவித்ததால் விலைக் கட்டுப்பாடு கை நழுவிப் போயிருக்கிறது. நம்ம ஊர் கோதுமையே ஏற்றுமதியாகி பிறகு வெளி நாடுகளிலிருந்து அதிக விலைக்கு இறக்குமதியாகும் அவலமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது இருக்கிற “வரையறுக்கப்பட்ட பொது விநியோக” முறையை மேலும் மத்திய அரசு இறுக்கினால் தமிழகத்தின் ரேசன் விநியோகத்திற்கே ஆபத்து காத்திருக்கிறது. அப்போதும் கலைஞர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவார். அந்தக் கடிதத்தைத் பிரதமரிடம் தனது டெல்லி வாரிசுகள் கொடுப்பதை தங்களின் தொலைக் காட்சியிலும் காட்டச் செய்வார்.

மூன்று ரூபாய்க்கு விவசாயியிடம் வாங்குகிற வெங்காயம் முப்பது ரூபாய்க்கு விற்கப்படுகிற மந்திரம் என்ன? இடைத்தரகர்கள் அடிக்கிற கொள்ளைதான் இது. சட்ட விரோதச் செயலை ஒழிப்பதற்கு மன்மோகன் சிங்கிடம் உள்ள  தீர்வு என்ன தெரியுமா? அதையே சட்டபூர்வமாக்கி விடுவதுதான். அதுதான் “முன்பேர வர்த்தகம்”. அது நவீன பதுக்கல். உணவு தானியங்கள் அதன் உற்பத்தி மதிப்பைக் காட்டிலும் 150 மடங்கு விற்பனைக்கு ஆளாகின்றனவாம். நடுவிலே ஒரு ஆளை விட்டு பந்து அவன் கைக்கு கிடைக்காமல் பாஸ் பண்ணி விளையாடுவார்கள். இப்போது இந்திய மக்களை நடுத்தெருவிலே விட்டுவிட்டு அவனுடைய நுகர்வுக்கு உணவுதானியங்கள் கிடைக்காமல் யூக வணிகர்கள் பாஸ் பண்ணி விளையாடுவதுதான் முன்பேர வர்த்தகம்..

உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவிற்கான உரிமை என்பவை இன்று இந்தியாவில் மிக அவசரமானதொரு அரசியல் பிரச்சனைகளாக மாறியுள்ளன என்பதில் வியப்பேதுமில்லை. கடந்த 20ஆண்டு காலத்தில் மிகத் துரிதமாக வளர்ந்து வந்த ஒட்டுமொத்த வருமானமும்கூட மக்களின் உணவுப் பாதுகாப்பு என்ற அடிப்படை     பிரச்சினையைத் தீர்ப்பதாக அமையவில்லை. அதே நேரத்தில் தனிநபர் உட்கொள்ளும்        உணவின் கலோரி அளவுகுறைந்து பட்டினிப் பிரச்சினை மேலும் மோசமாகியுள்ளது  என்றே கூறமுடியும்.

 2005, 2006ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிகச் சமீபத்தில் தேசிய குடும்பநல சர்வேயிலிருந்து பெறப்படும் சத்துணவு குறித்த ஆதாரத்தையே எடுத்துக்கொள்வோம். இந்த ஆய்வின்படி, 3 வயதிற்கு கீழேயுள்ள குழந்தைகளில் 46 விழுக்காட்டினர் எடைக்குறைவான குழந்தைகளாகவும், பெண்களில் 33 விழுக்காட்டினரும், ஆண்களில் 28 விழுக்காட்டினரும் சராசரிக்கும் குறைவான உடல் திண்மை அளவு கொண்டவர்களாகவும் இருந்து வருவது தெரிய வந்துள்ளது. தேசிய அளவிலான இந்த சராசரி கணக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேறுபாடுகளையும் உள்ளடக்கியவை ஆகும். இந்த அறிகுறிகள் அனைத்துமே கிராமப்புற இந்தியாவைப் பொறுத்தவரையிலும் மேலும் மோசமானதாகத்தான் உள்ளது.

வாங்கும் சக்தியான வருமான உயர்வு பெருகாமல் நுகர்வுப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே போனால் நமது நாட்டின் நிலை இன்றும் பத்தாண்டுகளில் சோமாலியாவின் சோகத்தைவிடவும் மோசமானதாக இருக்கும். இது சற்றே பயங்கரமான கற்பனையாகப் பட்டாலும் இதுவே உண்மை. சரியான உணவுக் கொள்கையில்லாத காரணத்தாலே பல ஆப்பிரிக்க நாடுகளில் பஞ்சம் தலைவிரித்தாடியதை நாம் கண்டோம். அந்த நிலையை நோக்கியே நமது ஆட்சியாளர்கள் தேசத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்களோ என்ற அச்சம்  எல்லா மட்டத்திலும் உருவாகியிருக்கிறது.

“சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றிக்கே இங்கு பஞ்சம்“ என பாரதி கொதித்துப் பாடியதன் காரணம் இன்னும் இருந்து கொண்டேயிருக்கிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் உயாந்து கொண்டிருக்கும் நுகர்வுப் பொருட்களின் விலையேற்றத்தைக் குறைபார்களா… அல்லது குறைந்தபட்சம் கட்டுப்படுத்துவார்களா..?

.

(பசுமைத்தாயகம் மே இதழில் வெளியான கட்டுரை)

 சென்ற மாதம் ஒரு நாளிதழைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது தற்செயலாக ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. தவறான மருந்து கொடுத்ததால் இறந்து போன ஒன்பது வயதுச் சிறுமி பற்றிய செய்தி அது. அதற்கடுத்த ஓரிரு தினங்களில் எனது கிராமத்திலிருந்து ஒரு செய்தி வந்தது. காய்ச்சலுக்காக மருந்து சாப்பிட்ட ஒரு பெண் இறந்து போனதாகத் தகவல் வந்தது. இந்த இரண்டு சம்பவங்கள் பற்றியும் நண்பர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்த போது காலாவதியான மருந்துகளை விற்பனை செய்யும் செய்தியையும் படிக்க நேர்ந்தது.

நான்கு மாதங்களுக்கு முன்பு காலில் கட்டி வந்ததால் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன். அலுவலகப் பணி நிமித்தமாக புதுச்சேரி செல்ல நேர்ந்த போது அங்கு ஒரு மருந்தக் கடையில் எனக்கான மருந்துகளை வாங்கினேன். நான்கு மாத்திரைகள் கொண்ட அட்டையை கடைக்காரர் என்னிடம் தந்தபோது எனது நண்பர் மாத்திரையின் பின்புறம் பார்த்துவிட்டு “இது காலாவதியான மாத்திரை” என்று சொல்லித் திருப்பித் தந்துவிட்டார். ஆனால் கடைக்காரர் அதை என்னிடம் தள்ளுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தார். நண்பர் குரலுயர்த்திப் பேசிய பிறகே கடைக்காரர் வேறு மாத்திரை கொடுத்தார்

இன்று போலி மாத்திரைகள் விற்பனையாளர்களை அரசாங்கம் “கண்டு” பிடித்து உள்ளது. மாத்திரை விற்கும் நபர்களைக் கண்டுபிடித்து விட்டார்கள்…. சரி. அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்களையும், அதைத் தரப் பரிசோதனை செய்த அதிகாரிகளையும் என்ன செய்வதாய் உத்தேசம்? 

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மருந்தகங்களிலும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மருந்துகளின் ஆயுட்காலம் பற்றி யார் சோதனை செய்வது? பத்து  மாத்திரைகள் அடங்கிய ஒரு அட்டையை வாங்கும் போதுதான் அதில் மாத்திரை தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். நமது மருந்துக் கடை முதலாளிமார்கள்  பலாப்பழத்தின் சுளைகளை எடுப்பது போல எல்லா மாத்திரைகளையும் துண்டு துண்டாய் வெட்டிவைத்துக் கொண்டு அதை  தலைவலி, காய்ச்சல், வயிற்றுவலி என்று வரும் அப்பாவிகளின் உடலில் கட்டிவிட்டு காசாக்கிக் கொண்டிருக்கிறார்களே… இதைத் தடுப்பது யார்? ஏழை எளிய மக்களுக்கான மருத்துவம் எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கிற சூழலில் மக்கள் தங்களின் நோய்களைத் தீர்த்துக்கொள்ள எவனெல்லாம் மாத்திரை தருகிறானோ…        அவனிடமெல்லாம் வைத்தியம் பார்க்கிறார்கள். அவன் போலியாக இருந்தாலென்ன….. காலியாக இருந்தாலென்ன…..  அவர்களுக்கு நோய் தீர வேண்டும் அதுவும் சுருக்கென்று கையில் பிடித்தமாதிரி சுகமாக வேண்டும். (பின் விளைவாவது….. முன் விளைவாவது… அட போங்கய்யா……)

கடந்த சில நாட்களாக போலி மருத்துவர்களையும் கண்டுபிடிக்கும் பணியை அரசாங்கம் தொடங்கியுள்ளது. இதற்கு முன் 1992 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் இது மாதிரியான “களை“ எடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு அது அப்படியே விடப்பட்டது. பிரச்சினை வரும்போது நடவடிக்கை எடுப்பதும் பரபரப்பு அடங்கியதும் கிடப்பில் போடுவதுமே நமது ஆட்சியாளர்களின் வாடிக்கையாகி விட்டது. இதில் இரு ஆட்சியாளர்களும் ஒன்றுதான்.

காலாவதியான மாத்திரைகளை தயாரிப்பு நிறுவனங்கள் திரும்ப பெற்றுக் கொள்வதில்லை. ஒரு சில நிறுவனங்கள் காலாவதியான மருந்துகளை விற்றுத் தந்தால் ஒரு தொகையை கமிஷனாக தருகின்றன. சில நிறுவனங்கள் காலாவதியான மாத்திரையை திரும்ப வாங்கினாலும், குறைந்த தொகையை தான் திருப்பி தருகின்றன. நஷ்டத்தை சரிக்கட்ட சில கடைக்காரர்கள் காலாவதியான மாத்திரைகளை அப்பாவிகளின் தலையில் கட்டி  விடுகின்றனர்.

“வெளிநாட்டுல தடைவிதிச்ச மருந்தையெல்லாம் நம்ம சர்க்கார் வாங்கித் தொலைக்கிறான்… பாழாப்போன ஏழைசனம் நாளாப்போன மருந்தைத் தின்னு சுடுகாட்டுக்கு வழியத் தேடுறான்…”” என்று  நம்முடைய மருத்துவ முறையைப் பற்றி ஒரு கிராமியப் பாடகர் பாடியது நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை எங்கும் எதிலும் கலப்படம் என்ற நிலையில் ஆட்டைக் கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடிக்கும் கதையாக, மருந்து மாத்திரைகளிலும் போலிகள் புகுந்து விட்டதுதான் வேதனை.

2001ல் எடுத்த ஒரு இந்திய கணக்கெடுப்பின்படி நாட்டின் மொத்த மருந்து உற்பத்தியில் (ரூ.22,887 கோடி) 18 விழுக்காடு போலிமருந்துகள், அதாவது ரூ.4112 கோடியாம். இப்போதைய அதன் சந்தை மதிப்பு ரூ.2000 கோடியாக குறைந்து விட்டதாக சொல்வது ஆறுதலான விஷயமா என்ன? ‘உலக மருந்துப் பொருள் சந்தையில் 35 விழுக்காடு போலித் தயாரிப்புகள் இந்தியாவில் இருந்துதான் வருகின்றன’ என்று உலக சுகாதார நிறுவனம், ஓங்கி குட்டியதற்கு பின்னர் தான் போலிகளை பற்றிய பயம் தொடங்கியது. விழிப்புணர்வு பிறந்தது.  உலக மருந்து உற்பத்தியில் 8%, உலக மருந்து விற்பனைச் சந்தையில் 2%, மருந்து உற்பத்தியில் ஆண்டுக்கு 12.14% வளர்ச்சி, தினந்தோறும் 20 புதிய தயாரிப்புகள் என சாதனை படைத்த தேசம் இது. அது மட்டுமா ஆண்டுக்கு ரூ.85000 கோடி மருந்து உற்பத்தியையும், அதில் ரூ.35000 கோடி ஏற்றுமதியையும் மேற்கொள்ளும் நாடு என்று புகழ் பாடும் நேரத்தில், ‘‘35% போலிகள்’’ என்ற குற்றப்பத்திரிகையும் வாசிக்கப்பட்டது. அதன்பின்னர் நடத்தப்பட்ட அதிரடி ஆய்வுகளுக்கு பின்னர்தான் உண்மை தெரிந்தது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளில் 20% போலிகள் மற்றும் தரக்குறைவானவை. அதில் 60% மருந்துகள் சரியான உட்பொருட்கள் இல்லாதவை, 19% தவறான உட்பொருட்கள் கொண்டவை, 16% ஆபத்து தரக்கூடிய உட்பொருட்கள் கொண்டவை என்ற அதிர்ச்சியை செய்தி கிடைத்தள்ளது (ஆதாரம்: 15-03-2010 தினகரன் நாளிதழ்)    

தமிழகத்தின் நகரங்கள் தவிர்த்து கிராமங்களில் தங்கி மருத்துவம் செய்யும் மருத்துவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி நேரத்தில் கூட மருத்துவர்கள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் குறைந்த நேரத்தில் அதிக நோயாளிகளைப் பார்க்க வேண்டியதுள்ளது. இதன் காரணமாக அவசர அவசரமாக மருந்தெழுதித் தந்து விட்டுச் செல்லும் மருத்துவர்கள் நிறைய உண்டு. அங்கிருக்கும் பிற பணியாளர்களின் கெடுபிடிகள் சொல்லிமாள முடியாவை

அரசாங்க மருத்துமனைகளின் கெடுபிடிகளுக்குப் பயந்து அதற்குள் நுழைய மனமில்லாமலும், தனியார் மருத்துவமனைகளின் “கவனிப்புகளுக்கு“ பயந்து அதற்குள் நுழைய பணமில்லாமலும் பல ஏழைகள் தங்களின் நோயைத்  முழுமையாகப் பரிசோதனை செய்து கொள்ளாமலேயே இருபது ரூபாய்க்கு ஊசியும் மாத்திரையும் தருகிற பல போலி மருத்துவர்களிடம் தங்களின் ஆயுட்காலத்தை ஒப்படைத்து விட்டார்கள்.

தமிழகத்தில் சுமார் அறுபதாயிரம் மருத்துவர்கள் உள்ளனர் என்றும், ஆயிரம் நபர்களுக்கு ஒரு மருத்துவர்  என்ற விகிதமும், ஐயாயிரம் நபர்களுக்கு ஒரு அரசு மருத்துவர் என்ற விகிதமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.  இவர்களை மீறி எந்த மருந்தும் சந்தைக்கு வரமுடியாது என்பதும், இவர்கள் நினைத்தால் போலி மருந்துகளை மட்டுமல்ல தரமற்ற மருந்துகளைத் தயார் செய்யும் நிறுவனங்களைத் தனிமைப்படுத்த முடியும் என்பதும் ஊரறிந்த உண்மை. சந்தையில்  தாங்கள் அறிமுகம் செய்யும் புதுப்புது மருந்துகளை மருத்துவர்கள் மனசு வைக்காவிட்டால் அவை மக்களிடம் செல்லாது என்பதை நன்றாய் உணர்ந்துள்ள மருந்து நிறுவனங்கள்., தங்களின் முக்கிய இலக்காக மருத்தவர்களைக் குறி வைத்து, அவர்களை திருப்திப்படுத்த பல்வேறு வழிகளை இந்த நிறுவனங்கள் கையாளுகின்றன. நட்சத்திர விடுதிகளில் விருந்து. விலை உயர்ந்த பரிசுகள், வெளிநாட்டில் சுற்றுலா என பல கவனிப்புகள்.

ஒரு பக்கம் பற்றாக்குறையான மருத்துவர்கள் மறுபக்கம் நோய்தீர்க்க முடியாமல் போலிகளிடம் மாட்டிக் கொள்ளும் மக்கள் என்ற நிலையில் நமது நாட்டின் சுகாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.  சமீபகாலமாக சொட்டு மருந்து போட்டு முடித்த பிறகு  சொட்டுமருந்து குடித்த குழந்தைகள் இறந்து விட்டார்கள் என்ற வதந்தியைப் பரப்பி அதற்காக தடுப்பூசி மூலம் பணம் பண்ணும் பணியை சில மருத்துவமனைகள் திட்டமிட்டு செய்து வந்ததையும் காண முடிந்தது.

கிராமப்புறத்து ஏழைகள் 25% சத்துக் குறைவாலும் நோய் தீர்க்க முடியாமலும் தான் தங்களின்  ஆயுளை முடித்துக் கொள்கிறார்கள். ஏழைகள் தங்களது மொத்த ஆயுளை 12% சுகாதாரத்திற்கென செலவிடுகிறார்கள். பலரது முழு சேமிப்பும் ஒரே ஒரு முறை மருத்துவ மனையில் உள் நோயாளிகளாகச் சேர்க்கப்படுவதால் செலவாகிறது. கடந்த பத்தாண்டு காலத்தில் நோய்க்கு சிகிச்சை எடுக்க பணமில்லாத காரணத்தால் இறந்து போனவர்களின் எண்ணிக்கை கிராமப்புறத்தில் 15% த்திலிருந்து 25% மாகவும் நகர்புறங்களில் 15% இருந்து 21% மாகவும் உயர்ந்துள்ளது. உலக வங்கியின் கணக்கின்படி மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர 40% மக்கள் கடன் வாங்க வேண்டிய அல்லது தன்னிடமுள்ள பெரும்பாலான சொத்துக்களை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் 35% மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் தள்ளப்படுகிறார்கள். கிராமப்புறங்களில் கடன் வாங்குவதற்கு இரண்டாவது பெரிய காரணமாக மருத்துவச் செலவுகள் உள்ளன.

இந்தியாவில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களில் 74% பேர் குழந்தைகளாகவும்,. 52% பெண்களாகவும் உள்ளனர். அதில் 61% நபர்கள் குறைந்த வருமானம் உள்ளவர்கள். உலக மக்கள் தொகையில் 17% விழுக்காடு கொண்ட இந்தியா, ஐந்தில் ஒரு பங்கு சுகாதாரச் சுமையைத் தாங்கிய வண்ணம் உள்ளது. 23% குழந்தை இறப்புகள், 20% கருவுற்ற பெண்களின் சாவு, 30% காசநோய், 68% தொழுநோய், 14% எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்படுதல் என எண்ணிலாத் துயரங்களோடு நமது மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பது வேதனையானது. இந்தியாவைக் காட்டிலும் குறைந்த வருமானமுள்ள நாடுகளில் கூட சுகாதாரத் துறையில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் சுகாதாரத் திட்டங்கள் போதுமான அளவு மக்களைச் சென்றடையவில்லை என்றே சொல்லலாம். ” இந்திய அரசின் பங்களிப்பானது அடிப்படைக் கல்வி, மருத்துவ வசதி, சமுதாயத்தில் அனைவருக்கான பாதுகாப்பு, நிலச் சீர்திருத்தம், சமுதாய மாற்றத்தில் வளர்ச்சி போன்ற இவற்றில் போதுமானதாகவும். சரியான செயல் திறன் கொண்டதாகவும் இல்லை” என்று நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் கூறியுள்ளார். ” தனியொருவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பது அவரது தேவையை ஒட்டி அமைய வேண்டுமே ஒழிய அவரால் சிகிச்சைக்காக எவ்வளவு பணம் கொடுக்க முடியும் என்பதை ஒட்டி அமையக் கூடாது”.  என்று இந்திய அரசியல் சாசானம் சொல்கிறது.  இது நடைமுறையில் சாத்தியமா…? சாத்தியமில்லையெனில் நமது அரசியல் சாசனம் சொல்வது பொய்யா?

என்ன சொல்லி என்ன செய்ய வலின்னு  சொல்லி டாக்டர்கிட்ட போனா அவரு காலாவதியான மருந்தக் குடுக்குறாரே…. இந்தக் கொடுமையை எங்க போயி கொட்டுறது? “படிச்சவன் சூதும் பாவமும் செய்தால் போவான்.. போவான்.. அய்யோ என்று போவான் என பாரதி  சொன்னது நடக்கவில்லையே… ஏழைகளின் உயிரோடு விளையாடியே பலர் லட்சாதிபதிகளாவும் கோடீஸ்வரர்களாகவும் வளர்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள். நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட காலாவதியான மருந்துகளின் மொத்த மதிப்பு பதினாறு கோடி என்றால் இன்னும் கைப்பற்றப்படாமல் இருக்கும் மருந்துகளின் மதிப்பு எவ்வளவு? அதனால் ஏற்படப் போகிற உயிரிழப்பு எவ்வளவு?

மருத்துவம் படிக்கிற காலத்தில் ஒரு வருடம் கட்டாயம் கிராமங்களில் தங்கி பணி புரிய வேண்டும் என்று திரு அன்புமணி அவர்கள் தனது அமைச்சர் பணிகாலத்தில் சட்டம் கொண்டுவந்தார். அப்போது அதற்கு எதிராக மானவர்களைத் தூண்டிவிட்டும்  விசமத்தனமாக பிரச்சாரத்திலும் ஈடுபட்ட சில ஊடகங்களும், அரசியம் அமைப்புகளும் தற்போது மௌனமாய் இருப்பது ஏன்? 

மருத்துவர்கள் எல்லாம் பணம் பண்ணுபவர்கள்… காலாவதியான மருந்து மாத்திரைகளைப் பரிந்துரை செய்பவர்கள் என்று கற்பிப்பதல்ல நமது நோக்கம். மருத்துவர்களில் பலர் சமூக அக்கறையோடு பணியாற்றுவதைக் காண முடிகிறது. மருத்துவம் படித்த பின் தனது மருத்துவ அறிவை ஏழை எளிய மக்களுக்காகப் பயன் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மருந்துப் பையைத் தோளில் சுமந்துகொண்டு கிராமம் கிராமமாய் சென்று வைத்தியம் பார்த்து, பின்னர் அம்மக்களுக்கான சமூக விடுதலைக்காக சமூகப்போராளியாகி, புரட்சியாளராய் வாழ்ந்து  மறைந்த சேகுவேராவும் மருத்துவம் படித்தவர்தான்.

மருத்துவராய் தனது வாழ்வைத் தொடங்கி சமூகப் போராளியாய் வாழ்நாளெல்லாம் மக்களுக்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கும் மருத்துவர் அய்யாவும் மருத்துவத் துறையில் இருந்தவர்தான். வயதில் அனுபவத்தில் மூத்தவர் இளையவர் என்ற பாகுபாடில்லாமல் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் விலை மதிப்பில்லா உயிரைக்காக்கும் மகத்தான பணியை ஒப்படைப்பது மருத்துவர்களிடம்தான். தனது உயிரைக்காப்பாற்றிய வைத்தியரை கடவுளுக்கும் மேலாகக் கருதும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் தேசம் இது. போலிகளிடமிருந்தும் காலாவதியான காலிகளிடமிருந்தும் மக்களின் உயிரைக் காக்க வேண்டிய பொறுப்பு மருத்துவர்களுக்குள்ளது. மருத்துவத் துறையைக் காப்பாற்றுங்கள். மக்கள் உங்களை வணங்குவார்கள்.

(ஏப்ரல்-2010 பசுமைத்தாயகம் இதழில் வெளியானது)

சென்ற வாரம் எனது சொந்த கிராமத்தின் திருவிழாவிற்குச் சென்றேன். பல வருடங்கள் நான் பார்த்துச் சலித்த நிகழ்ச்சிகளும், முகங்களுமே இருந்தாலும் ஒவ்வொரு முறையும் புதுப்புது அனுபவங்களை திருவிழாக்கள் கற்றுத் தருகின்றன. ஏனெனில் திருவிழாக்களை எந்த பஞ்சாங்கங்களும் முடிவு செய்வதில்லை. உழைக்கும் மக்களால் உருவாக்கப்பட்டுள்ள கிராமக் கமிட்டிகளே முடிவு செய்கின்றன. அவர்களுக்கு  ஏதுவாக நாட்களில் திருவிழாக்கள் நடத்துகிறார்கள்.

கடந்த நான்காண்டுகளாய் ஆற்றில் சாமி செய்யும் நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை. கடமலையில் வசித்த காலங்களில் நண்பர்களோடு ஆற்றுக்குச் செல்வது வாடிக்கையானது. எங்கள் திருவிழாவில் சிறப்பம்சங்களில் ஆற்றிலிருந்து கரகம் எடுத்தலும் ஒன்று. பின்னிரவு தாண்டி புறப்படும் இந்த ஊர்வலத்தில் எழுபது விழுக்காட்டினர் போதையின் உச்சத்திலிருப்பார்கள். கோவிலுக்கான தலைக்கட்டு வரி வசூலைக் காட்டிலும் டாஸ்மார்க் கடையில்  மூன்று மடங்கு தொகைக்கு விற்பனை நடந்துள்ளது. (வரி வசூல் ஒரு லட்சத்து அறுபதாயிரம். டாஸ்மார்க் வசூல் ஆறு லட்சம்) எனவே நான் கடந்தாண்டுகளில் இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந்தாண்டு நானும் சுநதரும் கலந்து கொண்டோம். எனது நண்பர் வட்டத்தில்  பலர் மாறிப்போன பிறகும் சுந்தர் மட்டும் இன்னும்  எனக்கான எண்ணங்களோடும், பிற பழக்கங்கள் இல்லாமலிருப்பதும் ஆறுதலான ஒன்று. ரவிச்சந்திரனோ…. ராம்குமாரோ….. விவேகானந்தனோ இல்லாத நாட்களில் அவர்களின் இடத்தை சுந்தர் நிரப்புகிறான். (சுந்தரைப் பற்றி தனியாக எழுத வேண்டும்)

எங்கள் ஊர்த்திருவிழாவில் ஒட்டுமொத்த சாதிக்காரர்களும் சேர்ந்து சாமி கும்புடு நடத்துவது சுற்று வட்டாரத்தில் எப்படி பிரபலமோ அதே போல சாமியெடுத்தலும் பிரபலமான நிகழ்வு. சாமி செய்தல் என்ற நிகழ்வின் பின்னால் பலர் தங்களின் உழைப்பைத் தந்து கொண்டிருக்கிறார்கள். அம்மன் சிலையை மண்சட்டியில் வேப்பிலையைச் சொருகி, மண்சட்டியைச் சுற்றிலும் மல்லிகைப் பூக்களைச் சுற்றி, அதில் நட்ட நடு மையத்தில் மஞ்சள் வைத்து அதன் மீது அம்மனின் உருவம் பொறித்த ஐம்பொன் முகத்தை வைப்பார்கள்.

இதில் ஒவ்வொரு பணியையும் ஒவ்வொருவர் தாமாகவே எடுத்துக் கொள்கிறார்கள். மல்லிகைப் பூக்களைக் கட்டிக் கொடுப்பது என சிலர், வேப்பிலை பறித்துத் தருவதென சிலர்,  கரகம் எனப்படுகிற சாமி செய்யும் போது பக்கத்திலிருந்து அதற்கான பணிவிடைகள் செய்வதென சிலர், சாமி ஊர்வலத்தில் குடை பிடிப்பதென சிலர், பூசாரி அதிகமாக அருள் வந்து சாய்ந்துவிடாமல் அவரைப் பிடித்துக் கொள்வதென சிலர்   நேர்த்திக் கடன் பட்டிருக்கிறார்கள். அவரவர் பணியை அவரவர் செய்து கொண்டிருக்கிறார்கள். (பூசாரியைப் பிடித்தக் கொள்ளும் பணியை சில வருடங்கள் நானும் முத்துரங்கனும் செய்தோம். சில கசப்பான அனுபவங்கள் கிடைத்த பிறகு விழாக்குழு பக்கம் கூட நான் செல்வதில்லை.)

அதிகாலை மூன்று மணிக்குப் புறப்படும் சாமி ஊர்வலம், வரும் வழியெல்லாம்  நூற்றுக்கணக்கான சாமியாடிகளுக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் காட்சி தந்துவிட்டு   காலை ஐந்து மணிக்குப் பிறகே ஆலயம்  வந்தடைகிறது.  சாமியாடிகளில் பல பழைய முகங்களாக இருப்பதைக் காணும்போது இளைய சமுதாயத்தினரின் மத்தியில் பகுத்தறிவு பிறந்து விட்டது என்று நம்பத் தோன்றியது.

கொட்டு முழக்கமும் வானவேடிக்கை ஆரவாரமும் பலருக்கு சாமியாடும் வாயப்பைத் தருகிறது. நூற்றுக் கணக்கானவர்கள் சாமியாடுவதால் அனைவருக்கும் விபூதியிட்டு சாமிகளைமலைஏறச் செய்யும் பெரும் பொறுப்பை பூசாரியால் மட்டுமே செய்ய முடியாத காரணத்தால் பல துணைப் பூசாரிகளும் முளைத்து விடுவார்கள். இந்தாண்டு பல துணைப் பூசாரிகளுக்குள் யார் பெரியவர் என்ற சண்டை பிறந்து பிறகு கிராமத்தார் சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று.

பெரியமேளம், தாரை, தப்பாட்டம், உருமி, கரகாட்டம், வானவேடிக்கை  என அனைத்து ஆரவாரத்தோடும் புறப்பட்டு வரும் காளியம்மனுக்கு முன்னால் காளி வேடமிட்டு ஆடுவதற்குத் தயாராக சிலர் இருந்தார்கள்.  எனது சின்ன வயதில் தொடங்கி நீண்ட நாட்கள்  என் பள்ளித் தோழன் கருப்பையாவின் தந்தைதான்  காளி வேடமிடடு ஆடுவதை நான் பார்த்திருக்கிறேன். தற்போது இளம் வயதுக்காரன் ஒருவன் தயாராக இருந்தான். கருப்பையாவின் அண்ணன் மகனாம். யாரும் யாரையும் கட்டாயப்படுத்தாமலே வாழையடி வாழையாக இந்தப் பொறுப்புகளை எடுக்க நமது ஜனங்கள் பழகிக்கொண்டார்கள். கடந்த பத்தாண்டுகளாய் எனது தம்பிதான் எங்கள் குடும்பத்தின் சார்பில் சாமிக்குக் குடைபிடிக்கிறான். இதற்கு முன் எனது அண்ணன் இந்தப் பணியைச் செய்தார். குடைபிடிப்பதற்காக பங்குனி மாதம் முழுவதும் விரதமிருப்பதும் வேறு பழக்கங்களை ஒத்திவைப்பதும் பக்தியாலா…? அல்லது பயத்தாலா….?

சாமி வரும் வழியெல்லாம் கோலமிட்டிருந்தனர். உள்ளூர் மற்றும் வெளியூர்ப் பெண்கள் அவரவர் வீட்டுமுன் இந்தப் பணியைச் சிறப்பாகவே செய்திருந்தார்கள். சாமி கோவிலை அடைந்தவுடன் மாவிளக்கு எடுத்து வரப்பட்டது. அன்று பகலெல்லாம் ஆட்டங்களும் கொண்டாட்டங்களுமாய் பொழுது மிக வேகமாய்ச் சென்றது.  கிராமத்திலிருக்கும் மக்கள் அவரவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தங்களால் முடிந்த வேடங்களைப் போட்டு தெருவெல்லாம் ஆடித்திரிந்தார்கள். வேடமிடுவதில், ஆடுவதில் மணியார்களே எப்போதும் பிரமாதப்படுத்துவார்கள். இந்தாண்டும் அப்படியே இருந்தது. அதிலும் பதினிக்கார மாமாவின் பலவேசம் மிகச் சிறப்பாக இருந்தது.

சமீப காலமாக சாதியம் தலை தூக்கியிருப்பதைக் காண முடிந்தது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவரவர் சாதிக்கான ஓர் அடையாளத்தில் பனியனை வடிவமைத்துக் கொண்டு அதை அணிந்து கொண்டு அலைவதும், யாராவது பிற சாதிக்காரனைப் பார்த்து உறுமுவதுமாய் இளைய சமுதாயம் இருந்ததைக் காணும் போது   கவலையாக இருந்தது.

எனக்கு விபரம் தெரிந்த காலத்தில் முத்துவேல் அண்ணன், அருள்மாமா, கருப்பையா மாமா, எனது சித்தப்பா, போஸ் அண்ணன், பாலகுரு அண்ணன் போன்ற படித்த இளைஞர்கள் ஒன்று கூடி  பொங்கலை முன்னிட்டு விளையாட்டுப் போட்டி நடத்துவதும், நாடகங்கள் நடத்துவதையும் நான் பார்த்திருக்கிறேன். அதற்குப் பின்னர் சுதந்திரன், சேது, முத்துராமலிங்கம், செல்லக்கண்ணு, ரவிச்சந்திரன் போன்ற எங்களின் முன்னோடிகள் இந்தப் பணியைத் தொடர்ந்தார்கள். இவர்கள்தான் என்னைப் போன்றோர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்தவர்கள். அதிலும் குறிப்பான சுதந்திரன் எங்களுக்கான இன்னொரு வாசலைத் திறந்து விட்டவர். இவர்களுக்குள் எல்லாம் சாதிய எண்ணம் இல்லை. இன்று நடந்து கொண்டிருக்கும் செயல்களைக் காணும் போது இளைஞர்களை வழி நடத்த நல்ல தலைமை இல்லை என்றே தோன்றுகிறது.

முளைப்பாரி எடுத்துக் கொண்டு வரும் நேரத்தில் நாங்கள் கிளம்பினோம். எனது பிள்ளைகளுக்கு ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டு வந்தேன். சிலவற்றை ஆர்வத்தோடும், பலவற்றை ஆர்வமில்லாமலும் கேட்டுக்கொண்டே வந்தான் எனது மகன்.

மாலையில் நான் எங்கள் ஊருக்குப் பக்கத்திலிருக்கும் சித்தார்பட்டிக்குச் சென்றேன். இங்கும் இன்று திருவிழா. எங்கள் ஊரைப் போன்று ஆண்டுதோறும் கொண்டாடாமல் கிடப்பில் கிடந்த திருவிழா. ஊருக்குள் சண்டை வந்தால் முதலில் சாமி கும்பிடைத்தான் பழிவாங்குவார்கள். பதினைந்தாண்டுகள் திருவிழா நடத்தாத   ஊரில் திருவிழா நடப்பதால் அதைக்காணும்  ஆவலில் அங்கு சென்றேன். எங்கள் ஊரை விட எல்லா வகையிலும் சின்ன கிராமமான சித்தார்பட்டியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் திருவிழா நடந்தது.

சாமியாட்டங்களுக்கும் குறைவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாக கிடா வெட்டி, பொங்கல் வைத்து விருந்துக்கு  சொந்த பந்தங்களை அழைத்து அவர்களுக்கு உணவு படைத்து, தாங்களும் உண்டு, மறுநாள் காலையில் ஊரே மஞ்சள் நீராட்டில் நனைந்து என ஒட்டுமொத்த கிராமமும் குதூகலத்தில் இருப்பது பங்குனி சித்திரை மாதங்களில் மட்டுமேதான்.

திருவிழா முடிந்த அடுத்த நாளில் மிகவும் பரபரப்போடு தங்களின் வாழ்வாதார இருப்பிடங்களுக்கு மக்கள் கூட்டம் படையெடுத்தது.

ஒவ்வொரு திருவிழாவுக்கும் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களோடு சண்டையிட்டு விடுப்பு வாங்கிவருவதும், பின்னர் அவசர அவசரமாகப் புறப்பட்டுச் செல்வதுமாய் பலரின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. தான் எவ்வளவு துன்பப்பட்டாலும் தனது கடவுளையும்  அதனை வணங்குவதற்கான நேரத்தையும் உழைக்கும் மக்கள் ஒரு நாளும் தள்ளிப் போட்டதில்லை. தங்களுக்குள் ஏற்படும் சின்னச் சின்ன கோபங்களால் நிலநேரம் வழிபாடு தள்ளிப் போனாலும் பின்னர் ஒரு நாளில் மொத்தமாய் தனது தெய்வ கடமையைத் தீர்த்தக் கொள்வதில் அடித்தட்டு மக்களே எப்போதும் சிறந்தவர்கள்

கிராமங்களின் திருவிழாக்களில் காணப்படும் சின்னச் சின்ன குறைபாடுகளை ஒதுக்க வேண்டிதில்லை அதை கவனத்தில் கொள்ள வேண்டும். சித்தார்பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் வரி வாங்குவதில்லை. கடமலையில் ஆதிகாலத்திலிருந்து வரி வாங்கினாலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிராமக் கமிட்டியின் நிர்வாகக்குழுவில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு இன்று வரையில் வழங்கப்படவில்லை.

நமது தேசத்தின் ஆதாரங்களான கிராமங்கள்தான் ஒற்றுமையின், பண்பாட்டின் சின்னங்களாகவும் இன்று வரையில் விளங்குகின்றன. கிராம விழாக்கள் பலப்படுத்தப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும்.  கிராமங்களில் பிறந்து நகரங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தங்களின் கிராமத்தின் பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கான உதவிகளைச் செய்ய வேண்டும். கிராம மக்களின் வருவாய் பெருக்கத்திற்கான வழியை உருவாக்கும் பொருட்டு தங்களது முதலீடுகளையும் தொழில்களையும் கிராமத்தில் தொடங்க வேண்டும்.

தங்களின் கிராமத்திலிருந்து படித்து வெளியே வரும் அனைத்து இளைஞர்களுக்கும் தங்களால் இயன்ற வழிகாட்டுதலை வழங்க வேண்டும். வழிகாட்டுதலின்றியே பல இளைஞர்கள் தங்களது வாழ்வை பல தவறான பழக்கங்களுக்குள் திணித்துக் கொண்டு சீரழிந்து போய்விட்டார்கள். தொலைந்து கொண்டிருக்கும் கிராமங்களின் அடையாளங்களை மீட்டெடுக்கும் பணியை யார் முதலில் தொடங்குவது?

நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு கலை நிகழ்ச்சியைப் பார்த்தேன்.  அந்த கலை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த பிரபல கிராமியக் கலைஞர் ஓம் முத்துமாரி, போகிற போக்கில் ஒரு கதையைச் சொல்லிச் சென்றார்.  ”மேகங்கள் மாநாடு போட்டு ஒரு தீர்மானம் போட்டுச்சாம்….  இனி இந்த பாவிப் பயலுக வாழும் பூமிக்கு மழை தரக்கூடாதுன்னு முடிவெடுத்துச்சாம்…..  முடிவுக்கு எல்லா மேகங்களும் கட்டுப்பட்டுக் கிடக்க ஒரு நொண்டி மேகம் மட்டும் அதையும் மீறிப்போய் மழை பெஞ்சுட்டு  வந்துடுச்சாம்.   மற்ற மேகங்களுக்குக் கெட்ட கோபம் வந்தது.  அந்த நொண்டி மேகத்தை உலுக்கி எடுத்து விட்டன. அப்போது அந்த நொண்டி மேகம் சொன்னது ”அட ஏன் இப்படி கோவிக்கிறீங்க இந்த கெட்ட சாதி மனுசப் பயலுகல கஷ்ட்டப் படுத்தனும்கிறது தானே ஒங்க நோக்கம்.  அத நான் தான் சரியாச் செஞ்சிட்டு வந்திருக்கேன்.  நீங்க யாரும் போய் மழை பெய்யல.  அந்த மனுசனுங்க வெதைக்கவே இல்லை.  நான் என்ன பண்ணினேன்னா லேசாப்போயி தலையைக் காட்டிட்டு வந்துட்டேன்.  அதை நம்பி எல்லோரும் நெல்லை வெதச்சிட்டு உட்காந்திருக்காங்க.  இனி நானும் அந்த பக்கம் எட்டிப் பார்க்க மாட்.டேன்.  அவனுங்க சுத்தமா தொலைஞ்சானுங்க. என்று சொல்ல… எல்லா மேகங்களும் கெக்கலி கொட்டிச் சிரித்தனவாம்.”  ஏழை விவசாயிகளின் சோகத்தை இதை விட கன கச்சிதமாகச் சொல்லிவிட முடியமா… இந்தக் கதையை நான் கேட்டு இருபதாண்டுகள் முடிந்து விட்டது. எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன….     ”வயலையும் வாய்க்காலையும் வாழ வைத்தவிட்டு தான் மட்டும் சாவியாகிப் போன சம்சாரிக் குடும்பங்கள்… ” என்று பாரதிராஜா சொன்ன சொல்ல இன்னும் அர்த்தத்தோடு தானே இருக்கிறது.

கட்டை வண்டி பின்னே இழுக்க…  கம்யூட்டர் முன்னே இழுக்க… இரண்டுக்கும் இடையில் ரப்பராய் தேய்ந்து கொண்டிருக்கிறான் உழவன். ஒரு காலத்தில் ஊருக்கெல்லாம் படியளந்த கரங்கள் இன்று ரேசன் கடையில் கிடைக்கும் அரிசியைச் சிந்தாமல்  சிதறாமல் வாங்குவதில் கவனமாக உள்ளது. நம்முடைய விவசாயிகள் உர விளம்பரங்களிலும், அரசின் சாதனை விளம்பரங்களிலும் மட்டுமே சிரிக்கிறார்கள். உழும் குலத்தில் பிறந்தவர்களே உலகாளப் பிறந்தவர்கள் என்ற கம்பனின் கவிதையும்,போர் செய்து பெரும்படை தரும் வெற்றியை விடவும் மேலானது வைக்கோல் போர் முடித்து கண்டெடுக்கும் நெல் மணிகள் எனச் சொன்ன புறநானூற்றுக் கவிதையும், சூழலும் ஏர் பின்னது உலகம் எனச் சொன்ன வள்ளுவமும் தங்களுக்கான அர்த்தம் செத்துக்கொண்டிருப்பதைக் கண்டு மௌனமாக அழுகின்றன.

அழுதவன் கணக்குப் பார்த்தால் கண்ணீராவது மிஞ்சும். உழுதவன் கணக்கில் ஒரு மண்ணும் மிஞ்சாத காரணத்தால் உழவர்களெல்லாம் கூலி வேலைக்காரர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். பெங்களூருவின் உணவு விடுதிகளிலும், திருப்பூரின் சாயத் தொழிற்சாலைகளிலும், கேரளாவின் ரப்பர் காடுகளிலும், ஆந்திராவின் முருக்குக் கடைகளிலும் தமிழகத்தின் ”யானை கட்டிப் போரடித்த வம்சம் கூலிகளாக இருப்பது யார் கண்ணுக்கும் உறுத்தவில்லையே…. சொரணையற்றவர்களாகிக் கொண்டிருக்கிருக்கிறோமா நாம்? நமக்கு சொரணை இருந்தால்.. ” உலகத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக உழவர் திருநாளை முன்னிட்டு………… நடிகை பங்கு கொள்ளும் முற்றிலும் வித்தியாசமான நடன நிகழ்ச்சி..” என்ற விளம்பரங்களைக் கண்டு குறைந்தபட்ச கோபப்பட்டாவது இருப்போமே…..

குதிரைவாலி, சாமை, வரகு, கேழ்வரகு, இணுங்குசோளம், வெள்ளைச்சோளம் தட்டாம்பயிறு, குரங்குத்தட்டான், காராமணி, எள், கொள்ளு, முத்தாமணக்கு, மல்லாட்டை, சனம்பு, போன்ற பெயர்களுக்கெல்லாம் இனி அகராதியில் அர்த்தம் தேட வேண்டிய சூழல் வந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய மக்கள் தொகையில் எழுபது விழுக்காடு மக்களை வேளாண் மற்றும் வேளாண்மை சார்ந்த உற்பத்தியாளர்களாகக் கொண்டே சுதந்திரம் அடைந்த ஒரு தேசம், தான் விடுதலை பெற்ற அறுபதாவது ஆண்டிலேயே வேளாண் பெருமக்களின் எண்ணிக்கையை கணிசமாக இழந்திருப்பது வேதனையான செய்திதான். ஒட்டுமொத்த மக்கள்தொகையில் அதிகமாக மக்கள் மேற்கொள்ளும் தொழிலுக்கு முன்னுரிமை தருவதற்குப் பதிலாக தற்போது உள்நாட்டு நிலங்களையெல்லாம் வெளிநாட்டுக்காரனுக்கு கிரையம் முடித்துத் தரும் தரகு வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிலும் அமெரிக்காகாரனைப் பார்த்தே சூடு போட்டுப் பழகி விட்ட நமது ஆட்சியாளர்கள் தற்போது விவசாயத்துறையிலும் அமெரிக்காவைப் போன்றே கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்துள்ளார்கள்.

கொய்மலர் விஷவெள்ளரி, கண்வலிக்கிழங்கு, மூலிகைகள் என ஏற்றுமதிக்கான பணப்பயிரை விளைவிப்பதில் முன் முனைப்போடு அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.  இதில் ஏமாற்து போன கதைகள் திண்டுக்கல், ஆத்தூர்,  வேடசந்தூர், ஒட்டன் சத்திரம் பகுதிகளில் ஆயிரம் உண்டு.

சுதந்திர இந்தியாவில் யாராலும் காப்பாற்ற முடியாத அபாயமான கட்டத்திற்கு உழும் குலத்தில் பிற்ந்தோர்களின் பரம்பரைகள் தள்ளப்பட்டு விட்டார்கள். காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி என ஓடிய நதிகளையெல்லாம் நாற்றமடிக்கும் கூவங்களாய் மாற்றிய காரணத்தாலே ஆண்டு தோறும் விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு பெரு நகரங்களின் சேரிகளில் தினக்கூலிகளாய் குவிந்து கொண்டிருக்கும் உழவர்களின் எண்ணிகை உயர்ந்து கொண்டே போகிறது. இன்று நகரங்களில் குடிபெயரும் பலரில் உழவியல் நுட்பம் தெரிந்த சிறு குறு விவசாயிகளும் அடக்கம்.

இது உண்மை. வேண்டுமானால் ஓர் ஆய்வை அரசாங்கமே நடத்தட்டும். இந்த ஆய்வுக்கு தலைப்பாக ”கடந்த இருபதாண்டுகளில் விவசாயிகளின் நிலை” என்று வைத்துக் கொள்ளலாம். 1980-2009 வரையில் 5 ஏக்கர் முதல் 20 ஏக்கர் வரை வைத்திருந்தவர்களில்  2009 ஆம் ஆண்டில் எத்தனை பேர் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கணக்கை ஒளிவு மறைவின்றி வெளியிடட்டும்.

ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருந்தவர்களின் நிலை இன்னும் மோசம். தான் பட்ட கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை மட்டும் கடந்த பதினைந்தாண்டுகளில் சுமார் மூன்று லட்சத்தை எட்டுகிறது என ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. விவசாயம் பொய்த்துப் போவதற்கும் விவசாயிகள் வேறு பணிகளைத் தேடுவதற்கும்  விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையேற்றத்தை நிரந்தரப்படுத்தாததுதான் காரணம்.

விவசாயம் செய்யும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டிருக்கிறது. சென்னை, மதுரை போன்ற பெரு நகரங்களில் புறநகர் வளர்ச்சிக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நிலங்களெல்லாம் வீடுகளாகி விட்டன. இன்றைய வியாபார கலாச்சாரத்தில் குறுக்கு வழியில் சம்பாதித்த கருப்பு பணத்தை நிலங்கள் மீது முதலீடு செய்து, அந்த நிலங்களை தங்களின் உல்லாச விடுதிகளாய் மாற்றிக் கொண்டிருக்கிற சூழலில் விவசாய உற்பத்தி பற்றியும், வேளாண்மை வளர்ச்சி பற்றியும் பேசுவதற்கு, கவலைப்படுவதற்குக் கூட நேரமில்லாத, ஆளில்லாத  நிலையில்தான் நமது தேசம் உள்ளது.

1970 ல் தொடங்கி கடந்த நாற்பதாண்டுகளில் விவசாய உற்பத்திக்குத் தேவையான கருவிகளின் விலையேற்றத்தைக் கணக்கிட்டாலே தெரியும். 1970களில் 35 குதிரை சக்தி கொண்ட டிராக்டரின் விலை இருபதாயிரம். 75 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல்லின் விலை 45முதல் 50 ரூபாயாக இருந்தது. அப்போது 400 மூடை நெல் விற்றால் ஒரு டிராக்டர் வாங்க முடிந்தது. ஆனால் இப்போது அதே டிராக்டரின் விலை 5 லட்சம்.  ஏறக்குறைய 1000 மூடை நெல் விற்றால்தான் ஒரு டிராக்டர் வாங்க முடியும். விவசாய உற்பத்திப் பொருளின் பண்டமாற்று சக்தி உயராமல் இருப்பதற்கு இந்த ஒரு சான்றே போதுமானது. நெல்லை மதிப்பாக வைத்தே அக்காலத்தில் பண்டமாற்று நடைபெற்றதான செய்தியை பட்டிணப் பாலையில் பாடல் ” குறும்பலூர் நெடுஞ்சோணாட்டு வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி நெல்லோடு வந்த வல்வாய் பற்றி” என்ற பாடல் உணர்த்துகிறது.

ஒரு மூடை நெல் விற்றும், ஒரு குவிண்டால் பருத்தி விற்றும்  ஒரு சவரன் தங்கம் வாங்கிய காலத்தில்தான் விவசாய வீடுகளில் சம்மந்தம் செய்து கொள்ள படித்த வர்க்கம் போட்டி போட்டது. இன்று விவசாயம் செய்யும் நபர்களுக்கு மட்டுமல்ல; விவசாயக் குடும்பங்களுக்கே பெண் தருவதற்கும் தயங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

கடந்த நாற்பதாண்டுகளில் தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருட்களின் விலை 40 மடங்கு அதிகரித்துள்ளது. அரசுப் பணியாளர்களுக்கு 50 மடங்கு ஊதியம் உயர்ந்துள்ளது. ஆனால் நெல் மற்றும் கோதுமையின் விலை மட்டும் பத்து மடங்கைக் கூட எட்டவில்லை. வரத்து குறைவான காலத்தில் உயரும் காய்கறிகளின் விலையுயர்வை பக்கம்பக்கமாய் எழுதும் பத்திரிகைகளால் விவசாயம் பொய்த்துக் கொண்டிருப்பதற்கான காரணங்களை ஏன் எழுத முடியவில்லை?. விவசாய இடுபொருட்களின் விலையேற்றமும் இதன் தட்டுப்பாடு பற்றியும் நம்முடைய ஊடகங்கள் அவ்வளவாகக் கவலைப்படாதது ஏன்? அரசியல் விளையாட்டுகளைப் பற்றியும், அதிகார மாற்றங்களைப் பற்றியும், அதிகார மையங்கள் வெளியிடும் தகவல்கள் பற்றியும் படம் பிடித்துக் காட்டுவதில் கொஞ்சமாது வேளாண் உற்பத்திக்குத் தடையாக உள்ள பிரச்சினைகள் பற்றி எழுதவேண்டும்.

கடந்த 2008-ம் ஆண்டிலும், இந்தாண்டிலும் குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் விலைவாசி குறைவதும் பின்னர் உயருவதுமாக இருந்ததைக் காண முடிந்தது. 2008 ல் அறுவடை காலத்தில் குவிண்டால்  இரண்டாயிரம் ரூபாய்க்கு  விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்ட உளுந்து அதற்கடுத்த  மூன்று மாதங்களில் மூன்று மடங்கு விலைக்கு விற்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மழை வருவதை பருவகாலங்களை விடவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களே தீர்மானிப்பதால் மானாவாரி விவசாயம் ஏறக்குறைய முடிவுக்கு வரும் சூழல் உருவாகிவிட்டது. இந்தாண்டு அக்டோபர் முதல் வாரம் பெய்த மழையை நம்பி கடன்வாங்கி விதைவிதைத்த மானாவாரி விவசாயிகளின் வயிற்றில் மண்ணைப் போட்டது மழை. ஏறக்குறைய ஒரு மாதகால இடைவெளி விட்டு நவம்பர் முதல் வாரத்தில் பெய்த மழையால் ஒரு மண்ணும் விளையவில்லை. மேற்குத் தொடர்ச்சி மழைகளிலும் கடலோர மாவட்டகளில் கொட்டித்தீர்த்த மழை, மேட்டுப்பகுதியின் மானாவாரி நிலங்களைக் கண்டு கொள்ளவேயில்லை.

தமிழகத்தின் பருப்புத் தேவையில் 50 விழுக்காட்டைப் பூர்த்தி செய்யும் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களின் மானாவாரி பயறு வகைகள் விவசாயிகளின் வீட்டுப்பாட்டுக்கே பற்றாக்குறையாக உள்ளது. மலைக்காய்கறிகளின் வரத்தும் நீலகிரி மலையில் ஏற்பட்ட  நிலச்சரிவுக்குப் பிறகு தட்டுப்பாடாக மாறியுள்ளது.

இந்த நிலையைச் சமாளிக்க அரசாங்கம் உணவுப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதென அவசர அவசரமாக முடிவெடுத்துள்ளது. இது நீண்ட காலத்திற்கான தீர்வாகாது. விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கான பணிகளைத் துரிதமாகத் தொடங்க வேண்டும். விவசாயம் பயின்றவர்களில் பலர் விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவது குறைந்து கொண்டு வருகிறது. இதைத் தடுக்க வேண்டும். விவசாயம் படிக்கும் பட்டதாரிகள் தங்களது கல்வி காலத்திலோ… அதன் பின்னோ கிராமங்களில் குறைந்தது ஓராண்டாவது தங்கியிருந்து பணி செய்ய வேண்டும். விவசாய உற்பத்தியில் உள்ள நடைமுறைச் சிக்கலைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.

”விவசாயிகளே… நீங்கள் சேற்றிலே கால் வைத்தால்தான் நாங்கள் சோற்றிலே கை வைக்க முடியும்” என்ற வாய் வார்த்தைகளால் மட்டுமே விவசாயிகளைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு அவர்களை உள்ளார்த்தமாகக் கொண்டாடவேண்டும். ஏனெனில் ஒரு  தேசம் தனது தேவையைப் பூர்த்தி செய்வதற்கு பெருமளவு வேளாண் உற்ப்த்தியாளர்களையே நம்பி உள்ளது. ”எங்களோடு வயலுக்கு வந்தாயா…. நாற்று நட்டாயா….. களை பறித்தாயா… நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா….” என்று வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் பேசப்படும் வசனம் வெறும் அலங்கார வார்த்தைகளல்ல; உண்மையானவை.

ஒவ்வொரு கிராமமும் தனக்கான தேவையில் குறைந்தது எழுபது விழுக்காடாவது தானே உற்பத்தி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும். 1990 களில் கியூபாவின் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையை அந்த நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் கூட்டு உழைப்பால் முறியடித்து முன்னேறியதை நாமறிவோம். நமக்கான உடனடித் தேவை நிலங்களை விற்பதற்கான சந்தைகளல்ல; நிலங்களை வளப்படுத்தி உற்பத்தி பெருக்கத்திற்கான வழி முறைகளே… இதனை உருவாக்காமல் வெறுமனே உழவர் தினங்களையும், பொங்கல் நாட்களையும் கொண்டாடிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தினங்களைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு உழவர்களைக் கொண்டாடுவது எப்போது?

(மார்ச் 2010 பசுமைத்தாயகம் இதழில் வெளியான கட்டுரை)

ஒரு சாயங்கால நேரத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடந்து கொண்டிருந்தேன். நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு தாயும், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மகளும் நடந்து கொண்டிருந்தார்கள். ”இதோ ஒரு நிமிசம் மம்மி..” என்று இரண்டடி பின்தங்கிய மகள் யாரையோ கைபேசியில் தொடர்பு கொண்டு ”டேய் பொறுக்கி… எங்கடா போய் தொலைஞ்ச….. என்னை பாவாடை தாவணியில் பார்க்க ஆசைப்பட்டியே… இப்ப அந்த கெட்டப்புலதான் இருக்கேன்…. இன்னும் அரைமணி நேரத்துல வடக்கு வாசல் முன்னாடி வந்து நில்லு. அப்படி நீ வரலே…. மகனே உன்னோட ஆயுசுக்கும் என்னை பாவாடை தாவணியில பார்க்க முடியாது. பட்டுச் சேலையிலைதான் பார்ப்பே… அதுவும் இன்னொருத்தனோடு…..” என்று சொல்லி விட்டு, ”இதோ வந்துட்டேன் மம்மி…” என்று ஒன்றும் தெரியாதவள் போல வேகமாக நடந்து அம்மாவோடு இணைந்து கோவிலுக்குள் நுழைந்தாள்.

இது காதலா…. இதுதான் காதலா? நம்முடைய ஊடகங்கள் யாவுமே பிப்ரவரி பதினான்காம் நாளை மையப்படுத்தியே தங்களது நிகழ்ச்சிகளை வடிவமைத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இது தொடர்பாகவும் விவாதிப்பது நமது கடமை என்ற நோக்கத்தில் இதை முன் வைக்கிறேன்.

உலகில் ஆண் பெண் இனம் தோன்றிய காலந்தொட்டு காதல் வயப்படாத மனிதர்களே இல்லை. காதலால் கசிந்து கசிந்து.. கசிந்துருகிய கடவுளின் அவதாரங்களும், மதுசூதணன் வந்து கைத்தலம் பற்றுவதாகவே கனாக்கண்ட தெய்வப் புலவர்களும் கணக்கின்றி வாழ்ந்த பூமி இது. காதலைப் பாடாத கவிஞர்களும் இல்லை…. காதலைப் பாடாதவர்கள் கவிஞர்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு காதல் முத்திய தேசம் இது.

எந்த நேரத்திலும் மரணம் தழுவலாம் என்ற நிலையில் உள்ள ஒரு மனிதனின் தொண்டைக் குழிக்குள் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் போதுகூட அவனது வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில் நிகழ்ந்த காதல் அந்த சொற்ப நேரத்தில் வந்து செல்லும். மனித வாழ்வில் காதல் தவிர்க்க இயலாத ஒன்று என்பதிலோ…. காதல் ஒரு மெய்ப்பாடு என்பதிலோ நமக்கு எந்த முரன்பாடும் இல்லை. காதலர் தினம் கொண்டாடுவது சரியா? தவறா? என்று பார்ப்பதற்கு முன் காதல்  என்பது வெறுக்கத்தக்கதா… வரவேற்கத்தக்கதா.. என்று பார்ப்பது அவசியம். ”காதலால் மானிடருக்கு கலவி உண்டாம்.. சிற்பம் முதற்கலைகள் உண்டாம்.. ஆதலால் மானிடரே காதல் செய்வீர்” என்று பாரதியும், ”கண்ணில் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்.” என்று பாவேந்தரும் சொன்னது தவறா?  இதயம் நழுவி மறு இதயம் நுழைகிற புது சுகம் காணும் பருவமல்லவா காதல் வரும் பருவம். மதம் கடந்து, சாதி கடந்து இனம் கடந்து செம்புலப் பெயல்நீராய் அன்புடைய நெஞ்சங்கள் கலந்து விடுவதல்லவா காதல்… காதல் இல்லையென்றால் சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்படாமல் இன்னும் மோசமான சூழலைத்தானே எட்டியிருக்கும். இன்றைய வருணாசிரமக் கட்டமைப்பு சமுதாயத்தில் காதல்தானே சில செங்கற்கலையாவது உடைத்து நொறுக்கியிருக்கிறது. காதல் தவறென்று இடது கையால் புறந்தள்ள வேண்டியதுமில்லை….. அது கெட்ட வார்த்தை என்று கண்ணை மூடிக் காதைப் பொத்த வேண்டியதுமில்லை. நம்முன் நிற்கும் கேள்வி காதல் என்பது மைக்கோட்டு கத்திச் சொல்ல வேண்டிய சமாச்சாரமா…. ஒரு குறிப்பிட்ட தினத்தோடு முடிந்துபோக இது என்ன பண்டிகையா….? கடைச்சரக்கா…? தள்ளுபடி விற்பனையா?

கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்புவரையில் எந்த முக்கியத்துவமும் பெறாத காதலர் தினக் கொண்டாட்டங்கள் தற்போது தவிர்க்க இயலாத கொண்டாட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. காதலர் தினத்திற்காகாகவே கொஞ்சிக்கொஞ்சிப் பேசி மதி மயங்கச் செய்யும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை பண்பலைகளும், தொலைக்காட்சிகளும் பணியமர்த்திக் கொள்கின்றன.

”இது கலாச்சார சீரழிவு. இதைத் தடுத்தே தீருவோம்” என்று சிவசேனா, இந்து முன்னணி போன்ற பாசிச அமைப்புகள் காட்டுக் கத்தலாய் கத்திக் கொண்டு திரிகிறார்கள். இவர்களைப் போன்ற பிரபல கலாச்சார புண்ணாக்கு வியாபாரிகளுக்கு வேறு ‘பாடுபொருள்’ கிடைக்காத போதெல்லாம்  இது போன்ற தெருவோர பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு கிழிக்கத் தொடங்குவதும், பின்னர் எந்தவொரு தீர்வும் இன்றி விட்டுவிடுவதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

நம்முடைய கவலையெல்லாம்  காதலர் தினத்தை ஒரு வர்த்தகத் திருவிழாவாக  உருவாக்கி, இதன்மூலம் தனது கல்லாவை நிரப்பிக்கொண்டும், ஒரு தலைமுறையையே கண்ணுக்குத் தெரியாத போதை மயக்கத்திற்கு அடிமைப்படுத்திக் கொண்டிருக்கும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் சந்தைப்போக்கு பற்றிதான்.

”நீங்கள் உண்மையான காதலனாய் இருந்தால் உங்கள் காதலிக்கு எங்கள் மொபைலை வாங்கித் தந்து உங்கள் காதலியின் சந்தோசத்தில் காதலர் தினத்தைக் கொண்டாடுங்கள்” என்று ஒரு செல்போன் கம்பெனிக்காரன் விளம்பரம் செய்கிறான்.

”எங்கள் கம்பெனியின் வாழ்த்தட்டைகளை வாங்கிக் கொடுத்தால் உங்கள் காதல் கைகூடும்.” என்று வாழ்த்தட்டைக்காரன் கூவுகிறான்.

”இந்த நேரத்தில்.. இன்ன நிறத்தில் உடையணிந்து, இந்த திசையில் நின்றால் உங்கள் காதல் ஒர்க் அவுட்டாகும்…” என்று சோதிடம் கூறுகிறான் ஒருவன்.

”உங்கள் காதலிக்கு நகை வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்” என்கிறான் நகைக் கடைக்காரன்.

”காதலர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்த காதலர் தினத்தில் பூமித் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முதலாக இருபது காதல் அனுபவங்களைக் கொண்ட………….. நடிகை தனது அனுவங்களைப் பகிர்ந்து கொள்ளும்(கொல்லும்).. வித்தியாசமான அனுபவத்தொடர்…. காணத் தவறாதீர்கள்..” என்று முன்னணி தொ(ல்)லைக்காட்சி நிறுவனத்தார்கள் மிரட்டுகிறார்கள்.

பெருநகரங்களின் ஒதுக்குப்புறங்களில் உள்ள உல்லாச விடுதிகளும், அங்கு காதலர்களுக்காகவே தயாராகிற உணவு வகைகளும் வியாபாரத்தின் உச்சகட்டமாகும். உலகின் பிரபலமாக வாழ்த்தட்டை தயாரிக்கும் ஒரு நிறுவனம் காதலர் தினத்திற்கான மட்டுமே 180 மில்லியன் அட்டைகளைத் தயாரித்து அவற்றில் தொன்னூறு விழுக்காட்டை விற்பனை செய்தும் விடுகிறது. உடுத்தும் உடை, உண்ணும் உணவு, அணியும் ஆபரணங்கள் என எல்லாமே வர்த்தக மயமாகிவிட்டது.

போகிற போக்கைப் பார்த்தால் கையில்.. பையில் இருக்கும் பொருட்களின் தரத்திற்குத் தகுந்த மாதிரியே காதலின் தரத்தையும் நிர்ணயித்து விடுவார்கள். நமது கலாச்சார ஊடக மாமேதைகள் கூடிய சீக்கிரமே… ”நீங்கள் அழகில்லாமலும் கையில் பணமில்லாமலும் இருப்பவரா…. காதலை மறந்து விடுங்கள். காதல் செய்யும் உங்கள் நண்பர்களுக்குத் தூது செல்லும் பணியைச் செய்யுங்கள்.” என்று அறிவுறுத்தினாலும் வியப்பில்லைதான். ஏனெனில் பணமே பிரதானமாகக் கொண்டிருக்கும் இந்த சீரழிவு சமூக கட்டமைப்பில் அனைத்து பழக்க வழக்கங்களும் பணத்தையும், உடல் அழகையும் மையப்படுத்தியே வளர்த்தெடுக்கப்படும் போது  பணமில்லா…. உடல் அழகில்லாதவர்கள் ஏன் வாழ வேண்டும்? எங்காவது போய் சாகவேண்டியதுதானே…….

இரண்டு மலர்களின் மகரந்த சேர்க்கையாய்… மென்மையான நிகழ்வாய் இருக்கும் காதலை எப்டியெல்லாம் கொச்சைபடுத்த முடியுமோ அப்படியெல்லாம் கொச்சைக் கொண்டிருக்கிறார்கள். இதற்காகவே புதுசுபுதுசாய் யோசித்து கருத்து சொல்ல சில மர மண்டைகளையும் வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கூறுகெட்ட குப்பைகளின் விளம்பரத்தில் மயங்கி ரோட்டோரத்திலும், வீட்டோரத்திலும், ஆற்றோரத்திலும், கடற்கரை மணலோரத்திலும், நாற்றம்பிடித்த கழிப்பறையோரத்திலுமாய் மார்கழி மாசத்து நாய்களாய் காதலிக்கிறவர்களெல்லாம் எச்சில்(ஜொல்லு) விட்டுக் கொண்டிருப்பதும், எவனோ ஒரு இங்கிலீசுகாரன் போதையில் வாந்தியெடுத்ததை காதல் தூது என்று அனுப்பிக் கொண்டிருக்கும் கழிசடைகளையும், அதையே தேசியகீதமாய் மனப்பாடம் செய்யும் மண்ணாங்கட்டிகளையும், இந்த அசிங்கம் பிடித்ததையெல்லாம் தெய்வீகக் காதல் என்று படம் பிடித்துக்கொண்டிருக்கும் நமது கோடம்பாக்கம் குடிமகன்களையும் என்னவென்று சொல்வது? என்ன வார்த்தைகள் சொல்லித் திட்டுவது?

”அப்ப நான் கல்லூரியில் படிச்சிக்கிட்டிருந்தேன். அவளும் எங்க கல்லூரிதான். புதூர்ல கள்ளழகருக்கு எதிர் சேவை நடக்கும். அந்த வருசம் அவளும் அவளோட தங்கையும் வந்திருந்தாங்க. கள்ளழகர் வர்றதுக்கு கொஞ்ச நேரமாச்சு. அந்த நேரத்துல நாங்க பொதுவா பேசிட்டு இருந்தோம். விடுமுறை முடிஞ்சு கல்லூரிக்குப் போன பிறகும் நாங்க நட்போட பேசிக்கிட்டு இருந்தோம். படிப்பு முடிந்து ஆளுக்கொரு பக்கம் வேலை தேடின சமயத்துல ஒரு நாள் எதார்த்தமா பேசிக்கிட்டு இருக்கும்போது எதிர்காலம் தொடர்பா பேசினோம். ரெண்டு பேரும் ஒரே ஊர்ல வேலைக்குச் சேர்ந்த போது எங்களளோட நட்பு காதலாகி திருமணம் செய்யலாம்னு முடிவெடுத்தோம். பெற்றோர்களோட எதிர்ப்பையும் மீறி கல்யாணம் செஞ்சு பனிரெண்டு வருசமாச்சு. சந்தோசமா இருந்தாலும் மனசுல ஒரு குறை. பத்து வயதான என்னோட மகளுக்கு கள்ளழகர் எதிர் சேவையை இன்னும் காட்ட முடியில. எங்க ரெண்டு குடும்பமும் இன்னும் ஒண்ணு சேரலை.” என்று எனது நண்பர் தனது காதல் அனுவங்களைப் பகிர்ந்தார். இவரும் காதலித்தவர்தான்.

”ஆயிரம் பூக்கள் மலர்வதை விடவும், என் ஜென்னியின் புன்னகை இனிமையானது” என்று காரல் மார்க்ஸ் தன்னுடைய காதலியைப் பற்றி கூறுவார். மார்க்சும் ஜென்னியும் காதலித்து மணம் செய்து கொண்டவர்கள். செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்து மார்க்சின் சிந்தனைகளால் காதல் வயப்பட்டு, ஒரு பொருளாதார மேதையின் வாழ்நாள் துணை என்ற பெருமையைவிட உயர்ந்த செல்வம் வேறெதுவுமில்லை என்ற இலட்சியத்தோடும், உறுதியோடும் வாழ்நாள் முழுதும் வறுமையன்றி வேறெதையும் காணாது வாழ்ந்தாளே.. அவளும் காதலி. அவள்தான் காதலி.

விடுதலைப் போராட்ட களத்தில் துப்பாக்கிகளோடும் வெடிகுண்டுகளோடும் சயனைட் குப்பிகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் போராளிகளின் வாழ்விலும் காதல் மலர்ந்திருக்கிறது. உலகமே வியக்கும் ஓர் மாபெரும் புரட்சியாளரை காதலித்து மணந்து அவரோடு யுத்த களத்தில் வாழ்ந்து, வெற்றிகளிலும்  பின்னடைவுகளிலும் உடனிருந்து, அடுத்தடுத்த யுத்த நடவடிக்கைகளுக்கு அவரைத் தயார் செய்து, தனது பிள்ளைகளையும் போராளிகளாய் வளர்த்தெடுத்து தாய்நாட்டின் விடுதலைக்காய் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ப் பெண்களின் தன்னிகரில்லா அடையாளம் மதிவதனியும் காதலித்தவர்தான். இவர்தான் உண்மையான காதலி.

இங்கு குறிப்பிட்டுள்ள மூன்று நிகழ்வுகளும் பானை சோற்றுப் பதங்கள்தான். சமூக உறவுகளுக்கு மதிப்பளித்துக் கொண்டும், தங்கள் நெஞ்சில் குடிகொண்டுள்ள காதல் கரைந்து போகாமலும் ஆரோக்கியமான காதல் வாழ்வுக்காக வாழ்நாளெல்லாம் காத்துக்கிடக்கும் இலட்சக்கணக்கான காதலர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் காதலின் தினமானத்தான் கருதுகிறார்கள். தாங்கள் காதலித்துக் கொண்டிருப்பதாக ஒரு நாளும் இவர்கள் மைக்போட்டு பாடவோ… மேடை போட்டு ஆடவோ கிடையாது.

காதல் தினங்களால் கொண்டாடப்படுவதல்ல; மனங்களால் கொண்டாடப்படுவது. மூர்க்கத்தனமாக எதிர்ப்பவர்களையும்,  முட்டாள்தனமாக நடுரோட்டில் ஆடிப்பாடித் திரிபவர்களையும் காதல் ஒரு போதும் மன்னிக்காது

(பிப்ரவரி 2010 பசுமைத்தாயகம் இதழில் வெளியான கட்டுரை)

Advertisements